புத்தகம் : அச்சு கிச்சுவும் திருக்குறளும் பாகம் – 1
எழுதியவர்: வி.மு.காயத்ரி ராணி
Published by : சித்ரா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை
80 பக்கங்கள் விலை ரூ. 120
புத்தகங்களைத் தேடித் தேடி நான் போய் படித்த காலம் ஒன்று உண்டு. இன்று புத்தகங்கள் தினமும் என்னைத் தேடி வருகின்றன. நண்பர்கள் கொண்டு வந்து கொடுக்கும் புத்தகங்களைத்தான் குறிப்பிடுகிறேன். சமீபத்தில் என்னை சந்தித்த நண்பர் கந்தசாமி என்னிடம் அளித்த புத்தகம்தான் இந்த “அச்சு கிச்சுவும் திருக்குறளும் – பாகம் – 1 “. அவர் கொடுத்திராவிட்டால், நிச்சயம் நான் ஒரு குழந்தைகளுக்கான நூலைத் தேடிப் போய் வாங்கியிருக்க மாட்டேன்.
அட்டையிலேயே குழந்தைத்தனம் மிளிர்கிறது. “அச்சு கிச்சு “ என்ற தலைப்பே கிச்சுகிச்சு மூட்டுகிறது. அச்சு என்பவன் ஒரு சுட்டிப் பையன். கிச்சு என்பது அவனுடைய நண்பனான செல்ல நாய்க்குட்டி. இந்த இருவரும் கிண்டலடித்து சிறுவர்கள் இயல்பாக பேசும் மொழியில் பேசி மகிழ்வது போன்ற நடையில் எழுதப்பட்டதுதான் இந்த சிறுவர்களுக்கான நூல்.
இதை எழுதிய வி. மு. காயத்ரி ராணி, என்னுடைய நண்பன் கந்தசாமியின் தமக்கை. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ஒரு பெயர் பெற்ற தலைமை ஆசிரியராக பல வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இப்போது சிறுவர்களுக்கான இலக்கியம் படைக்கத் தொடங்கி விட்டார். இனி அவருக்கு ஓய்வு ஏது ?
இந்த சிறிய புத்தகத்தின் பொருளடக்கத்தைப் பார்த்தால், எட்டு கதைகள் அடங்கியுள்ளன. அவை :
1. என்ன ! மழை வேண்டாமா ?
2. யார் பெரியவர் ?
3. கிச்சுவுக்கு ஒரு டவுட் ?
4. பிறந்தநாளுக்கு யாரை வரவழைப்பது ?
5. எண் நண்பர்கள் எப்படி ?
6. மேடையில் பேசணுமா என்ன ?
7. உளறுவாயன் எப்படி ஜெயிப்பான் ?
8. யார் பலசாலி ?
இவை ஒவ்வொன்றும் அச்சுவும் கிச்சுவும் மற்றும் அச்சுவின் அம்மாவும் பேசிக் கொள்வது போல் எழுதப்பட்டுள்ளது. இந்த உரையாடல்கள், இயல்பாக சிறு நாடகங்கள் போல் இருக்கின்றன. கடினமான சொற்களை முழுமையாகத் தவிர்த்து சிறுவர் பேசும் மொழியில் எழுதி இப்படி ஒரு சிறுவர் உலகை திருஷ்டிப்பது எவ்வளவு கடினம் என்பது சிறுவர் இலக்கியம் புனையப் புகுந்தவர்களுக்குத்தான் தெரியும். காயத்ரி ராணிக்கு இந்தக் கலை கை வரப் பெற்றிருக்கிறது. இது வாசக சிறுவர்கள் செய்த பாக்கியம். இந்த ஒவ்வொரு சிறுநாடகமும் ஒரு திருக்குறளை சிறுவர்கள் மனதில் சொற்சித்திரங்கள் மூலம் பதிய வைக்கிறது.
அருமையான முயற்சி. இது பாகம் – 1 என்று குறிப்பிடப்பட்டு எட்டு குறள்களை மட்டுமே எடுத்துச் சொல்வதால், இன்னும் பல பாகங்கள் தொடர்ந்து வரும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
இந்தத் திருக்குறள் கதையாடல்களைத் தவிர, இந்த கையடக்க நூலிலேயே சிறுவர்களுக்கான பல பாடல்களையும் இடையிடையே தெளித்து வைத்திருக்கிறார் ஆசிரியர்.
சிறுவர்களுக்கு தமிழ் ஆர்வத்தையும் திருக்குறள் ஆர்வத்தையும் ஊட்டுவதற்கு சிறந்த சாதனம் இந்நூல். படித்துக் காட்டுங்கள் !

