The Last Queen- by Chithra Banerjee Divakaruni
கடைசி ராணி – சித்ரா பானர்ஜி திவாகருனி
திரும்பத் திரும்ப இந்தியச் சரித்திரத்திற்குள்ளேயே வந்து கொண்டிருக்கிறேன் இல்லையா? சரித்திரம் சுவையானது; சிறிது புனைவும் கலந்து மூல நிகழ்வுகளைக் காற்றில் பறக்க விடாமல் விவரித்தால் அதைப் படிக்கும் நாம் எல்லாருமே சரித்திர ஆய்வாளர்களாக உலா வந்து கொண்டிருப்போம்.
அந்த வகையில்தான் இந்தப் புதினமும் என்னை ஈர்த்தது எனலாம். வட இந்திய நாடுகளின் சரித்திரத்தை, பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிகழ்ந்தனவற்றை முற்றிலும் சரியாக நாம் அறிந்திரோம். இந்த நூல் என்னை ஈர்த்ததற்கு அதுவும் ஒரு காரணம். மற்றொரு காரணம் இதனை எழுதிய பெண்மணி ஒரு அமெரிக்க (ஹூஸ்டன்) பல்கலைக் கழகத்தில் எழுத்துத்துறை ஆய்வாளராக இருப்பவர் என்பது. ஆனவரை சரித்திரத்தை மறைத்து மழுங்கடித்து, தனது கற்பனைக்கும் புனைவுக்கும் சரியாக மாற்றிக் கொள்ள அவர் மனசாட்சி இடம் கொடாது என்பது எனது எண்ணம். எது எப்படியோ ஒரு அற்புதமான புதினத்தைப் படிக்க இயன்றது குறித்து மகிழ்ச்சி.
முழுப் புதினமும் கடைசிராணி என வர்ணிக்கப்படும் ராணி ஜிண்டானின் (மஹாராஜா ரஞ்சித் சிங்கின் கடைசி இளம் மனைவி) வாயிலாகவே கூறப்பட்டுள்ளது. அரசரின் வேட்டைநாய்களைப் பராமரிக்கும் பொறுப்பிலுள்ளவரின் மகளான ஜிண்டான் கவுர் எனும் இளம் பெண் மஹாராஜா ரஞ்சித் சிங்கின் இளைய கடைசி ராணியாகிறாள்; அவருக்கு மிகவும் விருப்பமானவளாகவும் ஆகிறாள். அவளுடைய இளம் மகன் தாலிப், ஆறு வயதே ஆனவன், எதிபாராத விதத்தில் சிம்மாசனத்திற்கு உரிமையாளனாக ஆனபோதில் அவள் ஆட்சியாளராக விளங்கினாள்.
கூர்மையான அறிவு, மன உறுதி, படைத்த ஜிண்டான் கவுர் தனது மகனுடைய உரிமையான பஞ்சாப் தேசத்தை ஆங்கிலேயர்களிடமிருந்து காப்பதிலும், தக்கவைத்துக் கொள்வதிலும் உறுதியுடன் இருந்தாள். தங்கள் வழக்கமான கலாச்சாரத்தை எதிர்த்தும், ஜனானா எனும் அந்தப்புரத்தை விட்டு வெளிவந்தும் நாட்டை நிர்வாகம் செய்தாள்.தனது ‘கல்ஸா’ படையினருக்குத் துணைநின்று அவர்களை ஊக்குவித்து, நேரிடையான இரு போர்களில் பறங்கியர் எனப்படும் ஆங்கிலேயர்களை வெற்றி கண்டாள். அவளுடைய உறுதியையும், செல்வாக்கையும் உணர்ந்த பிரிட்டிஷார் தந்திரமாக அவளை வென்றனர்; எவ்வாறெனில், அவளுடைய உடைமைப் பிரதேசங்களை ஒவ்வொன்றாக அபகரித்தும், கடைசியாக அவளுடைய அன்பு மகனையே அவளிடமிருந்து பிரித்து இங்கிலாந்திற்குக் கொண்டு சென்றும் விடுகின்றனர். அவளைச் சிறையிலிட்டுப் பின் நாடு கடத்துகின்றனர். ஆனாலும் அவளுடைய தளராத மன உறுதியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவேயில்லை.
இதில் ஒரு அறுபத்தெட்டு வயது அரசருக்கும் பதினேழு வயதுப் பெண்ணான ஒரு சாதாரண குடிமகளுக்கும், இடையிலான அன்பும், காதலும் அதிசயிக்கத் தக்கவை. மிகுந்த பிரமிப்புடன் அவள் அந்த, தன்னை மணக்கப்போகும் மஹாராஜா ரஞ்சித் சிங்கைச் சந்திக்கும் தருணம் கதாசிரியையால்அழகாக வர்ணிக்கப் பட்டுள்ளது.
வறுமையில் வாடும் மன்னா (அரசரின் வேட்டைநாய்களைப் பராமரிப்பவர்) வின் குடும்பம். வேற்றூரில் பணிபுரியும் மன்னா அவ்வப்போது தன் குடும்பத்தைப் பார்க்க வருவார். ஒருமுறை தம் மகளான ஜிண்டானையும் மகன் ஜவஹரையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அப்போது ஒருநாள் அவரைப் பார்க்க ஒரு பெரிய மனிதர் அழகான குதிரை ஒன்றில் வருகிறார். மார்பளவு படிந்த அழகிய வெள்ளைநிறத்தாடி அவரது கம்பீரத்தைக் கூட்டிக் காட்டியது. மன்னா அரக்கப் பரக்க ஓடோடிவந்து அவருடன் செல்கிறார். குதிரை நீண்டநேரம் வெயிலில் நிற்கிறது. அதற்கு நீரும் வெல்லமும் கொடுத்து அதனுடன் நட்புக் கொள்கிறாள் ஜிண்டான். திரும்பி வந்த பெரிய மனிதர் அவளுடைய புத்தி சாதுர்யத்தை வியக்கிறார். மன்னாவோ ஜிண்டானிடம் சினம் கொள்கிறார். அவரைச் சமாதானப்படுத்திய அந்தப் பெரிய மனிதர் ஜிண்டானிடம் விரைவில் அவளைக் குதிரைமீது அழைத்துப் போவதாகக் கூறிச் செல்கிறார். அவர் சென்றபின்னரே அவர்தான் மஹாராஜா ரஞ்சித்சிங் என அறிந்து பிரமித்துப் போகிறாள் ஜிண்டான்.
ஒரு மாதம் விரைகிறது. ஜிண்டானைக் குதிரையில் அழைத்துப்போக மஹாராஜா வருகிறார். குதிரையில் ஏறத்தடுமாறும் அவளை ஏற்றி, அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அமரத் தெரியாத அவளை இடையைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, ஆனால் சில்மிஷங்கள் ஏதும் இல்லாமல் அழைத்துச் செல்கிறார் மஹாராஜா. பின்பு இருவரும் ஷாலிமார் தோட்டத்தில் ரோஜாத் தோட்டத்தில் அழகான ஒரு கூடாரத்தில் அமர்ந்து சிற்றுண்டி அருந்துகின்றனர். ஜிண்டானுக்கு அனைத்துமே பிரமிப்பாக இருக்கிறது.
அந்த அழகான பெண்குதிரை லைலாவைத் தான் காபூல் சுல்தானிடமிருந்து போரிட்டுப் பெற்றதை மஹாராஜா விவரிக்கும்போது ஜிண்டான், “ஒரு குதிரைக்காகப் பலபேர் இறந்தார்களா?” என அரசரிடமே தைரியமாகக் கேட்கிறாள்.
அவர் சொல்கிறார்: “உன் தைரியத்தை நான் மெச்சுகிறேன். யாரும் என்னிடம் இவ்வாறு கேட்டிருக்க மாட்டார்கள்.” பலப்பல கதைகளை அவளுக்குக் கூறுகிறார். அவள் வியப்புடனும் ஆர்வத்துடனும் கேட்பது அவருக்கும் வியப்பைத்தருகிறது. அவள்பால் கொண்ட ஈடுபாடு இதனால் அதிகரித்ததா?
அந்தச் சிறுபெண்ணுக்கு அவர்பால் அபிமானமும் மரியாதையைத் தாண்டி ஒருவிதமான ஈர்ப்பும் ஏற்படுகிறது. அவளை அவர் திரும்ப வீட்டில் கொண்டுவிடும்போது நன்றி கூறகூடத் தெரியாமல், எப்போது திரும்பச் சந்திப்போம் என்று கேட்டு, “விரைவில்” எனும் விடையில் மகிழும் இளம்பெண். அவர்பால் காதல் வயப்பட்டுவிட்டாள்!
மஹாராஜா ரஞ்சித்சிங் ஜிண்டானை மணம்புரிந்து கொள்ள விழைகிறார் என்பது தெரிந்து குடும்பம் மகிழ்கின்றது.
***
மற்றொரு காட்சி. ராஜா ரஞ்சித் சிங் தனது அரண்மனைக்குள் நுழையும் காட்சிவெள்ளை வெளேரென்ற அங்கியும் தங்கத்தால் இழைத்த ஒரு மேல்சட்டையும் அணிந்து நீண்ட ஒரு முத்துமாலை மட்டுமே அணிந்துள்ளார். கையில், புஜத்திலணிந்திருந்த ஒரு ஆபரணம் இருளில், தீவர்த்திகளின் ஒளியில் நெருப்பைப்போல் ஒளிர்கின்றது; அதுவே புகழ்பெற்ற கோஹினூர் வைரம்.
இதனைத்தான் பிற்காலத்தில், மன்னரின் மகனான தாலிப்பை ஏமாற்றி பிரிட்டிஷார் பறித்துக் கொள்கின்றனர். இன்றுவரை அவர்களிடமே உள்ளது!!!
***
ஒரு போரில் படுகாயம் அடைந்ததனால், மஹாராஜா ரஞ்சித்சிங் குறிப்பிட்ட முகூர்த்தத்தில் தான் வராமல், தனது வாளை மட்டும் அனுப்பி ஜிண்டானை மணம் புரிந்துகொண்டு, அவள் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள்.
***
அவளுடைய புத்திக் கூர்மையில் மகிழ்ந்த மஹாராஜா பல ராஜரீக விஷயங்களை அவளுடன் விவாதிக்கிறார். ஓராண்டிற்குள் ஜிண்டானுக்கு ஒரு மகன் பிறக்கிறான். மகிழ்ந்த அரசர் அவளுக்கென்றே ஒரு ‘ஹவேலி’யைப் பரிசளிக்கிறார்.
பின் ஆங்கிலேயர்களுடனான பல போர்களில் ஜயித்த மன்னர், ஒரு தாக்குதலில் படுகாயமடைந்து மரணப் படுக்கையில் கிடக்கிறார். அரசரின் தனி அன்புக்குப் பாத்திரமானவளாதலால் மற்ற அரசிகளுக்கு ஜிண்டானை அறவே பிடிக்காது. பலப்பல நிகழ்வுகளின் பின்பு நாம் ஜிண்டானின் மகன் தாலிப் அரசனாக்கப் படுவதனையும், அவன் குழந்தையாதலால் அவன் சார்பில் ஜிண்டான் ஆட்சி செய்வதனையும் காண்கிறோம்.
உட்பூசல்களால், ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து, நாட்டின் பலபாகங்களைக் கைப்பற்றுகின்றனர். பின் தாலிப்பையும் இங்கிலாந்து கொண்டு செல்கின்றனர். அங்கு ஒரு ஆங்கிலேய தம்பதியால் அவன் வளர்க்கப்படுகிறான். தன் ஒரே மகனை உயிரோடு ஆங்கிலேயரின் வஞ்சனைக்குப் பறிகொடுத்துப் பரிதவிக்கும் தாயின் உள்ளம் நம்மைத் தவிக்க வைக்கின்றது.
விசுவாசம், நம்பிக்கைத் துரோகம் ஆகியவை புதினம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. நமது மனதில் பதிந்து வேதனை செய்கின்றன. இது கதையல்ல; கடந்த சமீப காலத்தில் நமது பாரத தேசத்தின் ஒரு அரசான பஞ்சாபில் நிகழ்ந்தவை எனும்போது நாம் புதினத்தின் போக்கில் ஒன்றி விடுகிறோம்; மனம் பதறுகின்றது. சித்ரா பானர்ஜி திவாகருனியின் அருமையான, விறுவிறுப்பான நாவல் நம்மிடையே வாழ்ந்த ஒரு வீரப் பெண்மணியின் சரித்திரத்தை, வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இதற்காகவே அவருக்கு ஒரு இலக்கியப் பரிசு தர வேண்டும்.
நான் கதையைக் கூறிக்கொண்டே போகலாம். பின் நீங்கள் எவ்வாறு அதனைப் படிப்பீர்கள்? விறுவிறுப்பான பிரமிக்க வைக்கும் வரலாற்றுத் திருப்பங்கள் கொண்ட, நம்மிடையே வாழ்ந்த அரசர் அரசியரின் வாழ்க்கை வரலாறுகள் இவை.
உப்புச் சப்பற்ற வேண்டாத செய்திகளைத் துரத்துத் துரத்திப் படிக்கும் நாம் இவற்றியெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டின், மண்ணின் மைந்தர்களைப் பற்றி அறிந்து போற்ற வேண்டும்.
(மீண்டும் சந்திப்போம்)
