‘புவனா எனக்கு மதுரைக்கு மாறுதலாகி இருக்கிறது’ என்று உள்ளே நுழையும்போதே மாதவன் கூவிக்கொண்டே வந்தான்.
நிலையான உத்தியோகம், கை நிறைய சம்பளம், பார்ப்பதற்கு நல்ல ஆஜானுபாகுவான உருவம் என்று ஜாதகம் பார்த்து வந்த உடனே அப்பா சந்தோஷமடையவும், வீட்டில் எல்லோருக்கும் இந்த வரன் திருப்தியாகத் தான் இருந்தது. ஜான்வாசம், நலங்கு, கட்டு சாதம் என்று கல்யாணம் பெரிய மண்டபத்தில் நடந்தது. பந்தியிலும் புதுப்புது ஐட்டங்களாகப் போட்டு சாப்பாட்டிலும் ஜமாய்த்து விட்டார் புவனாவின் அப்பா. எங்கும், எதிலும் யாருக்கும் ஒரு குறையும் வைக்கவில்லை. சம்மந்தி வீ ட்டார்கள் கேட்டதற்கு மேலேயே செய்து அவர்களைத் திருப்திப்படுத்தி விட்டார். கல்யாணமான இரு தினங்களிலேயே நாள் நன்றாக இருக்கிறது என்று புவனா மாமியார் வீட்டுக்குச் சென்று விட்டாள்.
ஒரு வருடம் முடியும் தருவாயில் பேங்கில் உத்தியோகம் பார்க்கும் மாதவனுக்கு ப்ரமோஷனுடன் மதுரைக்கு மாறுதலும் வந்தது. புவனா அப்பொழுது கர்ப்பவதியாக இருந்தால், அவளால் மாதவனுடன் உடனேயே போக முடியவில்லை. ஆனால் அது தான் பிரச்சனையே! மாதவன் ஆட்களை வைத்து தனக்குத் தெரிந்த விதத்தில் தேவையானவற்றைப் பேக் செய்தான்.
புதுக்குடித்தனம் நடத்துவதற்கு ஏதுவாக சில சாமான்களையும், அம்மா எடுத்துக் கொடுத்த குழந்தைக்குத் தேவையானதையும் தன் சாமான்களுடன் சேர்த்துக் கொண்டாள் புவனா. குழந்தை பிறந்த மூன்றாம் மாதம் மதுரை வீட்டுக்கு வந்த புவனாவிற்கு தலை சுற்றியது! புவனா வீட்டில் கொடுத்த பாத்திரங்கள் பாதியை மாதவன் கொண்டு வரவே இல்லை. தோசைக்கல் இருந்தால் தோசை திருப்பி இல்லை, குக்கர் இருந்தால் மூடி இல்லை, காபி பில்டரின் மேல் பாகம் காணப்படவில்லை. குழந்தையை வைத்துக் கொண்டு எப்படியோ சமாளித்தாள்.
சரியாக இரண்டு வருடங்கள் தான். மாதவன் குதித்துக் கொண்டே வந்து ‘என்னை சேலம் மாற்றிவிட்டார்கள்’ என்று சொன்னான்.
அப்பதான் புவனாவிற்குப் புரிந்தது ‘பேங்க் ஆபீஸர்’ என்று சந்தோஷப்பட்டதன் பலன். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாறுதல். முதலில் அங்கே போய் வீடு தேட வேண்டும், பிறகு பால், காஸ், ஸ்கூல் என்று எல்லாம் மாற்ற வேண்டும். மாதவனுக்கு நேரமில்லாததால் இந்த எல்லா வேலைகளும் புவனாவின் தலையில் விழுந்தது
இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் மாறுதல்! இப்பொழுது பாஷையே தெரியாத ஊரான பெங்களூருக்கு. அங்கே உள்ள வேலைக்காரர்கள் தமிழ் தெரிந்தாலும் கன்னடத்திலேயே பேசினர். மெது மெதுவே பேச கற்றுக் கொண்டு வரும் குழந்தை கல்பனா தமிழும் கன்னடமும் கலந்து பேசுவது மிகவும் வேடிக்கையாக இருந்தது.
அடுத்த ஒரு வருடத்திலேயே ஹைதராபாத் மாறுதல். இங்கோ சுந்தர தெலுங்கு. தமிழ், கன்னடம், தெலுங்கு, மழலை என்று கல்பனா பேசுவது புவனாவிற்கு சிறிது கூட புரியவில்லை.
அடுத்த ஒரு வருடத்திலேயே ப்ரோமோஷன் உடன் பம்பாய் மாறுதல். புதிய வானம், புதிய பூமி, புதிய பாஷை. இந்த தடவை புவனா ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ கூப்பிட்டு சாமான்களைப் பக்கத்தில் இருந்து பேக் செய்தாள். என்னதான் பக்கத்திலேயே இருந்தாலும், எங்க இடம் பிடிக்கிறதோ, அந்தப் பெட்டியில் ஏதாவதொரு சாமான்களைப் போட்டுவிட்டு தங்களது வேலை முடிந்து விட்டது என்று பெருமூச்சு விட்டனர் ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’. பார்த்து பார்த்து எடுத்து வைத்தும் ஒரு கூலரை பரணிலேயே விட்டுவிட்டு வந்தாகிவிட்டது.
பம்பாய் சென்றவுடன் முதல் நாள் ‘கத்தி, ஸ்பூன், போர்க்’ என்று எதுவுமே கிடைக்கவில்லை.
‘எல்லாம் கடையில் வாங்கி விடு’ என்று மாதவன் கத்தி விட்டு ஆபீஸுக்குச் சென்றான்.
வாங்குவது எளிது. ஆனால் இப்படி மாறுதலாகி போய்க் கொண்டே இருந்தால், எங்கே அதிகப்படியான சாமான்களை வைத்துக் கொள்வது! ஹைதராபாத்தில் வெயிலை வீணாக்காது அரிசி வடாம், ஜவ்வரிசி வடாம் போட்டு ஒரு பெரிய ஸ்டீல் டப்பாவில் மூடி எடுத்து வந்திருந்தாள் புவனா. சரி இன்று தேங்காய் சாதம், தயிர் சாதம் செய்து, வடாம் பொரித்து விடலாம் என்று அந்த டப்பாவைத் திறந்து பார்த்தால், ஒரு துணியில் எல்லா கத்தி, ஸ்பூன், போர்க் சுற்றி வைக்கப் பட்டிருந்தன.
ப்ரோமோஷனில் பம்பாய் வந்ததால் பேங்கில் வீடு தருவார்கள். ஆனால் அது கிடைப்பதற்கு சில காலம் ஆகும் என்று ஒரு கெஸ்ட் ரூம் கொடுத்தார்கள். அங்கே சாமான்களைப் பிரிக்கவும் முடியவில்லை, எடுக்காமல் இருக்கவும் முடியவில்லை. எல்லாவற்றையும் பரப்பி விட்டாள். பிறகு அவைகளை பேக் செய்து வீடு கொடுக்கும்போது எடுத்துக் கொண்டு போக வேண்டும்.
தோட்டக்கலையில் ஆர்வம் உள்ள புவனா நர்சரி தேடி தேடி பூந்தொட்டிகளும், பூச்செடிகளும் வாங்கிவிடுவாள். அவை ஒவ்வொன்றும் மாறுதலாகிப் போகும் பொழுது உடைந்து விடும். அப்போது புவனாவின் மனமும் உடைந்து போகும். .பக்கத்தில் யாராவது மாறுதலில் சென்று விட்டால் அவர்கள் வீட்டு தோட்டத்துக்குச் சென்று மேய்ந்து விட்டு வருவாள்! அங்கே இருக்கும் நல்ல பூச்செடிகளை கொண்டு வந்து தன் வீட்டில் நட்டு விடுவாள்.
பிறகு காஷ்மீருக்கு மாறுதல் ஆயிற்று. புதிய வானம், புதிய பூமி, இங்கு பனிமலை பொழிகிறது என்று கைகளை வீசி சென்றவள் தான்! சென்னையில் பிறந்து சென்னையிலே வளர்ந்த புவனாவிற்கு காஷ்மீர் குளிர் தாங்க முடியவில்லை! ஒவ்வொரு மாறுதல் போதும் ஒரு ஒரு பிரச்சனை, அனுபவம். காஷ்மீரில் ஹிந்தியும் உருதுவும் கற்றுக் கொண்ட அவளுக்கே மறந்து விட்டது அவருடைய தாய் மொழி என்ன என்பது!
‘வேலை செய்யும் இடத்தில் மிகவும் விசுவாசியாய் இருந்து விடாதீர்கள், ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பது திறமையான ஒரு ஊழியனைத் தானே தவிர நிரந்தரமான ஊழியனே அல்ல’ சொன்னது யாரோ, ஆனால் உண்மை. ‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது மாதவன் விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை. இப்பொழுது புவனா எப்பொழுதும் மாறுதலுக்குத் தயாராக இருக்கிறாள். அவளுக்குத் தெரியும் ‘மாறுதல் ஒன்றுதான் மாறாதது’ என்று!
அதுவும் வங்கி வேலையில் !!
