சஞ்சாரம் நாவல்
ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
விலை ₹ 340/-
2018 ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்

 
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் பிறந்தவர் எஸ் ரா. தன் ஊரைப் பற்றி வேடிக்கையாகச் சொல்வார்- இந்திய வரைபடத்தை விடுங்கள். தமிழக வரைபடத்தையும் விடுங்கள். மாவட்ட வரைபடத்திலும் கூட எங்கள் ஊரைப் பார்க்க முடியாது. சிறு புள்ளியாகத் தெரியலாம். பல சிறுகதை தொகுப்புகள், உலக இலக்கிய, சினிமா, கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், சிறார் இலக்கியங்கள், ஜப்பானின் ஹைக்கூ என்று இவர் தொடாத துறை இல்லை. பெருந்தன்மையானவர். யுவபுரஸ்கார் விருது பெற்ற ஒருவரின் கதைத் தொகுப்பு வெளியீட்டு விழா. இவர் தலைமை தாங்குகிறார். இவரது நண்பர்கள் சொல்கிறார்கள்- விருதாளர் உங்கள் குழுவைச் சேர்ந்தவரில்லையே. இவர் பதில்- மரத்தை விட்டுப் பறக்கும் பறவைக்கு வானமே எல்லை. இலக்கியத்தைக் கொண்டாடும் உள்ளம் இப்படித்தான் சொல்லும். தமிழர்களின் பண்பாட்டுக் கருவி நாகஸ்வரம். இந்த மண்ணிற்கே உரித்தான கம்பீரமான வாத்யம். எல்லா இடங்களிலும் மங்கல ஓசை எழுப்பும், நாதமயமான ப்ரும்மம்.

‘நாத பிந்து கலாதி நமோ நம, வேத மந்த்ர ஸ்வரூபா நமோ நம’ என்று பாடுகிறார் அருணகிரி நாதர்.

தனது சித்தரஞ்சனி ராக க்ருதியில் நாதத்தின் ஈசனான சங்கரனை தியாகராஜ ஸ்வாமிகள் இப்படிப் பாடுகிறார். ‘நாத தனு மனிசம் சங்கரம்,; அதில் சிவனின் ஐந்து முகங்களான சத்யோஜாதம், அகோரம், தத் புருஷம், வாம தேவம், ஈஷான்யம் என்பவைகளிலிருந்து ச ரி க ம ப த நி என்ற ஏழு ஸ்வரங்கள் வெளிப்பட்டதாகக் கொண்டாடுகிறார். நம் இசையின் அடிப்படை சாம வேதம் என்பார்கள்.  
 
கலை என்பது சிலரை வாழ வைக்கிறது, பலரை வாழ்வில் போராட வைக்கிறது.
கரிசல் காட்டின் நாகஸ்வர கலைஞர்களைப் பற்றி குறிப்பாக, அவர்களுடைய வாழ்க்கை இன்னல்களையும், அவர்கள் சந்திக்கும் அவமானங்களையும் உள்ளம் உருகும்படி எழுதி இருக்கிறார் ஆசிரியர். 34 சிற்றூர்களே அத்யாயங்களின் தலைப்புகளாக வருகின்றன. இசைக் கலைஞர்கள், இசைத் துறை பற்றிய நூல்கள் வெளிவந்திருக்கின்றன, ஆனால் எண்ணிக்கை குறைவு.

சஞ்சரிப்பது என்பது என்ன? உலகில் உடல் கொண்டு சஞ்சரிக்கிறோம், மனதால்  பல இடங்களில் சஞ்சரிக்கிறோம்,  நாரதர் என்ற மூவுலக சஞ்சாரியை நாம் புராண இதிகாசங்களில் காண்கிறோம். இசையில் சஞ்சரிப்பது, நம் ஆத்மாவின் குரலை நாம் கேட்கும் ஒன்றாகும்.

ஸஸ ரிரி கக மம பப தத நிநி ஸஸ
ரிரி கக மம பப தத நிநி ஸஸ
கக மம பப தத நிநி ஸஸ
மம பப தத நிநி ஸஸ

என்று ஸ்வரங்களின் அடுக்கு போல ஊர்களும், நிகழ்ச்சிகளும், மனிதர்களும், அவர்களது இயல்புகளும் இந்த நாவலில் பின்னிப் பிணைந்து வருகின்றன.

‘கலங்கிய மஞ்சளும் வெளுப்புமான நிறத்தில் மூடாக்கிட்டு வெயில் அடித்துக் கொண்டிருந்தது ஆலிலைகளின் மீது நின்றிருந்த கருங்குருவி விட்டு விட்டு குரல் விட்டுக் கொண்டிருந்தது யாரும் அதற்கு செவி கொடுக்கவில்லை.’
இந்த வர்ணனையிலேயே கரிசல் காட்டு கலைஞர்களின் சோகத்தை காது கொடுத்து கேட்பார் யாருமில்லை என தெளிவாகச் சொல்லி விடுகிறார்.

மூதூருக்கும் பனங்குளத்திற்கும் நடுவில் இருக்கும் சூல கருப்பசாமி கோவிலில் நாதஸ்வரம் வாசிக்க ரத்தினம் பக்கிரி தண்டபாணி பழனி ஆகியோர் வந்திருக்கிறார்கள். பின்னவர் இருவரும் தவிலிசைக் கலைஞர்கள். கைகளில் சூலம் ஏந்தி உள்ள அபூர்வமான சூல கருப்பசாமி, எங்கோ அத்தியூர் பக்கமிருந்து கோபித்துக் கொண்டு இந்த ஊருக்கு வந்திருக்கிறார். ‘மனுஷனைப் போலத்தான் சாமியும் அதுக்கும் வேலைக்கு சாப்பாடு போட்டு கவனித்துக்கிட துணையாள் வேணும். நாங்க எல்லாம் தற்குறிக, எங்களுக்கு சாமி வேணும், மனுஷனத் தான் நம்ப முடியாம போயிருச்சு, சாமியும் இல்லைன்னா நாங்க யாரு கிட்ட போயி முறையிடுவது? மனுஷன் குத்தம் குறைய கேட்க ஒரு நாதி வேணுமில்ல.’ மிக இயல்பாக தெய்வத்தை நம்பும் எளிய மனிதர்களின் சிந்தனையை இதில் ஆசிரியர் சொல்கிறார்

புதிதாக வில் செய்து கொண்டு வந்து அந்தத் திருவிழாவை யார் முன்னெடுப்பது என்பதில் இரு ஊர்க்காரர்களுக்கும் தகராறு வந்து அதில் ரத்தினமும் பக்கிரியும் அடி வாங்கி அவர்களை சாதியின் பெயரால் அவமானப்படுத்தி மரத்தில் கட்டி வைக்கிறார்கள்


பக்கிரி நினைக்கிறான் சிவனுக்கு முக்கண் இருப்பது போல தனக்கும் இருப்பதாக. ஆனால் நாகஸ்வரம் என்ற இந்தக்கை விசித்திரமானது, மர்மமானது. ஒரு சாவியைப் போல் அவன் மனதைத் திறந்து, அதனுள் புதைந்து போன கண்ணீரை, வலிகளை, மறக்க முடியாத சந்தோஷத்தை அவனுக்கே திரும்ப அடையாளம் காட்டிவிடுகிறது. மனம் சந்தோஷத்தை எப்போதுமே விரும்புவதில்லையா அல்லது சந்தோஷத்தை முழுமையாக உணர்வதற்கு துயரம் தேவையானதுதானா?

கட்டிப் போடப்பட்டுள்ள நிலையில் ரத்தினம் உறங்க ஆரம்பிக்க, பசியும் எறும்புக் கடியுமாக பக்கிரி தவிக்கிறான்.

பூசாரி சமயம் பார்த்து அவர்களுடைய கட்டுக்களை விடுவித்து ஓடிப் போகச் சொல்கிறார்.

பசியும் வாங்கிய அடியும் அவமானமும் அவனைப் பழிவாங்கத் தூண்டுகின்றன தீயைக் கொளுத்தி கொட்டகையின் மேல் வீசிவிட்டு ரத்தினத்துடன் சேர்ந்து கொள்கிறான். ரத்தினம் இதனால் ஆபத்து வரும் என்று பயப்படுகிறார்

ஆசிரியர் மூதூரில் இருந்து அரட்டானம் சிவன் கோயிலில் உள்ள நந்தியை பற்றி அருமையாக சொல்லி அரட்டானாம் லட்சய்யா என்ற நாதஸ்வரக்காரர் இசையாலேயே மாலிக்கபூரை  மயக்கியதையும் ஒற்றை ஆளாக அந்த சிவன் கோயிலைக் காப்பாற்றியதையும், அந்த இசைக்கு கல் ஆணையின் காதுகள் அசைந்ததையும், பாதுஷா கில்ஜி அதில் மயங்கியதையும், மாலிக் கபூர் அவரையும் கொன்று ஆட்சியைப் பிடித்ததையும், லட்சய்யாவின் இசை கபூரின் மனதை பிரமிக்க வைத்ததையும், ஹக்கீம் லக்ஷயாவை தப்ப வைத்ததையும், டெல்லி நகரை தாண்டியதும் லட்சையா கொல்லப்பட்டதையும், இதனாலேயே வடக்கில் நாதஸ்வரம் பிரபலமடையாமல் போய்விட்டது என்பதையும் ரசித்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

செவிவழிக்கதைகள், வரலாற்று ஆவணங்கள், மக்களின் நம்பிக்கைகள் அனைத்திலும் சஞ்சரிக்கிறது இந்த நாவல். அப்படித்தான் ஊரோடிகள் என்ற பறவைகள் வந்ததையும், கரிசல் காட்டில் மண் வேணுமா பொன் வேணுமா என்று கேட்டதையும், மக்கள் மண்ணை கேட்க, மாரி பொழிந்து, வளம் நிறைய, அந்த மதர்ப்பில், மக்கள் பொன் கேட்க, ஊரோடிகள் வராமல், மழையின்மையால் விவசாயம் பொய்த்ததையும் ஒரே ஒரு சொட்டு கண்ணீரைத் தந்து வேம்பு மரத்தினை பிழைக்க வைத்த கதையையும் சொல்லும் ஆசிரியர் நாதஸ்வர இசையில் ஊரோடி பறவைகளின் ரெக்கையடிப்பு இருக்கிறது, கரிசல் நிலத்தில் அது அழியாத சாட்சி என் அருமையாக எழுதுகிறார்.
 
வாலன் என்ற கலைஞரின் கதையும் மனதை உருக்குவதாக இருக்கிறது கரிசலின் ஆன்மாவே அவன் கண்டெடுத்த நாதஸ்வரம்; மண்ணின் துயரத்தை நாதஸ்வரம் பேசுவதைப் போல மனிதர்கள் அதை உணர்ந்தார்கள். அது துயரத்தின் இசை மட்டும் அல்ல, மறக்கப்பட்ட சந்தோஷத்தின் இசை, ரகசியத்தின் இசை, இச்சைகளின் இசை. நிராசையின் இசை. வெயிலின் சங்கீதம் என்று ஆளுக்கு ஒருவிதமாக உணர்ந்தார்கள்
 
‘பெரும் கழுகு ஒன்றைப்போல் கரிசலுக்குள் வருகிறது சூரியன் அதன் உஷ்ணம் அவர்கள் உண்கிற சோளத்தில் கம்பில் நெல்லில் உறைந்து போய் இருக்கிறது தனி விசேஷம் உள்ளது அது உருகும் பசு வெண்ணை போல் ஒதியூரின் இருட்டு’
 
ஒரு கிழவி சொல்கிறாள்:

‘மனுஷனுக்கு கொடுக்கிற தண்டனைலே எது பெருசு தெரியுமா, பிடிக்காதவங்க கொடுக்கிற சோற்றை தின்பது தான்.’
 
அந்த ஒதிய ஊரின் கண்ணுசாமி வாசித்த நாதஸ்வரத்திற்கு மயங்கிய காதர் சாகிப் புதுக்கோட்டை மன்னரிடம் அவரை அறிமுகம் செய்ய அங்கே விருந்தாளியாக வந்த பரோடா வணிகன் அவரை சமஸ்தானத்திற்கு அழைத்துச் செல்ல தெற்கிலிருந்து நாகேஸ்வரம் வடக்கே போனது
 
நீர்வீழ்ச்சிகள் போல் ராக பிர்காக்கள் பொழிந்தன.
 
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு சிஷ்யனை ஏற்றுக் கொண்டு அவனுடன் கச்சேரி செய்ய கந்தசாமி முன் வந்த போது பல பொதுமக்கள், வாத்தியக்காரர்கள் எதிர்த்தார்கள்.
 
பக்கிரி குருகுல வாசம் செய்த அவலத்தைப் படிக்கையில் நம் கண்களில் நீர் ததும்புகிறது.

திருக்கோயிலின் பூஜைக்கு நீர் கொண்டு வரும்போது மேகராகக் குறிஞ்சியும், குடமுழக்கின் போது தீர்த்தமல்லாரியும், தளிகை எடுத்து வரும்போது தளிகை மல்லாரியும், திருக்கல்யாணம் நடக்கும் போது கல்யாண வசந்தமோ நாட்டக்குறிஞ்சியோ வாசிப்பதை கேட்டே பக்கிரி பழகிக் கொள்கிறான். 12 வயதிலே அவனை குருகுல வாசமாக மருதூரில் சேர்த்து விட்டார் அவனது தந்தை. வேணுகோபால் என்ற குரு சொல்லியெல்லாம் தர மாட்டார், கேட்டு கற்றுக் கொள்ள வேண்டியதுதான். மேலும் அத்தனை வேலைகளையும் அவன் செய்ய வேண்டும், ஆனால், சரிவர சாப்பாடு கிடையாது.

நல்ல மழையில் வேணுகோபால் வீட்டு பெரும் சாணக்குழி உடைபெடுக்கிறது. பக்கிரி என்ற சிறுவன் குழியின் கரையை மண் கொண்டு அடைக்க வேண்டும். மழை பெய்யத் தொடங்கி விட்டது. வழுக்குகிறது. மண் வெட்டி சகதியில் சிக்கிக் கொள்கிறது. பலம் கொண்ட மட்டும் இழுக்கும்போது அவனே சாணக் குழியில் விழுந்து விடுகிறான். தோட்டக்காரன் வந்து அவனை வெளியில் இழுத்துப் போடுவதற்குள் சாணக் கரைசல் அவன் வாயில் புகுந்து, அவன் உடலெங்கும், குடலினுள்ளூம் சாணம். குமட்டிக் கொண்டு வருகிறது ஜுரம் வேறு வந்து விட்டது. பசியில் தவிக்கிறான். மறு நாள் இரவில் சிறிது கஞ்சி தருகிறார்கள். சுவை தெரியாமல் சாண வாடை மட்டுமே அவனைச் சூழ்ந்திருக்கிறது. அவனது தந்தையான வடிவேலு தானே குருவாக இருந்து அவனுக்குக் கற்பிக்கிறார். திறமை உள்ளவனை ஏற்றுக் கொள்ளாத குருவின் மேட்டிமை. ஓதியூர் கோயிலுடன் பக்கிரி முடங்கிவிடக் கூடாதென்ற தந்தையின் ஆதங்கம். கடைசியில் தந்தையே குருவாகிறார்.
 
 
தெக்கரைசாமிநாத பிள்ளைக்கு ஈடு இணை எவருமில்லை. ஒவ்வொரு சங்கதியிலும் பிர்க்காவோ, விரலடியோ இல்லாமல் இருக்காது. ராகத்தின் சொரூபத்தை ஜீவனோடு வெளிப்படுத்துவார். நாதஸ்வரத்தில் தனிக்கச்சேரி ஆரம்பித்து வைத்தவர் அவர்தான். ராஜரத்தினம் பிள்ளை போல நாதஸ்வர கலைஞர்களுக்கு தனி மரியாதை ஏற்படுத்தித் தந்தவர்.
 
அடுத்த ஊர் அருப்புக்கோட்டை.

மருத மரங்கள் அடர்ந்த சாலையில் லாரி போய்க்கொண்டிருந்தது. தேர்தல் எப்போது வரும் என்று அரசியல்வாதிகளை விடவும் கிராமியக் கலைஞர்கள் தான் அதிகம் காத்துக் கொண்டிருப்பார்கள்; கை நிறைய காசு, பிரியாணி எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா. அப்படி ஒரு அரசியல்வாதிக்கு வாசிக்க ஒப்புக்கொண்டு ரத்தினம் பக்கிரி சந்திக்கும் அவமானங்கள் மனதை வேதனையடையச் செய்கின்றன.
 
வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரின் தற்போதைய வாழ்க்கை நிலையும் மனதை பிசைகிறது கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
 
சித்தேரியில் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள வரும் ஹாக்கின்ஸ் கதையும் வருகிறது. அவன் அந்த ஊரைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியின் மகளைத் திருமணம் செய்து கொள்கிறான். அந்தக் கல்யாணத்தையும் மனமுவந்து ஆதரிப்பவர் ராகவையா மட்டுமே. மனிதம் எங்கோ இருக்கிறது என்று காட்டுகிறார் ஆசிரியர்.
 
அடுத்தது கொடுமுடி. நமக்கு நினைவு வருவது கே பி எஸ்
பக்கிரியின் அக்கா வீட்டிற்கு இருவரும் போகிறார்கள். அங்கே உரையாடலில் சாமர்த்தியமாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் இடம் பெறுகிறார்.
 
பனங்குளத்தில் பக்கிரி வைத்த நெருப்பு பல்வேறு  சம்பவங்களுக்கு அடி கோலுகிறது.
 
ஒரு அழகான பத்தி ‘எல்லாமும் நேற்று நடந்தது போல் இருக்கிறது காலம் கரைந்து போய்விட்டது. சிறுவயதில் எப்போது பெரியவராவோம் என ஏங்கிக் கொண்டிருந்தோம்; பெரியவன் ஆன பிறகோ திரும்ப அந்த சிறு வயது கிடைக்காதா என்று ஏக்கமாக இருக்கிறது.’
 
‘ஏன் நம்மை மோசமாக பாதித்தவர்களை நாம் நினைவில் வைத்துக் கொண்டுள்ளோம்? விசித்திரமான மனிதர்கள், வலியூட்டும் நினைவுகள், மறக்க முடியாத பயம்.’
 
இவர்களின் லண்டன் பயணம் இவர்களின் நிலையை மேலும் பரிதாபத்திற்கு உரியதாக்குகிறது. இலண்டன் குளிரில் ரொட்டியும், வெண்ணையும் இவர்களுக்குப் பிடிக்கவில்லை. சூடான உணவிற்கு ஏங்குகிறார்கள். ஐந்து நிமிட வாசிப்பிற்கு ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. அப்படியும், இசை இரசிகர்கள் அந்தக் கூட்டத்தில் இல்லை.
 
பார்வை இல்லாத தன்னாசி, அவனை ஆதரிக்கும் சரஸ்வதி என்ற இளம் பெண், அவனைத் தன் வீட்டில் ஒரு பிள்ளையென அனுமதித்துக் கொள்ளும் அவளது அப்பா, பின்னர் அவர்களைத் தவறாகப் புரிந்து கொண்டு அவனை அடித்து அவளை கண்டிக்க அவள் ரோஷத்தில் இறந்த போக இவன் கிட்டத்தட்ட பித்தாகி அலைகிறான். மசானத்தில் தங்குகிறான். தன்னாசி ஆசாரி வேலை கற்க வந்தவன். நாகஸ்வரத்தில் பித்தாகி தானே முயன்று கற்றுக் கொள்கிறான். அவன் பிறரைத் துன்பப்படுத்தி குரூர மகிழ்ச்சி அடைந்தாலும், அவன் இசைக்கு மக்கள் மயங்குகிறார்கள்.
 
பின்னர் தென்பாடியார் வீட்டிற்குப் போகிறான்

ஷட்ஜம் மயில் அகவல்
ரிஷபம் மாடு கத்துதல்
காந்தாரம் ஆடு கத்துதல்
மத்தியமம் அன்றில் பறவை கூவுதல்
பஞ்சமம் குயில் கூவுதல்
தெய்வதம் குதிரை கனைப்பது
நிஷாதம் யானை பிளிருவது

சப்த ஸ்வரங்களை லய உலகில் அருமையாகச் சொல்கிறார் ஆசிரியர். இதைப் படிக்கும்போது தி. ஜாவின் மோக முள்ளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. பாபுவின் குரு ரங்கண்ணா, சேவலின் கூவலில், துணி துவைக்கும் சப்தத்தில், வலியன் குருவிகளின் குரலில் இலங்கும் ஸ்வரங்களைச் சொல்லும் பகுதி அது. திரு. கிரிதரன் ராஜகோபாலனின் ‘காற்றோவியம்’ ‘தந்தி இசையில் ஒரு புதிய பாய்ச்சல்’ ‘காலத்தின் முடிவிற்காக ஒலித்த இசை ஆகியவற்றையும் ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.
 
இரண்டு சித்திரக்குடி இருக்க இவர்கள் வேறு ஊருக்கு போய் அலைந்த அவலமும் இதில் வருகிறது. ஊர் மாறி, கிழக்கே, மேற்கே என்று அலைந்து, திருவிழா நடக்காத சித்திரக்குடிக்கு இவர்கள் நடந்து நடந்து வந்து சேர்கிறார்கள். ஏழைக் கிராமம் அது.  இந்த நால்வருக்கும், தனித்தனியே நால்வர் வீட்டில் அரை வயிற்றிற்கு    அந்த ஏழைகள், கூழோ, கஞ்சியோ, சோறோ கொடுக்கிறார்கள். இவர்களும் அவர்களுக்காக வாசிக்கிறார்கள். மனிதம் அங்கே வெல்கிறது.
 
பொம்மக்காபுரம் என்ற ஊரைப் பற்றி வருகிறது

கிழக்கே இருந்து தான் காற்று புறப்படுகிறது. அதிகாலை நேரங்களில் அது அடங்கி இருக்கிறது சூரியன் எழத் தொடங்கியதும் அதுவும் விழித்துக் கொண்டு விடுகிறது கரிசலின் காட்டிற்கும் ஒரு கதை இருக்கிறது.
 
செத்துப்போன வலியன் தன் ஆடுகளைத் தேடி காற்றாக அலைகிறான். வீடுகளை, மரம் செடி கொடிகளை புரட்டிப் புரட்டி தேடுகிறான். மண்ணில் புதை உண்டு கிடந்த பனம் பழம் ஒன்றைப் போல் பாதி வெளியே தெரிந்தும் பாதி தெரியாமலும் மறைந்து கிடக்கிறது ஊர். ‘மனுஷன் மாதிரி தான் ஊர்களும். அதுகளும் வயசாகி மண்ணுக்குள்ள போக வேண்டியதுதான்.’
 
ஊமை ஐயர் என்று ஒரு பாத்திரம் இருக்கிறது கிட்டத்தட்ட சுப்புடுவை போன்றது. அவரது வயதான காலத்தில் பக்கிரியின் வாசிப்பிற்கு அவர் கட்டிலில் இருந்து எழுந்து நிற்கிறார். அப்பேர்ப்பட்ட கலைஞனை மதிக்காத மனிதர்கள் அநேகம் பேர்.
 
நாதஸ்வரத்தில் எட்டு விதமான பயிற்சிகள் தத்தகாரம், தன்னகாரம், துத்துகாரம், அகாரம், வழுக்கு, அசைவு, பிர்கா விரலடி.
 
நல்ல வித்தை கற்ற கலைஞர்கள் சரியான விளம்பரமற்று ஜாதியின் பெயரால் இழிவுபடுத்தப்பட்டு தன்மான உணர்வில் பக்கிரி பற்ற வைத்த தீ அவர்கள் இருவரையும் காவல்துறையின் வேட்டையில் நிறுத்துகிறது.
 
மொழி இன நிற பால் பேதங்கள் கலைக்கு இல்லை என்று ஒரு சாரார் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள்.
அத்தனை பேதங்களையும் பார்த்து அதன் பின் கலைஞர்களை அங்கீகரிக்கும் சமுதாயம் மிக அதிக நபர்களைக் கொண்டிருக்கிறது.
 
ஆத்மாவின் இசையாக அவர்கள் இசைக்கும் நாதஸ்வரத்தில் எஞ்சிய ஒலி கண்ணீரின் விசும்பல்.

தியாகராஜ சுவாமிகள் பாடுகிறார் நாபி ஹ்ருத் கண்ட ரசனா
என்று புரிந்து கொள்ளப் போகிறோம்?