மூன்றாம் ராஜராஜன்

மூன்றாம் ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு 

மூன்றாம் குலோத்துங்கன் கண்மூடினான்.. உயிர் பிரிந்தது.

சோழநாட்டின் கடைசிச் சக்கரவர்த்தி சரித்திரத்திலிருந்து மறைந்தான். துரதிர்ஷ்டங்கள்‌ சோழநாட்டைச் சூழ்ந்துகொண்டன. இந்த அசுபமான வேளையில்‌, கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து புறப்பட்டு, பழையாறை அடைந்த மூன்றாம்‌ இராஜராஜன்‌ மூடிசூடினான்‌. நாட்டை நிர்‌வகித்துத்‌ தாங்கவல்ல அறிவும்‌ ஆற்றலும்‌ அவனுக்கு இல்லை. மாறவர்மன் சுந்தரபாண்டியன், தக்க சமயத்தில் படை எடுத்து வந்து சோழப் பேரரசை அகப்படுத்திக் கொண்டான். தஞ்சை, தில்லை வரை படையெடுத்து வந்தான். கங்கைகொண்ட சோழபுரத்தைத் தரைமட்டமாக்கினான். அங்கு, குலோத்துங்கன் மதுரையில் செய்தது போல, நெல்வயலில் உப்புப் போட்டு, கழுதைகளால் உழச்செய்தான். மீனாட்சியம்மன் கோவிலில் தான் செய்த சபதத்தை நிறைவேற்றினான்.

பழையாறை நகரிலிருந்து, ராஜராஜ சோழன், சுந்தர பாண்டியனிடம் சமாதானம் கோரித் தூது அனுப்பினான். பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டான். அந்த உடன்படிக்கையின்படி , தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் ராஜராஜ சோழன்.

முதன் முறையாக, முன்னூறு ஆண்டுகளில், ஒரு சோழன், ஒரு பாண்டியனுக்கு அடிபணிந்துக் கப்பம் கட்டத் தொடங்கினான். வெற்றிச் செய்திகளை மட்டுமே கேட்டுப் பழகிய சோழமக்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. மூன்றாம் ராஜராஜனின் ஆட்சி, துன்பங்களுடனும், துயரங்களுடனும் தொடர்ந்தது. தொடக்கத்தில் ஏற்பட்ட இன்னல்கள் பிற்காலத்தில் நேரவிருக்கும் பெருங்கேட்டிற்கு முன்னறிவிப்பாக இருந்தன.

மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு அடிபணிந்து ஆட்சி புரிந்து வந்த ராஜராஜ சோழன், போசள மன்னன் வீர நரசிம்மனின் உதவியைப் பெற்றான். இதனால் சோழ அரசு வலுவடைந்து விட்டது என்று தப்புக்கணக்குப் போட்டான். அந்த எண்ணத்தில், பாண்டியனுக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்ட மறுத்தான். சுந்தரபாண்டியன் வெகுண்டான். இதனால் பாண்டியனுக்கும் சோழனுக்கும் மீண்டும் போர் நிகழ்ந்தது. இந்த போரில் படுதோல்வி அடைந்த சோழன் எங்கே சென்றான் என்பதை விரைவில் காண்போம். பாண்டியன் சோழநாட்டில் மகுடாபிஷேகம் செய்து கொண்டான்.

சோழனுக்கு அடிபணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன், தக்க சமயம் அறிந்து, சோழனுக்குக் கப்பம் கட்டுவதை நிறுத்தினான். ராஜராஜன், பாண்டியனிடமிருந்து தப்பித்து, குந்தள நாடு செல்லப் பயணப்பட்டான். அந்தப்பயணத்தை அறிந்த கோப்பெருஞ்சிங்கன், சோழனை வழிமறித்துச் சிறைப்படுத்தினான், சோழனின் செல்வங்களைக் கொள்ளை அடித்தான். இதை அறிந்த போசள மன்னன் வீர நரசிம்மன் படை எடுத்து வந்தான். திருவயிந்திபுரம் வரை சென்று கோப்பெருஞ்சிங்கனின் செல்வங்களைக் கைப்பற்றினான், அவனது செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்து கைப்பற்றினான். வீர நரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் ராஜராஜசோழனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அத்துடன் சோழன், மற்றும் போசளனுடன் சமாதானம் செய்து கொண்டான்.

ராஜராஜசோழனை மீட்ட பின்பு, காவேரிக் கரை வரை சென்று பாண்டியர்களுடன் போர் புரிந்தான் வீர நரசிம்மன். காவேரிக் கரை வரை சோழர்களின் நிலப்பரப்பு இருந்தது. இவ்வாறு சோழர்கள் போசளர்களின் ஆளுகைக்குட்பட்டு, அவர்களது ஆட்சியைச் சார்ந்தே இருந்தனர்.

போசள மன்னன் வீர நரசிம்மன், சோழர்களைப் பழையாறை நகரம் வரை சுருக்கிய பாண்டியர்களை வளர விடுவது ஆபத்து என்ற காரணத்தாலும், பெண் உறவு பூண்டதாலும், சோழர்களுக்கு உதவுவதற்கு முன் வந்தான். இதுவரை சுருக்கமாகச் சொன்ன ராஜராஜன் கதையை, வேறு கோணத்தில் பார்க்கலாம். கோப்பெருஞ்சிங்கனைப் பற்றி சற்றுக் கதைப்போம்.

கோப்பெருஞ்சிங்கன்

அரசியல் களம் விநோதமானது. ஆட்சி அதிகாரத்தின் மீதான தீராத வேட்கையும், வெறியுமே கூட்டணிகளையும், அரசுகளையும் உருவாக்குகின்றன; அல்லது அழிக்கின்றன.

நாட்டை ஆண்ட ஒரு இனக்குழுவானது, வேறொருவரால் அழிக்கப்பட்டு ஒடுக்கப்படும் வலி மிகக் கொடுமையானது. அந்த வலியும் வேதனையும் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் தலைமுறை தாண்டி வெளிப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கும். அப்படித் தன் இனத்தை அழித்த சோழ அரசை வீழ்த்தி, மீண்டும் பல்லவர்கள் ஆட்சியை உருவாக்க முயற்சித்து அதில் பாதி வெற்றியையும் கண்ட ஒரு சிற்றரசன் இந்தக் கோப்பெருஞ்சிங்கன்.

கோப்பெருஞ்சிங்கன், காடவராயர்களின் தலைநகராக இருந்த (உளுந்தூர்பேட்டை அருகே உள்ள) சேந்தமங்கலம் கோட்டையை ஆண்டு வந்தான். அந்தக் காலத்தில் கோட்டைகளில் இருந்துதான் பெரும்பாலான அரசுகள் செயல்பட்டுள்ளன. சேந்தமங்கலத்தில் காடவராயர்களால் அமைக்கப்பட்ட கோட்டை, அரண்மனை, கோயில் என அனைத்தும் ஒருங்கே அமைக்கப்பட்டு ஒரு பெரு நகரமாக இருந்தது.

காடவர், பல்லவர் ஆகிய இரு பெயர்களும் ஒரே மரபைக் குறிப்பதான சொல்லாட்சிதான். சுமார் நானூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த பெருமைக்குரிய பல்லவர்கள், ஒன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சோழர்களது எழுச்சியினால், நாட்டினை இழந்து சிதறுண்டார்கள். அப்படிச் சிதறியவர்களில் பலர், பிற்காலத்தில் சோழர்களது படைகளில் இடம் பெற்றிருந்தனர். சிலர், தங்களது வீரம் மற்றும் திறமைகளின் காரணமாக படிப்படியாக உயர்ந்து சோழர் அரசில் காவல் அதிகாரிகளாகவும், சிற்றரசர்களாகவும் விளங்கினர். (கடல்புறாவின் இளையபல்லவன் உட்பட). அவர்கள் சம்புவராயர், காடவர், சேதிராயர் என்ற பட்டப் பெயர்களுடன் அழைக்கப்பட்டனர்.

சோழ அரசில் செல்வாக்குடன் திகழ்ந்த காடவர்கள் சோழப் பேரரசின் சிற்றரசுகளில் ஒன்றான நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டின் நாடுகாவல் அதிகாரியாக விளங்கி பின்னர் சிற்றரசர்களாக உயர்ந்தவர்கள். இவர்கள் ஊர் கூடல் எனப்படும் தற்பொதைய கடலூர்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் நடத்திய படையெடுப்பு ஒன்றில் கலந்து கொண்ட இந்த காடவராயன், எதிரிகளுடன் போரிட்டு வெற்றிகண்டான். இவனது வாள் வீசும் திறமையை மெச்சிய குலோத்துங்க சோழன், இவருக்கு ’வாள்நிலை கண்டபெருமாள்’ என்ற சிறப்புப் பட்டத்தை அளித்ததுடன் தனது மகளையும் இவனுக்கு மணம் செய்து கொடுத்தான். அதன்படி இவர், ‘வாள்நிலை கண்ட பெருமாளாகிய இராசராசக் காடவராயன்’ எனப்பட்டான். இவன் திருமுனைப்பாடி நாட்டின் சிற்றரசராக உயர்ந்தான். இவனுக்கு மணவாளப்பெருமாள், ஏழிசை மோகன் என்ற பட்டப்பெயர்களும் உண்டு. இவன்தான் காடவராய சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன் என அழைக்கப்பட்டான்.

இந்த கோப்பெருஞ்சிங்கன் கி.பி.1213-ஆண்டு முதல் கி.பி.1231-வரை ஆட்சி செய்தான். பல்லவர் மரபின் வழிவந்த இவனுக்கு, தமிழகத்தில் மீண்டும் பல்லவர் ஆட்சியை மலரச் செய்யவேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது.

திருமுனைப்பாடி நாடு என்பது இன்றைய கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளை உள்ளடக்கிய ஒரு ஆள்நிலப் பகுதி. திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராக விளங்கியது சேந்தமங்கலம்.

காடவர்கள் வலுவான அரண்களுடனும் அகழியுடனும் கூடிய அரண்மணை ஒன்றை சேந்தமங்கலத்தில் கட்டமைத்து அங்கிருந்து ஆட்சி செய்தனர். இவர்களது சின்னம் காளை. இங்கு வாள்நிலை கண்டீசுவரர் என்ற பெரிய சிவன் கோவில் உள்ளது.

சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்கள் அளவுக்கதிகமான செல்வாக்குடனும், அதிக சுதந்திரத்துடனும் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் பல சிற்றரசர்கள் தங்களுக்குள் ஒன்றுபட்டு சோழ அரசுக்கு எதிராக செயல்பட்டிருக்கின்றனர். மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலிருந்தே காடவராயன் உள்ளிட்ட சிற்றரசர்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு சோழ அரசுக்கு எதிராக செயல்படத் துவங்கிவிட்டனர்.

சோழநாட்டைச் சுற்றியுள்ள பாண்டியர், போசளர், தெலுங்கு சோழர் போன்றோர் வலிமை பெருகி நின்றதுடன் தங்களது நாட்டின் பரப்பை விரிவுபடுத்தும் நோக்கில் சோழ நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள விரும்பி உரிய ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். மூன்றாம் குலோத்துங்க சோழன் நிர்வாகம் அளித்த இந்த சுதந்திரப் போக்கு, தங்களுக்கென தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்த சிற்றரசர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. அவர்களில் பலர் கூட்டு சேர்ந்துகொண்டு சோழப் பேரரசுக்கு எதிரான சதிகளில் ஈடுபடலாயினர்.

குலோத்துங்க சோழனால், `வாள்நிலைகண்ட பெருமாள்’ என்று பட்டத்தையும் தனது மகளைக் கொடுத்து மருமகன் என்ற உறவுமுறையையும் அளித்து, திருமுனைப்பாடி நாட்டின் சிற்றரசராக உயர்த்தியிருந்தாலும், பல்லவர்ஆட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்பும் தனது நெடுநாளைய விருப்பத்தின்படி காடவராயன், சோழ அரசனுக்கு எதிராக செயல்பட்டான். இதே போன்று மகத சிற்றரசனான வாணகோவரையனும் தனிநாடு அமைக்க ஆசைகொண்டு சோழ அரசுக்கு எதிராக செயல்பட்டான். இவர்கள் மற்ற சில சிற்றரசர்களது மறைமுக ஆதரவையும் பெற்று சோழ நாட்டிற்கெதிராக பாண்டியர்களுக்கு மறைமுக உதவிகளைச் செய்து வந்தனர்.

கோப்பெருஞ்சிங்கனும் வாணகோவரையரும் சோழ நாட்டில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வந்தனர். சோழஅரசு உருவான காலத்திலிருந்தே சோழர்-பாண்டியர்களுக்கிடையில் தொடர்ந்து ஓயாது போர் நடைபெற்றுக் கொண்டேயிருந்தன. ஒரு சில அரசர்களைத் தவிர அநேகமாக அனைத்து சோழ அரசர்களும் பாண்டியருடன் போர் புரிந்துள்ளனர். கி.பி.1216-ம் ஆண்டில் பாண்டிய அரசனாகப் பொறுப்பேற்ற மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1219-ல் வலிமைபொருந்திய பெரும்படை திரட்டிவந்து சோழநாட்டின்மீது போர்தொடுத்து சோழன் மூன்றாம் ராஜராஜனை வென்றான். தவிர அப்போரின்போது சோழ நாட்டில் ஏராளமான அழிவுகளையும் ஏற்படுத்தினான்.

வென்றாலும், சோழநாட்டை பாண்டிய நாட்டு அரசுக்குட்பட்ட திறை செலுத்தும் ஒரு சிற்றரசாக அங்கீகரித்து, மூன்றாம் ராஜராஜனிடமே சோழ நாட்டை மீண்டும் ஒப்படைத்து அவனையே ஆளச்செய்தான். அவ்விதமே ராஜராஜன் சோழநாட்டை ஆட்சி செய்யத் துவங்கியிருந்தாலும் ஓரிரு ஆண்டுகளுக்குப்பின் பாண்டிய மன்னனுக்கு வரி செலுத்த மறுத்துவிட்டான். அதனால் வெகுண்டெழுந்த மாறவர்மன் சுந்தர பாண்டியன், கி.பி.1231-ம் ஆண்டில் மீண்டும் சோழநாட்டின்மீது படையெடுத்தான். அப்போரில் தோல்வியுற்ற ராஜராஜன், தனது குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினருடன் தனது நட்பு நாடான குந்தளநாடு (போசளம், ஹோய்சாள) நோக்கி ரகசியமாகப் புறப்பட்டான்.

குந்தளநாடு நோக்கி விரைந்த ராஜராஜனை, தெள்ளாறு அருகே வழிமறித்த கோப்பெருஞ்சிங்கன், ராஜராஜனையும் அவனது சுற்றத்தாரையும் சிறை பிடித்துத் தனது தலைநகரான சேந்தமங்கலத்துக்கு இழுத்து வந்து சிறையிலிட்டான். மனைவியின் அண்ணன் என்றும் பார்க்கவில்லை. சோழநாட்டின் சில பகுதிகளை அழிக்கவும் முற்பட்டான். ராஜராஜனுக்கு முன்புவரை, ஒவ்வொரு சோழ அரசரும் பெரும்படை திரட்டிக் கொண்டு சென்று எத்தனையோ நாடுகள் மீது போர்தொடுத்து வென்றுள்ளனர், மற்றும் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்தவர்களையெல்லாம் விரட்டியடித்துள்ளனர். அப்போதெல்லாம் சிற்றரசர்கள் அரசனுக்குப் பக்கபலமாக நின்று போரிட்டு வந்திருந்தனர். ஆனால் போர்க்களத்தில் வலுவிழந்து அடைக்கலம் நாடி வேற்று நாட்டுக்கு சென்ற சோழ அரசனை, அவன் கீழ் ஆட்சி செய்த சிற்றரசன் ஒருவராலேயே சிறை பிடிக்கப்படும் அவலமும் நேர்ந்தது.

மூன்றாம் ராஜராஜன் கைது குறித்த தகவல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்திலுள்ள வையலூர் என்னுமிடத்தில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு விவரிக்கிறது. போர்க் கைதிகளை அடிமைப்படுத்தியதற்கு அடையாளமாக அவர்களைச் சிறைபிடித்த மன்னன் அவர்களது உடலில் தனது அரச முத்திரையை பொறிப்பது வழக்கம். அதன்படியே கோப்பெருஞ்சிங்கன் தனது அரச சின்னமான காளையை இராஜராஜன் உடலில் பொருத்தினான்.

போசள நாட்டு அரசனான வீர நரசிம்மனின் மகள் ராஜராஜனின் மனைவி. ராஜராஜன் சிறைபிடிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் கோபமடைந்தான் வீர நரசிம்மன்.

“கோப்பெருஞ்சிங்கனை வென்று ராஜராஜனை மீட்காமல் எக்காளம் ஊதுவதில்லை” என வீரசபதம் எடுத்த வீரநரசிம்மன், துவாரகசமுத்திரத்திலிருந்து கிளம்பி இராஜராஜனுக்கு எதிரான சோழ குறுநில அரசர்களை அழித்து இராஜராஜனை மீட்டு சோழநாட்டின் அரியாசனத்தில் அமர்த்தி வருமாறு தனது தளபதிகளான தண்டினகோபன், ஜெகதொப்பகண்டன், அப்பன்னதன்னாக்கன் மற்றும் கொப்பய தன்னாக்கன் ஆகியவர்களுக்கு ஆணையிட்டான். அவர்கள் துவாரக சமுத்திரத்திலிருந்து கிளம்பி, கோப்பெருஞ்சிங்கன் தங்கியிருந்த எள்ளேரி மற்றும் கலியூர்மூலை ஆகிய ஊர்களையும் சோழஅரசன் தங்க வைக்கப்பட்டிருந்த தொழுதூரையும் அழித்தனர். கோப்பெருஞ்சிங்கனின் படை வீரசிங்க நாடாள்வான், சீனத்தரையன், ஈழத்துராஜா, பராக்கிரமபாகு ஆகிய நால்வரையும் கொன்று அவர்களது குதிரைகளையும் கைப்பற்றிக்கொண்டு, பின்னர் சிதம்பரம் கோவிலில் வழிபட்டனர்.

பின்னர், தொண்டைமாநல்லுர், திருப்பாதிரிப்புலியூர், திருவதிகை, திருவக்கரை மற்றும் பல ஊர்களை அழித்து, வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கிலும், சேந்தமங்கலத்தின் கிழக்குப் பகுதிகளிலும் அழிவு வேலைகள் மேற்கொண்டனர். மேலும் முன்னேறி, பெண்களைப் பிடித்துக்கொண்டும், கொள்ளை அடித்தும், பின் தலைநகரான சேந்தமங்கலத்திற்கு முன்னேறிச் சென்று அவ்வூரை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்ட கோப்பெருங்சிங்கன் ராஜராஜனையும் அவனது குடும்பத்தினரையும் ஒப்படைப்பதாக போசள அரசனுக்குத் தூதுவிட்டு அதன்படி, அவர்களை விடுவித்து போசள தளபதிகளிடம் ஒப்படைத்தாரன்.

அதனையடுத்து போசளர் ஆதரவுடன் மூன்றாம் இராஜராஜன் சோழ அரசனாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றான். மேலும், போசள அரசனது படையின் ஒரு பிரிவு சோழநாட்டில் நிலையாக நிறுத்திவைக்கப்பட்டு, பிரச்சனைகள் எழுந்தபோதெல்லாம் தலையிட்டு அடக்கிவைத்தது.

ஒரு மாவீரன் பாண்டியன் மாறவர்மன் – ஒரு ஆற்றலற்ற சோழன் மூன்றாம் ராஜராஜன். இந்த அமைப்பால், ஒரு சாம்ராஜ்யம் அழியத் தொடங்கியது. ஒரு வேளை, மாறவர்மனுக்குப் பிறகு ஒரு ஆற்றலற்ற பாண்டியனும், ராஜராஜனுக்குப் பிறகு ஒரு எழுச்சி கொண்ட சோழனும் வந்தால் எப்படியிருக்கும்?

நீங்கள் நினைத்தது நடந்தது! அது விரைவில்.