தீபாவளி | Tamil Naduஅழைப்பு மணியின் ஒலியை மதித்து கதவைத் திறந்ததும் கொஞ்சம் ஒல்லியான தேகத்துடன் இளைஞன் நின்றிருந்தான்.
“யாரு?”
“அமேஜான் பார்சல்..”
உடனே பின்னாலிருந்து மகன் பிரணவின் குரல் கேட்டது.
“டேட்.. இட்ஸ் பார் மீ..”
வந்து வாங்கிக் கொண்டான்.நான் கதவைத் தாளிட்டுவிட்டு திரும்பி..
“என்னதுடா?”
பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்த பிரணவ் நிமிர்ந்து பார்த்து..
“என் டீவாலி டிரெஸ்.. ஆன்லைன்ல பிராண்டட் டிரெஸ்களுக்கு ஆபர் வந்தது. உடனே ஆர்டர் பண்ணிட்டேன்.”
கன்னா பின்னாவென்று டேப் ஒட்டியிருந்த பேக்கெட்டை கந்தல்கோலமாகப் பிரித்து ஜீன்ஸையும் டீ-ஷர்ட்டையும் இன்னும் சில துணிகளையும் வெளியே எடுத்து தன் மேல் விரித்து அளவு பார்த்தான்.
“பர்பெக்ட்”

சந்தோஷத்துடன் அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது.
இப்போது பிரணவே போய் கதவைத் திறந்து இன்னொரு பார்சலுடன் வந்து..
“அம்மா.. இந்தா உனக்கு”
என் மனைவி லெஷ்மி எதுவும் புரியாமல்..
“என்னது இது?”
“சில்க் சாரீ.. உனக்குப் பிடிச்ச மெரூன் கலர்ல.. என்னோட டீவாலி கிப்ட் ஃபார் யு”
பார்சலைப் பிரித்தான். பிரபல புடவைக் கடையின் அட்டைப்பெட்டி வெளிப்பட்டது. மூடியைத் திறந்தால் பிரணவ் சொன்ன மாதிரியே மெரூன் நிறத்தில் புடவை.. ஜரிகை பளபளத்தது..

அதன் கிழே இன்னொரு பெட்டி. திறந்தால். வேஷ்டி.. அங்கவஸ்திரம்.
“உங்களுக்கு ஷர்ட் லூயி பிலிப் சைட்டுல ஆர்டர் பண்ணியிருக்கேன். அதுவும் வந்துரும்.. அப்புறம் கிராக்கர்ஸ் ஆர்டர் பண்ணியாச்சு.. மா.. என்ன ஸ்வீட்.. சேவரீ வேணும்னு சொல்லு. நீ எதுவும் கஷ்டப்பட வேண்டாம். அதுவும் ஆர்டர் பண்ணிடறேன்..”
பிரணவ் அடுக்கிக் கொண்டே போனான்.

காலத்தின் பரிணாமம். கையில் ஒரு சின்ன பெட்டியை வைத்துக் கொண்டு கோடிக் கணக்கில் வியாபாரம் பேசுகிறார்கள். கற்றது கையளவு என்பார்கள். இப்போது உலகமே கையளவு பெட்டிக்குள் அடங்கி விட்டது.

தீபாவளி.. இல்லை இல்லை.. அவன் பாணியில் டீவாலி ஷாப்பிங் உட்கார்ந்த இடத்துலேயே முடிந்துவிட்டதில் பிரணவுக்கு ஒரே சந்தோஷம்.

அவளுக்குப் பிடித்த கலரில் பட்டுப் புடவை கிடைத்தாலும் லெஷ்மியின் முகத்தில் ஏதோ ஒரு குறை இருப்பதாக எனக்குப் பட்டது.

லெஷ்மியின் முகத்தில் மட்டுமல்ல.. என் மனதிலும்தான்..

”அடுத்த மாசம் இருபத்தியாறாம் தேதி தீபாவளி. சரியா இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு”
அம்மா இதைச் சொன்னவுடன் குடும்பத்தில் எல்லோருக்கும் புதுத் தெம்பு புகுந்து விடும்.
நாங்கள் இருந்தது கல்கத்தாவில் அந்தக் காலத்து அடுக்குமாடி குடியிருப்பில். மொத்தம் நான்கு மாடிகள். எட்டு வீடுகள். முதல் தளத்தில் வீட்டு சொந்தக்காரர் டாக்டர் பால் குடியிருந்தார். அவருக்கு எதிர் வீட்டில் அவருடைய சொந்தக்காரர்.. இது போக மீதியிருந்த ஆறு வீடுகளிலும் தமிழர்கள்தான் குடியிருந்தார்கள்.

தீபாவளி என்று அம்மா அறிவித்த அடுத்த நாளே ஆறு தமிழ் குடும்பத்து இல்லத்தரசிகளும் முதல் கட்ட மீட்டிங் போடுவார்கள். இந்த வருடம் யார் வீட்டில் என்னென்ன பட்சணங்கள் பண்ணப்போகிறார்கள் என்ற தீர்மானம் அதில் நிறைவேரும். ஒரு வீட்டில் பண்ணுவதை இன்னொரு வீட்டில் பண்ணக் கூடாது.. மிக்சரைத் தவிர. காரணம் பண்டமாற்றம்போது டூப்ளிகேஷன் ஆகிவிடக் கூடாது.

அடுத்த கட்டமாக அம்மா தான் பண்ண வேண்டிய பட்சணங்களுக்கான சாமான்கள் லிஸ்ட் தயாரிப்பாள். அதற்கான செலவுகளைக் கணக்கிடுவாள். காரணம் எல்லாம் கையிருப்பு பட்ஜெட்டுக்குள் அடங்க வேண்டும். பற்றாக்குறை விழுந்தாலும் அம்மா எந்தக் குறையும் வைக்காமல் எப்படியோ சரிகட்டி விடுவாள். அம்மாவின் இந்த சாகசமெல்லாம் அப்போது எங்களுக்குப் புரியவில்லை. காலப்போக்கில் அனுபவத்தால் பெற்ற ஞானம்..

அப்பா வேலைப்பார்த்த தனியார் கம்பெனியில் அந்தக் காலத்தில் போனஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. கிடைக்கும் சம்பளத்தில்தான் எல்லாம் சமாளிக்க வேண்டும். ஆனால் வீட்டில் தட்டுப்பாடு என்று ஒன்று இருந்ததாக எங்கள் கவனத்திற்கு வந்ததில்லை..

எங்கள் என்றால்..
நான், அண்ணா, அக்கா..

வருடத்திற்கு இரண்டுமுறைதான் புதுத்துணி கிடைக்கும். ஒன்று பிறந்தநாளுக்கு. அதுவும் இப்போதுபோல் பிறந்ததேதிக்கு இல்லை.. பிறந்த நட்சத்திரம் நாள் அன்றுதான்.. பிறந்தநாளுக்கு அனேகமாக பள்ளி சீருடைதான் கிடைக்கும்.

ஆனால் தீபாவளிக்கு அம்மா உடன் அழைத்துப் போய் கடை கடையாக ஏறி இறங்கி அநியாயத்துக்கும் பேரம் பேசி.. சில சமயம் கடைக்காரர் சொல்லும் விலைக்கும் அம்மா கேட்கும் விலைக்கும் ஸ்னானப்பிராப்தி கூட இருக்காது. அதைக்கேட்டு கடைக்காரர் அடிக்க வந்து விடுவாரோ என்றுகூட பயமாக இருக்கும். ஆனால் அம்மா விடாப்பிடியாகப் பேசி.. இறுதியில் அம்மா கேட்ட விலைக்கே கடைக்காரர் கொடுத்துவிடுவார். அதுதான் அம்மா மேஜிக்..

இவ்வளவுக்கும் இப்போதிருப்பதுப்போல் ஆடம்பர ஆடைகளெல்லாம் கிடையாது. சாதாரண காட்டன் ஆடைகள்தான். ஆனால் அதை அணியும்போது நிறையவே சந்தோஷம் இருந்தது.

தீபாவளிக்கு இருபது நாட்களுக்கு முன்னால் அப்பா முதல் கட்டமாக ஒரு ரூபாய்க்கு இரண்டு பைகள் நிறைய பட்டாசுகள் வாங்கி வருவார். ஒரு வாரம் கழித்து இன்னொரு ஒரு ரூபாய்க்கு.. இப்படியாக தீபாவளிக்கு முன் நான்கு ஐந்து ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கி விடுவார். உண்மையைச் சொல்லப்போனால் கொட்டோன் போல் பட்டாசுகள் குவிந்திருக்கும். அதையெல்லாம் வெயிலில் காயவைக்க வேண்டியது எங்கள் கடமை.

இதற்குள் அம்மா பட்சண வேலைகளை ஆரம்பித்து விடுவாள். முதலில் மிக்சரில்தான் ஆரம்பிப்பாள். எங்கள் வீட்டில் பெரிய அலுமினிய டிரம் உண்டு. அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஐட்டமாக லேயர் லேயராக அம்மா சேர்ப்பதைப் பார்க்கும்போதே நாக்கில் நீர் ஊறும். இறுதியாக வேர்க்கடலை, கருவேப்பிலை இத்யாதிகளை வறுத்து சேர்த்து பெரிய கரண்டியால் கிளறி.. அப்போது வரும் வாசனையின் சுகமே தனி..

இதைத்தவிற நாடாப்பகோடா, முள்ளுத்தேங்குழல் என்று ஒவ்வொரு ஐட்டமாக அரங்கேறும்.
தீபாவளிக்கு இரண்டு மூன்று நாடகளுக்கு முன்னால்தான் அம்மா இனிப்பு வகைகள் பண்ண ஆரம்பிப்பாள். சாக்லேட் கேக், மைசூர்பா, பாதுஷா, ஜிலேபி..

தீபாவளிக்கு முந்தய நாள் இரவு நெய் வாசனை மணக்க மணக்க தீபாவளி லேகியம் கிண்டுவாள்.
மறுநாள் விடிகாலை மூணரை மணிக்கு அலாரம் வைத்து மூன்று மணிக்கே எழுந்து மிளகு போட்டு நல்லெண்ணை காய்ச்சி, மனையில் கோலம்போட்டு தயாராக வைத்திருப்பாள்.

புத்துத்துணிகள், பட்சணங்கள், எல்லாம் சுவாமி அறையில் ஆஜர் செய்து விடுவாள்.

பிறகு எங்களை எழுப்பி மனையில் உட்காரவைத்து உச்சி முதல் பாதம் வரை நல்லெண்ணை தேய்த்து சீயக்காய்த்துள் உபயத்துடன் குளிக்கச் செய்வாள். குளித்து முடித்த கையோட தீபாவளி லேகியத்தை வலுக்கட்டாயமாக வாயில் திணிப்பாள்.

“வாயு கொண்டுரக் கூடாது”

பிறகு அப்பா புதுத்துணியை குங்கும முத்திரைப் பதித்துக் கொடுப்பார். நமஸ்காரம் செய்து வாங்கிக் கொள்வோம்.

நாங்கள் புதுதுணி அணிந்துக் கொண்டு வந்தவுடன் அப்பா பட்டாசுகளை பாகப்பிரிவினை செய்வார்.. நான் சிறுவன் என்பதால் எனக்கு புஸ்வாணமும், மத்தாப்பும்தான் கிடைக்கும். ஆட்டம்பாம், ராக்கெட் போன்ற தீவிரவாத ஐட்டங்களெல்லாம் அண்ணாவுக்கும் அக்காவுக்கும் போய்விடும்.

கொஞ்சம் விடிய ஆரம்பித்தவுடன் வீட்டுக்கு விருந்தாளிகள் வர ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு பட்சணம் காப்பி கொடுப்பதில் அம்மா பிஸியாகி விடுவாள்.

நாங்கள் ஒவ்வொரு வீடாகப் போய் அவர்கள் கொடுக்கும் ஸ்வீட் காரங்களை ஆனந்தமாக சாப்பிட்டுவிட்டு வருவோம்..

அம்மா தான் செய்திருக்கும் அத்தனை ஐட்டங்களையும் தனித்தனி தூக்கில் போட்டு மற்ற ஐந்து தமிழ் குடும்பங்களுக்கும் கொடுத்துவிட்டு வரச் சொல்லுவாள். அதேமாதிரி அவர்கள் வீட்டுக் குழந்தைகளும் எங்கள் வீட்டுக்குக் கொண்டு வருவார்கள்.

வீட்டுக்காரர் டாக்டர் பாலுக்கு அம்மா பண்ணும் பட்சணங்கள் ரொம்பவே பிடிக்கும். விரும்பிக் கேட்டு சாப்பிடுவார்.

ஒவ்வொருவராக வந்து சிரித்து சந்தோஷமாகப் பேசிக்கொண்டு..
வீடே கலகலவென்று இருக்கும்..

அதன் பிறகு அம்மா சமையல் வேலையை கவனிக்கப் போய்விடுவாள்..
வடை, பாயசம், அவியல், உருளைகறி, (அமாவாசை இல்லாவிட்டால்) வெங்காய சாம்பார் என்று விருந்து அமர்க்களப்படும்..

சாப்பிடும்போதும் எல்லோரும் சேர்ந்து தரையில் உட்கார்ந்து ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டு..

அப்போதெல்லாம் தீபாவளி திருவிழாவாகத்தான் கொண்டாடப்பட்டது.. முக்கியமாக தொலைக்காட்சி, தொலைபேசி இன்னல்கள் இல்லாமல்..

ஆனால் இப்போது?…

“அப்பா.. உங்களுக்கு ஆர்டர் பண்ணியிருந்த லூயி பிலிப் ஷர்ட் வந்துருத்து”
பிரணவ் குரல் கொடுத்தான்.

அம்மா வாங்கிக் கொடுத்தது ஆடம்பர ஆடைகள் கிடையாது. சாதாரண காட்டன் ஆடைகள்தான்.. ஆனால் அதை அணியும்போது கிடைத்த சந்தோஷம்..

ஓ.. இப்போது தீபாவளி இல்லை.. டீவாலி..

நிறைய இழந்து விட்டோமோ?

நினைக்க நினைக்க மனது ரொம்பவே வலித்தது.