The Thief and a Little Boy - Interesting Stories for kids

அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. பைப்பைப் பிடித்துக் கொண்டு ஏறி மாடி ஜன்னல் வழியாக உள்ளே குதித்தான் அந்த வீட்டுக்குள்.

நாற்காலியில் உட்கார்ந்து புஸ்தகம் படித்துக் கொண்டிருந்த சிறுவன், ஒரு தரம் நிமிர்ந்து பார்த்துவிட்டு தொடர்ந்து புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான்.

‘தம்பீ..’

‘யெஸ்’

‘நான் யாருன்னு தெரியுமா?’

‘மாடி ஜன்னல் வழியா விருந்தாளியா வருவாங்க? திருடந்தானே?’

இப்போது ஆச்சரியத்தோடு அதிர்ச்சியும் சேர்ந்து கொண்டது.

‘பின்னே ஏன் நீ சத்தம் போடல்லை?’

‘சத்தம் போட்டா ஒண்ணு என் வாய்ல துணி அடைப்பே, அல்லது பாக்கெட்லேர்ந்து மயக்க மருந்து நனைச்ச கர்ச்சீஃபை எடுத்து என் மூஞ்சியிலே வைப்பே, கொஞ்சம் பயங்கரமான ஆளா இருந்தா துப்பாக்கியை எடுத்து சுடுவே அல்லது கத்தியை எடுத்துக் குத்துவே. இது எதுவுமே வேண்டாம்ன்னுதான் சும்மா இருந்தேன்’

‘நான் உங்க வீட்லே திருடிகிட்டுப் போனா பரவாயில்லையா?’

‘திருட்டுன்னா என்ன?’

‘மத்தவங்க கஷ்டப்பட்டு உழைச்சி சம்பாதிச்சதை நாம ஈஸியா எடுத்துகிட்டுப் போகிறது தப்பில்லையா?’

‘ஆக்சுவலா சொல்லணும்ன்னா, எங்கப்பாவும் அம்மாவும் சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப் படறாங்களோ, அதை விட நீ அதிகம் கஷ்டப் பட்டு வந்திருக்கே. பைப்பில் ஏறுறதும், அதுலேர்ந்து ஜன்னலுக்கு வர்ரதும் தாழ்ப்பாளை வெளியிலேர்ந்து திறந்துகிட்டு உள்ளே வர்ரதும் சாதாரண விஷயம் இல்லை. இதுல பாதி கஷ்டம் கூட அவங்க பட்டிருக்க மாட்டாங்க’

அவனுடைய ஆச்சர்யம் இன்னும் அதிகம் ஆயிற்று.

‘எங்க அப்பா அம்மா போல நீயும் ஏன் வேலைக்குப் போய் சம்பாதிக்கக் கூடாதுன்னு கேட்கத் தோணல்லையா?’

‘வேலை கிடைச்சி அது வேணாம்ன்னு விட்டுட்டா நீ இவ்வளவு ரிஸ்க் எடுத்து திருடிகிட்டு இருக்கே? வேலை கிடைக்கல்லை, அதான் திருடறே’

அவனுக்குக் கண்ணில் கண்ணீரே வந்துவிடும் போல இருந்தது.

‘என்னப்பா தம்பீ.. இந்தச் சின்ன வயசுல ஞானி மாதிரி பேசறே?’

‘அதனாலே நீ மனம் திருந்தி அப்படியே வந்த வழியில் போய்டவா போறே? அதெல்லாம் கதையில் வர்ர திருடந்தான் பண்ணுவான். நீ நிஜத் திருடந்தானே?’

‘இப்படி ஒரு பையனை நான் பார்த்ததே இல்லை’

‘நான் கூட இப்படி திருட வந்துட்டு பையன் கூட பேசிகிட்டு இருக்கிற திருடனைப் பார்த்ததே இல்லை. எங்க அப்பா அம்மா வர்ரத்துக்குள்ளே உன் வேலையை முடி. மாடியில எதுவும் இல்லை. பீரோ கீழே பெட்ரூம்லதான் இருக்கு’

அவன் அந்தச் சிறுவனைப் புதிராகப் பார்த்தான்.

‘என்ன பாக்கறே? எப்படி இருந்தாலும் திருடப் போறே; எனக்கு எந்த ஆபத்தும் இல்லாம திருடிகிட்டுப் போ. ஏழு மணிக்கு அம்மா, அப்பா வந்துடுவாங்க. இன்னும் ஒரு மணி நேரந்தான் இருக்கு’

அவன், சிறுவனைப் புதிராகப் பார்த்துக் கொண்டே மாடிப்படி இறங்கிப் போனான். அரை மணி ஆகியிருக்கும். முதுகில் மாட்டிக் கொள்கிற பெரிய பையில் வெள்ளிப் பாத்திரம், நகை, பணம் எல்லாவற்றையும் நிரப்பிக் கொண்டு மாடிப் படியேறி வந்தான்.

‘ரொம்ப தேங்ஸ் தம்பி.. இப்படி ஒரு ….’

‘அதுக்கெல்லாம் நேரமில்லை. அம்மா, அப்பா வந்துடுவாங்க. நீ கிளம்பு’

அவன் ஜன்னலை நோக்கி நடக்க ஆரம்பித்த போது, சிறுவன்,

‘ஒரே ஒரு ஹெல்ப் பண்ணிட்டுப் போக முடியுமா?’ என்றான்.

‘சொல்லு தம்பி.. இவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்கே, அது கூடப் பண்ண மாட்டேனா?’

‘ஃபிரிஜ்ஜத் திறந்து கொஞ்சம் பிரெட்டும் ஜாமும் எடுத்துக் கொடுத்திட்டுப் போயேன். மேல் கம்பார்ட்மெண்ட்ல இருக்கு எனக்கு எட்டாது’

‘இதோ.. எடுத்துக் குடுக்கறேன் தம்பீ’ என்று ஃபிரிஜ்ஜின் ஃப்ரீஸர் கதவில் கைவைத்தான். அவ்வளவுதான்.

விர்ர்ர்ர்ரென்று உடம்பெல்லாம் உதறியது ஷாக்கில். சில வினாடிகள்தான். தூக்கி எறியப்பட்டு தூர விழுந்தான். சுத்தமாய் நினைவு இழந்து விட்டான். இப்போது பையன் நாற்காலியிலிருந்து எழுந்து மெல்ல நடந்து கட்டிலுக்கு அடியில் குனிந்து,

‘அப்பா…’

என்றான்.

‘என்ன ஆச்சு?’

‘நீ பரவாயில்லை. ஷாக் அடிச்சதும் படார்ன்னு கையை இழுத்து உதறிட்டே. அந்தாளு இறுக்கிப் புடிச்சிகிட்டு வடிவேலு காமெடி மாதிரி உதறு உதறுன்னு உதறி மயங்கி விழுந்துட்டான்’

‘சரி, வா. நம்ம வேலையை ஆரம்பிக்கலாம்’

‘அதொண்ணும் தேவையில்லை. அந்தாளே எல்லாத்தையும் எடுத்துட்டான். இதோ.. பையை எடுத்துக்க கிளம்புவோம்’

‘மகனே.. எதிர் காலத்திலே நீ ரொம்ப இண்ட்டலிஜண்ட் திருடனா வந்து நேபாளம் வழியா வெளிநாட்டுக்கு ஓடற அளவு பெரிய்ய வேலையெல்லாம் செய்யப் போறே!’

(நேரமில்லை, சீக்கிரம் திருடு – #சிறுகதை