63 நாயன்மார் பாடல் - திருத் தொண்டர் தொகை                                                 

  36) கழறிற்றறிவார் நாயனார்

 

சேரநாட்டின் தலைநகரம் கொடுங்கோளூர். சேரர் தொல்குடியைச் சேர்ந்தவர் பெருமாக் கோதையார். அவர் அரசர்க்குரிய பணிகளில் விருப்பம் இன்றித் திருவஞ்சைக்களம் என்ற கோவிலில் சிவத் தொண்டு புரிந்து வந்தார்.அந்தச் சமயத்தில் சேர நாட்டை ஆண்டு வந்த மன்னன் துறவு பூண்டதால் பெருமாக் கோதையார் அரசாட்சியை ஏற்கவேண்டியதாயிற்று. அரச பதவியை ஏற்கத் தயங்கிய அவருக்கு இறைவனின் ஆணையும், அருளும் கிடைத்ததால் அவர் அரசராக முடி சூடிச் சேரமான் பெருமாள் நாயனார் என்று அழைக்கப் பெற்றார்.  இறைவன் அருளால் அனைத்து உயிர்களும் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலையும் பெற்றார்.அதனால் கழறிற்றறிவார்

(உயிர்கள் பேசுவதை அறிபவர்) என்ற பெயரைப் பெற்றார்.

அரசரான பின்னர், யானை மீது அமர்ந்து ஊர்வலமாக வருகையில்,

உவர் மண்ணால் உடல் வெளுத்திருந்த சலவைத் தொழிலாளி ஒருவனைக் கண்டார் நாயனார். அவனைத் திருநீறு அணிந்த சிவனடியாராகக் கருதி யானையை விட்டு இறங்கிப் பணிந்து வணங்கினார். இஃது அவரது அவரது சிவபக்திக்கு எடுத்துக் காட்டாய் அமைந்தது.

மதுரையைச் சேர்ந்த பாணபத்திரன் என்ற இசைவாணனின் வறுமையைப் போக்க எண்ணிய சொக்கநாதக் கடவுள் அவனுக்கு உதவுமாறு திருமுகப் பாசுரம் ஒன்றைச் சேரமானுக்கு அனுப்ப, அவரும் அவனுக்குப் பொன்னும், பொருளும் அள்ளித் தந்தார்.

சேரமான் பெருமாள் நாயனார்,  ஒவ்வொரு நாளும் சிவபூசை முடித்த பின் ஆடல் வல்லானின் சிலம்பின் ஒலியைக் கேட்பது வழக்கம்.

ஒருநாள் இறைவனின்  சிலம்பொலி கேளாமல் போகத் தம் பிழை யாது என்று கலங்கினார். தம் உடைவாளால் தற்கொலை செய்ய முயன்றார்.உடனே இறைவன் சிலம்பொலியை அதிகமாகக் கேட்கும்படிச் செய்தான். தில்லையில் தன் நடனத்தைக் கண்டு சுந்தரன் பாடியதைக் கேட்டுக் கொண்டு இருந்ததால் காலம் தாழ்ந்தது என்று இறைவன் காரணத்தை எடுத்துக் கூறினான்.

உடனே நாயனார், தில்லை சென்று கூத்தனையும்,திருவாரூர் சென்று சுந்தரரையும் கண்டு வணங்க வேண்டும் என்று எண்ணிப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார்.

தில்லையில் ‘ பொன் வண்ணத்தந்தாதி’ பாடினார். இறைவன் ஆடும் சிலம்பொலி கேட்டு மகிழ்ந்தார். பின்னர்ச் சுந்தரரைக் காணத் திருவாரூர் சென்றார்.அங்கு இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி நண்பராயினர்.அங்குத்’ திருவாரூர் மும்மணிக் கோவை’ என்ற நூலைப் பாடினார்.

சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் பல பதிகளுக்குச் சென்று வழிபட்டு மீண்டும் திருவாரூரை அடைந்தனர்.அங்குப் பரவையார் இருவருக்கும் விருந்தளித்தார்.

சுந்தரரைத் தம் நாட்டிற்குச் சேரமான் அழைக்க, அவரும் பரவையாரிடம் விடைபெற்றார். இருவரும், திருவாரூரை விட்டுப் பல தலங்களுக்குச் சென்று வழிபட்டுப் பின்னர்க் கொடுங்கோளூரை அடைந்தனர். திருவஞ்சைக் களம் ஆலயத்தில் வழிபட்டனர்.

சேரமான் பெருமாள் நாயனாருடன் சில காலம் தங்கி இருந்த சுந்தரர், திருவாரூர்ப் பெருமானின் நினைவு வரவே அவரிடம் விடைபெற்றார் .

 

(வன்றொண்டராகிய சுந்தரர் யானை மீதேறித்  திருக்கயிலை எழுந்தருளினார்.இதனை அறிந்த சேரமான் பெருமாள் நாயனார் தம் குதிரை மீதேற, அக்குதிரை  கயிலை நோக்கிச் சென்றது.

உள்ளே செல்ல முடியாமல், அங்குத் தடைபட்டு.நின்ற சேரமானைத் தான் அழைக்காமல் வந்த காரணத்தை இறைவன் கேட்கத் தாம்  சுந்தரரைத் தொழுதவண்ணம் வந்த்ததாகக் கூறினார். தாம் பாடும் ஞான உலாவைக் கேட்டருளுமாறு வேண்டினார். அதை அவர்  பாடக்  கேட்ட இறைவன் அவரைச் சுந்தரருடன் கணநாதராக அங்கு இருக்குமாறு திருவருள் புரிந்தான்).

  கழறிற்றறிவார் நாயனார் வெண்பா

 

சுந்தரரின் தோழரவர், தொல்குடிச் சேரமன்னர்,

சிந்தை மகிழ்வார் சிலம்பொலியால்; – முந்திப்

பொருளளித்தார் பாணர்க்கு; புண்ணிய தொண்டால்

அருளடைந்த நல்லார் அவர்.

                              ************************

               37)கணநாத நாயனார்

 

திருஞானசம்பந்தர் பிறந்த சீர்காழிப் பதியில் அந்தணர் குலத்தில் உதித்தவர் கணநாத நாயனார்.

அங்கு எழுந்தருளிய திருத்தோணியப்பரின் திருப்பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தார்.

மலர் பறித்தல், மாலை தொடுத்தல், திருமஞ்சன நீர் கொணர்தல் மெழுகிடுதல், திருமுறை எழுதுதல், அவற்றை வாசித்தல் ஆகியவற்றில் ஈடுபடும் அன்பர்களுக்கு அவற்றைக் குறைவறச் செய்ய உதவியும், பயிற்சியும் அளித்து வந்தார். வாய்மை மிக்க மனையறத்தில் இருந்து கொண்டு சிவனடியார்களுக்கு இன்பம் ஏற்படும்படித் தொண்டு புரிந்து  வாழ்ந்து வந்தார்.

சீர்காழியில் தோன்றிய மெய்ப்பெருஞானம் மிக்க ஞானசம்பந்தரின் திருவடிகளை ஒவ்வொரு நாளும், மூன்று பெரும் பொழுதுகளிலும் அன்புடன் வழிபட்டு வந்தார்.

இத்தகைய தொண்டுகளாலும், ஞானசம்பந்தரின் தாமரை போன்ற திருவடிகளை வணங்கி, வழிபட்டு வந்த தன்மையினாலும் திருக்கயிலை மலையை அடைந்து சிவகணங்களுக்கு நாதராகும் உயர்ந்த நிலையைப் பெற்றார்.

.        கணநாத நாயனார் வெண்பா

காழிப் பதியார் கணநாதர், உள்ளத்தில்

ஆழுமன்பால் தொண்டுசெய்தார் ஆலயத்தில், – சூழுபுகழ்ச்

சம்பந்தர் பொற்கழல் சார்ந்து கணத்தலைமை

உம்பருல(கு) ஏற்றர் உவந்து

                   (உம்பரருகு – தேவலோகம்,)

 

                 38) கூற்றுவ நாயனார்

 

களந்தை என்ற பதியின் தலைவரான கூற்றுவ நாயனார் தம் போர்த் திறமையால் பகைவர்களை வென்றார்.இறைவனின் திருநாமத்தை நாள்தோறும் சொல்லி வந்தும், அடியவர்களைப் பணிந்தும் சிறந்த தொண்டில் ஈடுபட்டு வந்தார்.

சிவபெருமான் அருளால், மன்னர்களை வென்றும், யானை, குதிரை, தேர், காலாட்படை என்று நால்வகைப் படைகளைக் கொண்டும் வீரத்தில் சிறந்து விளங்கினார்.தும்பைப் பூவைச் சூடிப் போர்மேற் சென்று வெற்றி அடைந்து வாகை மாலையைச் சூடி பல நாடுகளைக் கைப்பற்றினார். இப்படி, முடி சூடிக் கொள்ளும் ஒன்றைத் தவிர அரசர்க்குரிய மற்ற சிறப்புகள் அனைத்தும் பெற்றிருந்தார்.

தமக்கு மணிமுடி சூட்டுமாறு தில்லைவாழ் அந்தணர்களை அவர் வேண்டினார். ஆனால் அவர்களோ ‘சோழர்களின் தொன்மை மிக்க குலத்து முதல்வர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு முடி சூட்ட மாட்டோம்’ என்று மறுத்து விட்டனர்.மனம் வருந்திய கூற்றுவ நாயனார், மன்றில் ஆடும் இறைவனைப் பணிந்து வணங்கி, ‘அடியேனுக்கு உன் மலர்ப்பாதமாகிய திருவடிகளையே மணிமுடியாகப் பெறும் பேற்றினை அருள வேண்டும்’ என்று இறைஞ்சினார்.

கனவில், இறைவன்  அவர்க்குத் தன் அடிகளைச் சூட்டினான்.

இறைவன் திருவடிகளையே மணிமுடியாகக் கொண்டு கூற்றுவ நாயனார் உலகம் அனைத்தும் ஆண்டார்.

கூற்றுவ நாயனார், கோவில்களில், எல்லா உயிர்களும் இன்புறப் பூசைகள் செய்தும், வானவரும் மகிழ ஆட்சி செய்தும், சிவபெருமானின் திருவடியை  அடைந்தார்.

 

      கூற்றுவ  நாயனார்வெண்பா

 

கூற்றுவ நாயனார் கூறரிய தொண்டாற்றி,

மாற்றலரைப் போர்வென்றும் மௌலியற்றார் – போற்றுதில்லை

அந்தணர்கள் தாம்மறுக்க அந்தச் சிவனடியே

முந்துமுடி என்றார்  முனைந்து

 

                     (மாற்றலர்- பகையரசர்கள்)         

                             (மௌலி – மணிமுடி)

    ( மௌளியற்றார்- முடி சூடாததால் அரசராகவில்லை)

 

(தொடரும்)