புத்தகம் : கனவு மழை
எழுதியவர்: வ. ஸ்ரீநிவாசன்
Published by : சிறுவாணி வாசகர் மையம் ( பவித்ரா பதிப்பகம்)
166 பக்கங்கள் விலை ரூ. 180
கோவை சிறுவாணி வாசகர் மையத்தின் “மாதம் ஒரு நூல்” என வீடு தேடி வரும் புத்தகத் திட்டத்தில் நான் ஓர் அங்கத்தினனாதலால், அவர்கள் வெளியிடும் அருமையான புத்தகங்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன, அப்படி வந்து சேர்ந்த புத்தகங்களில் ஒன்றுதான் வ. ஸ்ரீநிவாசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான “கனவு மழை”.
வ. ஸ்ரீநிவாசன் அவர்கள் சிறுவாணி வாசகர் மையத்தின் கௌரவ ஆலோசகர்களில் ஒருவர். மேலும் “சொல்வனம்” இணைய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் கூட. பல சிறு பத்திரிகைகளில் இவரது பலவிதமான படைப்புகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே சில கட்டுரை நூல்களையும் ஒரு மொழிபெயர்ப்பு நூலையும் வெளியிட்டிருக்கிறார். 1971லிருந்து இவர் எழுதி வெளியிட்ட சிறுகதைகளிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இந்நூலை உருவாக்கி இருக்கிறார் வ. ஸ்ரீநிவாசன். இந்நூலில் 21 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. திரு விட்டல்ராவ் அவர்கள் தொகுத்த “இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்” நூலில் இடம்பெற்றுள்ள “கிணற்றில் விழுந்த சோகம்” என்ற சிறுகதையும் இதில் அடங்கும்.
இந்நூலுக்கு அவருடைய நண்பரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான நாஞ்சில் நாடன் அவர்கள் இணைந்துரை வழங்கியிருப்பது பெரும் சிறப்பு. இது தவிர, நூலின் இறுதியில் ந. ஸ்ரீராம் அவர்களும் சுஜாதா சஞ்சீவி அவர்களும் தங்கள் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.
இவற்றையெல்லாம் படித்தாலே நமக்கு வ. ஸ்ரீநிவாசன் அவர்களின் எழுத்தின் மேல் நம்பிக்கை பிறந்து விடுகிறது. மேலும், இவருடைய சிறுகதைகளிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம், அவற்றின் விசேஷத் தன்மை என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஒரு புரிதல் வந்து விடுகிறது. மிகுந்த ஆவலுடன் இந்த சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கி விடுகிறோம்.
தன்முனைப்பு சிறிதுமின்றி வ. ஸ்ரீநிவாசன் தன் சிறுகதைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் :
“ஒவ்வொரு மனிதரும் பல கோடி நூறாயிரம் கதைகள். பெரும்பாலும் நினைவில் தங்காதவை. கவனிப்புப் பெறாதவை. சொல்லப்படாதவை. இந்த எல்லையற்ற கதைக் கடலின் ஓரலையின், ஒரு நுரையின், ஒரு குமிழி இக்கதைகள்.”
இப்படி குமிழிகளாய் கரைந்து விடும் வாழ்க்கைப் பொழுதுகளைத்தான் கதைகளாய் மாற்றி ரசவாதம் புரிந்திருக்கிறார் வ.ஸ்ரீநிவாசன்.
கதைகள் பலவும் “அந்தக் காலத்துக்கு” நம்மை இட்டுச் செல்கின்றன. கணினி, மொபைல், இன்டர்நெட் என்னவென்றே தெரியாத, கனவில் கூட காண முடியாத, ட்ரான்சிஸ்டர் காலத்தில் நடக்கும் கதைகள் இவை. கூட்டுக் குடித்தனங்கள், ஒண்டுக் குடித்தனங்கள், பலரும் பிணக்கமுற்றும் இசைந்தும் வாழும் குடியிருப்புகள், இயல்பான, எளிமையான மனிதர்கள் என்று நம்மை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன இந்தச் சிறுகதைகள். வேறொரு காலமாய் இருந்தாலும், நமக்கு அலுப்பு தட்டுவதில்லை. மாறாக, வயதானாலும் இளமையோடு தோற்றமளிக்கும் சிரஞ்சீவி மனிதர்கள் போல் இக்கதைகள் நமக்கு உற்சாகமளிக்கின்றன.
பழைய கதைகள் என்றாலும் வளவளவென்று இழுப்பதில்லை. சிறிய சிறிய கணங்களைப் பதிவு செய்தாலும், எப்போது எதைச் சொல்லாமல் விட்டுச் செல்ல வேண்டும் என்ற அரிய கலை ஆசிரியருக்கு கைகூடி இருக்கிறது.
பலவிதமான கதைகள். எல்லாவற்றிலும் மனித உறவுகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தோன்றுகிறது. சில கதைகளின் முடிவில் சிறுகதைக்கே உரிய திருப்பங்கள் வருகின்றன. பல கதைகள் சம்பவங்களை விவரித்து விட்டு சொல்லிக் கொள்ளாமல் சென்று விடும் விருந்தினர் போல் நகர்ந்து விடுகின்றன. சில கதைகள் மிகவும் அப்ஸ்ட்ராக்ட்டாக, ஆசிரியருக்கு மிகவும் பிடித்த ஜே கிருஷ்ணமூர்த்தியின் விளக்கங்கள் போல் இருக்கின்றன. இவற்றை ரசிக்க வேறு ஒரு மனமும் மூளையும் வேண்டும். எது எப்படி இருந்தாலும் பாசாங்கு சிறிதும் இல்லாத கதைகள் இவை.
நான் இதற்கு மேல் தனித்தனியாக இந்நூலில் உள்ள சிறுகதைகளை எடுத்துச் சொல்லவோ, விமர்சனம் செய்யவோ போவதில்லை.
எவ்வளவு சிறுகதாசிரியர்கள் வந்தாலும், எவ்வளவு சிறுகதைகள் எழுதப்பட்டாலும், நல்ல சுவாரஸ்யமான சிறுகதைகள் என்றுமே நம்மை வசீகரிக்கத்தான் செய்யும். இந்நூலில் உள்ள சிறுகதைகளும் இப்படிப்பட்டவையே.
வாசித்து மகிழுங்கள் நண்பர்களே !


