விவேகானந்தரும் வியாத கீதையும்!

 

பகவத் கீதை, குருக்‌ஷேத்ரப் போரில் அர்ஜுனனுக்கு ஶ்ரீ கிருஷ்ணன் உரைத்தது. குருமார்கள், உறவினர்கள், நண்பர்களுக்கெதிராகப் போரிட மனமில்லாமல் மனம் கலங்கி நிற்கும் அர்ஜுனனைப் பார்த்து, ஶ்ரீ கிருஷ்ணர் போர்த் தர்மங்களையும்,  வாழ்க்கைத் தத்துவங்களையும், கர்ம யோகத்தின் பலன்களையும் எடுத்துக் கூறுகிறார். கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனன் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும் பகவத் கீதை.

நமது புராண இதிகாசங்களில் இப்படிப்பட்ட அறிவுரைகள், வாழ்க்கைத் தத்துவங்கள் பல பாத்திரங்களின் வழியே நமக்குச் சொல்லப்படுகின்றன. கிட்டத்தட்ட 60 கீதைகள் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் ஆகிய இதிகாசங்களில் காணக்கிடைக்கின்றன. இவற்றில் அதிக எண்ணிக்கையில் பாகவதத்திலும், அடுத்து மகாபாரதத்திலும், இராமாயணத்திலும் பேசப்படுகின்றன.

“குரு கீதை” – சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்குமான உரையாடல் – ஸ்கந்தபுராணத்தில் வருவது. 

“அஷ்டவக்ர கீதை” – ஜனக ராஜன் மற்றும் ரிஷி அஷ்டவக்ரருக்குமான உரையாடல் இது. இது அத்வைத வேதாந்தம், பற்று மற்றும் சுயம் உணர்தலைப் பற்றியது. மஹாபாரதத்தின் வன பர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. 

“அனு கீதை” – பகவான் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். அர்ஜுனன் கிருஷ்ணரிடம் தான் பகவத் கீதையை மறந்துவிட்டதால் அதை மீண்டும் சொல்லும்படி கேட்கும்போது, அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர், அதை மறுபடியும் கூறுவது சாத்தியமில்லை என்று கூறி, கீதையின் தொடர்ச்சியாக இந்த கீதையை விளக்குகிறார்.

“உத்தர கீதை” – பகவத் கீதையின் இணைப்பாக, பிரம்மாண்ட புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இது ஞானம், யோகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தலைப்புகளைப் பற்றி பேசுகிறது.

 “பிக்ஷு கீதை” – பேராசை கொண்ட ப்ராமணரின் வடிவத்தில் கிருஷ்ணர், பின்னர் ஒரு முனிவராகி உத்தவருக்கு, சுமையாக இருக்கின்ற மனதைக் கட்டுப்படுத்தும் முறையைக் கூறுகின்றார். இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

“சௌனக கீதை” – பிரபஞ்ச உயிரினங்களின் பொது வாழ்வின் ரகசியங்கள் குறித்து யுதிஷ்டிரருக்கு சௌனக முனிவர் அறிவுறுத்தியது. இது மஹாபாரதத்தின் ஆரண்ய பர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

*வியாத கீதை* – துறவி ஒருவருக்கு வியாதன், மாமிசம் விற்பவன் (கசப்புக் கடைக்காரர்) ஆற்றிய உரை. இது மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், தர்மம், கடமை என அவனது ஞானம் வெளிப்படுகின்றது. தாய் தந்தையரை எப்படி அன்புடனும், மரியாதையுடனும், அக்கறையுடனும் போற்ற வேண்டும் என்பதையும், கர்ம யோகத்தின் முக்கியத்துவத்தையும் சொல்கின்றது வியாத கீதை. மார்க்கண்டேய முனிவர் யுதிஷ்டிரருக்கு தர்மத்தின் நுணுக்கங்களை எடுத்துச்சொல்ல, இந்த உரையைப் பயன்படுத்துகிறார். 

சுவாமி விவேகானந்தர் தனது கர்மயோகம் நூலில் வியாத கீதையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். “கொக்கென நினைத்தாயோ கொங்கணவா” என்ற கேள்விக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதையும், வியாத கீதையின் தத்துவங்களும் புதைந்து கிடக்கின்றன.

முதலில் கதை.  

தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி போன்றவைகளால், மிகுந்த தவ வலிமை பெற்றிருந்த ஓர் இளம் துறவி, ஒருநாள் மரத்தடியில் அமர்ந்திருக்க, மரக்கிளையில் ஒரு காகமும், கொக்கும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அதனால் அவர் தலை மீது சில சருகுகள் விழுந்தன. துறவிக்கு வந்த கோபத்தில் அந்தப் பறவைகளை முறைக்க, அவை சாம்பலாயின. தனது ஆற்றலைக் கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டார் துறவி. 

அடுத்த ஊருக்குச் சென்றவர், ஒரு வீட்டின் முன் நின்று ‘அம்மா, பிட்சை இடுங்கள்’ என்று கேட்க, உள்ளிருந்து வந்த பெண் குரல், ‘மகனே, கொஞ்சம் இரு’ என்றது. துறவி கோபத்துடன், ‘என் சக்தியை நீ அறியவில்லை’ என்று நினைத்தார். உடனே உள்ளிருந்து அந்தக் குரல், ‘மகனே உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக என்ணிக்கொள்ளாதே. இங்கே இருப்பவை காக்கையும் அல்ல, கொக்கும் அல்ல’ என்றது! திகைத்த துறவி, வெளியே வந்த பெண்ணின் காலில் விழுந்து, ‘காட்டில் நடந்ததை நீங்கள் எவ்வாறு அறிந்தீர்கள்?’ என்று கேட்க, அந்தப் பெண், “எனக்கு யோகமோ தவமோ எதுவும் தெரியாது. நோயுற்றிருக்கும் என் கணவனுக்குப் பணிவிடைகள் செய்துகொண்டிருக்கிறேன். திருமணத்திற்கு முன் பெற்றோருக்கும், இப்போது கணவனுக்கும் நான் என் கடமைகளை மனப்பூர்வமாக செய்துவருகிறேன். அதுவே என் ஞானக்கண்ணைத் திறந்தது. அதன் மூலம் காட்டில் நடந்ததையும், நீ எண்ணியதையும் அறிந்தேன்” என்றாள். இதற்கு மேலும் நீ ஏதேனும் அறிந்துகொள்ள விரும்பினால், மிதிலை நகரிலுள்ள வியாதனைக் கேள்; அவன் உனக்கு போதிப்பான்” என்றும் சொல்லியனுப்புகிறாள்.

மிதிலையில் துறவியைக் கண்ட வியாதன், ‘ஓ, சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை அனுப்பினார்களா?’ என்று கேட்க, துறவி மேலும் திகைக்கிறார். தன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு, துறவியை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். சிறிது நேரம் அவரை அமர்ந்திருக்கச் சொல்லிவிட்டு, தன் வயது முதிர்ந்த தந்தையையும், தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி அவர்கள் மனம் மகிழ சேவைகளைச் செய்கிறான். பிறகு துறவியிடம் வந்து, “நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான். துறவியின் ஆன்மா, கடவுள் பற்றிய கேள்விகளுக்குப் பெரிய விளக்கம் தருகிறான்.

இதுவே மகாபாரதத்தில், ‘வியாத கீதை’ என்ற பெயரில் உள்ளது. ஒவ்வொரு கருத்தும், அறிவுரையும், விளக்கமும் மிகச் சிறப்பான முறையில் சொல்லப்படும் வியாத கீதையில் அனைவரும், குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர், கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றன. 

துறவி வியந்து, “இவ்வளவு ஞானம் படைத்த நீங்கள் ஏன் இந்தத் தொழிலைச் செய்கிறீர்கள்?” எனக் கேட்கிறார். அதற்கு வியாதன் கூறும் பதில் சிறப்பானது. “மகனே, கடமைகளில் கேவலமானது, இழிந்தது என்ற ஒன்றில்லை. என் பிறப்பினாலும், சூழ்நிலையினாலும் இந்தத் தொழிலைச் செய்கிறேன். எனக்குப் பற்றேதும் இல்லை. ஓர் இல்லறத்தானாக, பெற்றோரைக் கவனித்துக் கடமைகளை ஆற்றுகிறேன். நான் துறவி இல்லை. வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என் ஞானம் என் கடமைகளைப் பற்றின்றி செய்ததால் கிடைத்ததாகும்” என்கிறார். 

இனி சில தெறிப்புகள்:

என்ன செய்யக்கூடாது?

பொய் சொல்லக்கூடாது. யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் நல்லது செய்ய வேண்டும். காமம், பயம், குரோத இவற்றால் யாரும் தர்மத்தைக் கைவிடலாகாது.

விரும்பியதை அடைந்ததும் மகிழ்ச்சியில் துள்ளக்கூடாது. இழப்பு வந்தால் அதிகமாக வருந்தக்கூடாது. நிதி நெருக்கடிகள் வரும்போது சோகத்தினால் தர்மத்தைக் கைவிடக் கூடாது.

அறிவாளிகளும் முட்டாள்களும்:

முட்டாள் தன்னையே புகழ்ந்து கொள்கிறான். அதனால் அவன் முன்னேறுவதில்லை. அறிவாளி உடலளவில் கவர்ச்சிகரமாக இல்லாத போதும் தங்கள் ஞான ஒளியினால் பிரகாசிக்கிறார்கள். பிறரைக் குறை கூறுவதில்லை. தம்மையும் உயர்த்திப் பேசிக்கொள்வதில்லை.

தன்னை உயர்த்திப் பிறரைத் தாழ்த்திப் பேசுபவன் முன்னேறுவதில்லை.

எது நன்னடத்தை?

நன்னடத்தையின் இணைபிரியாத அம்சங்கள் நான்கு: குருநாதர்களுக்குப் பணிவிடை செய்வது, சத்தியத்தின் வழி செல்வது, பெருந்தன்மை மற்றும் கோபமின்மை. இந்த நான்கிலிருந்தும் சர்றும் விலகாதவனே ஒழுக்கம் உள்ளவன் என்ற புகழைப் பெறுவான்.

தர்மத்தை ஏளனம் செய்பவர்கள் முட்டாள்கள். அவர்கள் தவறான பாதையில் செல்பவர்கள்.

எது ஞானம்?

உலகில் எல்லாமே நிலையற்றவை. நிரந்தரமானதன்று. இதை முழுமையாக உணர்ந்து கொள்வதே ஞானம். அதுவே துன்பத்திலிருந்து விடுபடுவதும், இறைவனோடு ஐக்கியம் ஆவதும் ஆகும்.

நான் என் மனதில் துக்கத்திற்கு இடம் கொடுப்பதில்லை. நான் காலத்தோடு ஒட்டி வாழ்கிறேன். அதனால் எனக்கு துக்கமில்லை. அவநம்பிக்கையும் இல்லை.

வியாதர் சொல்வதையெல்லாம் கேட்டு மிகவும் மகிழ்ந்து, தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்து அவர்களுடன் வாழ ‘கொங்கணவர்’  தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்.

(Ref: விக்கிபீடியா, 

        WordPress.com, 

        வியாத கீதை. மொழியாக்கம் நல்லி குப்புசாமி செட்டியார் (ப்ரெய்ன் பேங்க், சென்னை 17. 9841036446)