பூட்டுகளைப் பழுது பார்ப்பவன் அன்சாரி, வயது இருபத்தி எட்டு. சமீபகாலமாகத் தூக்கம் சரியில்லை என மனநல ஆலோசகரான என்னிடம் சொல்ல ஆரம்பித்தான்.
மேற்கொண்டு விவரங்களைக் கேட்க, வேலை செய்து முடித்தபின் அடுத்த சில மணி நேரத்திற்கு, “‘ஒரு வேளை’ வேலையைச் சரியாகச் செய்தோமா, அல்லது தவறு ஏதேனும் நேர்ந்துவிட்டதா? திருடன் பூட்டை உடைத்து விடுவானா? என்னால் நஷ்டப்படுவார்களோ? சரியான சில்லறை திருப்பித் தந்தேனா?” மீண்டும் வரச் சொல்லியிருந்தால் “நாட்களைச் சரியாகச் சொன்னோமா?” இப்படிப்பட்ட சந்தேகங்கள் உள்ளூர ஓடுமாம்.
இவ்வகைத் தருணங்களில் ஒரு விதமான தலைவலியும், உடம்பு சரியில்லாதது போலவும் தோன்றுமாம். வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறார்ப் போலத்தோன்றும், இதயம் தட் தட் என அடிக்கும், வாய் உலர்ந்து போகும், எதிலும் கவனம் செலுத்துவது கடினமாகும். இவற்றைத் தன் பலவீனம் என்றே முடிவாக இருப்பதையும் ஒப்புக்கொண்டான். ஒரு வருடத்துக்கு இதையெல்லாம் தானாகச் சமாளிக்க முயன்றதில் பல அறிகுறிகள் கூடிக்கொண்டது. தூக்கமும் பாதிக்கப்பட்டபோது மனநல ஆலோசகரைப் பார்க்க முடிவு செய்தான்.
உடல் நலம் சரியில்லை என்றால் நாம் மருத்துவரை அணுகத் தயங்கமாட்டோம். மற்றவரிடம் தன் நலக்குறைவைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவோம். இதே தமக்கு மனதில் ஏதோ சங்கடம் என்பதைப் பற்றி நிபுணரை ஆலோசிப்பதாக மற்றவர்கள் கேள்விப்பட்டால் விமர்சனமும் கேள்விகளும் கேலியும் இருக்கும். இதற்கு அஞ்சி, ஆலோசிப்பதையே தவிர்ப்போம். எளிதாகக் குணமடையக்கூடியது தாமதித்ததால் நலமாவது தள்ளிப்போகும்.
இந்தக் கட்டத்தில் அன்சாரி இருந்தான். ஆகையால் மருந்துகள் தேவை என எனக்குத் தெரிந்தது. இதை என்னுடைய சகாவான மனநல மருத்துவர் பார்த்துக் கொண்டார். மூன்று மாதத்திற்குத் தரப்பட்ட மாத்திரைகளை விடாமல் சாப்பிட்ட பிறகே சற்று நலமாகத் தொடங்கினான் அன்சாரி. இந்த நிலைக்கு வந்த பிறகே செஷன் தொடங்குவோம். அந்தக் கட்டத்தில் கிராமங்களில் நலன் முகாம் ஒன்றுக்கு மருத்துவர் அழைக்கப்பட, அன்சாரியை என்னுடன் கலந்தாலோசிக்கும் செஷன்கள் தொடங்கலாம் என முடிவானது.
அன்சாரிக்கு நாங்கள் க்ளையன்ட் விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று ஆரம்பத்திலேயே மனநல மருத்துவர் விளக்கியிருக்கியிருந்தார். என்னிடம் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்று புரிந்து கொண்டு அன்சாரி ஆரம்பித்தான்.
இப்போதுள்ள நிலைமை போலவே, வளரும் பருவத்திலிருந்தே யாரேனும் சந்தேகம் எழுப்பினால் உடனடியாக சில சமயம் பதட்ட நிலை நேர்வதுண்டு எனக் கூறினான். மற்ற பல கடமைகள் முடிக்க வேண்டியதாக இருக்கையில், வேறொன்றில் கவனம் செலுத்தச் செலுத்தப் பதட்டம் ஓரளவிற்கு அமைதியானது.
வீட்டில் பொறுப்புகளை பெற்றோர், இரண்டு அண்ணன்மார் பார்த்து கொண்டனர். கடைக்குட்டி என்றதால் தவறோ தப்புகளோ நேர்ந்தாலும், அடுத்த முறை செய்யாதே எனச் சொல்லி விட்டுவிடுவார்கள்.
ஒன்பதாம் வகுப்பு வந்த பின்னர் தானாகச் செய்ய வேண்டியவை பலவற்று இருந்தது. வகுப்பு மாணவர்களுடன் செய்ய வேண்டும், தானாகத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என. இந்த தருணங்களில் சஞ்சலம் நிலவியது. நண்பர்கள் உதவியோடு எப்படியாவது முடித்துக் கொடுத்து விட்டதும்தான் இரவு தூக்கம் வரும். வீட்டினர் இதை “நாங்கள் எல்லாம் பார்க்காததா” என்று சொல்வதால் அன்சாரியும் அப்படியே எடுத்துக் கொண்டான்.
எட்டு மாதங்களுக்குச் சமாளித்துச் செய்தான். அதற்குப் பின் அடிக்கடி தலைவலி, வயிற்றில் வலி என்று உபாதைகள் ஏற்பட்டது. வெவ்வேறு மருத்துவமனை ஆலோசித்தும் வலி அவ்வப்போது வந்து போனதால் பாடத்திட்டத்தில் கவனம் சரிந்தது. கடைசியில் படிக்க மறுத்து நின்றுவிட்டான் அன்சாரி.
படிப்பு சம்மதமான வேலை ஏதும் செய்ய மறுத்தான். குடும்ப நண்பர் ஒருவர் பூட்டு சாவி வேலையில் அன்சாரி ஆர்வம் காட்டியதை ஞாபகப் படுத்தியதால், வீட்டினர் அதையே சிறு தொழிலாக அன்சாரிக்குத் தொடக்கிக் கொடுத்தார்கள்.
என்னைப் பார்க்க வீட்டினர் வர மறுத்ததால் அன்சாரி சொன்ன விவரங்களை வைத்தே செஷன்களைத் துவங்கினேன். மேலும் வீட்டுச் சூழலைப் பற்றிக் கேட்டபோது பதட்டத்துடன் பேசியதால் இதைப் பற்றிய கேள்விகளை அன்சாரி மேலும் தயாரானதும் எழுப்பலாமென முடிவு செய்தேன்.
இந்த நிலையில் பதட்டம், சந்தேகம் இரண்டும் நிலவியது. பதட்ட நிலையைச் சமாளித்து அதே சமயத்தில் அமைதிப் படுத்த ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கும் “பாட்டுத் தியானம்” (music meditation) வழிமுறையை உபயோகித்தேன். அன்சாரியை வாத்தியப் பாட்டுகளைத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன். சிறுவயதில் பிடித்துக் கேட்ட வாத்தியப் பாட்டுகளில் தொடங்கினோம். அதேபோல் ஒவ்வொரு பருவநிலையில் பிடித்துக் கேட்டவற்றையும். வாத்திய இசையினால் “இதுவா”, “அதுவா” என்ற கவலைகள் தவிர்க்கப்பட்டு பதட்டம் வராததை அன்சாரி கவனித்தான். வெற்றி பெற்ற மனநிலை என்றான்.
அடுத்த கட்டமாக, வார்த்தைகள் உள்ள இசையைக் கேட்க வேண்டும். ஏனெனில், மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் ஏதேதோ எண்ணங்களையும் சந்தேகங்களையும் தூண்டி விடுவதினால்தான் அன்சாரிக்குப் பதட்டம் ஏற்படுகிறது. வார்த்தைகள் உள்ள இசையைக் கேட்கையில் அப்படி நேராமல் பயின்றால், மற்ற சூழ்நிலைகளிலும் அது உதவும். இதைப் பயிலப் பல செஷன் தேவைப்பட்டது. அன்சாரி இசையைக் கேட்க, மனம் எங்கெங்கோ அலைபாய, உடனே பதட்டம் ஆனான். பல கேள்விகள் சூழ்ந்தது. இசையைக் கேட்பது அப்படியே இருந்து விட்டது.
தேர்ந்தெடுத்த இசையின் முதல் நான்கு வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு கேட்க வேண்டும் என முடிவானது. அந்த நேரத்தில் எழும் உணர்வு, சிந்தனை, சந்தேகம் இவற்றைக் கவனித்துக் குறித்துக் கொள்ள வேண்டும் என்றேன். இதன் தொடக்கத்தில் மனதைச் சாந்தப் படுத்த பயிற்சிகள் செய்தோம்.
இதனால் உடலில், மனதில் நேர்ந்த நிலையை அடையாளம் காண முடிந்தது. தனக்கு நேரும் மாற்றத்தை அன்சாரியால் புரிந்து கொள்ள முடிந்தது. அதே சமயத்தில், உடலில் இதுவரை நிலவிய நிலையின் பிடி தளர்ந்தது. இதைத் தொடர்ந்து பதினைந்து நாட்களுக்குச் செய்தான். தெம்பு வந்ததால் மறுமலர்ச்சி ஆனது என்றான் அன்சாரி.
இப்போது மெதுவாக நான்கு வரிகள் முழுதாகக் கேட்க முடிந்தது. அன்சாரியின் பதட்டத்தை ஓரளவிற்குச் சரி செய்ய முடிந்தது.
இதை மேற்கொண்டு செய்வதால் தனக்கு ஏற்படும் நலனைக் கவனித்தான். ஆனால் இப்படி தன்னலம் தேடுகிறோமே, தான் சுயநலவாதி என்ற எண்ணம் எழும்பியதால் அடுத்த சில செஷன்களில் இதற்கு விளக்கம் அளிப்பதில் சென்றன. தன்னை கவனிப்பதும் செயலைக் கவனிப்பதும் ஒன்றிணங்கியது எனப் புரிந்தது. அமைதி நிலவ, நாம் தன்னைப் பார்த்துக் கொள்வது உத்தமம் என்றதை உணர்ந்தான்.
ஓரளவிற்கு நலமாகியும், மேலும் நலம் பெற வேண்டியவை பல இருந்தன. இருந்தும், மாத்திரை எடுத்துக் கொள்வதைத் தொடர வேண்டுமா என்ற கேள்வியை அன்சாரி அடுத்த பல செஷன்களில் கேட்க, தொடர்ந்து ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றதை விளக்கப்படங்கள் மூலம் விளக்கினேன். மாத்திரைகளைப் பற்றிய விவரத்தை மனநல மருத்துவரிடம் பேசப் பரிந்துரைத்து, மருத்துவரிடம் நேரம் குறித்துத் தந்தேன். அன்சாரி சந்தித்தான்.
அவ்வப்போது மனநல மருத்துவரிடம் அன்சாரி முன்னேற்றத்தைப் பற்றி சுருக்கமான அறிக்கைகள் நான் தருவதுண்டு. மேற்கொண்டு சிகிச்சைக்கு வழிமுறையைக் கலந்தாலோசித்து வகுக்க இது உதவும்.
இந்தக் கட்டத்தில், ஒரு மாதத்திற்குப் பிறகு அன்சாரியிடம் சலிப்பு, அவசரப் படுவது, சுத்தம் குறைவு இவற்றைக் கவனித்தேன். மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும் விவரங்களை எப்போதும் போல நான் கேட்டபோது, அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. மருந்தை நிறுத்தியதால் பதட்டம் அதிகரிக்க, மீண்டும் மருத்துவம் பக்கம் போக நேர்ந்தது.
மீண்டும் மாத்திரை எடுத்துக் கொண்டு இரண்டு மாதத்திற்குப்பின் செஷன்கள் தொடரலாம் என்ற முடிவைச் சொன்னேன்.
செஷன்கள் மீண்டும் தொடங்க, வீட்டின் நிலவரம் அறிய ஆரம்பித்தேன். அன்சாரி தன் சொந்தத் தொழிலுக்கான முடிவுகளை வீட்டினர் எடுப்பதாகக் கூறினான். ஏனெனில் குடும்பத்தினர் வியாபாரம் செய்து வந்ததால் என்றான் அன்சாரி.
பாத்திரம் விற்கும் கடை வியாபாரி தந்தை. அக்கம்பக்கத்தில் உதவுவதினால், தன்னடக்கத்துடன் செய்வதால் எல்லோரும் மரியாதை காட்டுவார்கள். அண்ணன் இருவருக்கும், கடையின் மற்ற கிளைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு. தந்தை இருவரின் உழைப்பைப் பாராட்டுவார். அம்மா, கடை கணக்கைப் பார்ப்பதும் இல்லத்தரசியாகவும் இருந்தார்.
அம்மா எதைச் செய்தாலும், மூன்று நான்கு முறை சரியாக இருக்கிறதா எனப் பார்ப்பதுண்டு. செய்யும் போது, அந்த நேரத்தில் அம்மாவிற்கு வேர்வை ஊற்றி, தலையைக் கோதிக்கொண்டு இருப்பாள்.
அவர்கள் அன்சாரியின் வீட்டுப் பாடங்கள் சரிபார்ப்பு செய்யும் போதும் இது நேரும் என்றார் அன்சாரி. சவாலுக்குப் பதில் தேடியதும் அது சரியாக இருக்கிறதா எனப் பலமுறை சரிபார்க்கச் சொல்வாள். அதே போலப் புத்தகங்களைப் பையில் வைத்ததும் எல்லாம் இருக்கிறதா எனச் சரிபார்க்கச் சொல்வாள். இவற்றை அம்மாவின் தன்மை என வீட்டினர் விட்டு விட்டார்கள்.
அன்சாரி இறைவனைத் தொழுதபின், முறையாகச் செய்தாயா என விசாரிப்பாள். பலமுறை இப்படி நேர்ந்தபின், அன்சாரிக்குச் சந்தேகங்கள் வரத் தொடங்கின. பதில் கூறத் தடுமாறினான்.
அன்சாரி தானாக முடிவுகளை எடுக்க, செயல்படுத்த வேண்டுமென செஷனில் நிர்ணயம் செய்தோம். எளிதானதில் துவங்கினோம். வீட்டினர் உடன்பாடு பெறப் பல வாரங்கள் ஆனது. சற்று முன்னேற்றம் காணும் போது அம்மாவின் சந்தேகங்கள் தடையாக இருந்தது.
அம்மாவைச் சார்ந்த விவரத்தை மனநல மருத்துவரிடம் பகிர்ந்தேன். இது கான்ஃபிடன்ஷியாலிடி மீறுதல் அல்ல. அன்சாரியின் தாயாருக்குச் சிகிச்சையைக் கணிக்கத் தேவையானது.
தாய் மகன் இருவருக்கும் மனநல மருத்துவரின் சிகிச்சை தேவைப்பட்டதால் மருத்துவரே செஷன்களைத் தொடர்ந்து செய்வதென்று முடிவானது.
*******************************
