(எவரெஸ்ட்) சிகரம் கண்டேன்!!
சமீபத்தில் நேபாள நாட்டிற்கு ஒரு குழுவாக சுமார் 30 பேர் சுற்றுலா சென்று வந்தோம். எல்லோரும் அறுபது வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள்! நீண்ட வரலாற்றுப் பெருமை உடைய நாடு நேபாளம். ‘இந்து நாடு’ என்றே அறியப்பட்ட காலமும் உண்டு. நவீனத்துவத்தின் மாற்றங்கள் பரவியிருந்தாலும், நேபாள மக்களின் பாரம்பரியமும், கலாச்சாரமும் ஆங்காங்கே இன்றும் தென்படுகின்றன!
இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய நாடு! ‘இமாலய ராஜ்ஜியம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இந்துக்களின் புகழ் பெற்ற ஆன்மிகத் தலங்களான பசுபதிநாத் கோவில், சங்கு நாராயணன் கோயில் மற்றும் முக்திநாத் கோயில்கள் இங்குதான் உள்ளன. பௌத்தர்களின் புனித தலங்களாக லும்பினி, பௌத்தநாத்து மற்றும் கபிலவஸ்துவும் இங்கு உள்ளன. நேபாள, இந்திய எல்லையில் உள்ள லும்பினி, புத்தர் பிறந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்மண்டு சமவெளியில் 9000 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் குடியிருப்புகள் இருந்திருக்கின்றன. மெளரியர், குப்தர், லிச்சாவி இன மக்கள், நேவாரிகள், சாளுக்கியர்கள், மல்ல வம்சத்தினர், ஷா வம்சத்தினர் எனப் பலராளும் ஆளப்பட்ட நாடு என்ற சரித்திரக் குறிப்புகள் கிடைக்கின்றன. பின்னர் வந்த ராணா வம்சத்தினரின் ஆட்சி, பல போராட்டங்கள், எதிர்ப்புகளுக்குப் பிறகு கலைக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற ஆட்சி வந்தது. 240 ஆண்டுகளாக இருந்த மன்னராட்சி முறை முடிவுக்கு வந்தது.
எவரெஸ்ட் சிகரம், கஞ்சன்சுங்கா மலை, அன்னபூர்ணா மற்றும் தவளகிரி மலைச் சிகரங்கள், சித்வான் தேசியப் பூங்கா(காத்மண்டுவிற்கு 150 கிமீ மேற்கே உள்ள பூங்கா. இத்தேசியப் பூங்காவில் வங்கப் புலிகள், இந்தியப் பனிச் சிறுத்தைகள், சோம்பேறிக் கரடிகள், நீர்நாய்கள், வங்காள நரிகள், புள்ளி புனுகுப் பூனைகள், தேன்வளைக்கரடிகள், வரிக் கழுதைப்புலிகள் உள்ளன), சாகர்மாதா தேசியப் பூங்கா மற்றும் காளிகண்டகி ஆறு, காக்ரா ஆறு, சாரதா ஆறு, பாக்மதி ஆறு, ரப்தி ஆறு போன்ற இயற்கைச் செல்வங்கள் நிறைந்த நாடு நேபாளம்.
தெற்கே வெப்பமான தெராய்யும் வடக்கே குளிரான இமாலயமும் கொண்டது நேபாளம்! எவரெஸ்ட் சிகரம் உட்பட, உலகின் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபளத்தில் காணப்படுகிறது. நேபாளத்தின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாக காட்மாண்டூ விளங்குகிறது.
முதல் ஐந்து நாட்கள் காத்மண்டு, பகோரா, முக்திநாத் எனச் சுற்றினோம். ஆறாம் நாள் காலை ‘ஹிமாலயன் ரைடு’ இருக்கிறது, விருப்பப் பட்டவர்கள் போகலாம் என்றார்கள். காத்மண்டுவிலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்டு, ஒரு மணி நேரம் இமயமலைத் தொடர்களின் சிகரங்களைச் சுற்றி வரும் விமானப் பயணம்! இருபது பேர்களுக்கு மட்டுமான விமானம்! இரண்டு இருக்கைகளில் ஒன்றில் மட்டும், ஜன்னலுக்கு அருகில் உள்ள சீட்டில், பயணிகள் உட்காரவேண்டும். விமானத்திலிருந்து இமயமலைத் தொடர்களின் சிகரங்களைக் காண்பது வியப்புடன் சிலிர்க்க வைக்கும் ஒரு மறக்கமுடியாத அனுபவம்!
புத்தா ஏர்வேஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், நேபாளத்தில் காணக்கூடிய இமயமலைச் சிகரங்களின் பெயர்களுடன் (உயரங்களுடனும்!) ஒரு வரைபடத்தைக் கொடுக்கிறார்கள். இரண்டு பக்கமும் மலைத் தொடர்கள். காலையில் சூரியக் கிரணங்களின் ஒளிவெள்ளத்தில், பனி மூடிய சிகரங்கள், ’வெள்ளிக் கவசம்’ போட்டாற்போல ஜொலித்தன. புத்தா ஏர் விமானப் பணிப் பெண், ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் தெரியும் சிகரங்களின் பெயர்களோடு விவரித்து வந்தது சிறப்பு.
உலகத்திலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தைக் கண்டபோது, மெய்சிலிர்த்தது. இமயமலையின் ‘மஹாலங்குர் ஹிமல்’ பகுதியில் இருக்கிறது. சீன – நேபாள எல்லைக் கோடு, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி வழியாகச் செல்கிறது! உயரம் 8,848.86 மீட்டர்கள் (29,031 அடி, 8 1/2 அங்குலம்). நேபாளத்தில் ‘சாகர்மாதா’ என்றும், திபெத்தில் ‘கோமோலுக்மா’ என்றும், சீனத்தில், ‘சுமூலேங்மா’ என்றும் அறியப் படுகின்றது. ‘புனித அன்னை’, ‘வானின் தலை’ (Holy Mother, Skyhead) என்று அர்த்தமாம்! முதன் முதலில் எவரெஸ்ட் சிகரம் தொட்ட (1953) ஹில்லாரி, டென்சிங் பெயர்கள் மனதில் வந்தன! ஆக்ஸிஜன் குறைவு, பனிப் பொழிவு, காற்று எனப் பல வானிலை மாற்றங்களால், பலர் உயிரிழந்திருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் ஜியொகிராஃபிக் சர்வே, கஞ்செஞ்சுங்கா, தவுளகிரி போன்ற புராதனப் பெயர்களை அப்படியே வைத்தனர். ஆனால், சாகர்மாதா என்ற சிகரத்திற்கு, ‘எவரெஸ்ட்’ என்ற பெயர் எப்படி வந்தது? இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் சர்வேயர் ஆண்ட்ரூ வாக் – இந்திய வரைபடத்தை சரியாக வரைவதற்குக் காரணமானவர்- தனது குருநாதர் ஜார்ஜ் எவரெஸ்ட் பெயரை வைக்க வேண்டும் என்று கூற, பல எதிர்ப்புகளுக்கிடையே, 1865 ல் ‘மவுண்ட் எவரெஸ்ட்’ பெயர் வைக்கப்பட்டது! லாம்டன், எவரெஸ்ட், ஆண்ட்ரூ வாக் போன்றவர்களின் விடா முயற்சியும், உழைப்பும் பிரமிக்க வைப்பவை. எவரெஸ்ட் பற்றிய விபரங்களைச் சுவைபடச் சொல்கிறார் திரு ரமணன் தன் “கடைசிக் கோடு” புத்தகத்தில்!
ஒவ்வொரு சிகரத்திற்கும் பெயருடன், உயரமும் குறித்த வரைபடத்துடன், மவுண்டன் ஃப்ளைட்டில் பயணித்ததற்கான சான்றிதழ் ஒன்றும் கொடுக்கிறார்கள். பூகோளத்தில் படித்த ‘எவரெஸ்ட்’ சிகரத்தை நேரில் பார்த்தது ஒரு ‘த்ரில்லிங்’ அனுபவம்தான்! கெளரி சங்கர் (7134 மீ), மெலுங்ட்சே (7181 மீ), சுகிமாகோ (6297 மீ), புமோரி (7161 மீ), சாகர்மாதா – எவரெஸ்ட் (8848.8 மீ), லோட்சே (8516 மீ) போன்ற சிகரங்களை, வரைபடத்தின் உதவியுடன் பார்த்து வியந்தோம். எவரெஸ்ட் சிகரத்தின் பெயர்க் காரணம், உயரம் குறித்த சர்ச்சைகள் மனதிற்குள் வந்து போயின. “வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம்” என்று மனக்கண்ணால் பார்த்துப் பாடிப் பரவசமடைந்த பாரதியை நினைக்கும் போது பெருமிதம் நெஞ்சை நிறைக்கிறது!
இமையமலையைப் பார்வதியின் தந்தையான ‘இமாவான்’ (பனிக்கடவுள்) என்கிறது இந்துமதம். கைலாயம், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஜோஷி மடம், அமர்நாத் கோயில், வைஷ்ணவ தேவி கோயில் போன்ற புண்ணியத் தலங்கள் உள்ள மலை. சங்க இலக்கியங்களில் அகநானூறு, புறநானூறு, சிறுபாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து, குறுந்தொகை, கலித்தொகை, நற்றிணை, பரிபாடல் ஆகியவற்ரில் இமயமலை பற்றிய குறிப்பு வருகின்றது!
அவசியம் காணவேண்டிய சிகரம், ‘எவரெஸ்ட்’ – மறக்க முடியாத அனுபவம்!



E, cellent writing. I recently visited some of these places. Our trip was a shorter one. I remembered that trip again. You have visited more places and your expression is very nice.
LikeLike