மனிதனின் மரணம் எப்போது நிகழும் என்பதை யாரால் கூற இயலும் ?
பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நடக்கும் எந்த நிகழ்வும் நம் கையில் இல்லை.
நல்ல மனதுடன், அடுத்தவருக்கு துன்பம் இழைக்காது – ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடிந்தாலே , உங்களுக்கு அந்த இறைவனின் ஆசி உண்டு என்று நம்புங்கள். அப்படி இருக்க முடியவில்லை என்றால் , முறையான இறை வழிபாடு செய்யவேண்டும். அதற்கு உடனடி பலனை எதிர் பார்க்காக்க கூடாது
கொஞ்சம் கூட நம்பிக்கையைத் தளர விடாது , மனதை இன்னும் பலப்படுத்தினால் நிச்சயம் கருணைமழை பொழியும்.
மரணம் ஒருவருக்கு இயற்கையில் எப்போது நெருங்குகிறது என்பதை – அகத்தியமாமுனிவரின் – நயனவிதி கூற்றின்படி , மரணத்தை நெருங்கியவர்கள் உடலில் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்று சொன்னவற்றில் ஒரு சில தகவல்கள் :
“நாக்குச் சிவந்து முன்பிறந்த
நன்னீரி னிறம்போல் சிவந்திருக்கும்
தேக்கிக் காயும் தாகமுண்டு
தெளிந்தே வேர்வு சிகமென்னே
ஊக்கி உடலும் நொந்திருக்கும்
உலகோர் அறிய உரைத்தோம்
நாம் பாக்குத் தின்னும் துவர்
வாய் பரிந்தே நாளும் ஏலேன்னே”
நாக்கு சிவத்து மூளைக் கட்டுக்கள் முள்போலத் தோன்றி இரத்தம் போலச் சிவந்திருக்கும், காய்ச்சல் குறையாமல் தகிக்கும், அளவுக்கதிகமான தாகம் இருக்கும், உடல் வியர்க்கும் , உடல் முழுதும் வலிப்பது போல் இருக்கும் , பாக்கு தின்பது போல நாக்கில் துவர்ப்புச்சுவை தெரியும், இந்த அறிகுறிகள்
தெரிந்தால் ஏழு நாளில் உயிர் துறப்பார்கள் என்று உலகத்தவர்கள்
தெரிந்துகொள்ள சொல்கிறேன்.
“சிவேத சிவக்கச் சுரமுண்டாம்
சிதற வேர்வை மறுமையுண்டு
நீத நாக்கு பசுத்து முள்ளு
நிறைந்தே வெடித்து ரோகமுண்டாம்
ஓதத்தத் தொண்டை நேரிகுரலாம்
ஒளிசெர்நாளும் பதினைந்தாம்
நாதப் பண்சொல் மொழிமடவாய்
நாடிக் கொள்வாய் நாள்குறியே”
உடல் சிவந்து காணப்படும் சுரம் உண்டாகி , வியர்வை பெருகும், நாக்கு நிறம் மாறி முள் போல் முளைகள் நிறைந்து வெடித்து காணப்பட்டு அதிக வேதனை தரும்,
தொண்டை இறுகி குரல் மாறிவிடும், நாத மொழி பேசும் பெண்ணே இந்த அறிகுறிகள் கண்டால் பதினைந்து நாளில் மரணம் என்று அறிந்து கொள்.
“எண்ணியஅவத்தை சொல்வேன்
இனியகை மார்பும் மூக்கும்
நண்ணிய செவியினோடு
நலம்பெற குளிர்ந்து காட்டி
திண்ணமா உச்சி யங்கி
யாயிடிச் சிலேத்தும மோடி
மண்ணினிக் கடிகை ஐந்தில்
மரணமேன்றறிந்து சொல்லே”
கை, மார்பு, மூக்கு, காது, முதலான உறுப்புக்கள் குளிர்ந்து காணப்படும், உச்சந்தலையில் இடி இடிப்பது போல வலி ஏற்படும், சிலேத்தும நாடி மிகுந்து ஓடும் இவ்வகை அறிகுறிகள் காணப்பட்டால் இந்தப் புவியில் ஐந்து நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள். ( இரண்டரை நாழிகை என்பது – ஒரு மணி நேரத்தைக் குறிக்கும் )
இப்படி அகத்தியரை எழுதிய வைத்தது நல்லூர்த் திருத்தலமாக இருக்குமோ?
நல்லூரின் பெருமைகளைச் சொல்லி மாளாது.
அந்த நல்லூரில்தான் அப்பர் பிரான் தலையில் சிவன் தன் பாதத்தை வைத்து அருள் புரிந்த இடம்.
அந்த நல்லூரில்தான் பிருங்கி முனிவர் வண்டாக மாறி சில லிங்கத்தைத் துளைத்த இடம்
அந்த நல்லூரில்தான் அஷ்டபுஜ காளி அமைதியாகச் சிரித்துக் கொண்டு பெண்களுக்குப் பிள்ளைவரம் தந்து அருள் பாலிக்கிறாள்.
அந்த நல்லூரில்தான் சோழன் கோச்செங்கணான் யானை புக முடியாத மாடக் கோவிலைக் கட்டினான்
அந்த நல்லூரில்தான் யானைக்கும் சிலந்திக்கும் யார் சிறந்த பக்தன் என்பதில் போட்டி நடைபெற்றது.
அந்த நல்லூரில்தான் சிவன் பஞ்சவர்ணேஸ்வராரக ஒவ்வொரு மூணே முக்கால் நாழிகைக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் காட்சியளிக்கிறார்.
அந்த நல்லூரைத்தான் மகம் பிறந்த ஊர் என்பார்கள். மகா மகம் பிறந்த ஊர் கும்பகோணம். அந்தப் பலனை நல்லூரிலேயே பெறலாம்.
அந்த நல்லூரில்தான் அமர்நீதி நாயனாரை சிவன் ஆட்கொண்டார்.
அந்த நல்லூர்க் குளம்தான் மகா மகக் குளத்தைவிடப் பிரபலமானது. ஏழு புண்ணியக் கடல்களின் தீர்த்தம் சேர்ந்து குந்தி தேவிக்கே விமோசனம் வழங்கிய குளம் அது.
அந்த நல்லூரில்தான் அகத்திய முனிவர் சிவ பார்வதி திருமணக் கோலத்தைக் கண்டவர்.
அந்த நல்லூரில்தான் பலி பீட வடிவில் இருக்கும் கணநாதருக்கு பூஜை ஆண்டுக்கு ஒரு முறை சிறப்புப் பூஜை நடக்கும். இந்தப் பூஜையைப் பெண்கள் பார்க்கக்கூடாது, நள்ளிரவில் நடக்கும் அந்தப் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் இந்த ஊரில் உள்ள மக்கள் தங்கள் பசு, ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே கொடுத்து இப்பூஜையில் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது.
அந்தப் பூஜை தினத்தின் போதுதான் நல்லூரில் கோர மரணங்கள் இரண்டு ஏற்பட்டன. ஊரே பற்றி எரிந்தது. அனைத்துக்கும் காரணம் ஒரு பத்து வயது சிறுவன் !
அதை எண்ணி எண்ணி ஐம்பது வருடங்களாக வாய் வறண்டு நெஞ்சம் துடிக்க தினம் தினம் மரண அவஸ்தையை அனுபவித்து வருகிறான் !
இருக்காதா என்ன?
தன் தந்தை தாயின் மரணத்திற்குத் தானே காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவனை ஆட்டிப் படைத்தது.
அந்தச் சிறுவன்தான் இன்றைக்கு நாம் பார்க்கும் இலக்கிய வாத்தி!
(தொடரும்)
