

படைப்பாளிகளை கௌரவித்த ‘எழுத்துக்கு மரியாதை’ திருவிழா எழுத்துக்கு மரியாதை என்று ஒரு புத்தம்புதிய நோக்கில் ஒரு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்தில் 02.11.24 அன்று மாலை நடத்தப்பட்டது.
இந்த வருடம் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு படைப்புகள் அனுப்பிய எழுத்தாளர்கள் கவிஞ்ர்கள், ஓவியர்கள் ஆகியோருக்கு அவர்கள் படைப்புக்கு மரியாதை கொடுத்து கௌரவிப்பதற்காக ஒரு விழா நடத்திய வைபவத்தை படைப்பாளர்கள் உலகமே வியந்து நோக்கியது. மிகவும் புதுமைக்கும் பெருமைக்கும் உரியதாக நடந்த இந்த விழாவில் இறை வணக்கத்தையும் ஒரு எழுத்தாளரை (ரேவதி பாலு) விட்டே பாடச் சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பித்ததும் வித்தியாசமாகத்தான் இருந்தது.
திரு நல்லி குப்புசாமி அவர்களும், பத்திரிகை ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களும் ஒருங்கே சிறப்பு விருந்தினர்களாக தலைமை தாங்கி நடத்திய இந்த நிகழ்ச்சியில் குருகுலம்.காம் என்னும் இணையதளம் மூலம் இராமயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை அமெரிக்காவில் கார்ட்டூன் வடிவில் சிறுவர்களுக்கு கற்பிக்கும் திரு ஸ்ரீராம் ராகவனும் முக்கிய விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மிக்க அன்புடன் படைப்பாளிகளை ஒவ்வொருவராக பெயர் சொல்லி மேடைக்கு அழைத்து அவர்களுக்கு அழகான ஒரு அங்கவஸ்திரம் போன்ற துண்டை போத்தி, ஒரு அன்பளிப்பு, அதைத்தவிர பூஜையில் வைக்க ஒரு லட்சுமி படம் என்று சிறப்பு விருந்தனர்கள் கையால் வழங்கப்பட்டது. அதைக் கூட வித்தியாசமாக செய்தார்கள். தம்பதியராக வந்த படைப்பாளிகளை அவர்கள் வாழ்க்கைத்துணையையும் மேடைக்கு அழைத்து இருவருக்குமாக சேர்த்து கௌரவம் செய்யப்பட்டது.
முதலில் ஒரு பத்து படைப்பாளிகளை கௌரவம் செய்து விட்டு பிறகு சிறப்பு விருந்தினர் பத்திரிகாசிரியர் திருப்பூர் கிருஷ்ணனை உரையாற்றச் சொன்னார்கள். பிறகு திரும்பவும் சில படைப்பாளிகளை மேடைக்கு அழைத்து கௌரவம் செய்து விட்டு சிறப்பு விருந்தினர் திரு நல்லி குப்புசாமி உரையாற்ற அழைக்கப்பட்டார். கடைசியாக மீதமிருந்த படைப்பாளிகளை கௌரவம் செய்து விட்டு இறுதியாக திரு ஸ்ரீராம் ராகவன் உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் மிகவும் சிறப்பானவர்கள் என்பதை தங்கள் கச்சிதமான சுருக்கமான உரையின் மூலம் நிரூபித்தார்கள்.
பத்திரிகாசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் ஒரு பத்திரிகை நடத்துவதில் உள்ள சிரமங்களை அவருக்கே உரிய நகைச்சுவை முறையில் தெரிவித்தார். ஒரு படைப்பாளி அவர் அனுப்பிய படைப்பை போட இயலவில்லை என்று ஆசிரியர் சொன்னதும், அவர் தன் சந்தாவை உடனே திருப்பி அனுப்பச் சொன்னதை, மற்றொரு பத்திரிகாசிரியர் தன்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு சம்பவத்தை நகைச்சுவையாக விவரித்தபோது அரங்கமே சிரிப்பில் குலுங்கியது. முக்கியமாக தீபாவளி மலர் தயாரிக்க ஒரு பத்திரிகாசிரியர் படும் பாட்டை, அவர் எவ்வாறு இராப்பகலாக தூங்காமல் கடமையே கண்ணாக உழைக்க நேருகிறது என்பதையும் விவரித்தார். திரு நல்லி குப்புசாமி போன்ற விளம்பரதாரர்களின் பங்கு தீபாவளி மலர் தயாரிப்பில் பொருளாதாரரீதியாக எவ்வளவு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார். அப்படி அரும்பாடுபட்டு உழைத்து அந்த தீபாவளி மலர் கைக்கு வந்ததும் பத்திரிகாசிரியரின் மனம் எவ்வாறு சந்தோஷத்தில் நிறைந்து போகும் என்பதையும் கூறினார்.
இந்த வருட லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் படைப்புகள் அனுப்பிய 44 படைப்பாளிகளின் பெயர்களையும் குறிப்பிட்டு, அட்டைப்பட ஓவியரான திரு செந்தமிழில் ஆரம்பித்து, அவர்களை பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறியதோடு மட்டுமல்லாமல், தீபாவளி மலருக்கு படைப்புகள் அனுப்புவர்கள் எவ்வளவு வார்த்தைகளுக்குள் தங்கள் படைப்பு இருக்க வேண்டும் என்பதையும் பத்திரிகை ஆசிரியரிடம் கேட்டு தெளிவு செய்து கொண்ட பிறகு தங்கள் படைப்புகளை அனுப்பினால் ஆசிரியரின் சிரமம் எவ்வாறு குறையும் என்பதையும் கூறினார். ஒரு சில எழுத்தாளர்கள் பல துறைகளைப் பற்றி எழுதுவதில் ஈடுபடுவது, ஒரே துறையில் முனைப்போடு ஈடுபட்டு அவர்களுக்கு ஏற்பட வேண்டிய ஏற்றத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது என்பதையும் அன்போடு சுட்டிக்காட்டினார்.
பிறகு பேச வந்த திரு நல்லி குப்புசாமி அவர்கள் முதலில் அவையோருக்குத் தெரியாத ஒரு விஷயத்தை சொன்னார், அன்று லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவனின் பிறந்த நாள் என்பதை. உடனே அவை ஆரவாரமாக தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டது. எழுத்தாளர்கள் மட்டுமே பார்வையாளர்களாக இருக்கும் இது போன்ற விழாவுக்கு தான் வருவது இதுவே முதல் தடவை என்றார் திரு நல்லி குப்புசாமி. அந்த கால தீபாவளி மலர்களைப் பற்றிய தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டு, தீபாவளியென்றாலே எப்படி வாசகர்கள் புத்தாடை, பலகாரங்களை விட தீபாவளி மலர் எப்பொழுது வரும் என்று ஆவலாகக் காத்திருப்பார்கள் என்பதையும் தெரிவித்தார். லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியரோடு தனக்கு அறிமுகம் ஏற்பட்ட விஷயத்தைக் கூறி தன் உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
கடைசியாக பேச வந்த திரு ஸ்ரீராம் ராகவன் குருகுலம்.காம் என்னும் இணையதளத்தை அமெரிக்காவிலிருந்து நடத்துபவர், ஆதிகால படைப்பாளிகளான வேதவியாசரில் ஆரம்பித்து சமீபகால படைப்பாளிகளான சுவாமி விவேகானந்தர், முண்டாசுக்கவி பாரதியார் வரை விவரமாக குறிப்பிட்டு அவர்கள் எவ்வாறு பொருளுக்கும், புகழுக்கும் ஏங்காமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் மனித சமுதாயத்தை மேன்மைப் படுத்துவதற்காக தங்கள் படைப்புகளை அளித்தார்கள் என்பதை மிகவும் அற்புதமாக கூறினார். அவர் தான் ஒரு பிரபலத்தின் (லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவனின்) புதல்வர் என்தைக் கடந்து தனக்கென்று ஒரு தனித்தன்மையோடு உணர்ச்சிகரமாக உரையாற்றி எல்லோருடைய கைதட்டல்களையும் அள்ளிக் கொண்டார். அவர் உரையை ஆரம்பிக்கும் முன் ‘என் இருப்புக்குக் காரணமான என் அம்மாவை முதலில் நமஸ்கரிக்கிறேன்’ என்று திருமதி கிரிஜா ராகனை நோக்கி கரம் குவித்து சொன்னபோது தான், இதுவரை அவர் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியரின் தவப்புதல்வர் என்று அறியாதவர்கள் அறிந்து கொண்டனர்.
இறுதியாக எழுத்தாளர்கள் சார்பில் ஏற்புரை வழங்க வந்த முன்னாள் கல்கி ஆசிரியர் திரு ரமணன் அவர்கள் ‘இப்படி ஒரு விழாவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கே லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியரை பாராட்ட வேண்டும்’ என்று கூறி அனைவரின் சார்பிலும் திருமதி கிரிஜா ராகவனுக்கு தன் நன்றியை தெரிவித்தார்.
கூட்டம் முடிந்து கலைந்த போது, இதை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு மற்ற பத்திரிகைகளும் இதே போல விழா நடத்தும் வாய்ப்பு இருக்கிறது என்று விழாவுக்கு வந்த படைப்பாளிகள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டே சென்றார்கள்.
