காமாட்சி : என்னங்க…. காலைல இருந்து ஒண்ணா பேப்பர்க்குள்ள தலைய விடுவது இல்லைன்னா வாட்ஸ் அப்ல மூழ்கி முத்தெடுக்கிறது இதே வேலையா போச்சு உங்களுக்கு….
அனந்தராமன் : இப்ப என்ன காலங்கார்த்தால புலம்ப ஆரம்பிச்சுட்ட….. மனுஷன் நிம்மதியா பேப்பர் படிச்சு உலக விஷயங்கள தெரிஞ்சுக்க வேண்டாமா ?
காமாட்சி : ஆமா…. இவரு பெரிய ஐநா சபையில பேசப் போறாரு….. உலக விஷயங்கள தெரிஞ்சுக்க…. ஏங்க இன்னைக்கு நான் சின்ன வெங்காயம் சாம்பார் வைக்கலாம்னு இருக்கேங்க…..புளி தீர்ந்து போச்சு…..கொஞ்சம் புளி வாங்கிட்டு வாங்க……
அனந்தராமன் : ஆஹா…. நீ சாம்பார் வைக்கப் போறேன்னு சொன்னப்பவே என் வயத்துல புளி கரைக்க ஆரம்பிச்சிருச்சு….. இதுல தனியா புளி வேறயா ?
காமாட்சி : இந்த நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல…. இப்பப் போய் சட்டுபுட்டுனு புளி வாங்கிட்டு வாங்க….
அனந்தராமன் : அது வந்து காமாட்சி…….
காமாட்சி : வந்தாவது, போயாவது, அப்படியே தேங்காயும் வாங்கிட்டு வாங்க…. அரைச்சு விட்ட சாம்பார் பண்ணித் தரேன்.
அனந்தராமன் : இல்ல காமாட்சி… என்னென்னா…. நேத்து சாயந்திரம் வாக்கிங் போனேன்னா….
காமாட்சி : போனேன்னா….. என்ன அப்படி இழுக்கிறீங்க….. வழக்கம் போல உங்க அவசர புத்தில ஏதாவது ஏடாகூடமாக செஞ்சுட்டு வந்துட்டீங்களா ?
அனத்தராமன் : நேத்து என்னோட பர்ஸ ஒருத்தன் பிக்பாக்கெட் அடிச்சுட்டான் காமாட்சி…. அதனால இப்ப கைல நயா பைசாக்கூட இல்ல… பேங்க் திறந்தாத்தான் போயி பணத்த எடுக்கணும் காமாட்சி….
காமாட்சி : ஹா.. ஹா… உங்கள “அவசர புத்தி அனந்தராமன்னு” எல்லாரும் சொல்றது ரொம்ப சரிதாங்க… என்ன ஆச்சுன்னா… நேத்து நீங்க உங்க பர்ஸ்னு நெனச்சு என்னோட பர்ஸ எடுத்துட்டுப் போய்ட்டீங்க…..
அனந்தராமன் : அது எப்படி உன்னோடது ? அது லேடீஸ் பர்ஸ்னா….
காமாட்சி : மறுபடியும் அவசரப்படறீங்களே ? நானும் உங்ககிட்ட இருக்கிற மாதிரி ஒரு பர்ஸ் வச்சிருந்தேங்க….. அதுல என்னுடைய பழைய டிரைவிங் லைசென்ஸ்…..
அனந்தராமன் : நீ வண்டியே ஓட்ட மாட்டே…. உனக்கு ஏது டிரைவிங் லைசன்ஸ் ?
காமாட்சி : 10 வருஷத்துக்கு முன்னாடி ஓட்டுன டூவீலர் லைசன்ஸோட டூப்ளிகேட், அப்புறம் அந்த கோவிட் போஸ்டர்…….
அனந்தராமன் : அது போஸ்டர் இல்லம்மா பூஸ்டர்…
காமாட்சி : சரி…சரி….நீங்க எப்பவும் உங்கள ரொம்ப போஸ்ட் பண்றதுனால ஒரு ஃப்ளோல போஸ்டர்னு வாய் தவறி சொல்லிட்டேன். அது வந்து பூஸ்டர் சர்டிபிகேட், அப்புறம் ஒரு இருபது ரூபாய் நோட்டு, அதுவும் புத்தம் புதுசு….இந்த மூணும்தான் என் பர்ஸ்ல இருந்துச்சு… அத எப்பவும் போல அவசரத்துல நீங்க எடுத்துட்டுப் போயிட்டீங்க…. அதைத்தான் பிக்பாக்கெட் அடிச்சிட்டான்…… நல்ல வேள….. உங்க அவசர புத்தி சமயத்துல நல்லது பண்ணுது……இதோ உங்க பர்ஸ்….. வழக்கம் போல நீங்க மாத்தி வச்சது நல்லதாப் போச்சு…… பணம் தப்பிச்சது.
அனந்தராமன் : நல்ல வேள காமாட்சி…. இப்பத்தான் என் வயத்துல பால வார்த்த…..
காமாட்சி ; இப்பத்தான் வயத்துல புளியக் கரைச்சதுன்னு சொன்னீங்க ?
அனந்தராமன் : ஹா….ஹா…. நல்ல ஜோக் போ…. உனக்கு புளி என்ன புளி, பாதாம் கேக், பிஸ்தா ரோல் எல்லாம் வாங்கிட்டு வரேன்…..
காமாட்சி : க்கும்…..இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல….இந்தாங்க உங்க பர்ஸ்…..அப்படியே மறக்காம தேங்காயும் வாங்கிட்டு வாங்க…. அரைச்சு விட்ட சாம்பார் சாப்பிடணும்ல……
அனந்தராமன் : சரி… சரி…. என்ன அரச்சது போதும்…. இப்பயே போறேன்.
***********************************************************
