மூன்றாம் குலோத்துங்கன்

வரலாற்றில் மிகச்சிறந்த சோழ மன்னர்கள் - Lifie.lk Tamil | வாழ்க்கைக்கு....

மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178 முதல் 1222 வரை)

சோழர்களைப்பற்றி எழுதும்போது நமக்கு ஏற்படும் பெருமிதம், பூரிப்பு, கர்வம் எல்லாம் குறைந்து போய், இன்று ஏன் இந்த மனக்கலக்கம் நமக்கு வருகிறது?

எந்த ஒரு வெற்றிக்கும், ஒரு முடிவு உண்டு! எந்த ஒரு சாதனைக்கும், ஒரு சோதனை உண்டு! கண்ணன் ஆண்ட துவாரகை, கடலால் விழுங்கப்பட்டது! மாபெரும் குப்த சாம்ராஜ்யம் அழிந்துபட்டது!

காலம் ஒரு சுழல். அதிலிருந்து யாரும் தப்பமுடியாது. அது படைக்கும். கொடுக்கும். அழிக்கும். மீண்டும் மீண்டும்..

வாழ்வாங்கு வாழ்ந்த சோழர்களின் முடிவுக்கு அஸ்திவாரங்கள் ‘காலத்தால்’ மெல்ல போடப்பட்டு விட்டது.

அணையப்போகும் விளக்கு, சற்றுப் பிரகாசித்து எரியும் என்று சொல்வதுண்டு. அதுபோல ஒரு மாவீரன் சோழமன்னனாகிறான். ராஜாதிராஜன் 1182ல் காலமான பிறகு மூன்றாம் குலோத்துங்கன் முடிசூடினான்.

சோழர்கள், வீரபாண்டியனை மீண்டும் பாண்டிய அரசனாக உட்கார வைத்ததைப் பார்த்தோம். நன்றி மறந்த குலசேகரன், காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டான்.

ஆனால் பதவி ஆசை, விசித்திரமானது – கொடுமையானது – நேர்மைக்கு அடங்காதது – எதற்கும் தயங்காதது – துரோகங்களுக்குத் துணைபோவது.

சோழர் துணையால் பாண்டிய நாட்டை அடைந்த வீரபாண்டியன், சோழர்கள் செய்த உதவியை மறந்து, சிங்களர்களுடன் இணைந்து சோழர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தான். குலசேகர பாண்டியனின் மகன் விக்கிரம பாண்டியன், மூன்றாம் குலோத்துங்கனிடம் சரண் அடைந்து, தனக்குப் பாண்டிய தேசத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக் கொண்டான். சோழர்களுக்குத் தீமை செய்த வீரபாண்டியனை எதிர்க்க இன்னொரு காரணமும் கிடைக்கவே, போர் தினவெடுத்திருந்த குலோத்துங்கன், சோழப் படையைப் பாண்டிய தேசம் நோக்கி நகர்த்தினான். சோழர்கள் படையை தானே தலைமை தாங்கி போர் நிலத்தில் வாளேந்தி நின்றான். எழகப் படை, மறவர் படை, ஈழப் படை ஆகியவை சோழனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் புறம் கண்டோடின. வென்ற சோழன், தன்னிடம் அடைக்கலம் கண்ட விக்கிரம பாண்டியனிடம் பாண்டிய தேசத்தை ஒப்படைத்துக் கப்பம் கட்டுமாறு பணிவித்தான்.

வீரபாண்டியன், சேரநாட்டை அடைந்து வீர கேரளன் உதவியைக் கோரினான். சேரப் படையுடன் தனது படையையும் இணைத்து, சோழனை எதிர்த்தான். தனது பாண்டிய தேசத்தை அடையும் பொருட்டு, மதுரை மாநகர் நோக்கித் தனது படையை நகர்த்தினான். இதை அறிந்த சோழன், மதுரைக்குக் கிழக்கே உள்ள நெட்டூரில் பாண்டியப் படைகளைச் சந்தித்தான். அங்கே மிகப் பயங்கரப் போர் நிகழ்ந்தது. இந்தப் போரிலும் வீரபாண்டியன் தோல்வியையே சந்தித்தான்.

தோல்விக்குப் பின் வீரபாண்டியன், சேரதேசம் சென்று வீரகேரளனிடம் சரண் அடைந்தான். இரண்டாம் பாண்டியப் போரில், குலோத்துங்கனின் ஆற்றலை அறிந்த வீரகேரளன், வீரபாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்தால், சோழன் தன்னையும் எதிர்த்து வருவான் என்பதை அறிந்திருந்தான். சோழன் மேல் கொண்ட நம்பிக்கையாலும், மதிப்பாலும், வீரபாண்டியனை சோழனிடமே அடைக்கலம் அனுப்பி வைத்தான். அடைக்கலம் என்று புகுந்த வீரபாண்டியனை, எதிரியாக இருந்தாலும், அனுசரணையுடன் அணைத்தான் சோழன். அவனுக்கு பாண்டிய தேசத்தின் ஒரு பகுதியை பிரித்து அரசாளக் கொடுத்தான். இப்படித் துரோகிகளுக்கு அடைக்கலம் கொடுத்தே சோழர் பலம் குறைந்தது.

சிங்களர்கள், பாண்டிய மன்னர்களைத் தூண்டி விட்டு சோழ தேசத்தில் குழப்பம் ஏற்படுத்தி வந்தனர். இதனால் கடும் சினம் கொண்ட குலோத்துங்கன், சோழப் படையை இலங்கை தேசம் நோக்கி அனுப்பி வைத்தான். இதனை அடுத்து, சோழ தேசத்திற்கும் ஈழ தேசத்திற்கும் பெரும் போர் நிகழ்ந்தது. புலனருவா பகுதி, யாழ் ஆகிய இடங்களை சோழதேசம் கவர்ந்தது.

ஈழதேசத்தில் போர் புரிந்த காலத்திலேயே, சோழன், கொங்கு தேசத்திலும் போர் புரிந்தான். ராஜாதிராஜன் காலத்தில் ஆட்சி புரிந்து வந்த கொங்கு மன்னர்கள், சோழர்களுக்கு கப்பம் செலுத்துவதை நிறுத்தி விட்டு சுயேச்சை மன்னர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டனர். இதனால், குலோத்துங்கன், பாண்டியதேசத்தைக் கைப்பற்றியவுடன், தனது படைகளை சன்னத்தமாக வைத்திருந்து, பிறகு கொங்கு தேசம் மீது பாய்ந்தான். சோழர்களுக்கு ஈடு கொடுக்க இயலாத கொங்கு தேசத்தவர்கள் (இவர்கள் சேரமன்னர்களது கிளை வம்சத்தவர்கள்) சோழர்களிடம் சரண் அடைந்தனர். இதனை அடுத்து தன்னிடம் தோற்ற கொங்கு மன்னர்க்கே அவரது தேசத்தை அளித்து, தனக்கு அடங்கிக் கப்பம் கட்டுகின்ற ஒரு சிறிய அரசனாக அறிவித்தான்.

காகதீயா அரசு, தனது விஸ்தரிப்பினை ஆரம்பித்த காலம் மூன்றாம் குலோத்துங்கனின் காலம் தான். அது மட்டும் இல்லாமல், பாண்டியர்கள் மற்றும் ஹோய்சாளர்கள் தங்களது அரசுகளை விஸ்தரிக்கும் எண்ணங்களை தங்களுக்குள் விதைத்த காலமும் குலோத்துங்கனின் காலம் தான். ஹோய்சாளர்களை திருமண உறவின் மூலம் வலுப் படுத்தினான் சோழன். அப்போது காகதீய மன்னன், சோழனின் சிற்றரசர்களை தூண்டி விட்டுக் கலகம் செய்வித்தான். காஞ்சிபுரத்தை ஆண்டு வந்த வீரநல்ல சித்தன்ன தேவசோழன் என்கிற சிற்றரசன் குலோத்துங்கனுக்கு அடிபணியாமல் கப்பம் கட்டுவதை நிறுத்தினான். இவனுக்குத் துணையாக காகதீய மன்னன் இருந்தான். இதனால் வெகுண்ட சோழன், தனது படையுடன் சென்று சித்தன்ன தேவனை அடிபணிய வைத்து, காகதீய மன்னனை சோழதேசம் பக்கம் நெருங்க விடாமல் செய்தான்.

விக்கிரமபாண்டியனின் இயற்கையான மறைவுக்குப் பிறகு, அவன் மகன் குலசேகரபாண்டியன் அரியணை ஏறினான். அவன், குலோத்துங்கன் பாண்டியர்களுக்குச் செய்த உதவியை மறந்து, ஈழ அரசுடன் உடன்படிக்கை செய்தான். சோழ அமைச்சர்களை நாடு கடத்தினான். துரோகங்கள் ஒரு தொடர்கதையாகத் தொடர்ந்தது. இதன் காரணமாக, மூன்றாம் பாண்டியப் போர் நிகழ்ந்தது.

பாண்டியர்களின் துரோகத்துக்காகச் சோழர்கள் மீண்டும் மீண்டும் போரிட்டு வருவது வேடிக்கையாகத் தோன்றினாலும் அது ஒரு வாடிக்கையானதாயிற்று. ஆனால், மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பொறுக்க முடியவில்லை. வெதும்பிப் போனான். வெகுண்டான்.

‘எத்தனை முறை தான் இந்தப்பாண்டியர்கள் நமக்குத் துரோகம் செய்து கொண்டே இருப்பார்கள்? நாமும், இனி இந்தப் பாண்டியர்களுக்காகப் போரிட்டு வாடுவதை விட, பாண்டியநாட்டை வெற்றிகொண்டு, பாண்டிய நாட்டைச் சோழர் அரசியற் பார்வையில் வைத்தலே உகந்தது’ என்று எண்ணினான்.

பெரும் படையுடன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தான். மட்டியூர், கழிக்கோட்டை என்ற இடங்களில் கடும்போர் நடந்தது. குலசேகரன் படை அழிந்தது. அவன் காடுகளில் புகுந்து ஒளிந்தான். சோழப்படை மதுரையைக் கைப்பற்றியது. அரண்மனைகள், மற்றும் முடிசூட்டு மண்டபம் முதலியவை (மீண்டும்) இடிக்கப்பட்டன.

கோபம் ஒரு மன்னனுக்கு எத்தனை தீய எண்ணங்களைக் கொடுக்கிறது!

வெற்றி கொண்ட மதுரை நாட்டை, கழுதை ஏர் கொண்டு உழுது, வரகு, உப்பு விதைத்துப் பாழ்படுத்தினான். மதுரை பாழானது. குலோத்துங்கனின் சீற்றம் நகரை எரித்தது. மதுரையில் ‘சோழ பாண்டியன்’ என்ற பட்டமும், வீரமாமுடியும் தரித்து வெற்றித்தூண் நாட்டினான். பாண்டியனையும் சேரனையும் வென்றமையால் ‘திரிபுவன வீரன்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான். இப்போருக்குப் பின்னர்ப் பாண்டிமண்டலம் சோழபாண்டிமண்டலம்’ எனப்பெயர் பெற்றது.,சோழரது நேர் ஆட்சியில் அடங்கி விட்டது. மதுரை ‘முடித்தலைகொண்ட சோழபுரம்’ எனப்பட்டது. மதுரை அத்தாணி மண்டபம் சேர பாண்டியர் தம்பிரான் எனப் பெயர் பெற்றது. பெரு வெற்றி பெற்ற குலோத்துங்கன், மதுரையில் விசய அபிடேகமும் வீர அபிடேகமும் செய்துகொண்டான்.

வாசகர்கள் இந்நேரம் கவனித்திருப்பீர்கள்! சோழர்கள், மதுரையில் வரகு விதைத்து, கழுதை கொண்டு உழுதனர். இப்படி இதுவரை எந்த சோழனுமே செய்யாத அவமதிப்பைக் கோபத்துடன் குலோத்துங்கன் செய்திருந்தான். பாண்டியர்கள், தாள இயலாத அவமானத்தில் துடித்தனர். தோல்வி அடைவது சகஜம் தான். ஆனால், இப்படியா அவமானப்படுவது? துடிதுடித்தனர். இதற்குப் பழி வாங்குவது என்று சூளுரைத்தனர். மதுரையை விட்டுச் சோழவீரர்கள் வெற்றிக்களிப்புடன் சென்றபின் – பாண்டிய இளவரசன் சுந்தரபாண்டியன் நகரைச் சுற்றிப்பார்த்தான்.

(சரித்திரப்பிரியர்களுக்கு ஒரு குறிப்பு: சாண்டில்யன் எழுதிய ராஜமுத்திரையில் வரும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இவனல்ல. இவன் மாறவர்மன் சுந்தரபாண்டியன்).

மதுரையில் எங்கும் அழிவு. அனைத்து அரண்மனைகளும் தரைமட்டமாயிருந்தது. கொலுமண்டபம், இருந்த இடம் தெரியாமல் இருந்தது. வயல்களில் ஓரிரு கழுதைகள் அலைந்து கொண்டிருந்தது. மக்களின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இளவரசனைப் பார்த்தவுடன் கதறி அழுதனர். ‘முன்னூறு ஆண்டுகளாக இந்தச் சோழர்கள் நம்மை நாசம் செய்து வருகின்றனரே! ஆண்டவன் இதற்கு முடிவு தரமாட்டானா? இந்த குலோத்துங்கனுக்குப் பாடம் சொல்ல நமக்கு வீரமில்லாமல் போய்விட்டதே” என்று புலம்பினர். சுந்தரபாண்டியன் கொதித்தான். மீனாட்சியம்மன் ஆலயம் மட்டும் சோழர்களால் அழிக்கப்படாமல் இருந்தது. சுந்தரபாண்டியன், அம்மன் ஆலயத்திற்குச் சென்று தொழுதான். “அம்மா! இந்த குலோத்துங்கன் மடியுமுன்னரே, இதே நிலைமையை சோழன் தலைநகருக்கு நான் விளைவிக்க வேண்டும். இதற்கு உன் ஆசி தேவை“ என்று முறையிட்டான். வாளால், கையில் கீறி, இரத்தத்தால் முகத்தில் பொட்டு இட்டுக்கொண்டு முறையிட்டான்.

காலச்சக்கரம் தொடர்ந்தது. வருடங்கள் ஓடின. என்னடா இது, வழக்கம் போல சோழர்களது ஆதிக்கம் தொடர்கின்றதே என்று நீங்கள் நினைக்கும் போதே, சோழர்களின் சோழி, பரமபதம் பாம்பில் கீழே இறங்கத் தொடங்கியது.

மேலும் நடந்ததைப் பார்ப்போம்!