நியூ ஜெர்சியில் கொலு
“ஏம்மா! சாப்பாடு வந்திருச்சு. அழைச்சவங்க கூட வர ஆரம்பிச்ட்டாங்க. இன்னும் ஆர்டர் செஞ்ச சமோசா வரலயே”?என்றேன் என் மகளிடம்.
“பணம் pay பண்ணி order கொடுத்தாச்சுப்பா. என் friend க்கிட்ட சொல்லிருக்கேன் அவள் வரும் பொழுது வாங்கிட்டு வந்துடுவா. அப்பவே கிளம்பிட்டா, இன்னும் வரலை, ஏன்னு தெரியல” என சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இரண்டு கைகள் நிறைய பைகளோடு நண்பி காரில் இருந்து இறங்கி வந்தார்.
நண்பி: “ இந்தா நீ ஆர்டர் போட்ட 60 சமோசா’
மகள்: அது என்ன பெரிய பை?
நண்பி: நீ கேட்ட 30 உருளைக் கிழங்கு, 20 வெங்காயம், 10 மிளகாய். Indian grocery போய் இதைத் தேடி எண்ணி வாங்கத்தான் ரொம்ப லேட் ஆயிடுச்சு.
மகள்: அடப் பாவி! நான் ஆர்டர் போட்டது 30 உருளைக் கிழங்கு சமோசா, 20 வெங்காய சமோசா, 10 மிளகாய் சமோசா. நீ சமோசா வேற, காய் வேற தனித்தனியா வாங்கி வந்திருக்கியே. இவ்வளவு காயை வச்சுக்கிட்டு நான் என்ன செய்யிறது.
இப்படி கல கலப்பாக ஆரம்பித்தது என் மகள் வீட்டில் நவராத்திரியின் முதல் இராத்திரி.
கொலு என்றால் அழகு என்று பொருள்.
அழகு என்றாலே ‘பெண்கள்’ ‘பெண் குழந்தைகள்’. என்னைக் கேட்டால் பெண்கள் கொண்டாடுவதற்கும் பெண்களைக் கொண்டாடுவதற்கும் உருவாக்கப் பட்ட நாட்களே நவ ராத்திரிகளும் அவை சார்ந்த கொலுவும் என்பேன்.
இன்று எல்லை தாண்டி அமெரிக்க நாட்டிலும் நவராத்திரி கொண்டாடக் காரணம் இறை பக்தியும் ,குடும்ப வழக்கமும் மட்டுமல்ல. அதையும் தாண்டி பல ஆயிரக் கணக்கான மைல்கள் நெருங்கிய உறவுகளைப் பிரிந்து வந்து நண்பர்களை உறவாக்கி அவர்களோடு கலந்து உரையாடி மகிழ ஏற்படுத்திக் கொண்ட வாய்ப்பாகும்.சென்னையில் என் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை. ஆனாலும் பத்து நாட்களும் சுண்டல் கிடைக்கும்.
நான் ஒரு மாதம் என திட்டமிட்டிருந்த அமெரிக்க பயணத்தை என் மகள் தன் மகளதிகாரத்தை உபயோகித்து இரண்டு மாதங்களாக மாற்றிய காரணமே அவள் வீட்டு கொலுவிலும் தொடர்ந்து வரும் தீபாவளியிலும் நான் கலந்து கொள்ள வேண்டும் என்பதே.
திரு. சாவி அவர்கள் வாஷிங்டனில் நடத்திய திருமணத்திற்கு அப்பளம் இடுவதற்கும் சுடுவதற்கும் மாமிகளை அழைத்துச் சென்றிருந்தார். சமையல்காரர்களும், சாஸ்திரிகளும் இந்தியாவிலிருந்து பறந்து வந்தார்கள். சிலவு அனைத்தையும் ராக்பெல்லர் கவனித்துக் கொண்டார்.
என் மகள் கூட கோலம் போடுவதற்கு பாட்டிகளையும், தினசரி வித விதமாய் சுண்டல் செய்வதற்கு சமையல் காரர்களையும், பட்டுப் பாவாடை, சட்டை அணிந்து தினசரி கீர்த்தனைகள் பாடுவதற்கு சிறுமிகளையும் இந்தியாவில் இருந்து அழைத்துவர ரொம்ப ஆசைப் பட்டாள்.
ஆனால் பில் கேட்சும், வாரன் பப்பெட்டும் இது போன்ற விழாக்களுக்கு நிதி ஒதுக்க தங்கள் டிரஸ்டில் வழி இல்லையே என மிகவும் வருத்தப் பட்டார்கள். எனவே என்னை மட்டும் பார்வையாளனாக வரவழைத்துக் கொண்டாள்.
இந்த ஆண்டு சோதனையாக கொலு வைக்க வேண்டிய தினத்திற்கு முந்தைய தினங்களில் மகள், மருமகன் இருவருக்கும் கடுமையான அலுவலகப் பணி.
இரவு எட்டு மணிக்கு மேல்தான் பொம்மைகள் அடங்கிய பெட்டிகள் மேலே வந்தன. கடவுளர், தேவர்கள், மனிதர்கள் அனைவருமே பாஸ்போர்ட், விசா இல்லாமல் சென்னையிலிருந்து வந்தவர்கள். கடந்த ஆண்டு வந்த தஞ்சாவூர் தலையாட்டி செட்டியாரும் ஆச்சியும் கூட அப்படி வந்தவர்கள்தாம். பாவம் இமிகிரேஷனுக்கு பயந்து ஓராண்டாக பெட்டியில் பதுங்கியிருந்தனர்.
ஒரு வழியாக பின் இரவில் படிகள் அமைத்து பொம்மைகளை அடுக்கினார்கள். இது போன்ற விஷயங்களில் எப்பொழுதும் நான் சோம்பேறி. இரசித்து சுண்டல் சாப்பிடுவது தவிற என் பங்களிப்பு அதிகம் இருக்காது. இங்கும் அப்படித்தான். அவர்களுக்குத் துணையாக விழித்திருந்தேன்.
விருந்தில் முப்பதற்கும் மேற் பட்ட இந்திய குடும்பங்கள் கலந்து கொண்டன. சில நண்பர்கள் எல்லா வேலைகளையும் தலையில் சுமந்து செய்தார்கள். சென்னையில் கூட இவ்வளவு குடும்பங்கள் சிறு விழாக்களில் ஒன்றாக இணைவது அரிதாகி வருகிறது.
கடந்த மாதம் அமெரிக்கர்கள் அதிகம் கலந்து கொண்ட விழாவில் பெண்களையும், சிறுமிகளையும் அரை டிரவுசரில் பார்த்த கண்களுக்கு இங்கு பட்டுப் புடவையில் வந்த பெண்களையும், பைஜாமா-குர்த்தா, பட்டுப் பாவாடை சட்டைகளில் வந்த சிறுவர் சிறுமிகளைப் பார்க்க நிறைவாக இருந்தது.தொலை தூரத்தில் இருந்தாலும் இவர்கள் தனிமையில் இல்லை. உறவுகளாக நண்பர்கள் உள்ளனர்.ஒருவருக்கொருவர் உதவியாக உள்ளனர் என்பது கண்டு மனதில் இருந்த நெருடல் சற்று குறைகிறது. வாழ்வின் தேடலில் நெடுந்தூரம் வந்து நட்பை உறவாக்கிக் கொண்டு வாழும் இன்றைய தலை முறைக்கு என் வாழ்த்துகள்.

