மனைவியிடம் சொல்ல கூடாதவை ..! உஷார் திருமண வாழ்க்கையே நரகமாகிவிடும்..!

பரமன் முக்கியமானப் பிரச்சினைப்  பற்றி டாக்டரிடம் கன்சல்ட் செய்ய வேண்டியிருந்தது. யாரிடம் போவது.?  முதலில் கொஞ்சம் குழப்பம். பின்னர் பொதுவான ஜெனரல் டாக்டரிடம் போய் ஆலோசனைக்  கேட்க முடிவு செய்தார். அவர் ஏதோதோ கேள்விகள் கேட்டார். கடைசியில் ‘நீங்க ஒரு ஸ்பெஷல் ஆசாமி. அதனாலே, நீங்க ஸ்பெசலிஸ்ட் டாக்டர் கிட்டத்தான் போகனும் ‘ என்று கை விரித்து விட்டார்.

ENT டாக்டரிடம் போனால் குறைந்தபட்சம் காது கொடுத்து கேட்க வாய்ப்புண்டு என்று அங்கே சென்றார்  பரமன். மற்றவர்களை பரமன் சரியாக புரிந்துக்கொள்ள காது மெஷின் போட்டுக்கப்  பரிந்துரைத்தார்.

சரி, இது சரிப்படாது என்று கண் டாக்டரிடம் போனார். கண் டாக்டர் டார்ச் லைட் அடிச்சு ஆழமாக நம் பிரச்சினை பற்றிப்   பார்க்கக் கூடுமல்லவா?. ஆனால், அவரோ ‘கண் கண்ணாடி போட்டுக்  கொண்டால் எல்லா பிரச்சினையும் சரியாக காணப் புலப்படும்  என்று சொல்லி விட்டார். ஆனால், பரமனுக்கு  அந்த யோசனை ஒத்துக்கொள்ள வில்லை.

இதய டாக்டரிடம் போனால் நம் இதயத்தில் ஆழமாக உள்ள பிரச்சினைகளை டப்டப் என்று வெளியே கொண்டு வரலாம் என்று  போனார். அவரோ , உங்களுக்கு வீக் ஹார்ட். பேஸ் மேக்கர் போட்டுட்டால் எதையும் தாங்கும் இதயம் வந்து விடும் என்று ஆலோசனை கூறினார். அதையும் ஏற்றுக்கொள்ள பரமனின் மனம்  ஒப்பவில்லை.

எல்லோரும் நம்மப் பிரச்சினையை அவங்களோட  கோணத்திலப்  பார்க்கிறாங்களே  தவிர, நிஜமாக என் பிரச்சினை என்னவென்னுப் பார்க்க மாட்டேங்கிறாங்க என்று அலுத்துப் போன பரமன், நம் மனத்தைப் பற்றி நன்கு அலசத் தெரிந்த ஒரே டாக்டர் மனநல டாக்டர் தான். ஏன்  அவரிடம் போகக் கூடாது? என்று முடிவெடுத்தார்.

மனநல டாக்டர் 108 கேள்விகள் நோண்டி நோண்டிக்  கேட்டார் .

‘நீங்க நாலு பேர் கிட்டப்  போனீங்கன்னா , அந்த நாலு பேரும் நாலு விதமாத்  தான் சொல்வாங்க. நீங்க அதையெல்லாம் காதிலும், கண்ணிலும், ஹார்ட்டிலும் எடுத்துக்கக்கூடாது. நீங்க பிரச்சினையைப்  பிரச்சினைன்னு பார்த்தாத்  தான் அது பிரச்சினை மாதிரி தெரியும். அதை ஒரு நல் வாய்ப்பா எடுத்துக்கணும். உங்களுக்குப் புரியுதுன்னு நினைக்கிறேன்.?’

களைத்துப் போயிருந்த பரமன் தன்  தலையை ஆட்டிக்கொண்டே கேட்டார்.

‘டாக்டர், அப்போ என் பிரச்சினையை சமாளிக்க முடியாதா ? வேறு வழியே இல்லையா?’

‘வெயிட் வெயிட். நான் ஒன்னும் அந்த மாதிரி சொல்லலே. என் கிட்ட ஒரு புக் இருக்கு. பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறதுனு விலாவாரியா எழுதிருக்கேன். நானே என் அனுபவத்தில் எழுதினது. சொத்து பிரச்னை, கடன் பிரச்சினை, மாமியார் மாமனார் பிரசினை, அலுவலகத்தில் பிரச்சினை, நண்பர்களிடத்தில் பிரச்சினை இப்படி விதவிதம். சுலபமா புரியற மாதிரி பாமர தமிழில் இருக்கு. வெறும் 300 ருபாய் தான். 500 பக்கம். நல்ல ஆர்ட் பேப்பர் . படிச்சிப் பார்த்து பாலோ பண்ணுங்கோ’.

டாக்டரின் வார்த்தைகளில் நம்பிக்கைப்  பெற்ற பரமன் பளபளவென்று அட்டைப்படத்துடன் கூடிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஆவலாக வீட்டிற்குக் கிளம்பினார். சோஃபாவில்  அமைதியாக அமர்ந்து படிக்க ஆரம்பித்தார். புத்தகத்தில் நூத்தியெட்டு விதமானப் பிரச்சினைகளை டாக்டர் பட்டியலிட்டு இருந்தார். கடைசியாக இருந்தது ‘மனைவியிடம் பிரச்சினையா?’ என்பது தான் பரமனுக்கு வேண்டியது.

விரைவாக கடைசிப் பக்கத்திற்குப்  புரட்டினார்.

ஒரு கேள்விக்குறி (?) மட்டும் பெரிதாகப் போட்டிருந்தது.