இந்த மாதச் சிறுகதையாக நான் தேர்வு செய்வது “சொர்க்கம்” – (ஜீஎஸ் – சொல்வனம்).
செப்டம்பர் மாதம் வெளியாகிய 81 கதைகள் எனக்கு அனுப்பப்பட்டிருந்தன! இவற்றை வாசித்து, ஒரு கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்! வாசிப்பனுபவம் சுவாரஸ்யம்தான் என்றாலும், பல நல்ல கதைகளில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு சவால்தான்.
சிறுகதைகள் எழுதுவது சிரமமானது. சொல்கின்ற கருத்தில் தெளிவு வேண்டும். சொற்கட்டும், சொற்களில் சிக்கனமும் வேண்டும். தெளிவான நடையில், தொய்வில்லாத கதையோட்டமும், சுவாரஸ்யமும் வேண்டும். கூடியவரை சின்னச் சின்ன வாக்கியங்களில் கூர்மையாகச் சொல்ல வேண்டும். ஒரு சிற்பி செதுக்குவது போல, ஒவ்வொரு வார்த்தையையும், வாக்கியத்தையும் செதுக்க வேண்டும்! முதல் வரியிலேயே, கதையின் திசையை உணர்த்திவிடுதல் நல்லது. கதை செல்லும் திசை பல பக்கமாகத் திரும்பினால், பஸ்ஸைத் தவற விட்ட பயணிபோல, கதை தன் முடிவை எட்டுவது சிரமமானது.
அதுபோலவே தலைப்பிலும் கவனம் வேண்டும் – ஈர்ப்புடன், கதைக்குப் பொருத்தமான தலைப்பு மிகவும் அவசியம். கதையின் கரு, ஒரு செய்தியையோ, ஓர் உணர்வையோ சொல்வதாக இருக்கலாம்; அதைவிட அது சொல்லப்படுகின்ற விதம் – உத்தி – மிகவும் முக்கியமானது.
‘இலக்கியம் பொழுது போக்குவதற்கு மட்டுமன்று, மேம்படுத்துவதற்கும்தான்’ என்பர் விமர்சகர்கள்! “வாசகர்களைப் பாதிக்கிற விஷயத்தில், ஐந்நூறு பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் நாவலை விட, ஐந்து பக்கச் சிறுகதையின் பங்கு அதிகமானது” – ஜெயரதன் (மூத்த எழுத்தாளர்).
“சில கதைகள் கிட்டத்தட்ட கவிதை நடையிலேயே பொருளில்லாமல் எழுதப்படுகின்றன. நேரடியாகச் சொல்லாமல், புதிய அதே நேரத்தில் குழப்பமான முறையில் சொல்வது, ஒருவகையில் புரியாத மொழியில் அடுக்கடுக்கான வாக்கியங்களைக் கொண்டு சொல்லப்படுவது ஒரு புதிய போக்காக இருக்கிறது! (ஆங்கில வழிப் படிப்பும், வெளிநாடுகளில் பின்பற்றப்படும் முறையை அப்படியே பின்பற்றுவதும்தான் காரணம்!). இப்போது தமிழ்ச் சிறுகதைகளில் இந்த வகை எழுத்துதான் புகழ் பெற்றுள்ளது. …. கதை முக்கியமல்ல; வாசகன் முக்கியமல்ல; அலங்காரமான வார்த்தைகளே முக்கியம்! கதையை விட, மொழியே முக்கியம், அதுவும் தெளிவில்லாத குழப்பமான மொழி” – ‘அண்மைக்காலச் சிறுகதைகள்’ கட்டுரையில் எழுத்தாளர் இமையம்.
நல்ல வேளை, இம்மாதச் சிறுகதைகளில் இமையம் குறிப்பிடுகின்ற வகைக் கதைகள் இல்லை என்பதே ஆசுவாசமாக இருக்கின்றது (நானும், அம்மாதிரிக் கதைகளை வாசித்துக் குழம்பியிருக்கிறேன் என்பது வேறு விஷயம்!). பொதுவாக இந்த மாதக் கதைகளில் நான் கவனித்த சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
‘உத்தி’ என்று புதிதாக எதுவும் காணப்படவில்லை – நேரடியாகவோ, முன்னும் பின்னுமாகவோ கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
வட்டார வழக்கு என்ற வகையில் கிராமத்துக் கதைகள் – கொங்கு, திருநெல்வேலி, தென், வட ஆற்காடு மாவட்ட கிராமங்கள் – மண் வாசனையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன.
இட்லி, வடை, பொங்கல், களி, கூழ் என்ற உணவுப் பண்டங்களைக் காண முடிவதில்லை. எலிக்கறி பற்றிய கதை கூட உண்டு. கோழி பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பஜ்ஜி, மீன் வறுவல், குஸ்கா என எல்லா உணவு வகைகளும் விரிவாகப் பேசப்படுகின்றன. ஏழ்மையின் விளிம்பில் ஒரு சிறு கோழித் துண்டுக்கு ஏங்கும் சிறுவனின் ஏக்கம் மனம் கனக்கச் செய்கிற கதையும் இருக்கிறது.
எதிர்பாராத முடிவுகள், வாசகனிடம் விடப்பட்ட முடிவுகள், திணிக்கப்பட்ட முடிவுகள், எதிர்பார்த்த முடிவுகள் எனக் கதைகள் தன்னை முடித்துக்கொள்வதில் பல வகைகள் காணப்பட்டன.
காதல், பாசம், தாய்மை, குடும்பம், தியாகம், நன்றிக்கடன், பழிதீர்த்தல், மாய யதார்த்தம், வளர்ப்பு மிருகங்கள், அமானுஷ்யம் போன்றவற்றை உள்ளடக்கிய கதைகள் குறைந்துவிட்டன. அறிவியல் புனைக் கதைகள் ஒன்றோ, இரண்டோதான் இருந்தன. திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர் பற்றிய கதைகள் காணப்படவில்லை என்பது ஆச்சரியம் – அவை பரிசுப் போட்டிகளுக்கானவை போலும்!
தேவையற்ற விவரணைகள், சிறுகதையினை ஒரு கட்டுரை தளத்திற்கு இட்டுச் சென்றுவிடுகின்றன – சில கதைகளில் இந்தப் போக்கு காணப்படுகிறது.
இனி, இம்மாதத் தேர்வு குறித்து:
எனக்குப் பிடித்த 3 கதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
மோட்ச தீபம் – இறந்துபோன கணவனுக்கு, மோட்ச தீபம் ஏற்ற விருத்தாச்சலம் கோயிலுக்குச் செல்லும் மாமியும், மருமகளும். மகள் வீட்டிலிருந்து தன் வீட்டுக்குச் செல்லும் முருகேசன் அதே பெட்டியில் எதிர் எதிராய்ப் பயணம். நடுஇரவில் விருத்தாச்சலத்தில் இறங்கி என்ன செய்வது எப்படிச் செல்வது என்று அறியாத பெண்கள். முருகேசனின் சிறுவயது நட்பாகிய வடிவின் சாயலில், தன் மனைவியை ஒத்த வயது இருக்கும் அந்தப் பெண்மணி, அவள் மருமகள் – ஒரு கவிதாயினி மற்றும் மூச்சுத் தொந்திரவு உள்ளவள் – என தன் எண்ண ஓட்டங்களுடன், அவர்களுடன் உரையாடியபடி முருகேசன் பயணம் செய்கிறான். விருத்தாச்சலம் ஸ்டேஷன் வந்ததும் நடப்பது என்ன? ரயில் பயணங்களில் பொதுவாக ஏற்படும் உரையாடல்களும், முருகேசனின் எண்ண ஓட்டங்களும் சிறப்பாகச் சொல்லப்படுகின்ற கதையின் முடிவு, மனித மனங்களின் முரண்களை, பலவீனங்களை வெளிப்படுவதாக உள்ளது. (கலாப்பிரியா – உயிர்மை)
பெருநெஞ்சன் – பாதையோரத்தில் மயங்கிப் படுத்துக்கிடக்கும் பெண்ணும் அவளது இரு குழந்தைகளும் – அருகில் இருக்கும் டீக்கடையில் வேலை பார்க்கும் மணி, அவன் கடையில் சிகரெட் பிடிக்க வரும் கதைசொல்லி இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதை. அந்த ஏழை நாடோடிக் குடும்பத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடலாமா என நினைக்கும் கதைசொல்லியின் மனிதநேயம், இரவோடிரவாக பெரிய குழந்தையை விட்டுவிட்டு, ஓடிவிடும் அந்த நாடோடித் தாயின் இரக்கமற்ற செயல், விடிந்ததும் தாயைக் காணாமல் அனாதையாக அழுதுகொண்டிருக்கும் பெரிய குழந்தையை எடுத்து வளர்க்க முடிவெடுக்கும் மணி – மனித நேயம் எங்கே யாரிடம் எப்படி வெளிப்படும் என்பது எப்போதுமே ஒரு புதிர்தான். நல்ல சிறுகதை.(ஜார்ஜ் ஜோசப் – தளம்).
சொர்க்கம் – மயிலை சந்தில் இருக்கும் ஒரு வீடு – மத்தியதர, ஏழைகள் பல குடித்தங்களாக, ஒரே கழிப்பிடம், குளியலறை என்று வாழும் அவலநிலை. இருநூறு வருடங்களுக்கும் மேலாக, முறையான பத்திரங்கள், பட்டாவுடன் இருக்கும் அந்த வீடு, கோயில் நிலம் என்று அபகரிக்கப் படும் அவலத்தைச் சொல்லும் கதை. எதிர்த்துப் போராட முடியாத சாதாரண மனிதனின் இயலாமை. தன் ஓய்வூதியத்தில், மகனின் தயவின்றி, அங்கு வசிக்கும் பெரியவர், இந்த அநீதியை எதிர்க்கிறார். அரசியல், லோக்கல் பெரிய மனிதரின் உறவுகள் சம்பந்தப்பட்ட இந்த அநீதியே பணத்தினால் வெல்கிறது. இன்றைய சமூக அவலநிலையை படம்பிடித்துக்காட்டும் எழுத்து. பெரியவரின் நேர்மையும், அநீதிக்கெதிராக எழுப்பும் குரலும், தன் மகனே ஆனாலும் நியாயம் கேட்கும் உறுதியும் மிக அழகான நடையில் சொல்லப்பட்டுள்ளன. இறுதியில் பெரியவரின் சுயமரியாதையும், மன உறுதியும் உயர்ந்து நிற்கின்றன. சமூக அவலங்களும், அநீதிகளும், நேர்மையற்ற அதிகார வர்க்கமும், கோழை ஜனங்களும் மாறிடாதோ என்ற பாரதியின் ஆதங்கம், சுதந்திரத்திற்குப் பின்னும் தொடர்கிறது என்பது பெரும் அயற்சியைத் தருகிறது.
இந்த மாதச் சிறுகதையாக நான் தேர்வு செய்வது “சொர்க்கம்” – (ஜீஎஸ் – சொல்வனம்).
வாய்ப்பளித்த ‘குவிகம்’ குழுமத்திற்கு நன்றி!

அருமையான விமர்சனம். இத்தனை கதைகளைப் பொறுமையாகப் படித்து நேர்மையாகத் தரம் பிரிப்பதற்கே உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள்
LikeLike