
நல்லூர் கோவிலில் பூஜைகளெல்லாம் தட புடலாக நடை பெற்றுக்கொண்டிருந்தது. அன்றைக்கு இரவு கணநாதர் பலி பீட பூஜை ! நள்ளிரவில் நடக்கும் பூஜை. அதற்காகச் சுற்று வட்டாரத்திலிருந்த கிராமத்து மக்கள் அனைவரும் தங்கள் வீட்டுப் பசு கறக்கும் ஒரு வேளைப் பாலை சுவாமிக்குக் கொடுத்தருளும் சிறப்பு பூஜை.
பத்து வயசிலேயே கெட்டுக் குட்டிச்சுவராப் போன நம்ம சின்ன வாத்தி பீடி சுருட்டு கள் சாராயம் எல்லாம் அந்த வயசிலேயே அத்துப்படி. எட்டு வயசிலேயே வீட்டை விட்டு ஓடிப் போனவன். காத்தாயி எப்படியோ தேடிப்பிடித்து இழுத்து வந்தா.
அவனோட அப்பா கலியன் ஜெயிலிலிருந்து வந்ததும் ஒரு வருஷம் நல்லவனாத்தான் இருந்தான். அதுவும் புள்ளை பொறந்ததும் இனி நல்ல சம்பாதிக்கணும்னு நினாச்சான். ஆனா ஊரு அவனை அப்படி இருக்க விட்டாத்தானே? காத்தவராயனுக்குத் துணையா இருந்து தலையறுத்துத் திரிந்துகொண்டிருந்த அவனுக்கு எவன் வேலை கொடுப்பான்? இந்த மாதிரி ஆட்களெல்லாம் கடைசில போற இடம் கள்ளச் சாராயம் காய்ச்சர இடம். ஊருக்கு ஒதுக்கப்புரமா இருக்கற இடத்தில காய்ச்சறது, அதையே குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றது. காத்தாயி வைக்கச்சிருக்கர அஞ்சு ரூபாய் பத்து ரூபாயைப் பிடுங்கிட்டு தரலேன்னா அவளையும் மவனையும் மிதிமிதின்னு மிதிச்சிட்டு ஓடறது. இதுவே அவன் வழக்கமா போச்சு.
சாராயம் குடிச்சு குடிச்சு அவனுக்குத் வயித்துவலி. அதைப் போக்கிக்கத்தான் தினமும் குடிக்கறேன்னு சொல்லிக்கிட்டுத் திரிவான். பாதி நாள் வீடு வயல் பொறம்போக்கு எங்கேயாவது சுருண்டு விழுந்து கிடப்பான். வேலை வெட்டி எதுவும் செய்வதில்லை . காத்தாயி தாலி கட்டிக்கிட்ட பாவத்துக்கு அவனை எதுவும் கேக்கறதில்லே! இவன் பண்ணற அக்கரமத்தினால பையனையும் சரியா வளர்க்க முடியல. அவனும் கோயில் மாடு மாதிரி சுத்த ஆரம்பிச்சான்,
அப்பன் மாதிரி பையனும் அந்தச் சின்ன வயசிலே எல்லா அடிதடி வேலைக்கும் முன்னால நிப்பான். அப்பனைப் பாத்தாலே அவனுக்குப் பத்திக்கிட்டு வரும். அம்மா மேல அவனுக்கு உசிரு. அவள் சொன்னபடி கேட்பான். அது வீட்டில இருக்கற வரைக்கும்தான். வீட்டை விட்டு வெளிய ஊர் சுத்தப் போனான்னா அவனோட குரு முருகய்யன். அம்மாப்பேட்டையிலிருந்து வந்தவன். பேட்டை ரவுடின்னு எல்லாரும் அவனைக் கண்டாலே ஒதுங்கிப் போவாங்க. அந்த முருகய்யனுக்கு நம்ம குட்டி வாத்திதான் எடுபிடி. அவன் சகவாசம் வேண்டாமடா அப்படின்னு அவன் அம்மா கெஞ்சுவா. சோறு போடற வரைக்கும் சரின்னு இருப்பான். அதுக்கப்பறம் முருகய்யன் கிட்டே ஓடிப் போயிடுவான்.
முருகய்யனுக்கும் கலியனுக்கும் அன்னிக்கு ராத்திரி கோயிலுக்குப் பின்னாடி இருக்கிற மாட்டுக் கொட்டகை கிட்டே முட்டிக்கிச்சு. எல்லாம் கள்ளச் சாராயம் காச்சறதிலதான். இவன் ஒரு கோஷ்டி. அவன் வேற கோஷ்டி. அதுமட்டுமல்ல. நம்ம பையன் அவன் கூட சுத்திக்கிட்டுத் திரியரானேன்னு ஆத்திரம். ரெண்டு பேரும் வேட்டி அவுந்தது கூடத் தெரியாம கட்டிப் பொரண்டு சண்டை போட்டுகிட்டிருந்தாங்க.சின்ன வாத்தி வந்ததும் சண்டையை ரெண்டு பெரும் நிறுத்திட்டாங்க. பொடியனுக்கு முன்னாடி சண்டை போட கேவலம்.
கலியன் பையனைத் தரதரன்னு இழுத்துக்கிட்டு வீட்டுக்குப் போனான். அவனுக்குக் கொலை வெறி ! வீட்டில காத்தாயி கோயில்ல பால் ஊத்தற திருவிழாவில வேலை செஞ்சுட்டு வீட்டுக்கு வந்து அடுப்புல கம்புச் சோறு செஞ்சுகிட்டிருந்தா.
கலியனுக்கு ஆத்திரம் தலைக்கு மேலே ஏறி அடுப்பிலிருந்து எரியும் வெரகுக் கட்டையை எடுத்து சின்ன வாத்தியின் தொடையில் சூடு வைத்தான். தடுக்க வந்த காத்தாயியை ஓங்கி அறைஞ்சு வீட்டுக்கு வெளியில தள்ளினான். அவ அங்கே இருந்த அம்மிக் கல்லில தலை அடிபட்டு மயங்கி விழுந்தா. கலியன் எரியற வெறக எடுத்துப் பொடியனுக்கு இன்னும் சூடு போட வந்தான்.
பத்து வயது ஆனாலும் அப்பனோட திமிரு அப்படியே இவனுக்கும் இருந்தது. அம்மாவை அடிச்சுத் தள்ளின அப்பன் மேல கோபம் எக்குத் தப்பா வந்தது. அப்படியே கலியனை அடுப்பு மேலே தள்ளிவிட்டு வெளியே ஓடி வந்தான். வெளியில இருக்கிற தாப்பாவைப் போட்டு அப்பனும் அடிக்க முடியாதபடி செஞ்சான்.
பாத்தா அம்மா மயங்கிக் கிடக்கா. அவ மூஞ்சியில தண்ணி தெளிக்க பக்கத்தில இருந்த மாட்டுகொட்டகைக்கு ஓடினான். அங்கேயிருந்த ஒரு குவளையில தண்ணி கொண்டு வந்தான்.
அவன் குடிசை வீடு திமு திமுன்னு எரிந்து கொண்டிருந்தது.
காத்தாயியும் மயக்கம் தெளிஞ்சு எந்திருச்சா! அவளுக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு ! வாயில வயித்துல அடிச்சுக்கிட்டு கத்தினா. ஊரே கோவிலுக்கு போயிருந்ததது.
“சொந்த அப்பனையே வீட்டுக்குள்ளே வைச்சு கொளுத்திவிட்ட பாவி! நீ உருப்படுவியா ! நீ நாசமாப் போவே !” என்று சாபம் கொடுத்து விட்டு அவளும் வீட்டுக்குள் பாய்ந்தாள். கலியனைக் காப்பாத்த நெருப்புக்குள் பாய்ந்தாள்.
கலியன் அம்மாவைத் தடுக்க முயன்றான். ஆனால் அவனை உதறிவிட்டு அவள் உள்ளே பாய்ந்து விட்டாள். அம்மா அம்மா என்று அலறிக்கொண்டே நின்று கொண்டிருந்தான். பக்கத்துக் குடிசைகளுக்கும் தீ பரவ ஆரம்பித்தது.
குடிசையிலிருந்து அவன் அம்மாவும் அப்பாவும் வெளியே வரமுடியாமல் நெருப்பின் நடுவே கீழே சுருண்டு விழுவதைக் கண்டான். அதற்குள் ஆள் வரும் சத்தம் கேட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் ஓட ஆரம்பித்தான். ‘தீய வைச்சவன் ஓடறான் பிடிச்சு கட்டுங்கள்’ என்ற குரலும் கேட்டது.
ஓடினான் ஓடினான்.
வழியில் ஒரு விளக்குக் கம்பத்தில மோதி முகமெல்லாம் காயம். தூரத்தில் ஒரு லாரி புறப்படத் தயாரா இருந்தது. காய்கறி லாரி. சத்தமில்லாமல் பின்பக்கமாக ஏறி அப்படியே மயங்கி விழுந்தான்.
லாரி சென்னைக்குப் புறப்பட்டது.
(இன்னும் வரும்)
