“மருக்கொழுந்து” – கொத்தமங்கலம் சுப்பு

கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்கள் சமீபத்தில் எனக்குக் கொடுத்த முக்கியமான புத்தகம் “மருக்கொழுந்து”. பத்மஶ்ரீ, கலைமணி, கலாசிகாமணி கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் கவிதைப் புத்தகம் (தொகுதி .1). 

சுப்புவின் இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள ‘கண்ணரியேந்தல்’ கிராமத்தில், 1910 ஆம் வருடம், நவம்பர் மாதம் 10 ஆம் தேதி பிறந்தார் . இவரது பெற்றோர் சுப்பையா கணபதிகள் மகாலிங்க ஐயர் மற்றும் கங்கம்மாள். சிறு வயது முதலே நாடகம், சினிமா போன்றவற்றில் ஆர்வமுள்ளவராக இருந்தார். கொத்தமங்கலத்தில் வேலையிலிருந்தபோது, கொத்தமங்கலம் சீனு என்பவரின் நட்பு கிடைத்தது. அவரே சுப்புவை டைரக்டர் கே. சுப்ரமணியத்திடம் அறிமுகம் செய்து வைக்கிறார். திருநீலகண்டர் படத்திலிருந்து, ‘கொத்தமங்கலம் சுப்பு’ என்றே அறியப்படுகிறார். டைரக்டர் சுப்ரமணியம், “சிறந்த கலைஞர், பன்முகத் திறமை கொண்டவர்” என சுப்புவை ஜெமினி வாசனிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அதுமுதல் ஜெமினியில் முப்பது வருடங்களுக்கும் மேல் பணியாற்றியவர். வாசனின் அன்புக்கும், நட்புக்கும் பாத்திரமாகிப் போனார். 

ஜெமினியின் 4 படங்களை இயக்கியவர். ஏழு படங்களுக்கு திரைக்கதை அமைத்தவர். பல நூறு பாடல்களை எழுதியவர். ஒளவையார் திரைப்படத்தின் திரைக்கதை, பாடல், இயக்கம் அனைத்தையும் இவரே செய்து, உலகளாவிய புகழ் அடைந்தார். அந்தப் படத்தில் ஒளவையாருக்கு உணவு பரிமாற மறுக்கும் ஒரு பெண்ணின் (சுந்தரிபாய்) கணவனாக நடித்திருப்பார். ஜெமினி கதை இலாக்காவில் இருந்து, சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களில் பணியாற்றினார்.

மிஸ் மாலினியில் கதாநாயகனாக நடித்தார். மைனர் ராஜாமணி, அனாதைப் பெண், அதிர்ஷ்டம், சாந்தசக்குபாய், அடங்காப்பிடாரி, சுகுணசரசா, பக்த சேதா, சூர்ய புத்ரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், பக்த நாரதர், தாசி அபரஞ்சி, திருநீலகண்டர், பாவமன்னிப்பு போன்ற படங்களிலும் நடித்தார். ஜெமினியின் கண்ணம்மா என் காதலி படத்தை இயக்கினார். அப்படத்தில் கதாநாயகியாக நடித்த சுந்தரிபாய் அவர்களை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டார். 

எழுத்தாளராக அவர் எழுதிய ‘தில்லானா மோகனாம்பாள்’, தமிழர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற சிறந்த நாவல். நம் பாரம்பரியக் கலைகளான பாட்டும், பரதமும் குறித்த பல பெருமைகளைச் சொல்லிய நாவல் அது. பின்னாளில், திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றியடைந்தது. ராவ்பகதூர் சிங்காரம், பந்தநல்லூர் பாமா, பொன்னிவந்த்துப் பூங்குயில், மிஸ் ராதா, மஞ்சு விரட்டு (சிறுகதைத் தொகுப்பு) போன்ற படைப்புகள் மிகவும் சிறப்பானவை.

கொத்தமங்கலம் சுப்பு  அவர்கள் ஒரு மரபுக் கவிஞர். பாரதிக்கு பின்பு, அவர் வழியில் எழுதப்பட்ட மரபுக்கவிதைகள் இவருடையவை என்றால் அது மிகையல்ல. எளிய நடையில், எளிமையான சொற்களில், பேச்சு வழக்கைக் கலந்து எழுதப்படும் கவிதைகள் இவை. மரபுக் கவிதைகளில் பேச்சு வழக்குச் சொற்களை இலக்கணம் பிறழாமல் இணைத்த முன்னோடிக் கவிஞர் திரிகூட ராசப்பக் கவிராயர். அவர் மரபைப் பின்பற்றினார் கொத்தமங்கலம் சுப்பு. கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் இதழ்களில் சுப்புவின் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. ‘காந்தி மகான் கதை’ சுப்பு எழுதிய கவிதை நூல்களில் மிகவும் புகழ்பெற்றது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பின் வந்த உணவுப்பற்றாக்குறையினால் ‘ரேஷன்’ முறை வந்தது. உணவுத் தேவையில் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்த இந்த அவலத்தை கிண்டல் செய்து பாடல் எழுதியிருந்தார் கொத்தமங்கலம் சுப்பு…

‘காலையில எழுந்திரிச்சு
கட்டையோட அழுவணும்’
‘சக்கரைக்குக் கியூவில போய்
சாஞ்சுகிட்டு நிக்கணும்
சண்ட போட்டு பத்து பலம்
சாக்கட மண் வாங்கணும்’- என்ற அந்தப்பாடல் அன்றைக்கு மக்கள் மத்தியில் வெகு பிரபலமாயிற்று. 

கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பே அத்தகைய வீரனான கட்டபொம்மன் கதையை ஓலைச்சுவடியிலிருந்து எடுத்துத் தன் கை வண்ணத்துடன் வாரப் பதிப்பில் பாடல்களாக எழுதினார் கொத்தமங்கலம் சுப்பு. கொத்தமங்கலம் சுப்புவின் கைவண்ணத்துடன் கூடிய கட்டபொம்மன் கதையை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. மிகவும் பாராட்டினார். “வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்று புத்தகம் எழுதி, கட்டபொம்மனை நாடறியச் செய்தார்.

‘காந்திமகான் கதை’ யை நாட்டுப்புற பாடல் வடிவத்தில் எழுதினார் கொத்தமங்கலம் சுப்பு.  என் எஸ் கிருஷ்ணன், சுப்பு ஆறுமுகம் வழியில், காந்திமகான் கதையை மேடைகளில் வில்லுப்பாட்டாக மிக உணர்ச்சி வசப்பட்டு பாடுவார். பாடுகின்ற இவரும், கேட்கின்ற பாமர மக்கள் முதல் பண்டிதர் வரை அனைவரும் கண்களில் நீர் கசிய காந்தியின் கதையில் உருகுவது ஒவ்வொருமுறையும் தவறாது நடக்கும்! தேசபக்தியும், தெய்வ பக்தியும் இவரது பாடல் வரிகளில் நிரம்பி வழியும்.

“ காந்தி மகான் கதையை இந்நாட்டு மக்கள் கூட்டமாக அமர்ந்து ஆர்வத்துடன் கேட்கும் பொழுது ஒவ்வொருவர் முகத்திலும் இந்தியப் பண்பு ஒளிவீசும். அதில் அவரும் உணர்ச்சி வசப்படுவார். இதுவரை இந்த உலகில் எந்தக் கவிஞருக்கும் கிடைக்காத பெரும் பேறு இது“ 

                      – கல்கி ( கல்கி, 6.8.1950 )

‘மருக்கொழுந்து’ என்ற கொத்தமங்கலம் சுப்பு கவிதைத் தொகுப்பு இரண்டு தொகுதிகளாய் வந்துள்ளது. முதல் தொகுதியில் பண்டிகை, அறிவுரை, காதல், நாட்டு நடப்பு, நாட்டுப் பற்று என்ற தலைப்புகளில் 200-க்கு மேற்பட்ட பாடல்கள் உள்ளன. இரண்டாம் தொகுதியில் தெய்வீகம், இவர்களைப் பற்றி, இவைகளைப் பற்றி என்ற தலைப்புகளில் 160-க்கு மேற்பட்ட கவிதைகள் உள்ளன.

‘நாணயக் குறைவாலே கெட்டதொரு பாதி’ கவிதை, இன்றைக்கும் பொருந்திப்போவது அவரது தீர்க்கதரிசனம்!

கட்சிகளைப் பற்றியே பேச்சு – நீங்க

கதர்வேட்டி கட்டினதும் காந்தியோட போச்சு

கண்ட்ரோலை வைக்க வேணுமென்போம் – நாம்

கள்ள மார்க்கட்டிலே அரிசி வாங்கித் தின்போம்.

லஞ்சத்தை உதவாது என்போம் – நாம்

லகுவிலே முடிச்சுக்க அஞ்சுபத்துக் குடுப்போம்.

பஞ்சத்தை விரட்டுங்கள் என்போம் – பருப்பு

பாயாசம் வைத்து நாம் பலர் கூடி உண்போம்.

…….

…….

ஊருக்கு உபதேசம் செய்வோம் – நாம்

உணவுக்குப் பலபேரை வகை மோசம் செய்வோம்

நம்மாலே கெட்டதொரு பாதி – நாட்டு

நாணயக் குறைவாலே கெட்டதொரு பாதி.

‘எல்லாமே அவசரம் ஆச்சு’ இன்றைய அவசர ஓட்டத்தை அன்றே சொல்கிறது.

எல்லாமே அவசரம் ஆச்சு

எம்பதா யிருந்தவய சம்பதாப் போச்சு

எழுந்தவுடன் காப்பி குடிப்பாங்க – அதன்

இடையிடையே உலகத்துச் சேதி படிப்பாங்க

முகச்சவரம் செஞ்சு முடிப்பாங்க – தலை

முழுகறத்துக்கு முன்னாலே துடிதுடிப்பாங்க

……

…..

நாயோட்டம் என் றுலகம் சொல்லும் – அந்த

நாயுமே ஓடாது நம்மைப்போல் தம்பி

பேயோட்டமென்று சொன்னாலும் – அது

பெசகுதான் விருதாவில் பேயுமோடாது.

ஓட்டமும் நடையுமாகத்தானே – கொஞ்சம்

உக்கார நேரமில்லை உலகத்தில் என்றால்

உடம்பெடுத்து என்னபலன் கண்டாய் – சும்மா

ஊருக்கு வாழ்வதில் எனக்கென்ன ஆச்சு?

(நவம்பர் 10 ல் பிறந்த பன்முகக் கலைஞர் திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் நினைவாக…)