காத்திருக்கிறாள் கரும்பு

“காத்திருக்கிறாள் கரும்பு” சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர்: பா. முத்துக்குமரன்

கருத்துரை:

எழுத்தாளர் பா. முத்துக்குமரன் எழுதிய காத்திருக்கிறாள் கரும்பு என்ற சிறுகதைத் தொகுப்பை கண்மணி கிரியட்டிவ் வேவ்ஸ் பதிப்பகம் சிறப்பான முறையில் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தில் மொத்தம் இருபத்து நான்கு சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையின் களமும் வித்தியாசமாக இருக்கிறது. படிப்போருக்குச் சிலகதைகள் பாடமாகவும், நல்ல செய்திகளைச் சொல்வதாகவும் இருக்கின்றன.

கிராமத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஒருத்தி, திருமணமாகி ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள். அதே நாளில் கணவனையும் இழக்கிறாள். சித்த வைத்தியரான தன் தந்தையின் பராமரிப்பில் மகன் கணேசனுடன் வாழ்ந்து வருகிறாள். சிறிதுக்காலத்தில் தந்தையும் இறந்து போகிறார். அவரது சொத்துக்களாகக் கொஞ்சம் நிலமும், பணமும் இருக்கிறது. அதைக் கொண்டு தன் ஒரே மகனைப் நன்கு படிக்க வைக்கிறாள். அதன் பிறகு அவனுக்குத் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறான். தாயாரோ கிராமத்தில் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லியும், ஊருக்கு உபகாரியுமாக வாழ்ந்து வருகிறாள். நீண்ட நாட்களாகத் தன்மகனைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாள். ஆனால் மருமகள் காசிக்குப் போக வேண்டும் என்று சொல்கிறாள். இதற்கிடையில் தாயும் இறந்து போகிறாள். அந்தச் செய்தி கிடைத்ததும் மகன் கணேசன் தாயின் அந்திமக் காரியங்களைச் செய்வதற்காகக் கிராமத்துக்குக் குடும்பமாகச் செல்கிறான். அப்படிப் போகும் பொழுது தன் தாய் எப்படி எப்படியெல்லாம் கஷ்டப் பட்டுத் தன்னை படிக்க வைத்தாள், அவளுக்கு எதுவுமே தன்னால் செய்ய முடியவில்லையே என்று வருந்திக் கொண்டே அவளது இறுதிக் காரியங்களைச் செய்து முடிக்கிறான். ஊருக்குக் கிளம்பும் பொழுது தன் மகன் ரமணன் பாட்டியின் பெட்டியில் ஒரு கடிதம் இருபதைப் பார்த்து, “அப்பா..பாட்டி ஒனக்கு ஒரு கடிதம் எழுதி வைச்சிருக்கா” என்று கடிதத்தைக் காட்டுகிறான். அதில் தன் பேரன் ரமணனை டாக்டருக்குப் படிக்க வைத்து அவனை இந்த கிராமத்து ஏழை மக்களுக்காக மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை அதில் எழுதி இருப்பாள். கணேசன் ஊருக்குப் புறப்படும் நேரத்தில் ஊர்ஜனங்கள் அனைவரும் அம்மாவின் விருப்பத்தைத் தெரிவிப்பதாகச் சொல்கிற கதைதான் “ஊருதாயி”.

தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி உறவுகளைச் சொல்ல்கிற அழகான சிறுகதை ஓலைக்காற்றாடி. உளுந்தூர்பேட்டைக்கு அருகில் பரிந்தல் என்ற கிராமத்தில் இனிப்பு மிட்டாய்க் கடை வைத்திருக்கிறார் நாயக்கர். அவரது ஒரே மகன் நன்கு படித்து அமெரிக்காவில் கலிபோர்ணியா மாகாணத்தில் ஒரு நிறுவனத்தில் மென்பொருள் அதிகாரியாகப் பணிசெய்கிறான். அவனது மனைவியும் அதே நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறாள். அவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவர்கள் கலிபோர்ணியா வந்து, சுமார் பத்து வருடங்கள் கழித்துத்தான் கிராமத்துக்குச் செல்கிற நேரம் அமைந்தது. அதுவும் மகனும், பேரனும் தான் வருகிறார்கள். மருமகள் வர இயலவில்லை. தங்களது பேரப் பிள்ளையைப் பார்க்கப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறவர்கள், பேரனைப் பார்த்து, ”இவனுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி அமைதியாக இருக்கிறான்?” என்று கேட்க, அப்பா இவன் இரண்டு வருடங்களாக இப்படித்தான் இருக்கிறான். “அப்பா..ஐ ஹேட் யூ“ என்றுதான் சொல்கிறான். மருத்துவர்கள் “இவனை அழைத்துக் கொண்டு உங்கள் கிராமத்துக்குச் சென்று வாருங்கள்.. குணமாகலாம் என்றனர். அதுதான் இவனை அழைத்துக் கொண்டு உங்களைப் பார்க்க வந்தேன்.” என்கிறான்.

ஒவ்வொருநாளும் தாத்தா, தன் பேரனை அழைத்துக் கொண்டு கிராமத்துக் கோவில், குளங்களுக்கு அழைத்துப் போவதும், அவனோடு பம்பரம் விளையாடுவதும், பாம்பு செட்டு கிணற்றுக்குக் கூட்டிச் சென்று தண்ணீர் விழும் சிமிண்ட் தொட்டியில் நன்கு முங்கிக் குளிக்க வைத்து அவனுக்கு சுகமாக தலையைத் துவட்டி விடுவதும், கதைகள் சொல்வதும், அவனுக்குப் பிடித்த காற்றாடி செய்து பறக்க விட்டு மகிழ்வதுமாக சுமார் பத்து நாட்கள் ஓடிவிட்டன. பேரனுக்கு ஒவ்வொரு நாளும் கொண்டாட்டமாக இருந்ததைக் கண்டு தாத்தாவும் பாட்டியும் மிகவும் சந்தோஷப் பட்டனர்.

மகனும் பேரனும் ஊருக்குப் புறப்படும் நாளும் வந்தது. “புள்ளைய கவனமாக மனசு காயப்படாம பாத்துக்குங்க.. மருமகளிடமும் சொல்லு, நன்றாகப் பணம் சம்பாத்தித்து குஷியும் கும்மாளமுமாக இருங்க… அதத் தப்புன்னு சொல்ல மாட்டேன். அதுக்காக சின்னச் சின்ன சந்தோஷங்களத் தொலைச்சுடாதீங்க… நல்லாருங்க..” என்று தாத்தா சொல்லுமிடம் உருக்கமாக இருக்கிறது.

மறுபடியும் எல்லோரும் இங்க வருவோம் அப்பா..என்று மகன் சொல்லிக் கொண்டு காரில் ஏறும் சமயம் பேரன் கிருஷ் ஓடி வந்து தாத்தாவைக் கட்டிக் கொண்டு  “ஐ லைக் யூ ஐ லைக் யூ” என்று சொல்வாதாகக் கதை முடிகிறது. உளவியல் ரீதியாகச் சொல்லப்பட்ட மிக அழகான கதை.

“சந்தன மழை” என்ற கதை சித்தர்களின் இருப்பிடமான பாபநாசம் அகத்தியர் மலையில் நடப்பதாக அருமையான உரையாடல்களுடன் புனையப்பட்டிருக்கிறது.

ஒரு பௌர்ணமி இரவில் பாபநாசம் கல்யாண தீர்த்தத் தடாகக் கரையில் உள்ள ஒரு கோவிலில் சுமார் ஐம்பது வருடங்களாகப் பூசை செய்யும் எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவரும், நல்ல உத்தியோகத்தில் இருந்து, பல தவறுகள் செய்து, சம்பாதித்த பணத்தை எல்லாம் மற்றவர்களுக்குக் கொடுத்து விட்டு இந்தப் பொதிகை மலை அடர்ந்த காட்டில், புலிகள் நடமாடும் இடத்தில் சுமார் இருபது வருடங்களாக சித்தரைப் போலத் திரிந்து வருகிற ஐம்பது வயதான ஒருவருக்குமான ஆன்மிக உரையாடலில் இந்தக் கதை மிளிர்கிறது. சித்தர்களுக்கு மட்டுமே சந்தன மழை பெய்யும் என்று சொல்வார்கள். அந்த மழையில் தானும் நனைய வேண்டும் என்ற விருப்பத்தைச் சொல்லும் பொழுதில் வரும் மழையில் அவருக்கு மட்டும் சந்தன மழையில் நனைகின்ற பேறு கிடைபாதாகக் கதை முடிகிறது.

இதுபோன்று ஒவ்வொரு கதையிலும் ஒரு செய்தியைப் படிக்க முடிகிறது. கதைகளின் ஊடே வள்ளலார், பாரதியார், திருமூலர் பாடல்களையும் கதா பாத்திரங்கள் மூலமாகச் சொல்கிறார்.

இந்தக் கதைகள் அனைத்தும் தினமலர்,  தினமணி கதிர், தீபாவளி மலர்களில் வெளிவந்திருக்கின்றன.