வெள்ளிமலை: எழுதியவர்: இரா. பாஸ்கரன் (ப.ரா)
இது ஒரு அழகான நீரோடைபோல ஓடும் சமூக நாவல்தான். பிரமிக்க வைத்தது என்று சொல்வது தவறோ என்னவோ? ஆனால் படித்துமுடித்ததும் மனதை மகிழ்ச்சியிலாழ்த்திய நாவல். அந்தக் காலத்துக் காதல்கதை. ஆனால் அழகாகச் சொல்லப்பட்ட கதை. இந்த எழுத்தாளர் ப. ரா. (இப்படித்தான் என்னிடம் இருக்கும், பக்கங்கள் உதிரும் பழைய ராணிமுத்து பதிப்பில் காணப்படுகிறது) யார் என்று தெரியவில்லை. இணையதளத்தில் கூகிள் செய்தபோது இந்த நாவலை ஒருவர் ஆய்வும் செய்திருக்கிறார் எனத் தெரிகிறது. அவர்தான் நாவலாசிரியரை இரா. பாஸ்கரன் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பெயர் நான் கேள்விப்படாதது. வேறு ஏதேனும் இவர் எழுதியுள்ளாரா எனத் தெரியவில்லை.
ஆனால் இந்த ஒரு புதினம் மிக அழகாக அமைந்துள்ளது. வெள்ளிமலை எனும் தலத்தில் உள்ள முருகன் கோவிலையும் அந்த கிராமத்தையும் களனாகக்கொண்டு புனையப்பட்டது.
தொடங்குவதே ஒரு அழகு: மொட்டு ஒன்று மெல்ல இதழ் மலரும் அழகுடன் பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. ஆகா!
சென்னையிலிருந்து வரும் செல்வந்தர் சம்பந்தமூர்த்தி வெள்ளிமலை முருகன் கோவிலில் தன் பிறந்தநாளன்று ஒரு அபிஷேக ஆராதனைக்கு ஏற்பாடு செய்கிறார். உடன்வரும் அவருடைய மகன் ராஜநாயகம் கோவில் தர்மகர்த்தாவின் மகள் வனஜாவைச் சந்திக்க இருவரும் காதல் கொள்கின்றனர். இருவருமே திருச்சிக் கல்லூரிகளில் படிப்பது சந்தித்துக்கொள்ள வசதியாகி விடுகிறது. கோவில் முருகபக்தரான சதாசிவப் பண்டாரம் இருவர் உள்ளங்களையும் அறிந்து அவர்கள் வாழ்வில் இணைய முருகனை வேண்டிக் கொள்கிறார்.
வனஜாவின் கூந்தலிலிருந்து நழுவி விழுந்த ஒரு சிறு ரோஜா மலரை ராஜநாயகம் யாரும் காணாமல் எடுத்து பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொள்கிறான். இதனை சதாசிவப் பண்டாரம் மட்டும் பார்க்காததுபோல் பார்த்து விடுகிறார். இவர்களுடைய சிறு உரையாடல்கள், பார்வைப் பரிமாற்றங்கள் ஆகியவையும் அவர் பார்வைக்குத் தப்புவதில்லை. “எதிர்பாராத சமயம் ராஜுவின் தோளைத்தட்டி, “உனக்கேற்ற பெண்தானப்பா இவள்,” என்கிறார். இவ்வாறு அழகழகான சிறு சம்பவங்கள், உரையாடல்கள் நமக்கு நடப்பவற்றை உணர்த்திக் கதையை நகர்த்துகின்றன.
எதிர்பாராத திருப்பம் ஒன்று வேண்டாமா? ராஜுவின் தந்தை மனைவியை இழந்தவர். நண்பர் ஒருவர் திரும்ப வற்புறுத்துவதால் அவருக்கு வனஜாவைக் கண்டு சபலம் தட்டுகிறது. தர்மகர்த்தாவிடம் பேசி திருமணத்திற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தந்தை அவர் வாக்குக் கொடுத்துவிட்டதனால் ம்றுக்க முடியாமல் வனஜா இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறாள். ராஜுவும் அவள் பணத்தாசையால் இதற்கு சம்மதித்துவிட்டாள் எனக் கருதி, அறவே வெறுத்து ஒதுக்கத் தலைப்படுகிறான். இதற்குள் வனஜா திருமணத்திற்கு முந்தைய இரவு தற்கொலை செய்துகொள்ள முனைகிறாள். வெளியூர் சென்றிருந்த சதாசிவப் பண்டாரம் வரும் வழியில் இதைக்கண்டு, அவளைக் காப்பாற்றி, யாரும் அறியாமல் தன் தம்பி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
தம்பி ஒரு பிரபல நட்டுவனார். மற்ற குழந்தைகளுடன் வனஜாவிற்கும் நடனக்கலையைப் பயிற்றுவிக்கிறார்.
கதை ராஜுவின் பக்கம் திரும்புகிறது. இந்தப்பெண் கிடைக்காததால் சினமடைந்த அவன் தந்தை அவன் இவளைத்தான் காதலிக்கிறான் என அறிந்துகொண்டு அவன் தனது மரியாதையைக் குலைத்துவிட்டான் என வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார். அவனும் மும்பைக்குப் போய் அலைந்து திரிந்து பின்பு ஒரு இளகிய மனம்கொண்ட விமலா எனும் பெண் மூலம் வேலைகிடைக்கிறது. வேலையில் விறுவிறுவென முன்னேறுகிறான். விமலா அவனைக் காதலிக்கிறாள். அவனோ அவளிடம் நட்புடன்தான் பழகுகிறான்.
இது கிடக்க, சதாசிவப் பண்டாரம் ராஜுவைத்தேடி மும்பை செல்கிறார். அங்கு வனஜாவின் நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார். அதனைக் காண விமலாவுடன் வருகிறான் ராஜு. இங்குதான் கதை பல திருப்பங்களில் செல்கிறது. ஆனால் தொய்வதேயில்லை. அழகான ஒரு முடிவைத்தேடி அது விமலாவின் இறப்பில் காதலர்கள் ஒன்று சேர்வதாக முடிகின்றது.
இப்புத்தகத்தை நான் ரசித்தது காதல் என்பதனை மிக மன உறுதியுடன் எதிர்கொள்ளும் இளைஞர்கள் தாம் கதாபாத்திரங்கள். கடைசியில் அந்த மன உறுதி எவ்வாறோ அவர்களை ஒன்று சேர்க்கிறது. ஆசிரியர் எழுதியுள்ளவிதம் நெஞ்சைத் தொட்டது எனலாம்.
பண்டாரத்தின் பக்தியுள்ளத்தை நயமுற விளக்குபவர். காதலர்களின் தாபத்தையும் பொறுமையின்மையையும்கூட இனிமையாக விவரிப்பது அழகு.
வாய்ப்புக் கிடைத்தால் படித்து மகிழுங்கள்.
(விரைவில் மீண்டும் சந்திப்போம்)

