(ஓர் அடியார் – ஒரு வெண்பா)
39)புகழ்ச் சோழ நாயனார்
![]()
புகழ்ச் சோழர், உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த
சோழப் பேரரசர். மிகச் சிறந்த சிவ பக்தர்.
பிற மன்னர்கள் திறை செலுத்திப் பணிந்திருக்கச் செங்கோல் செலுத்தி வந்தார்.
ஒருமுறை, பிற நாட்டு மன்னர்கள் செலுத்திய திறைப் பொருளைப் பெற்றுக் கொள்ளக் கருவூர்க்கு வந்திருந்தார்.
அப்போது மலைநாட்டு அரசன் அதிகன் என்பவன் மட்டும் திறை செலுத்தவில்லை என்பதை அமைச்சர்களைக் கேட்டறிந்தார்.
உடனே படையெடுத்துச் சென்று அதிகனின் மலையரணைத் தகர்க்குமாறு ஆணையிட்டார். பெரும்போர் மூண்டது.
சோழர் படை வென்று, மலையரண் முற்றிலும் அழிக்கப்பட்டது.
அக்கால வழக்கப்படி, போரில் கைப்பற்றிய பொருட்களையும், கொல்லப்பட்டவர்களின் தலைகளையும் கொண்டுவந்து புகழ்ச் சோழர் முன் காட்டினர்.அத்தலைகளுள் சடையுடன் கூடிய ஒரு தலையைக் கண்ட புகழ்ச் சோழர் உள்ளம் பதைத்து நடுங்கினார்.
சடைமுடி கொண்ட சிவனடியார் தலை என்று எண்ணி மிகவும் வருந்தினார். சிவ பக்தரைக் கொன்ற பழி நீங்கத் தாம் எரி மூழ்க முடிவு செய்தார். தம் மகனுக்கு முடி சூட்டுமாறு சொல்லி விட்டுத் தீ மூட்டுமாறு ஆணையிட்டார்.
திருநீற்றுக் கோலம் புனைந்து, சடையுடன் கூடிய தலையை ஒரு பொற்கலத்தில் ஏந்தியவாறு தீயை வலம் வந்து அதனுட் புகுந்தார்.
அப்போது. பூமாரி பொழிந்தது; வானத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்கின.
செவ்வானம் போன்ற சடையுடைய சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்து அஙகு நிலையாய் அமர்ந்திருக்கும் பேறு பெற்றார்.
“பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ்ச் சோழர்க்கு அடியேன்”
என்று திருத்தொண்டத் தொகை, புகழ்ச் சோழரைப் போற்றுகிறது.
புகழ்ச் சோழ நாயனார் வெண்பா
திறைகருதிப் போர்புரிந்து செற்றதலை தம்முள்
நிறைசடை கண்டு நெகிழ்ந்தார் – இறைநெறியார்
என்றுதலை பொற்கலத்தில் ஏந்தியெரி புக்கடைந்தார்
சென்றுசிவன் சேவடி சேர்ந்து.
***”***************
40) நரசிங்க முனையரைய நாயனார்

நரசிங்க முனையரையர் என்பவர் திருமுனைப்பாடி நாட்டின் குறுநில மன்னர். அறநெறியில் ஆண்டு வந்த அவர் திருநீற்றையே பெருஞ் செல்வமாக மனத்தில் எண்ணுபவர்.பகைவரை வென்ற பெருமையுடைய நரசிங்க முனையரையர் சிவனடியார்களைப் போற்றித் தொண்டு புரிந்து வந்தார்.
கங்கையை அணிந்த சடையுடைய சிவபெருமானுக்குத் திருவாதிரை நாளன்று சிறப்பான வழிபாடு செய்து, அன்று திருநீறு அணிந்த தொண்டராய் வருபவர் அனைவருக்கும் நூறு பசும் பொன்னைத் தந்து,
இனிய திருவமுதும் செய்விப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு திருவாதிரை நாளில் மேன்மை மிக்க அடியார்களுக்குப் பொன்னை வழங்கும் போது, மான நிலை அழிந்த தன்மையுடைய காமக்குறி வெளிப்படுத்திய மேனியராய் ஒருவர் திருநீறணிந்து அங்கு வந்தார்.
அவரது தோற்றத்தைக் கண்டு. அனைவரும் வெறுத்து இகழ்ச்சியோடு ஒதுங்கிப் போயினர். அதைக் கண்ட அரசர், அவர் எதிரே சென்று கையைக் குவித்து வணங்கிக் கொண்டாடி உபசரிக்கலானார்.
ஒழுக்கம் இல்லாதவராயினும், திருநீற்றைச் சேர்ந்தவரை உலகத்தவர் இகழ்ந்து அதனால் அவர்கள் நரகத்தை அடையக் கூடாது என்று எண்ணினார். அதனால் (மற்றவர்க்கு நூறு பொன் தந்த நரசிங்க முனையரையர்) அவருக்கு இருநூறு பொன்னைத் தந்து இன்மொழி கூறி அனுப்பி வைத்தார்.
இப்படி மிகவும் அரிய தொண்டு புரிந்த பெருந்தன்மை மிக்க நரசிங்க முனையரையர் உண்மையான அன்பால் சிவபெருமானின் திருவடி நிழலாம் வீடு பேற்றை நிலையாக அடைந்தார்.
“ மெய்யடியான் நரசிங்க முனையரையர்க்கு அடியேன்”
என்று திருத்தொண்டத் தொகை கூறுகிறது.
நரசிங்க முனையரையர வெண்பா
சீலமிலா ரேனும் திருநீற்றைச் சேர்ந்தாரைக்
கோலமிகு தொண்டரெனக் கொண்டுள்ளம் – பாலணைந்து
நூறிரண்டு பொன்தந்தார் நோன்மையினார்.பேறுற்றார்.
ஆறணிந்தான் நீழல் அடைந்து.
(நோன்மையினார்- பொறுமை/ பெருந்தன்மை உடையவர்)
**********************
41) அதிபத்த நாயனார்

சோழ நாட்டின் பெருமை மிக்க நகரம் நாகப்பட்டினம்.அதன் கடற்கரை அருகில் அமைந்த நுளைப்பாடியில் ( மீனவர் குடியிருப்பு) மீன் பிடிக்கும் பரதவர் குடியின் தலைவராக விளங்கியவர் அதிபத்தர். அவர், இளம்பிறை சூடிய இறைவனான சிவபெருமானுக்குத் தொண்டு செய்வதில் சிறந்து விளங்கினார்.
பரதவர்கள் அனைவரும், வலைவீசிப் பிடித்து வரும் பல்வகை மீன்களை அவர் முன் குவிப்பர்.அவர் அவற்றுள் ஒரு தலைசிறந்த மீனை, இறைவனான சிவபெருமானுக்கு என்று கடலில் விட்டு விடுவார்.
ஒரு நாளில் ஒரு மீனே கிடைத்தாலும் அதையும் இறைவனுக்கே என்று கடலில் விட்டு விடுவார்.அடுத்தடுத்துப் பல நாள்கள் ஒரு மீனே கிடைத்த போதிலும் அதனை “இறைவனுக்கு” என்று கடலில் விட்டு வந்தார்.
மீன் விற்பதால் கிடைக்கும் பெருஞ்செல்வம் சுருங்கத் தொடங்கியது. உறவினர்கள் உணவின்றிப் பசியால் வாடினர். அவரது அழகிய திருமேனியும் தளர்ச்சியடைந்தது. ஆயினும் அவர் தம் தொண்டு குறையாமல் வாழ்ந்து வந்தார்.
இப்படி இருக்கையில், ஒருநாள் பொன்னாலும், நவமணியாலும் ஆன, உலகையே விலையாக மதிக்கப்படக் கூடிய, ஒளி வீசும் அற்புத மீன் ஒன்று வலையில் அகப்படுமாறு இறைவன் செய்தான்.
அதைப் பிடித்தவர்கள் அவரிடம் அளித்தனர். “ பொன்னும் நவமணியும் மின்னிப் பொலிகின்ற இஃது என்னை ஆளும் இறைவனுக்கே ஆகும்” என்று கூறி அம் மீனைக் கடலில் விட்டார்.
உலகம் முழுவதும் பொருளாசை கொண்டிருந்த போதிலும் பொன்னாசை என்ற பெரிய பற்றினைக் குற்றம் இல்லாது நீங்கிய அந்தத் திருத்தொண்டர் முன் இறைவன் காளை ஊர்தியில் மேகம் தவழும் வானத்தில் தோன்றினான். அப்போது பூமழை பொழிந்தது. பஞ்ச வாத்தியங்கள் முழங்கின.
பணிந்து வணங்கிய அதிபத்தர் சிவலோகத்தை அடைந்து சிறப்புடைய அடியார்களோடு இருக்கும் பேற்றினை இறைவன் தந்தருளினான்
“ விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்’
என்று திருத்தொண்டத் தொகை இவரைப் போற்றுகிறது.
அதிபத்த நாயனார் வெண்பா
அலைகடலில் கொண்ட அழகான பொன்மீன்
கலைகமழ் கூத்தன் கழற்கு – நிலைதவறும்
துன்ப வறுமை தொடர்ந்தாலும் தந்தநல்
அன்பர் அதிபத்தர் ஆம்!
(தொடரும்)
