
2024 ஆகஸ்டு மாதத்தின் சிறந்த கதை
பேச்சி க/பெ மாரியப்பன் [வயது 44]
ஆசிரயர் : மதிகண்ணன்
உயிர் எழுத்து-ஆகஸ்டு, 2024
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
2024 ஆகஸ்டு மாதத்தில், அச்சிதழ்களிலும் மின்னிதழ்களிலும் வெளிவந்த சில கதைகள் பரிசீலனைக்காக எனக்கு அனுப்பப்பட்டன. இவற்றில் சிறந்த கதை என்று சொல்வதை விட எனக்குப் பிடித்த கதை ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை எனக்கு நல்கிய குவிகம் குழுமத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
இலக்கியம் என்பது எப்போதுமே பரந்து பட்ட பார்வைக்கு உட்பட்டது. நான் சிறந்த கதை என்று ஒன்றைக் கருதும் போது வேறொருவர் வேறொன்றை சிறந்த கதையாகக் கருதலாம். எனவே எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட கதைகளில் ‘சிறந்த கதை’ என்ற அடைப்புக்குறிக்குள் அடைக்காமல் எனக்குப் பிடித்தவை என்ற அளவில் – எனக்கு அனுப்பி வைத்த சிறுகதைகளில் நான்கு கதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் மிகவும் பிடித்ததாக மேலே உள்ள கதையைப் பரிந்துரைக்கலாம் என்று நினைக்கிறேன்.
எனக்குப் பிடித்த நான்கு கதைகளை வரிசைப் படுத்த விரும்புகிறேன்.
சந்தனக்கூடு – (நடுகல் இணைய இதழ்)
குன்னத்தூரின் ஆதம் ஷா ஒலியுல்லாஹ் தர்காவில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சந்தனகூடு விழாவை அதீத ஈடுபாட்டுடன் முன்னின்று சிறப்பாக நடத்திக் கொடுக்கும் பஷீர் பாய் சமூகத்தினரின் எதிர்ப்பை மீறி இரு பெண்களைக் கல்லூரியில் சேர்த்தவர். ஐந்து வேளை தொழுகை நடைபெறும் வீட்டில் நாய் வளர்க்க வேண்டுமா என்ற கேள்வியை மீறி வீட்டில் நாய் வளர்க்கிறவர். குர்பானி கொடுத்த கறியை நம்ம ஆளுகளுக்கு மட்டும் கொடுக்கிறத விட்டுட்டு எல்லாப் பயல்களுக்கும் குடுக்கீயலே இது நல்லாவா இருக்கு என்று ஊரின் அதிதீவிரமான இஸ்லாமியர்கள் கேட்கும் போது “எல்லோரும் மனுஷங்க தானடே” என்று கண்களைச் சிமிட்டிப் புன்னகைத்தபடி சொன்னவர். இந்த பஷீர் பாயின் இறப்பு ஊராருக்கும் மனப்பாரத்தை அளிக்கிறது. அவர் வீட்டைக் கடக்கிறவர்கள் அவர் அமர்ந்த நாற்காலியை ஏக்கத்துடன் வெறித்துப் பார்த்து நகருவார்கள்.
இந்த நிலையில் அவர் பொறுப்பெடுத்து நடத்தி வந்த சந்தனக்குட விழாவை அவர் இருந்தபோது நடந்தது போலவே நடத்தி வைக்க வேண்டும் என்று அவருடைய இருமகள்களும் தீர்மானித்து விழா முன்னேற்பாடுகறை சிறப்பாக செய்து முடித்தனர். பஷீர் பாயின் மகள்களும் உறவினர்களும் கொடியை ஊர்வலமாக எடுத்துச் சென்று கூடியிருந்தவர்களுக்குப் பரிமாறுவதற்கு செய்து வைத்திருந்த மலிதாவுடன் தர்காவுக்குக் கிளம்பத் தயாரான போது தர்காவில் மேலப்பாளையத்து பக்கீர்கள் ஒருவர் கூடக் காணவில்லை என்றும் அவர்களுக்கு அழைப்பு விடுக்காதது தவறு என்றும் பேசிக்கொள்கின்றனர்.
அந்த நேரம் பஷீர் பாயின் சேக்காளி என்று கூறி பெரியவர் ஒருவர் அங்கு வந்து சேருகிறார். பஷீர் பாயின் மகள்களைத் தேடிச்சென்று அவருடனான தன்னுடைய நட்பு பற்றிக் கூறிவிட்டு, தர்காவில் பாடல் பாடுவதற்கு பக்கீர்கள் யாரும் கூடவில்லை என்று சொன்னார்கள். பஷீர் பாய் இருந்தபோது எல்லா வேலையும் இழுத்துப் போட்டு சிறப்பாக செய்தார். யாருக்குத் தெரியும் எந்தக் கொண்டாட்டமும் இல்லாமல் அமைதியாகத்தான் நடக்க வேண்டும் என்று அல்லாஹுத்தாலாவே விரும்புகிறானோ என்னவோ… என்று பெரியவர் கூற அவருடைய விளக்கம் பெரும்பாலோனாருக்குத் தெளிவைக் கொடுக்கிறது.
அனைவரும் மீண்டும் பழைய உத்வேகத்துடன் இயங்கிப் பரபரப்பாக தர்காவை நோக்கி நடக்கின்றனர். புதிய கொடி கனத்த மவுனத்துடன் தர்கா வளாகத்துக்குள் எடுத்து வரப்படுகிறது. அந்தக் கொடியை பஷீர் பாயின் பேரப்பிள்ளைகள் புளியமரத்தில் ஏற்றுகின்றனர். அதற்கு முன்பு என்றுமே நடந்திராத அதிசய நிகழ்வாக அங்கே கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கொக்குகள் புளிய மரத்தைச் சுற்றி கூச்சலிட்டபடி பறந்து வட்டமடித்துக்கொண்டிருந்தன.
இந்தக் கதையின் எளிய நடை, எளிமையாகக் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு, மனதைத் தொடும் நிகழ்வுகள் என்று வாசகனை எவ்வித பிரயாசையுமின்றி யதார்த்தமாகத் தன்னுடன் கூட்டிச் செல்கிறது.
மிருகம் – கார்த்திக் பாலசுப்பிரமணியம்- காலச்சுவடு, ஆகஸ்டு, 2024
லஸண்ட்ரா சென்னையின் பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றின் மனிதவளத்துறையில் பிரதானப் பொறுப்பில் இருக்கிறவள். மிகவும் பரபரப்பான பணிச்சூழல்.இதற்கிடையில் அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருக்கும் அவள் பழுப்புக்கோடன் என்ற பூனைக்கு தினமும் சோறிடுகிறாள். இது அவளுடைய அபார்ட்மெண்ட் அசோசியேஷன் வாட்ஸாப் குழுமத்தின் பேசுபொருளாகிறது. கடும் கண்டனத்துக்கு உள்ளாகிறாள். ஒரு கட்டத்தில் அவளுடைய வீட்டு சொந்தக்காரரும் அந்தக் கண்டனத்தில் சேர்ந்து கொள்கிறார். தான் அந்தப் பூனையை வளர்ப்பதில்லை என்றும் தன்னைத் தேடி வரும் அதற்கு உணவிடுகிறேன் என்று வாதிடுகிறாள். ஆனால் எதிர்ப்புகள் தொடர்கின்றன. ஒரு கட்டத்தில் அந்த அபார்ட்மெண்டில் இருக்கும் குழந்தைகள் கூட அவளிடம் சிநேகபாவம் காட்டாமல் ஒதுங்கிச் செல்கின்றன.
குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்லும் அப்பா, கணவன் பிரதீப் இருவரையும் விட்டு வந்து தனியாக வாழுகிறவள். தன் உடல் சுதந்திரத்தைப் பெரிதாக நினைக்கிறவள்.
ஒரு வழக்கமான மாலையில் பிரதீப் வீட்டுக்கு வந்திருந்ததாக அவளையும் வீட்டையும் கவனித்துக் கொள்ளும் கேத்தரீன் ஆன்ட்டி சொல்கிறாள். அவன் தன்னைப் பார்க்க வந்ததாகச் சொல்கிறாள். தான் மெல்பர்ன் போவதை சொல்லிக் கொள்ள வந்திருப்பதாகக் கூறுகிறாள். ஒருமுறை அவனிடம் பேசுமாறு கூற லஸண்ட்ரா மறுக்கிறாள். பிரதீப்பிடம் அவள் காட்டும் பிடிவாதத்தையும் பூனைக்கு சோறு போடுவதில் காட்டும் பிடிவாதத்தையும் கேத்தரீன் சுட்டிக் காட்டுகிறாள். கோபத்துடன் வெளியேறி சிறிது நேரம் வெளியில் சுற்றிவிட்டு வீடு திரும்புகிறாள். வாசல் கதவைப் பிறாண்டும் சத்தம் கேட்கிறது. கேத்தரீன் ஆன்ட்டியின் அறை உட்புறமாகச் சாத்தப்பட்டிருந்தது. வேகமாகப் போய்க் கதவைத் திறக்க முழுக்க மழையில் நனைந்த பழுப்புக்கோடன் பூனை நின்றிதுக்கிறது. அதற்கு வைத்திருந்த சாப்பாட்டை ஒரு கிண்ணத்தில் வைக்க அது சற்றுத் தயங்கி பிறகு எல்லாவற்றையும் குடித்து விட்டு அவளுக்காகக் காத்திராமல் கிளம்பி விடுகிறது.
முடிக்கப்படாத அந்த அரூப நாற்காலி ஓவியத்தைத் தீட்டத் தொடங்குகிறாள். தேன்வண்ணத் தைலம் கொண்டு தீட்டப்பட்ட அந்த நாற்காலியின் மேல் பழுப்புக்கோடனை வரைகிறாள். அந்தக் கள்ளமற்ற கண்களை வரைய மிகவும் சிரமப்படுகிறாள். அந்த ஓவியத்தை வரைந்து முடிக்கவும் செந்தளிர் வெளிச்சம் வரவும் சரியாக இருந்தது. இனி எப்போதும் பழுப்புக்கோடனைத் தன்னோடே வைத்துக் கொள்வாள்.
சற்றுத்தள்ளி வந்து மெத்தையில் அமர்ந்தபடி அந்த ஓவியத்தைப் பார்க்கிறாள். எல்லாம் சரியாக வந்திருந்தது. பழுப்புக்கோடனின் வால் மட்டும் கேன்வாஸை விட்டு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அவள் ‘உஷ்’ என்றதும் பழுப்புக் கோடன் தன் வாலை இழுத்துக் கொண்டது” என்று கதை முடிகிறது.
மிகவும் சரளமாகப் பல்வேறு படிமங்களை இக்கதை தனக்குள் கொண்டு ஒரு ஓவியம் போலவே பரந்து விரிகிறது. வெறும் கெடுபிடியான விதிகளாலும் ஒற்றைப்பார்வை கொண்ட சமூக வாழ்க்கையை வாழும் அப்பார்ட்மெண்ட் சூழலில் தன்னுடைய சுயத்தைத் தக்க வைத்துக் கொள்ள விழையும் ஒரு பெண்ணின் வாழ்க்கை- தன் உடலுக்கான சுதந்திரத்தை குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தும் தகப்பனிடமிருந்தும் கணவனிடமிருந்தும் விலகி நின்று தனக்கான ஒரு உலகத்தை சிருஷ்டித்துக் கொள்ளும் ஒரு பெண்ணின் மனநிலை மிகவும் அற்புதமாக இக்கதையில் வந்திருக்கிறது. இனி ஓவியமாக உள்ள பூனையைத் தன்னிடமே வைத்துக் கொள்ளலாம் என்ற வரியும் ஓவியத்தில் உள்ள பூனைக்கு அவள் உயிர் தரும் கற்பனையும் அற்புதமாக அமைந்துள்ளது. வாசிப்பை மிகவும் சரளமாக்குகிறது இக்கதையின் எளிய நடை.
தாழப்பறந்த குருவி- சிபி சரவணன் – வாசகசாலை, ஆகஸ்டு 2024
மிகவும் வினோதமான முறையில் சம்பவங்களை நகர்த்திச் செல்கிறது இக்கதை. பிழைப்புக்காக டாக்சி ஓட்டும் அன்பு, சிநேகிதர் ஒருவரை ஊரில் கொண்டு போய் விட்டு அவர் தரும் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறிய தன் முதலாளியின் கட்டளைக்கிணங்க ஒருவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு அவருடைய ஊர் நோக்கிச் செல்கிறான். வழியில் அந்த நபர் ஏதோ ஒரு பெண்ணுடன் லேசாக சல்லாபிக்கிறார். பிறகு இவனை இளையராஜா பாட்டைப்போடுமாறு சொல்லி இசையை அனுபவித்துக் கொண்டு வருகிறார். இடையில் மனைவியிடமிருந்து வரும் தொலைபேசிக்கு மிக எரிச்சலுடன் பதில் சொல்லிவிட்டு வைக்கிறார். வழியில் சரக்கு பாட்டிலை எடுத்துக் கொஞ்சமாகக் குடித்து விட்டுப் படுத்துக் கொள்கிறார். திண்டிவனம் சாலையில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு சிறுநீர் கழித்து விட்டு வரும் அன்பு அவர் கார் சீட்டிலிருந்து நழுவி அரைகுறையாக சரிந்து படுத்திருப்பதைப் பார்த்து அவரை சரியாக படுக்க வைக்க முயற்சிக்கிறான். உடல் கனக்கிறது. அவர் இறந்து விட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிறான். இருட்டான நெடுஞ்சாலையில் என்ன செய்வது என்று தெரியாமல் முதலாளியை தொடர்பு கொள்கிறான், அவர் அவனை வண்டியை ஓட்டிச் சென்று அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறுகிறார்.
இடையில் அவரைத் தொலைபேசியில் அழைத்த மஞ்சு என்ற பெண்ணை அவருடைய போனில் இருந்து அழைக்க அவள் சிறிது விசும்பலுடன், அப்படியா? சரி. பார்த்துக் கொண்டு போங்க. முடிஞ்சா அவர் ஊரில் வந்து பார்க்கிறேன்” என்கிறாள்.
அந்தப் பிணம் அவனிடம் அசரீரியாகப் பேசுகிறது. இனி நீ பார்க்கப்போறெதெல்லாம் நாடகம். அதுக்கு என் பொண்டாட்டியை விட யாரும் அவ்வளோ அழகாக நடிக்க முடியாது”என்கிறார். தொடர்ந்து அந்தக் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வண்டியை வேகமாக ஓட்டி மதுரை அருகே வந்ததும் ஒரு அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்கிறான். உடலைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர், “உயிர் போய் ரொம்ப நேரம் ஆச்சு” என சாதாரணமாக பதிலளித்து விட்டு நகருகிறார். முதலாளியை அழைத்து தகவல் சொல்லி அவர் அவருடைய உறவினர்களைத்தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்ல மனைவியும் உறவினர்களும் வருகிறார்கள்.
மனைவியின் அழுகையில் உண்மையக் காண்பதில்லை அன்பு. அவள் மார்பில் அடித்துக் கொண்டு அவசர அவசரமாக இறந்த உடலின் பாக்கெட்டில் இருந்த பர்ஸ், மோதிரம் செயின் எல்லாவற்றையும் கண்ணீருடன் முந்தானையில் துடைத்து எடுத்து வைத்துக் கொள்கிறாள். உறவினர் கூட்டம் இறந்த மனிதரின் பையில் இருந்த வெளிநாட்டுப் பொருட்களை எடுத்துக் கொள்வதில் அடித்துக் கொள்கிறது. இவற்றைப் பார்த்துக் கொண்டே அன்பு மெல்ல அங்கிருந்து நகருகிறான்.
காரில் ஏறி உட்கார்ந்ததும் இளையராஜா பாடல் ஒன்றைப் போட்டு வண்டியை எடுக்கிறான். மீண்டும் அந்த அசரீரியின் குரல் அவனுக்கு விநோதமாகக் கேட்கிறது. ரேடியோவின் சத்தத்தை அதிகப்படுத்திக் கொண்டு வண்டியை முடுக்கிப் போகிறான்.
இந்தக் கதையின் ஒவ்வொரு சம்பவமும் விநோதமான திருப்பங்களுடன் நகருகிறது. மிகவும் கோர்வையாகக் கதை சொல்லும் முறை வாசிப்பை மிகவும் சகஜமாகக் கொண்டு செல்கிறது. மிகவும் பரிச்சயமானதொரு வாழ்க்கைத் தத்துவத்தை மிக அழகாகச் சொல்கிறது இக்கதை.
பேச்சி, க/பெ மாரியப்பன் [வயது 44] – மதிகண்ணன், உயிர் எழுத்து ஆகஸ்டு, 2024
நடப்பு சம்பவம் ஒன்றை மிகவும் அழகாக, மிகவும் யதார்த்தமாகக் கதையாக்கியிருக்கும் நுட்பம் இக்கதையை எனக்கு மிகவும் பிடித்தமான கதையாகத் தேர்ந்தெடுக்க வைத்துள்ளது.
இக்கதை மிகவும் எளிமையானது. சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பான அவலங்களை மிகவும் கவித்துவமான முறையில் பளிச்சென்று முகத்தில் அறையும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்துப் பார்வையை இழந்த பேச்சி என்ற பெண்ணின் கணவன். கை நடுக்கமும் சேர்ந்து வயிற்றில் எரிச்சலும் வலியுமாக இனி வாழ்க்கையைக் கடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவனைக்கு வெளியில் உள்ள டீக்கடையில் சில பெண்களிடம் ஏஜெண்டுகள் ஏதோ புரோ நோட்டுகளில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பேச்சியையும் ஒரு புரோக்கர் துரத்துகிறான். “தவிச்சுப் பொழச்சு வந்தாலும் மச்சானால முன்னமாதிரி வேலைக்கெல்லாம் போக முடியாது தங்கச்சி. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே போன மறுவாரமே மச்சானுக்கு முடியாமப்போயி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிப்போச்சுன்னா ஒண்ணுக்கும் பிரயோசன்ம் இல்லாமப் போயிரும். முதல்ல உன் புள்ளைய காலேஜ் வரைக்கும் படிக்க வக்கிறது கவர்ன்மெண்ட் பொறுப்பு. மருமக பேருல மூணு லட்சமோ என்னமோ கட்டிடுவாங்க. ஒங்கையிலே சொளையா பத்து லட்சம் குடுத்துடுவாங்க. அதுபோக ஈமச்சடங்கையும் அவங்களே பார்த்துக்குவாங்க. இதுபோக டெல்லிக்காரங்க அவங்க கட்சி நிதியில இருந்து ஒரு லட்சம் தராங்களாம். இது பத்தாதுன்னு சிகப்பு பனியனும் ஜீன்ஸ் பேண்டுமா வந்த அந்தக் கட்சிக்காரங்க பத்து லட்சம் பத்தாது. ஐம்பது லட்சம் குடுங்கன்னு ஆவேசமா டிவிக்காரங்க கிட்டே சொல்லிக்கிட்டிருந்தாங்க”
குழப்பமான எண்ணங்களால் பித்துப் பிடித்தது போல ஆகிறாள் பேச்சி. அவளாகவே அந்த புரோக்கர் சோனையைத் தேடிச் செல்லத் தொடங்குகிறாள். மருத்துவமனை சிப்பந்தி ஒருவனுடன் வந்த சோனை இவளிடம் புரோநோட்டில் கையெழுத்து பெற்றுக் கொள்கிறான்.
இரவு முழுவதும் கனத்த மனத்துடன் எதற்காகவோ காத்திருந்த பேச்சிக்குக் காலை ஐந்து மணிக்குத் தகவல் வருகிறது. விம்மலுடன் அந்தத் தகவலைக் கேட்டுக் கொள்கிறாள். அழுகை வரவில்லை.
தொலைக்காட்சி செய்தி சொல்கிறது- சாவு எண்ணிக்கை இன்று மேலும் கூடியிருக்கிறது, ரமேஷ் வயது 30, பூங்காவனம் வயது 27, பாண்டி வயது 37, மாரியப்பன் வயது 44.
யதார்த்தம் பளாரென்று வாசகனின் முகத்தில் அறைகிறது. சமீபத்திய ஒரு சம்பவத்தைக் கொண்டு மிகவும் யதார்த்தமான முறையில் விஷயத்தை மிகவும் மெல்லிய குரலில், கூச்சல் ஏதுமின்றி, மனதைப் பிசைய வைத்திருப்பது இக்கதையின் வெற்றியாகும். எவ்வித போலியான மிகை உணர்ச்சிகள் இன்றி நேரடியாக விஷயத்தை சம்பவங்கள் தொட்டுச் செல்கின்றன.
எனவே, ஆகஸ்டு மாதத்தில் வெளிவந்த கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதையாக உயிர் எழுத்து இதழில் வெளியான மதிகண்ணனின் பேச்சி க/பெ மாரியப்பவன் [வயது 44] என்னும் இக்கதையை முன்வைக்க விரும்புகிறேன்.
மதிகண்ணன் அவர்களுக்கும் உயிர் எழுத்து இதழுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
