முதுகலைப் பட்டதாரி ஜோஸ் தனக்கு வேலை கிடைத்ததைப் பற்றி சந்தோஷமாக எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டான். படிப்பு முடிந்து மற்ற சில பயிற்சிகளும் பெற்றபின் வேலையைத் தேட, எதிர்பார்த்தபடி அமைந்தது இந்த இருபத்தி இரண்டு வயதானவருக்கு. உற்சாகத்துடன் வேலையைத் தொடங்கினான். தந்தை ஜேம்ஸ், தாயார் எஸ்தர், தம்பி ஜோசப் இவர்களும் பெருமையில் பூரித்துப் போனார்கள்.

தன் தோழியிடம் எஸ்தர் இதைப் பகிர்ந்தாள். இரு வாரங்களுக்குப் பிறகு சர்ச் சர்வீஸ் முடிந்ததும் அந்தத் தோழி தமக்குத் தெரிந்த பெண் ஒருவளை பற்றி ஜேம்ஸ், எஸ்தரிடம் பேசினாள். ஜோஸிற்கு வேலை கிடைத்து விட்டது, கை நிறையச் சம்பளம் அதனால் கல்யாணம் என்று முடிவானது. ஜோஸும் சம்மதம் தெரிவித்தான்.

குடும்பங்கள் கல்யாண வேலை சுறுசுறுப்பிலிருந்தார்கள். இந்தச் சமயம் பார்த்து, ஜோஸுக்கு எதை எங்கே வைத்தோம் என்று கவனம் தடுமாறத் தொடங்கியது. எங்கு வரச் சொன்னாலும் அசதியாக இருப்பதாகக் கூறி தவிர்த்து விடுவதையும் கவனித்தார்கள். பெற்றோர் எரிச்சல் பட்டார்கள்.

அடிக்கடி தலைவலி என்றும் வயிற்றில் உபாதை என்றும் சொன்னதால் மருத்துவரைப் பார்த்தார்கள். முழு பரிசோதனை செய்த பிறகு ஜோஸிடம் தனிமையில் மேலும் விவரங்களைக் கேட்டுக் கொண்டார். முடிவில் ஜோஸிடமும், அவன் பெற்றோரிடமும் இதில் மனநலனின் கலவை இருக்கக் கூடும் என்று விளக்கி, என்னை ஆலோசிக்கப் பரிந்துரைத்தார்.

கல்யாணம் நெருங்குவதால் என்னிடம் வர முடிவானது. தங்கள் பங்கிற்கு இந்தக் கட்டம் வரை நடந்தவற்றை ஜேம்ஸ், எஸ்தர் விவரித்தார்கள். குறிப்பாக இதுவரை நடந்திடாதபடி ஜோஸின் எடை பல கிலோ கூடியதை வலியுறுத்தினார்கள்.

ஜேம்ஸ், எஸ்தர் விளக்கியதில் தென்பட்டது, அடுத்தடுத்ததாக ஜோஸின் வாழ்வில் இரண்டு பெரிய மாற்றங்கள். வேலை கிடைத்தது, உடனுக்குடன் திருமணமும் நிச்சயமானது. இரண்டையும் அவர்கள் வர்ணிக்க, கேட்டதும் ஜேம்ஸ் அதனால் தமக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை என்றே சொன்னான். தன்னைத் தாழ்வாக எடை போட்டுவிடுவார்கள் என்று அஞ்சும் பதில் இதுவாகும்.

இதை நான் புரிந்துகொண்டு, புது வேலையில் தன் எதிர்பார்ப்பையும் வேலையில் உள்ளவர்களின் கணிப்பையும் பிரித்துச் சொல்லச் சொன்னேன். சேர்ந்ததிலிருந்து இந்த ஆறாவது மாதம் வரை கிடைத்தது பல பாராட்டுக்கள், முக்கியமான புராஜக்ட் அம்சங்கள். பொறுப்புகளை நேரத்திற்கு முடித்துத் தந்ததில் தனக்கும் சந்தோஷம், வேலையிலும் மதிப்பு. ஜோஸ் தன்னை இது ஊக்குவித்தது என்றான். அடுத்த இரண்டு வருடங்களுக்கு முழு கவனமும் வேலையில் செலுத்தி, மேம்படுத்திக்கொள்ள சில பயிற்சிகளும் எடுக்க வேண்டும் என்ற குறிக்கோள்.

இவ்வளவிற்கும் இடையே திருமணம் என்றதும் குறுக்கிட, ஜோஸுக்கு தன்னால் இரண்டையும் சரிசமமாகச் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி உள்ளூர எழுந்தது.

இதைப் பற்றி ஸெஷனில் மேலும் பகிர்ந்து வந்தான். புது வேலையில் பல புதுமைகள் இருந்தன என்றிருந்தாலும் அதன் செயல்பாடு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உணர்ந்ததால் எந்தவித சங்கடமும் நேரவில்லை.

இப்போது இதையே உதாரணமாக எடுத்துக் கொண்டு மணவாழ்வு நெருங்கி வருவதைப் பற்றி பேசப் ஊக்குவித்தேன். ஏனெனில் திருமணம் நிச்சயமான பிறகே உடல் பருமன் கூட ஆரம்பித்தது.

உடல்வாகு கூடியதின் காலவரிசையை வர்ணிக்க, இதை ஜோஸ் மெதுவாகப் புது வேலையுடன் ஒப்பனை செய்யச் செய்யப் புரிந்தது, தனக்கு ஏதோ ஒன்று இல்லாதது போல்.

இதை மேலும் தீவிரமாக எடுத்துக் கொண்டு ஆழமாக ஆராய்ந்தோம். திடுக்கென்று புதிதாகத் திருமணம் ஒன்று சிந்தனையில் வந்ததைப் பற்றி மிகக் கவலைப் பட்டுக் கூறினான் ஜோஸ். தன் கல்யாணத்தைப் பற்றி நினைத்தால் கொஞ்சம் சங்கடப் படுவதாகத் தோன்றுவதை நண்பர்களிடம் சொன்னான். பலர் சமாதானம் சொல்ல, சிலர் திருமணத்தை ஆறு மாதத்திற்குத் தள்ளி வைக்கச் சொல்லும்படி கருத்து கூறினார்கள். அதற்குள் வேலையில் முழு பிடிப்பு வந்துவிடும் என்றார்கள். இது ஜோஸ் மனதிற்குச் சரி‌ எனத் தோன்றியது. பெற்றோரிடம் பேச முடிவு செய்து, பகிர்ந்தான்.

ஜேம்ஸ் இதைத் தான் எதிர்பார்த்ததுதான் என்று சொன்னார். எஸ்தரோ, கேட்டதும் “என்ன ஜோஸ் சொல்ற? இப்படியா நான் உன்னை வளர்த்தேன்? முட்டாள்! கோழை!” என்று சீறினாள்‌. உடனே ஜேம்ஸ் அவளைச் சமாதானம் செய்து விட்டான். அப்போதைக்கு. அன்றிலிருந்து கல்யாணம் சம்பந்தப்பட்ட எதிலும் ஜோஸின் உடன்பாடு இல்லையோ எனச் சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் எஸ்தர் மீண்டும் மீண்டும் அவதூறாகத் தூற்றுவாள்.

தன் நிலையை மேற்கொண்டு விவரிக்க ஜோஸ் தத்தளித்ததில், எஸ்தர்‌ ஜோஸ் நிலையைப் புரிந்து கொள்ளவில்லை. இதை மையமாக வைத்து மேலும் ஸெஷன்கள் தொடர, ஜோஸ் அடையாளம் கண்டுகொண்டான், கல்யாணம் சம்பந்தப்பட்ட எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லை என்று. அது அழுத்தம் தந்தது.

எஸ்தர் தன் பங்கை அறிந்து கொள்ள அவர்களுக்கும் ஸெஷன்கள் அமைத்தேன். ஆரம்பத்தில் தன் வளர்ப்பினால் நேர்ந்தது என்ற அவர்களின் கருத்தை மாற்றி, தன்னுடைய செயல்கள் ஜோஸுக்கு அழுத்தம் தருவதை எஸ்தர் அடையாளம் காணப் பல செஷன் தேவையானது.

தாயார் சற்று புரிதல் காட்ட, ஜோஸ் தன் இயலாமையைப் பற்றிப் பேசத் துவங்கினான். தன்னை அறியாமல் தம்மையே வெறுத்தான். இதன் பிரதிபலிப்பு உடல் பருமன். ஜோஸ் இதையும் ஒப்புக்கொண்டான், இந்தக் கூடும் எடை நிச்சயம் ஆனவளுக்குப் பிடிக்கவில்லை என்று. இது அவமானம் அளித்தது என்றான்.

இப்போது, ஜோஸ் சிந்தனை அளவில் புரிந்து கொண்டான், தனக்கு மன அழுத்தம் நல்ல நிகழ்வுகளாலும் நேரலாம் என. கசப்பானவை அல்ல துயரம் மட்டுமே மன அழுத்தம் தரும் என்பதில்லை எனப் புரிந்து கொண்டான்.

மற்றொன்றையும் அறிந்து கொண்டான் ஜோஸ், உடலும் மனமும் ஒன்றுக்கு ஒன்று இணைந்து செயல்படும் என. அதற்கு ஏற்றார் போல், நான் பரிந்துரைத்தபடி பல செயல்பாட்டைக் கடைப்பிடிக்க ஜோஸ் தயாரானான்.

பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் மிகவும் பிடித்தது ஓட்டம். கடலோரம், பக்கத்தில் உள்ள பூங்காவில் ஓடுவதெனத் தேர்வானது. வெகு சீக்கிரத்தில் உற்சாகம் அதிகரிக்க மனநிலை மாறத் தொடங்கியது.

எஸ்தர்-ஜோஸ் உறவை மேலும் மேம்படுத்தப் பல வழிகளை அமைத்தேன். உதாரணத்திற்கு, தினசரி இருவரும் அன்றைய தினத்தின் திருப்தி அளித்தவற்றைப் பற்றிப் பகிர்வதாக. நாளடைவில் இத்துடன் சந்தித்த சிக்கல்கள், அவற்றைத் தீர்க்க யோசனைகள் பற்றிக் கலந்தாலோசிப்பதும் சேர்ந்து கொண்டது. இதிலிருந்து எஸ்தர் மகனின் பலம், பலவீனம் இரண்டு பக்கத்தையும் பார்த்தாள்.

போகப் போக ஜோஸ் தன்னால் எது முடியும் என்ற கணிப்பைச் சரி‌செய்து கொண்டான். அதேபோல் வாழ்க்கையில் மாற்றங்கள் வரத்தான் செய்யும், அதனைப் புரிந்து என்ன செய்தால் இலக்கை அடைய முடியும் என்பதையும் அடையாளம் காண, உடலும் மனமும் மிக நன்றாக ஆனது.
******************************

.