பாலகுமாரன்: என் இலக்கியப் பள்ளியின் முதல் ஆசான் | பாலகுமாரன்: என் இலக்கியப்  பள்ளியின் முதல் ஆசான் - hindutamil.inசிறந்த தமிழ் எழுத்தாளர்களைப் பட்டியலிட்டால் நிச்சயமாக அதில் திரு. பாலகுமாரனின் பெயர் இருக்கும். அருமையான சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்று அவரது படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.மெர்குரிப்பூக்கள், இரும்பு குதிரைகள், உடையார் என்று மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நாவல்களும், “எதிரெதிர் உலகம்”, “விடாது பெய்யும் மழை” போன்ற மனத்தில் பதிந்த பல நல்ல சிறுகதைகள், “முன்கதைச் சுருக்கம்” போன்ற பளிச்சென்ற கட்டுரைகள், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தயக்கமின்றி வெளிப்படையாக பதில் சொல்லிய கேள்வி பதில்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவரது படைப்புகளின் கருத்தில் உடன் பட்டும், உடன்படாமலும் கூட இருக்கலாம். படைத்த பின்பு அந்தப் படைப்பு வாசகனுக்குத்தானே தவிர அது படைப்பாளனுக்கு அல்ல என்ற உண்மையை நன்றாக உணர்ந்த எழுத்தாளர்தான் அவர்.1970 களின் இறுதி காலத்தில் “இலக்கிய சிந்தனை” போன்ற அமைப்புகளின் மாதக் கூட்டத்தில் சக படைப்பாளிகளுடன் எழுந்த கருத்துப் பரிமாற்றங்களையும், கருத்து மோதல்களையும் அவர் எதிர் கொண்ட விதத்தையும் நேரில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.தன்னம்பிக்கை உள்ள கடுமையான உழைப்பாளி, படைப்பாளியான அவரைப் போன்ற அல்லது அவரை விடவும் சிறந்த படைப்பாளிகள் வருவார்கள். வரவேண்டும். ஆனால் குருவருள் பெற்றவர்கள் சிலர்தான். அதுவும் பெருக வேண்டும் என்பது என்ஆசை.

என்னைப் பொறுத்தவரை அவரது படைப்புகளில் 1970 -80 களில் குடும்ப உறவின் மென்மையும், மேன்மையும், அன்பும் அழுத்தமாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. 1990 க்குப் பிறகு அவரது படைப்பில் ஆன்மிகம் மெல்ல இழையோடத் துவங்கியது. ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் கேட்டுக் கொண்டதற்கிணங்க 1990 செப்டம்பர் மாத “அம்மன் தரிசனம்” ஆன்மிக மாத முதல் இதழிலிருந்து அவரது முதல் ஆன்மிகத் தொடராக “பெரியபுராணச் சிறுகதைகள்” வெளிவரத் துவங்கின. ஒவ்வொரு சிறுகதையையும் அற்புதமாக எழுதி இருந்தார். அதன் பிறகு பல பத்திரிகைகளில் அவரது ஆன்மிகக் கட்டுரைகளும், கதைகளும் வரத்துவங்கின. அனைத்துமே வாசகர்களைக் கட்டிப்போட்டது. அதற்கு மூல காரணம் அவரது “குருபக்தி”. ஸ்ரீ யோகிராம் சுரத் குமார் மீது அவர் கொண்ட அசையாத பக்தியும், ஸ்ரீ யோகிராம் சுரத் குமார் தன் சீடன் பாலகுமாரன் மீது கொண்ட பிரியமும்தான். இதை நானும் ஒரு முறை நேரில் கண்டு களித்திருக்கிறேன்.

அவரது கதைகளில் கற்பனை உண்டு, ஆனால் அவர் தன் குருநாதரைப் பற்றி எழுதிய எழுத்தில், தனக்கேற்பட்ட அனுபவத்தை சொன்னதில் உண்மையைத் தவிர வேறில்லை என்பதை நன்கறிய முடியும். எழுத்தும், செல்வமும் கொஞ்சம் முயன்றால் கைவரப் பெறலாம். ஆனால் குருவருள் என்பது இறைவன் அளிக்கும் கொடை. முன்ஜென்மப் புண்ணியம். அப்படிப் பெற்ற குருவருளினால் அவர் படைக்கின்ற எழுத்தில் ஆன்மிகம் அதுவாகவே, இயல்பாகவே கலந்து வருகிறது. அப்படி அவர் எழுதிய எத்தனையோ புத்தகங்களின் ஒன்று “பிரஹலாதன்”. அதில் ஒரு பகுதி “பாரதியும் பகவானும்” என்ற கட்டுரை. தனக்கும், தன் குருவுக்கும் இடையிலான ஒரு அற்புத அனுபவத்தைப் பற்றி ஒரு சீடன் சொன்ன வாக்கு மூலம். இதை குரு-சீடன் அனுபவமுள்ளவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

நமது பாரத தேசம் ஞான பூமி. எத்தனையோ மகாத்மாக்களைக் கொடுத்த வண்ணம் உள்ள பூமி. அதில் ஒரு மகாத்மா ஸத்குரு ஸ்ரீ யோகிராம் சுரத் குமார். அவரைப் பற்றிய தன் அனுபவத்தை இப்படி பதிவு செய்கிறார்.

“உள்ளுக்குள்ளே இருக்கின்ற பொறாமை, கோபம், ஆற்றாமை, அவல அழுகை எல்லாவற்றையும் சுத்தமாகத் துடைத்தெரிந்தவர், என் குரு யோகி ராம்சுரத்குமார். துணியை சவுக்காரம் போட்டு தோய்ப்பது போல, அவர் தன்னுடைய பேச்சால் என் மனத்தைச் சுத்தாமாக்கியிருக்கிறார்.” —பாலகுமாரன்.

வாசகர்களின் எண்ணத்தை, மனத்தை உயர்த்தும் திரு. பாலகுமாரன் அவர்களின் எழுத்துப் பணி தொடர குருநாதரை வேண்டுகிறேன்.