Roar Tamil - இடுகாட்டு மனிதர்கள்

இதுவும் ஒரு நாடகம்.  எங்கள் பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் மண்டலங்களுக்கு இடையே நாடகப் போட்டி ( Drama Competition) நடக்கும். அதில் பார்த்த ஏராளமான நாடகங்களில் 3 நாடகங்கள் இன்றும் மனதில் / நினைவில் நிற்கிறது.  

பெயர் நினைவில் இல்லை – லக்னோ குழுவால் நடிக்கப் பட்ட இந்தி நாடகம் பற்றி இந்த மாதம்.

 

வித்தியாசமான களம்.  ஒரு சுடுகாடு – அப்பாவும், மகனும் பேசிக் கொண்டிருக்கும் போது ஆரம்பமாகும். 

 அபாரமான செட்.

சாப்பாட்டு பாத்திரத்தை எடுத்து வைத்து – இரண்டு தட்டில் போட்டு விட்டு ஒரு தட்டை தான் எடுத்துக் கொண்டு மற்றொரு தட்டை தள்ளி வைத்து “டேய் செங்கோடா வந்து சாப்பிடு” என்றான்.  “அதே பழைய சோறும தண்ணீரும் தானே”

“என்ன செய்ய கொஞ்ச நாளா  யாரும் சாகல்ல . இப்படியே போனால் அவ்வளவுதான்”

அவர்கள் பேச்சில் முக்கியமாக வெளிப்படுவது.. சாவு, பிணம் எல்லாம் அவர்களைப் பொறுத்தவரை வருமானம் அவளவுதான். இப்போதைய பாஷையில் சொல்வதானால் அவை “raw materials” அவளவுதான். உணர்ச்சி, பாவம் என்கிற விஷயமே இருக்காது.  

” செங்கோடா  என்னடா இது ரொம்ப நாளா ஒரு சாவு கூட இல்லை. பிணம் வரவில்லை.  இப்படியே போனா நாம சாக வேண்டியதுதான். “

“ஆமாம் அப்பா, அந்த முதல் தெருவில ஒரு கிழவர் நோயில படுத்த படுக்கையாக இருந்தாரில்ல, நேத்திக்கு வெளியிலே சேர் போட்டு உக்காந்து சத்தமாக பேசித் கிட்டு இருக்கார்.  ரொம்ப எதிர் பார்த்தேன். “

“போன வருஷம் பக்கத்து மெயின் ரொடல  பெரிய விபத்து ஆகி 20 பொணம் வந்ததுதே.  இங்கதான் வரிசையாக போட்டு வெச்சிருந்தாங்க. எவ்வளவு நல்லா இருந்துச்சு.  நல்ல வரும்படி.  அதுல சில பேர் பொணத்த வண்டி வெச்சு அவங்க ஊருக்கு தூக்கிட்டுப் போயிட்டாங்க.  அதுவும் இங்க வந்திருக்கலாம்  ஊம்…. “

அதில ஒரு குண்டான சேட்… 

“ஐயோ மகனேன்னு ” அழும்போது அவன் பெரிய தொப்பை மட்டும் தனியா குலுங்கி ஆடுச்சு.  சிரிப்பா வந்துச்சு.  கஷ்டப்பட்டு அடக்கிட்டு பணம் வாங்கிக் கேட்டேன்.  நிறையவே கொடுத்தார்”

“டேய் கொஞ்சம் இரு ஏதோ சப்தம் கேட்குது… ”  

“ராம் நாம் சத்ய ஹை” அப்படீன்னு ஜபித்தபடி ஒரு சிறு கும்பல் ஒரு பிணத்தை எடுத்துக் கொண்டு வருகிறது “… வருத்தோடு நிற்கிறார்கள்.  பிணம் இறக்கப் படுகிறது. 

” பொம்பளை  பிணமா?   அதிகம் செலவாகும்”  என்கிறான். 

“அம்மா … “என்று சொல்லிவிட்டு கண் கலங்குகிறான்  வந்தவர்களில் ஒருவன்.

நேரம் போவதைக் காட்ட விளக்கை அணைத்து மீண்டும் போடுவார்கள் – இவளவுதான். 

பின்னர் ஒரு குழந்தையை புதைக்க எடுத்து வருவார்கள்.  “புதைக்ணும்னா குழிதோண்ட கொஞ்சம் செலவு அதிகமாகும்” என்பான்.

குழந்தையை அடக்கம் ஏற்பாடு செய்வார்கள். 

லைட்ஸ் ஆஃப் ஆன்

“டேய் போய் கொஞ்சம் அரிசி, பருப்பு, மிளகாய், உப்பு எல்லாம் வாங்கிட்டுவா.  இன்னிக்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாம்”.

” சரிப்பா”

எரியும் சிதைக்கு மேலே ஒரு சில மரக் குச்சிகளை பலமாகக்கட்டி  அதுல  பாத்திரத்தைக் கட்டி சமைப்பது போல காட்டுவார்கள்.

“பாம்பு கடித்து செத்துப் போயிட்டான். பாத்து  போயிருக்கலாம்.  நல்ல வேளை எல்லா பொருளும் வாங்கிட்டு வரும்போது பாம்பு கடிச்சிறுக்கு” என்று சொல்லி விட்டு நிதானமாக சமைப்பான்.  

இரண்டு தட்டில் சாப்பாடு எடுத்து வைத்து விட்டு.. “செங்கோடா வா சாப்பிடலாம்” என்று  சொல்லி விட்டு உட்காருவான்.  மீண்டும் ஒருமுறை கூப்பிடுவான்.  பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முகம் மாறும்.  “செங்கோடா, வரமாட்டியா?  இனிமே வரவே மாட்டியா?”  என்று மெல்ல மெல்ல குரல் உயர்ந்து பின் கதற ஆரம்பிப்பான்.  லைட் மெல்ல மங்கி அணையும். சோகமான ஷனாய் வாசிப்பு மெல்ல மெல்ல சப்தம் அதிகரிக்கும் திரை விழும். 

அபாரமான நடிப்பு

பார்த்தபின் ஜெயகாந்தனின் ஒரு கதை (ஒரு பிடி சோறு என்று நினைக்கிறேன்) நினைவில் வந்தது.  எந்த எழுத்தாளர் யாருக்கு இன்ஸ்பிரேஷன் என்று தெரியவில்லை.  ஒரு கரு இரு ஜீனியஸ் களுக்கும் உதித்திருக்கலாம்.  

“கல்லுக்குள் ஈரம்” என்று பெயர் பொறுத்தும் என்று நினைக்கிறேன். 

அந்த செட், புதிய களம், நடிப்பு, வசனம், இசை, ஒலி அமைப்பு… அவைகளைப் பற்றி எழுதி விளக்க எனக்குத் தெரியவில்லை