நிகழ்வைப் பற்றிய இரு விமர்சனங்கள்
மந்திரமூர்த்தி அழகு – facebook
நேற்று மாலை சென்னையில் குவிகம் நடத்திய விழாவில் எழுத்தாளர் சிவசங்கரி – குவிகம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் (ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரை ) வெற்றி பெற்ற சிறுகதைகள் ‘ஓய்வு’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. நூலை எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட பேரா.வ.வே.சு & விக்கிரமன் கண்ணனும் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் குவிகம் தரும் விருதினை நேரில் பெற போட்டியில் வென்றவர்களில் ஒருவரான எழுத்தாளர் நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு வந்திருந்தார். அவருடனான சந்திப்பும், அவரது அன்பும், அரவணைப்பும் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.
வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுவில் நிறையப் பதிவுகளை எழுத்தாளர் நோயல் நடேசன் எழுதி இருக்கிறார் என்பதில் கூடுதலான மகிழ்ச்சி.
நண்பர் எழுத்தாளர் நோயல் நடேசன் தவிர பரிசு வென்ற எழுத்தாளர்கள் ஆத்மார்த்தி, சவிதா, ஹரிஹரன் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
குவிகத்தின் பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
மீ விஸ்வநாதன்
“குவிகம் – சிவசங்கரி சிறுகதைத் தேர்வு 2023 – 24” நிகழ்ச்சி இன்று (29.08.2024) மாலை 6.05 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் சிறப்பாகத் தொடங்கி இரவு 7.30 மணிக்கு நிறைவடைந்தது.
மாலை சரியாக 5.30 மணிக்கு தேனில் ஊறிய நெல்லிக் கனி, போண்டா, காபி வந்திருந்த அன்பர்களுக்கு வழங்கப் பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
“குவிகம் என்ற அமைப்பு இணைய மாத இதழ், குவிகம் குறும் புதினம், புதன் கிழமையன்று மகாகவியின் மந்திரச் சொற்கள் உரை, ஞாயிறு அன்று இலக்கிய உரை, கதை விமர்சனம், குவிகம் ஒலிச்சித்திரம், இவையனைத்திற்கும் மேலாக குவிகம் பதிப்பகம் மூலம் சுமார் 200 நூல்கள் வெளியீடு, இரண்டு வருடங்களாக ‘குவிகம் – சிவசங்கரி சிறுகதைத் தேர்வு’ என்று தனது தளத்தை விரிவு படுத்திக் கொண்டே வருகிறது. இதைப் பார்க்கும் போது குவிகம் அமைப்பை ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்று வாழ்த்தத் தேன்றுகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் சிறந்ததோர் சிறுகதையைத் தேர்வு செய்து ஆண்டின் இறுதியில் 12 சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாக இதுபோன்ற விழாவில் வெளியிட்டு படைப்பாளிகளை ஊக்குவிக்கிறது குவிகம் – சிவசங்கரி சிறுகதைத் தேர்வு அமைப்பு.
இதற்கான செலவுகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டு படைப்பாளி களுக்குப் பரிசளித்தும் மகிழ்கிறார் சிறந்த ஆளுமையான திருமதி சிவசங்கரி அவர்கள். இந்த இலக்கிய அமைப்பை உருவாக்கி நிர்வகித்து வரும் இரட்டையர்களான சுந்தர்ராஜன், கிருபானந்தன் ஆகியோருக்கு என் பாராட்டுகள்” என்றார் கவிமாமணி முனைவர் வா.வே.சு.
“ஓய்வு” என்ற தலைப்பில் 2023 – 24 ஆண்டுக்கான சிறுகதைத் தொகுப்பை திருமதி சிவசங்கரி வெளியிட, திரு. வ.வே.சு.மற்றும் இலக்கிய பீடம் மாத இதழின் ஆசிரியர் திரு. கண்ணன் விக்கிரமனும் பெற்றுக் கொண்டனர்.
முதல் பரிசு ரூ.10000, இரண்டாம் பரிசு ரூ.6000, மூன்றாம் பரிசு ரூ 4000 முறையே பர்வீன் பாலு, அசோக்குமார், ஹெ.ச்.என். ஹரிஹரன் அவர்களுக்கு வழங்கி அந்த மூன்று கதைகளின் சாரத்தையும் விளக்கி படைப்பாளிகளைப் பாராட்டினார் திருமதி. சிவசங்கரி அவர்கள்.
தொகுப்பில் உள்ள மற்ற 9 கதைகளை எழுதிய ஒவ்வோரு படைப்பாளிக்கும் ரூ. 2000 வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
தொகுப்பில் உள்ள கதைகளில் சிலவற்றின் உண்மைத் தன்மையைத் தொட்டுக் காட்டிச் சிறப்பாக உரையாற்றினார் இலக்கிய பீடம் ஆசிரியர் கண்ணன் விக்கிரமன் அவர்கள்.
பரிசு பெற்ற எழுத்தாளர்களும் தங்களது கருத்தைப் பதிவு செய்தனர்.
நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக நடத்திச் சென்ற திருமதி. இந்திரா அவர்களுக்குத் தனிப்பாராட்டுகள்.
நிறைய வாசகர்களும், படைப்பாளிகளும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி தேசியகீதத்துடன் நிறைவடைந்தது.
“ஸத்ஸங்கத்வே நித்ஸங்கத்வம்”

