‘கல்பனா இங்க கையப் பாரு செக்கச்சிவேல்னு’ என்று குழந்தையைப் போல தன் கைகளைக் காட்டினாள் புவனா.
‘கராக்ரே வசதே லட்சுமி’ என்று காலையில் சொல்லிய வண்ணம் கையைப் பார்த்த புவனாவிற்கு ஒரே சந்தோஷம்.
சின்னக் குழந்தை மாதிரி தன் பெண்ணிடம் காட்டி சந்தோஷப்பட்டாள்.
கல்பனா பேசாமல் இருக்கவும் ‘உனக்கு எங்கே இதெல்லாம் புரியப்போகுது! இந்த சின்னச் சின்ன சந்தோஷங்கள், இந்த மருதாணி, அதன் சிவப்பு இதெல்லாம் மனதுக்கு எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது’ என்று கைகொட்டி ஆர்ப்பரித்தாள்.
ஐந்து பெண்களில் நான்காவதாகப் பிறந்த புவனாவிற்கு சின்ன வயதில் இருந்தே மருதாணி மேல் அவ்வளவு மோகம்! அவள் கையில் மருதாணி சிவப்பு எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கும்! அவளுடைய அம்மாவும் அதற்கு தூபம் போடுகிற மாதிரி எங்கே நல்ல சிவப்பு நிறம் தருகிற மருதாணி இருக்கிறதோ, அதைத் தேடிப் பிடித்து, பறித்து வந்து, சிரமம் பாராமல் ஆய்ந்து, அம்மியில் சில கொட்டை பாக்கு சேர்த்து அரைத்து கையில் இடுவாள்.
அவளுக்கு சின்ன சின்னப் பூக்களாக அராபிக் மெகந்தி வரைவது எல்லாம் பிடிக்காது. அழகாக பத்து விரலிலும் தொப்பி வைத்து நடுவில் வட்டமாக வைத்து அதைச் சுற்றி பத்து பொட்டுகள் வைப்பதுதான் பிடித்தமானது. அவள் அப்படியே தன் சின்ன வயது ஞாபகங்களில் மூழ்கி விட்டாள்.
10 விரல்களிலும் மருதாணி இட்டுக்கொண்டு இராத்திரி படுக்கும்போது தன் அப்பாவிடம் ‘அப்பா தாகமாக இருக்கிறது, கொஞ்சம் தண்ணீர் வாயில் விடேன்’ என்று சொன்னால்,
‘போதுமே அப்பிக் கொண்டு விட்டாயா? என்னையே வேலை வாங்குவாய்’ என்று அழுது கொண்டாலும் மகளுக்கு இந்தப் பணிவிடை செய்வதில் அவருக்கும் விருப்பம்தான்.
ஆனால் புரை ஏறி விடுமோவென்று சிறிது சிறிதாக தண்ணீர் விடுவது இவளுக்குப் போதுமானதாக இருக்காது. படுத்தவுடன் தலையணை சரி செய்வது. தன் பெரிய கெட்டியான கூந்தலை பின்னால் எடுத்து படுக்கத் தோதாக வைப்பது போன்ற சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் அப்பாவைக் கூப்பிடுவாள். ஐந்து பெண்களைப் பெற்றிருந்த அப்பா சிணுங்கினாலும் இந்த சின்ன செல்லத்துக்கு வேண்டியத்தைச் செய்வதில் மிகவும் விருப்பம்தான்.
மறுநாள் எழுந்தவுடன் முதலில் தன் கையை அப்பாவிடம் காட்டி ‘தேங்க்ஸ் பா, எப்படி சிவப்பாகப் பற்றி இருக்கிறது’ என்று சந்தோஷப்படுவாள்.
ஒருமுறை இட்ட மருதாணி முழுவதும் கலையும் முன்பே அடுத்த முறை மருதாணி இட்டுக் கொள்வதில் இவள் சளைக்கவே மாட்டாள்.
இவளது தோழிகளும் ‘மாதம் மும்மாரி பெய்கிறதோ இல்லையோ இவள் மருதாணி மட்டும் இருந்து கொண்டே இருக்கும்’ என்று கேலி செய்வார்கள்.
நன்றாக சிவப்பாக இருக்க வேண்டும் என்று சில சமயம் மருதாணி இட்டுக்கொண்டு மறுநாள் மறுபடி இட்டுக் கொள்வாள். இவளது வெப்ப உடம்பிற்கு சில சமயம் அது கறுத்து போய்விடும். கல்பனாவின் திருமணத்தின் போது தன் மகள் ஆசைப்பட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு ஹோட்டலில் மெஹந்தி விழாவும் வைத்தாள். ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்த புவனாவும் இந்த மருதாணி மோகத்தால் நேரம் கிடைக்காவிட்டாலும் எப்படியோ தன் வேலையின் நடுவில் மருதாணி இட்டுக் கொண்டு வந்தாள்.
புவனா வாழ்வில் மறக்க முடியாத தருணங்களை மருதாணி வழங்கியுள்ளது. மருதாணி கிடைக்காத நாட்களில் பொடி மருதாணியை அளவான தண்ணீர் பிசைந்து நீலகிரி தைலம் கலந்து ஊறவைத்து தானே இட்டுக் கொள்வாள். திருமணத்திற்கு இட்ட மருதாணி ஒத்துக்கொள்ளாமல் வேறு யாரோ கொடுத்த மருதாணியை இட்டுக் கொண்டதால் மறுநாள் கைகள் சிவப்பதிற்குப் பதிலாக வெளுத்துப் போயிருந்ததைப் பார்த்து இவள் அழுத அழுகை மறக்க முடியாத ஒன்று! ஒரு முறை பிரயாணத்திற்கு முதல் நாள் வேலை செய்பவள் கொண்டு வந்த மருதாணி வீணாகக் கூடாது என்று அதை அரைத்து எடுத்துச் சென்று ரயிலில் இட்டுக் கொண்ட ஒரே பெண்மணி இவளாகத்தான் இருப்பாள்!
60 வயதான பிறகும் மருதாணி இட்டுக்கொள்வதை விடவில்லை. ஆனால் இரவில் இட்டுக் கொண்டால் தூக்கம் கெடுகிறது என்று பகலில் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு மருதாணி இட்டுக்கொண்டு மூன்று மணி நேரம் கணினி எதிரில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பாள். அப்போது இடியே விழுந்தாலும் இவள் கவலைப்பட மாட்டாள்!
‘சிறிது உதட்டிலும் இட்டுக் கொண்டால் உதடும் சிவப்பாகும், வீடும் சிறிது நேரம் அமைதியாக இருக்கும்’ என்று இவளது கணவர் மெதுவே சொல்வார்.
இவளது கவலை எல்லாம் ‘கொடுத்து கொடுத்து சிவந்த கர்ணன் கரங்கள் மாதிரி இருக்க வேண்டும் என்பதுதான்’.
‘உன்னை விட்டுப் பிரிந்த பிறகு தான் உன் நிழல்கள் மனதில் நிலைக்கிறது, மருதாணி அழிந்த பிறகு தான் அதனுடைய நிறம் வருகிறது’ என்று உருது மொழியில் சொல்லப்படும் இந்த தோஹா புவனாவிற்கு பிடித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது!
