சங்கரன்: பிரியா! எங்க இருக்கே, சீக்கிரம் வா!
பிரியா: என்ன ஆச்சுங்க. நடு ராத்திரியில. நான் பக்கத்திலதானே படுத்திருக்கேன். ஏன், இப்படி கத்துறீங்க.
சங்கரன்: என் பக்கத்தில உட்காரு. நீ நல்ல இருக்கியா?
பிரியா: என்ன ஆச்சுங்க? ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா?
சங்கரன்: அதெல்லாம் ஒன்னுமில்லை. புத்தகம் படிச்சுகிட்டே இருந்தேன். செத்த கண் அசந்துட்டேன். அது இருக்கட்டும். உனக்கு B P, sugar எல்லாம் ஒன்னும் இல்லையே?
பிரியா: ஏங்க ஒரு மாதிரி பேசுறீங்க. டாக்டர்கிட்ட வேணா போகலாமா?
சங்கரன்: வேண்டாம். நான் சொல்றதை மட்டும் கவனமா கேட்டுக்க. ஊட பேசாதே.
பிரியா: சரி, சொல்லுங்க.
சங்கரன். உன் உடம்பை பத்திரமா பாத்துக்க. அடுப்பு பக்கம் போகாதே. காலையில காபியில இருந்து சமையல் பூரா நான் பாத்துக்குறேன்.
எங்கேயாவது வெளியே போகனும்ணா நான் வந்து கூட்டிக்கிட்டு போறேன். தனியா போயிடாதே. நாளைக்கு முதல்ல ஒரு செக் அப் செஞ்சிடலாம். நீ ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும். உனக்கு முன்னால நான் போயிடனும். எனக்கு நெருப்பைக் கண்டாலே பயம். சூடு தாங்காதம்மா.
பிரியா: ஏங்க கண் கலங்குது. ஏதேதோ பேசுறீங்க. எனக்கு ஒன்றும் புரியல. இப்ப படுத்து தூங்குங்க. காலையில எழுந்து பாத்துக்கலாம்.
சங்கரன்: நீ , என்ன ஒன்னுமே நடக்காத மாதிரி பேசுற. புதுசா ‘சதன்’னு சட்டம் வந்தது தெரியாதா?
பிரியா: என்ன சட்டம்? முதல்ல படுக்கிறதுக்கு முன்னால என்ன படிச்சீங்க? ஏன் இப்படி புலம்பறீங்க?
சங்கரன்: உனக்கு நம் நாட்டில் நடப்பது ஒன்னும் தெரியாது போல. நெல்சன் என்ற ஆங்கிலேயர் எழுதிய ‘The Madura Country A manual’ என்ற நூலை படித்திருக்கியா? இல்ல, S.M கமால் எழுதுய ‘ தீக் குளித்த காரிகைகள்’ என்ற நூலையாவது படித்திருக்கையா?
நல்ல வேலை நீ படிக்கல.
பிரியா: அதுல என்னங்க இருக்கு.
சங்கரன்: உனக்கெதுக்கு அதும்மா
பிரியா: இல்லீங்க நீங்க இப்ப பேசுறதுக்கும் அதுக்கும் ஏதோ தொடர்பு இருக்குங்க. நாளைக்கு டாக்டரை பார்க்குறப்ப சொல்லனுமே.
சங்கரன்: நான் முழுவதையும் சொல்லி விடுறேன். கேட்டுக்க. இடையில பேசாதே. படிச்சது மறந்துடும்.
மறவர் சீமை என அழைக்கப்பட்ட ராமநாதபுரம் ராஜா கிழவன் சேதுபதி தெரியுமா? 1673 முதல் 1708 வரை சுமார் 35 ஆண்டுகள் தனக்கு எதிரிகளே இல்லை என்ற அளவிற்கு ஆட்சி செய்தார். அவர் ஆட்சியின் கீழ் அனைவரும் மகிழ்ச்சியோடு மட்டுமல்ல, அவர் ஒரு வார்த்தை சொன்னால் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தது மறவர் கூட்டம்.
மதுரையை ஆண்ட இராணி மங்கம்மாளிடம் இருந்து தன் நாட்டை விடுவித்துக் கொண்டது மட்டுமல்ல, இராணி மங்கம்மாள் மரணிக்கும் வரை அவருக்கு சிம்ம சொப்பணமாக இருந்தார் கிழவன் சேதுபதி.
பத்தாதற்கு தஞ்சை மன்னர் மீது படையெடுத்து அவருக்குச் சொந்தமான பூமியையும் தனதாக்கிக் கொண்டார்.
மன்னாதி மன்னனாக இருந்தாலும் ஒரு நாள் மரணிக்க வேண்டும் தானே. நம் மன்னன் கிழவன் சேதுபதிக்கும் அந்நாள் வந்தது. சிவனடி சேர்ந்தார்.
இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து சற்று தள்ளி பல சதுர அடிகளுக்கு மாங்கு, மாங்கென ஆழமான பள்ளம் தோண்டினர். பள்ளம் முழுதும் காய்ந்த மரங்களைக் கொண்டு நிரப்பினர்.
சடங்கு ஆரம்பித்தது.
ராஜாவை, ராஜா போல அலங்கரித்து, ராஜ மரியாதையுடன் சுமந்து வந்து நடுவில் வைக்க தீ மூட்டப் பட்டது.
தீக்குழியை ஒரு பெண்கள் கூட்டம் புத்தாடை உடுத்தி, பூச்சூடி வலம் வந்தது. எண்ணிப் பார்த்ததில் 47 பெண்கள். அவர்கள் யாரெனக் கேட்டால் அனைவரும் ராஜாவின் மனைவிகளாம்.
மூன்று முறை வலம் வந்தவுடன் வயதில் மூத்த பட்டத்தரசி ஏதோ வீர உரையாற்றினார். பலத்த சத்தத்தால் என்ன பேசினார் என யாருக்கும் தெரியாது.
திடீரென சிவ, சிவா என கூறிக் கொண்டே தீக்குழியில் குதித்தார்.
மீதம் உள்ள 46 பேரில் 45 பேரும் கூக்குரலிட்டுக் கொண்டே குழியில் குதித்தார்களா அல்லது தள்ளப்பட்டார்களா எனத் தெரிய வில்லை. எங்கும் ஒரே ஓலம்.
ஒருவர் மட்டும் தப்பி அருகே இருந்த படை வீரனைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். படை வீரனுக்கு கை கால்கள் உதறியது. நம்மையும் சேர்த்து தூக்கிப் போட்டு விடுவார்களோ என்ற பயம். மக்கள் விட வில்லை. அம்மையாரைத் தூக்கி குழியில் போட்டார்கள். தப்பி ஓடிய படை வீரன் பயத்திலிருந்து மீளாமலே சிறிது நேரத்தில் இறந்தான்.
இதெல்லாம் உனக்குத்தெரியுமா?
பிரியா: அதெல்லாம் சரித்திரமுங்க. ‘சதி’ யைத்தான் 1829 லேயே வில்லியம் பெண்டிங் பிரபு ஒழித்து விட்டாரே. இப்ப அதுக்கு என்ன?
சங்கரன் :பைத்தியமே! அதுக்கு அப்புறம் நடந்தது உனக்கு தெரியாதா? பின்னால் வந்த சேதுபதி மன்னரின் பட்டத்து அரசி கனவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏற வேண்டியதில்லை, மாறாக மனைவி இறந்தால் கனவன் உடன் கட்டை ஏற வேண்டுமென ‘சதன்’ என ஒரு சட்டம் இயற்றியிருந்தார்.
அச்சட்டத்தை எதிர்த்து இத்துனை ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது. இறுதியாக நேற்றுதான் உச்ச நீதி மன்றம் அச்சட்டம் செல்லுமென தீர்ப்பு வழங்கியுள்ளது.
இரவு எல்லா சேனல்களிலும் Breaking News அதுதான்.
பெண் உரிமைக்கு கிடைத்த வெற்றி என இரவு முழுதும் எல்லா டீ வீ சேனல்களிலும் கத்திக்கிட்டு இருந்தாங்க.
உலக நடப்பே உனக்குத் தெரியாதா?
பிரியா: புத்தகத்தில் படிச்சிட்டு ஏதாவது கனவு கண்டிருப்பீங்க. கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு இப்ப தூங்குங்க. காலையில பார்த்துக்களாம்.
ஒரு விஷயம் காலையில என்னை எழுப்பாதீங்க. காபி டிகாஷன் போட்டு வைங்க. தோசை ஊத்தி சாப்பிட்டு, எனக்கும் இரண்டு ஊத்தி வச்சுட்டு போங்க.
சங்கரன்: எல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ கவலையே படாம உடம்பை மட்டும் பாத்துக்கம்மா.
