பள்ளியில் படிக்கும் போது முதல் ஃபாரத்தில் ஆங்கிலம் தமிழ் தவிர மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நான் தேர்ந்தெடுத்தது சமஸ்கிருதம். வீட்டில் காலையும் மாலையும் ஸ்லோகம் சொல்லப் பயன்படும் என்று அம்மா சொன்னதுதான் காரணம். பிறகு நான் முதுகலைப் பட்டத்திற்கு வடக்கே சென்று ஹிந்தியில் வெற்றிக் கொடி நாட்டினேன் என்பதையெல்லாம் வேறொரு பகுதியில் விவரித்துள்ளேன்.

முதன்முதலில் நான் அறிந்த ஹிந்தி சொற்கள் விஸ்ராம் சாவ்தான். அதாவது ஸ்டாண்ட் அட் ஈஸ் – அட்டென்ஷன். இதை பள்ளி என்.சி.சி யில் சேர்ந்த முதல் “பரேடில்” அறிந்து கொண்டேன். அதன் பிறகு “ பாயே மோட்” தைனே மோட்”; சீதே சல்” “தேஜ் சல்” இப்படிப் பல துண்டு துண்டாய் “இன்ஸ்ட்ரக்‌ஷன்” வாக்கியங்கள்.

“என்ன என்.சி.சி. மூலமாகத்தான் ஹிந்தி கற்றாயா?” என்று நீங்கள் ஆச்சரியப்படவேண்டும். இன்னும் பல தகவல்களையும் என்.சி.சி. அலப்பறைகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

ஒன்பதாவது வகுப்பில் படிக்கும் பொழுது ஒரு நாள், வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது , அட்டெண்டர் உள்ளே நுழைந்து ஆசிரியரிடம் ஒரு சர்குலரைக் கொடுத்தார். அதைக் கையில் வாங்கிப் பார்த்த ஆங்கில ஆசிரியர் டி.எஸ்.ஆர். “யுவர் அட்டென்ஷன் “ என்று சொல்லி அந்த அறிக்கையைப் படித்தார். யாருக்கெல்லாம் விருப்பமோ அவர்கள் மாலை நான்கு மணிக்கு பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ள “என்.சி.சி. மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டத் தேர்வுக்கு வரவும் என்று அந்த அறிக்கை சொல்லியது.

”கண்டேன் சீதையை” என்ற கம்பன் வரிகளைப் போல் “ கேட்டேன் அறிக்கையை” என்று என் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. காரணம் என்.சி.சி. எனது கனவு. பள்ளி சேர்ந்த நாள் முதலாய். சீனியர் மாணவர்கள், பயிலும் “ஞாயிறு பரேட்” களைப் பார்த்து நான் மயங்கியதுண்டு. எங்கள் வீட்டுக்குப் பின்னால் உள்ள மைதானத்தில்தான் அவை நடைபெறும். வீட்டு மாடியிலிருந்து கண்கொட்டாமல் பார்ப்பேன். சில நேரங்களில் சைகிளை எடுத்துக்கொண்டு, எங்கள் தெருவைச் சுற்றி வந்து மைதானத்தின் உள்ளேயே சென்று பார்ப்பேன்.

அந்த மாணவர்களின் பயிற்சி பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கும். வரிசை வரிசையாக நடப்பார்கள்; பிறகு ஒரு பக்கம் திரும்பி நிற்பார்கள்; அதே பக்கம் தொடர்ந்து நடப்பார்கள்; சல்யூட் அடிப்பார்கள். நின்ற இட்த்திலேயே கால்களை தொம் தொம் என்று மேலும் கீழுமாக அடிப்பார்கள். இதையெல்லாம் செய்யச் சொல்ல வேறொரு மாணவன் வரிசையின் வெளியே நிற்பான்.

வாரம் ஒருமுறை நடக்கும் இத்தகைய பயிற்சி தவிர , மாதத்திற்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை ”ரெகுலர் பரேட்” நடக்கும் அன்று மாணவர்கள் என்.சி.சி. சீருடையில் , கால்களில் ஷூ, சாக்ஸ் களோடும். தலையில் தொப்பியோடும் பயிற்சி பெறுவார்கள். உண்மையில் இதுதான் என்னை என்.சி.சி. பக்கம் இழுத்தது.

ஒவ்வொரு மாணவனும் அப்படியே உருமாறித் தெரிவார்கள். சாதாரண நாட்களில் தொள தொள சட்டை, நிக்கர், ரப்பர் செருப்பு என்று அலையும் இவர்கள், விறைப்பான ( இது மிகவும் முக்கியம்) சீருடைக்குள் வித்தியாசமாகத் தெரிவார்கள்; அதுவும் “டக் டக்” என்று ஒலிக்கும் கடினமான “ஹீல்” உள்ள ஷூக்களோடு நடக்கும் போதே அவர்களுக்கு ஒரு கம்பீரம் வந்துவிடும். ஒருநாள் நானும் இந்தச் சீருடை அணிந்து காலில் “லெதர் ஷூ” அணிந்து டக் டக்கென்று கம்பீரமாய் நடப்பேன் என்று அன்றே நான் தீர்மானம் செய்துவிட்டேன்;

இதில் மனத்துக்கு இதமான விஷயம் என்னவென்றால், வீட்டில் சண்டை போட்டு இந்த சீருடை, ஷூ, தொப்பி இவையெல்லாம் வாங்கத் தொந்திரவு செய்யவேண்டாம். ( கேட்டாலும் கிடைக்காது. !). எல்லாவற்றையும் பள்ளியே கொடுத்துவிடும்.. ஆஹா !

இதையும் தாண்டி இன்னொரு மிக முக்கியமான விஷயம், பரேட் முடிந்தவுடன் அனைவருக்கும் வயிறு நிரம்ப ஹோட்டலில் இருந்து தருவிக்கப்படும் இட்லி, போண்டா, பொங்கல் சாம்பார் சட்னி, டீ வகையறாக்கள் உண்டு.

பரேட் முடிந்த என்.சி.சி. மாணவர்கள் மைதானத்தில் ஆங்காங்கே சிறு குழுக்களாக அமர்ந்துகொண்டு,, தங்கள் கைகளில் உள்ள பொட்டணங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு, ருசித்து சாப்பிடுவதைப் பார்க்க நேரும் போதெல்லாம் என் நாவில் எச்சில் ஊறும். ( இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என எண்ணுவோர்க்கு ஒரு வார்த்தை; இது நடந்தது 1963 ஆம் ஆண்டு. அப்போதெல்லாம் இப்போது போல நினைத்தால் ஹோட்டலுக்குப் போய்விட முடியாது. பல வீடுகளில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் ஹோட்டலுக்குச் செல்வார்கள்; சில வீடுகளில் உள்ளவர்கள் வெளியே சாப்பிடவே மாட்டார்கள்; சிறுவர்களைப் பொதுவாக வெளியே சாப்பிட அனுமதிக்க மாட்டார்கள். அவ்வளவு ஏன் ? தியாகராய நகர் போன்ற நான் வாழ்ந்த சென்னையின் பிரதானப் பகுதியிலேயே மொத்தம் இரண்டு வெஜிடேரியன் ஹோட்டல்கள்தான் உண்டு- – ஒன்று கீதா கேப்- இன்னொன்று பார்க்-லேண்ட்; கீதா கேப்பின் கிளயாக, தி.நகர் சோஷியல் கிளப்பில் ஒரு கேண்டீன் உண்டு. அவ்ளோதான் ! )

பெல் சத்தம் கேட்டுக் கண் விழித்துக் கனவின் அத்தியாயத்திற்குத் திரையிட்டுத் திரும்பிப் பார்த்தால் வகுப்பு காலியாக இருந்தது.

மாலை நான்கு மணிக்கு மைதானம் பக்கம் நாங்கள் ஓடினோம். இந்த நாங்களுக்குள், நான், என் சகோதரன் கணேஷ், இன்னொரு கணேஷ், சேஷாத்ரி, கோபால், சி.எஸ்.பாலு, பிரபு ஆகியோர் அடக்கம்.

எதோ கொஞ்சம் பேர் வந்திருப்பார்கள் என்று நினைத்தால் ஒரே கூட்டம். ( எல்லோருக்கும் என் கனவே வந்திருக்குமோ !) எங்கள் பள்ளி என்.சி.சி. ஆசிரியர் “தங்கவேலு சார்” அரை டவுஸர் போட்ட தனது பெருத்த சரீரத்துடன், மிகுந்த கண்டிப்போடு அங்கிருக்கும் மூத்த என்.சி.சி. மாணவர்களுக்கு சில “இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்” கொடுத்துக் கொண்டிருந்தார்.

இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன். என்.சி.சி. சீனியர் மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் “ரேங்க்” உண்டு. அதாவது பதவிகள். இதெல்லாம் பற்றிப் பிறகு விரிவாகப் பார்ப்போம். இந்த சீனியர்களுக்கு நிறைய அதிகாரங்கள் உண்டு. ஆசிரியர்களுக்கு இணையான அதிகாரம்; “கேடட்” எனப்படும் அடிப்படை சாரண மாணவர்களை மேய்க்கும், வேலை வாங்கும் அதிகாரம் இவர்களுக்கு உண்டு. ( தலைமைப் பண்பை வளர்ப்பதற்காம்..!) இவர்கள்தான் பல அடிப்படைப் பணிகளை ஏற்றுச் செய்பவர்கள். அன்றும் அப்படித்தான் அவர்கள் என்னென்ன செய்ய வேண்டுமென்ற குறிப்புகளை :தங்கவேலு சார்” கொடுத்துக் கொண்டிருந்தார்.

முதலில் எல்லோரையும் வரிசையில் நிற்க வைத்தார்கள். ஒருவர் பின் ஒருவராக நாங்கள் செல்ல ஒரு ஸ்டூடெண்ட் சார்ஜெண்ட் எங்கள் உயரங்களையும் எடைகளையும் எங்கள் பெயர்களுக்கு எதிரில் , குறிப்பேட்டில் எழுதிக் கொண்டான். இது நடந்து முடியவே முக்கால் மணி நேரம் கடந்துவிட்டது. பிறகு அரைமணி நேரம் அங்கேயே காத்திருக்கச் சொன்னார்கள்.

ஒரு பள்ளியின் என்.சி.சி. மாணவர் படைக்கென்று ஓர் எண்ணிக்கை உண்டு. பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் அது அமையும். எங்கள் பள்ளியின் என்.சி.சி. படைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை நூறு. அது “ஒரு ஸ்குவாட்ரன்” என்று அழைக்கப்படும். பள்ளி இறுதியாண்டு முடித்துவிட்டுச் செல்கின்ற என்.சி.சி. மாணவர்கள் விட்டுச் சென்ற இடங்களை ஒன்பது அல்லது பத்தாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு நிரப்புவார்கள். அந்த வகையில் அன்று முப்பது மாணவர்களைத் தேர்ந்தெடுக்க இருந்தார்கள்.

முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு தங்கவேல் சார் எழுந்து ,ஸ்டூடெண்ட் சார்ஜெண்ட் தயரித்துக் கொடுத்த பட்டியலில் இருந்து , தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்களைப் படித்தார். பெயர் குறிப்பிடப் பட்டவர்கள் எழுந்து சென்று தனி வரிசையில் நிற்கவேண்டும். மூன்று பக்கப் பட்டியலில் இருந்து படிக்கப்பட்ட பெயர்களில் மூன்றாவது பட்டியலில் எங்கள் பெயர்கள் விளிக்கப்பட்டு நாங்களும் தனி வரிசையோடு இணைந்தோம்.

“ லிஸன் பாய்ஸ் இன்று நாங்கள் ஐம்பது பேர்களைத் தேர்வு செய்திருக்கிறோம்; உயரம் எடை என்ற இரண்டு கேடகரிகளை” வைத்துக் கொண்டு செய்யப்பட்ட தேர்வு இது. இன்று செலக்ட் ஆன ஐம்பது பேர்களும் நாளை மாலை இதே இடத்தில் கூடவேண்டும். நாளை வரும் போது, நீங்கள் சர்ட் இன் செய்து, காலில் ஷூ போட்டுக்கொண்டு வரவேண்டும். அப்படி வராதவர்களை முதலிலேயே வெளியே அனுப்பிவிடுவோம். நீங்கள் கலையலாம். “ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

எங்களுக்கு மகிழ்ச்சி ; முதல் கட்டத் தேர்வில் செலக்ட் ஆகிவிட்டோம். ஆனாலும் சில சந்தேகங்கள் . யாரிடம் கேட்பது ? அந்த ஸ்டூடெண்ட் சார்ஜெண்டிடம் கேட்கலாம் என்று போனால் அங்கேயும் ஒரு சிறு கூட்டம். அவன் பெயர் பிருதிவிராஜ். அவன் என் நண்பன் பிரேம்குமாரின் “கஸின்”. .அந்த நட்பில் அவனை நெருங்கி சந்தேகம் கேட்டேன்

“ டேய் பிருதிவி நாளைக்கு சட்டை ஃபுல் கையா ஹாஃப் கையா ?”

என்னைத் திரும்பிப் பார்த்த அவன் கொஞ்சம் விறைப்பாக ” கேடட்! இங்க டேய் எல்லாம் கூப்பிடக் கூடாது. என்னோட ரேங்க் சார்ஜெண்ட்..அத சொல்லித்தான் கூப்பிடணும்”

“ சரி சார்ஜெண்ட்”

“சரி ! என்ன வேணும் சொல்லு ..சட்டைதானே ! எத வேணா போட்டுண்டு வா ! ஆனா இன் பண்ணியிருக்கணும்”

“ லெதர் ஷூ இல்ல”

“பரவாயில்ல..கான்வாஸ் ஷூ போட்டுண்டு வா! ஆனா நிச்சயமா ஷூ இருக்கணும்”

நாங்கள் ஏழு பேரும் சந்தேகம் தீர்ந்து வீடு நோக்கிப் புறப்பட்டோம். கோபால்தான் கேட்டான்.

“ஏண்டா இன்னிக்கு போண்டா ,டீ கொடுக்கலை ?”

“ நாளைக்கு ஷூ போட்டுண்டு வா ! கொடுப்பாங்க” என்றான் பிரபு. எல்லோரும் சிரித்துக் கொண்டே வீடு நோக்கி ஓடினோம்.

( தொடரும்)

 

.