
இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான சாகித்திய அகாதெமி விருது ‘அலை ஓசை’ நாவலுக்காக எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு 1956ஆம் வருடம் வழங்கப்பட்டது. ‘அலை ஓசை’ கல்கி இதழில் தொடராக முதலில் வெளிவந்தது. அதற்கு பிறகு அதனை நாவல் வடிவத்தில் பதிப்பித்த போது ஆசிரியர் எழுதிய முன்னுரையில் “நான் எழுதிய நூல்களுக்குள்ளே ஏதாவது ஒன்று ஐம்பது அல்லது நூறு வருஷம் நிலைத்து நிற்கத் தகுதியுடையதென்றால் அது ‘அலை ஓசை’ தான்,” என்று எழுதியிருப்பார்.
நாவலின் கதை 1930 – 1947ஆம் ஆண்டு வரையில் நமது இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்தின் முக்கிய சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சம காலத்தில் வாழ்ந்த ஆசிரியர் அவர் பார்த்து, கேட்டு, படித்து, தெரிந்து கொண்ட பல்வேறு உண்மைச் சம்பவங்களை கதை மாந்தர்களின் அனுபவங்களாக வாசகர்களுக்கு தருகிறார்.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் தமிழ் நாவல் அலை ஓசை
கதைச் சுருக்கம்
கதையின் கதாநாயகி சீதா. துரைசாமி – ராஜம் தம்பதியினரின் மகள். பம்பாயில் ஓர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பெண். சீதா அழகானவள். ஓரளவு படித்தவள். கதாநாயகி என்பதற்காக அவளை தியாகத்தின் உருவமாக, அப்பழுக்கற்றப் பெண்ணாக ஆசிரியர் படைக்கவில்லை. சீதா கதாப்பாத்திரத்தின் முக்கிய குணாதீசியம் அவளது சஞ்சல புத்தி. மேலும் அவள் ஒரு ரொமாண்டிக் பர்சன். கதைகளிலும் கற்பனையிலும் வாழ்பவள். அத்தனைக்கும் ஆசைப் படுபவள்.
பதினாறு வயது சீதாவை அழைத்துக் கொண்டு ராஜம் அம்மாள் ராஜம்பேட்டையில் உள்ள தனது அண்ணன் கிட்டவையைர் வீட்டிற்கு வருகிறாள். சீதாவின் மாமன் மகள் லலிதா அவளது உற்ற தோழி. லலிதாவின் அண்ணன் சூர்யா சீதாவின் மேல் ஒருதலையாகக் காதல் கொள்கிறான். இதற்கிடையில் லலிதாவைப் பெண் பார்க்க மெட்ராசிலிருந்து சௌந்திரராகவன் வருகிறான். அவன் சீதாவின் அழகிலும் அவள் பேச்சிலும் மயங்கி அவள் மீது காதல் கொள்கிறான். இதனை வெளிப்படையாகவும் கிட்டாவையரிடம் சொல்கிறான். பார்த்தவுடன் காதல் என்பது போல சீதாவிற்கும் ராகவனை பிடித்திருந்தது. சீதாவிற்கு நல்ல வாழ்க்கை அமையவேண்டி தனது ஏமாற்றத்தையும் தாண்டி சூர்யாவே குடும்பத்தினரைச் சம்மதிக்க வைத்து சீதா – ராகவன் திருமணத்தை முன் நின்று நடத்தி வைக்கிறான். அதே மேடையில் லலிதாவிற்கும் தனது சிநேகிதன் பட்டாபிராமனுக்கும் திருமணம் நடத்தி வைக்கிறான்.
சீதாவின் மனம் போலவே அவளுக்கு காதல் திருமணம் நடந்தேறியது. சர்காரில் நல்ல உத்தியோகத்தில் உள்ள ராகவனுடன் அவள் டில்லி பயணிக்கிறாள் . அங்கே ராகவன் இறந்துபோய்விட்டதாக கருதிய, சீதாவின் உருவ ஒற்றுமையுடன் விளங்கிய தனது முன்னாள் காதலி தாரிணியை மீண்டும் சந்திக்க அவர்கள் இல்வாழ்க்கையில் பிரளயம் ஏற்படுகிறது. அதன் பிறகு அநேக சண்டைகள், சச்சரவுகள், இட மாற்றங்கள், மன மாற்றங்கள் அனைத்தையும் தாண்டி ராகவனும் – சீதாவும் மனமொத்து சேர்ந்து வாழ்ந்தார்களா என்பது தான் கதை.
சீதா – ராகவன் தம்பதியோடு இணைந்து வாசகர்களாகிய நாமும் டில்லி, ஆக்ரா, ரஜினிபூர் சுதேச சமஸ்தானம், கல்கத்தா, பஞ்சாப் ஆகிய இடங்களுக்குப் பயணிக்கிறோம். டில்லியில் வசித்த சர்கார் ஆபீசர்களின் வாழ்க்கைமுறை, காங்கிரஸ் கூட்டங்கள், சோஷியலிச சிந்தாந்தங்கள், காங்கிரஸ் மிதவாதிகள்/ தீவிரவாதிகள் முரண்பாடு, இந்து மற்றும் இஸ்லாமியர்கள் இடையே இருந்த பிரச்சனை, பாகிஸ்தான் தனி நாடு கோரி கல்கத்தாவில் 1946ஆம் ஆண்டு நடந்த கலவரங்கள், 1947இல் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது பஞ்சாபில் நடந்த கலவரங்கள், பானிபத் அகதிகள் முகாமில் அகதிகளின் வாழ்க்கை என்று அந்தக் காலகட்டத்தில் நடந்த முக்கியச் சம்பவங்களைக் கதையின் மூலம் வாசகர்களுக்குத் தத்ரூபமாகக் காட்டியுள்ளார் ஆசிரியர். உச்சகட்டமாக மகாத்மா காந்தியின் மரணத்தில் ‘அலை ஓசை’ யை முடித்து வாசகர்கள் நெஞ்சத்தில் என்றும் அழியாக் காவியமாக அலை ஓசையைப் படைத்துள்ளார் கல்கி.
வரலாறு மற்றும் சமகால வரலாறு
ஆசிரியரின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று நாவல்கள் உலகளவில் வெகு பிரசித்தம். சோழர்கள் வரலாறும் , பல்லவர்கள் வரலாறும் நம்மில் பலருக்குக் தெரியக் காரணம் ஆசிரியரது மேற்கூறிய நாவல்கள். வரலாற்றைக் கதைகள் மூலம் மக்களிடம் சேர்ப்பது எளிது. ஆனால் சுமார் ஆயிரம் வருடத்திற்கு முன்னால் நடந்த வரலாற்றுக் கதைகள் எழுதும் போது ஆசிரியரின் கற்பனையை மட்டும் வைத்துக்கொண்டு ஈடுகட்டிவிடலாம்.
ஆனால், ‘அலை ஓசை’ போன்ற சமகால வரலாற்று பின்னணியில் கதை எழுதுவது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் நடந்த சம்பவங்களுக்கு நிறைய வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. அதனால் எழுதுவதற்கு முன்பு அவர் கதையில் குறிப்பிட்டிருந்த பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு எழுதியுள்ளார். அதே போல அவர் படித்துத் தெரிந்துகொண்ட சில உண்மை சம்பவங்களை கதை மாந்தர்களின் உரையாடல்கள் மூலம், கதையின் ஓட்டத்தில் சிறு சிறு சம்பவங்களாகவும் இணைத்துள்ளார். சமகால வரலாற்றுக் கதைகள் எழுதுவதில் ஆசிரியர் ஓர் முன்னோடி என்றால் அது மிகையாகாது.
நாம் இந்த நாவலை படிக்கும் போது அதனை வெறும் கதைக்காக படிப்பதைத் தவிர்க்க வேண்டும். ‘அலை ஓசை’ என்பது கதையைத் தாண்டி ஓர் சிறந்த வரலாற்று ஆவணம். கதையில் ஓரிடத்தில் சூர்யாவிற்கு வந்த ஒரு கடிதத்தை அதிகாரிகள் பிரித்துப் படித்து திரும்பவும் அந்த உரையை சீல் செய்து அனுப்புவது போல எழுதியிருப்பார். ஏனெனில், அந்த காலக்கட்டத்தில் புரட்சிக்காரர்கள் என்று அறியப்பட்ட சில சுதந்திர போராட்ட வீரர்களின் கடிதப் போக்குவரத்தை அரசு கண்காணித்து வந்தது.
அலை ஓசையின் பெண் கதாப்பாத்திரங்கள்
நான்கு பாகங்களைக் கொண்ட இந்த நாவலில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அதன் பல்வேறு கதாப்பாத்திரங்களின் உரையாடல்கள் மற்றும் எண்ண ஓட்டங்கள். கதை மாந்தர்கள் வெவ்வேறு தருணங்களில் தனக்கு வேண்டப்பட்டவர்களிடம், நெருக்கமான உறவினர்களிடம், அதே சமயத்தில் பிடிக்காத நபர்கள் மற்றும் உறவினர்களிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை மிகவும் தத்ரூபமாக எழுதியிருப்பார் . மனித மனங்களை உளவியல் ரீதியாக அலசும் ஓர் முயற்சி என்று கூட அலை ஓசையைக் கூறலாம்.
இந்த நாவலில் முக்கிய பெண் கதாப்பாத்திரங்கள் சீதா, லலிதா தாரிணி. சீதா மிகவும் சஞ்சல புத்தி உடையவள். தன் மேல் பிரியமாக உள்ளவர்களை கூட முழுவதும் நம்பாதவள். புகழுக்காக ஏங்குபவள். புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான ஓர் கதாப்பாத்திரம்.
சீதாவின் மாமன் மகள் லலிதா மிகவும் வெகுளியான பெண். தான், தன் குடும்பம், தன் சுற்றம் என்று குறுகிய வட்டத்தினுள் வாழ்பவள். சூது தெரியாதவள். சீதாவின் அபிமானி. ஒரு முறை லலிதா வசிக்கும் தேவப்பட்டிணம் ஊரில் மழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட, எத்தனையோ மக்கள் அந்த ஊரின் ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்து இருப்பதைக் கண்ட சீதாவும், லலிதாவின் கணவன் பட்டாபிராமனும் அந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று யோசிக்கின்றனர். ஆனால் லலிதாவோ வீட்டிற்கு சென்று சமைக்க வேண்டும், குழந்தைகளின் ஈரத் துணியை மாற்ற வேண்டும் என்பது போல எண்ணுவாள்.
பேரழகியான தாரிணி கதையின் மற்றும் ஒரு முக்கிய கதாப்பாத்திரம். பிறந்தவுடன் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்த சீதாவின் மூத்த சகோதரி. விதி வசத்தினால் அவள் ஓர் இசுலாமிய வீட்டில் வளர நேரிட்டது. தாரிணி தனது பிறப்பின் ரகசியம் தெரிந்து சீதாவைத் தேடிவருகிறாள். அவளுக்கு ஒரு அரணாகவும் பல சமயங்களில் காக்கிறாள். தாரிணி ஓர் சமூக சேவகி மற்றும் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொள்கிற ஓர் இளம் பெண்ணாகக் கதையில் வலம் வருகிறாள்.
கதையில் பல்வேறு இடங்களில் வாசகர்களுக்கு சீதாவின் மீது வெறுப்பு ஏற்படும் அளவிற்கு அவளது பாத்திரப் படைப்பு அமைந்திருந்தாலும், அவள் கண்ணியத்தை எவ்விடத்திலும் குறைக்காமல் கல்கி எழுதிய விதம், ஒரு பெண்ணாக எனக்கு மிக்க சந்தோஷத்தை அளிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு ஆணாக இருந்து கொண்டு இந்த மூன்று பெண்களின் எண்ண ஓட்டங்களை அவர் பிரதிபலித்த வண்ணம் வியக்கத்தக்கது.
சிறந்த படைப்பு
‘அலை ஓசை’ நாவலை நாம் சீதா , ராகவன், தாரிணி சூர்யா, லலிதா பட்டாபிராமன் ஆகியோரின் கதையாக மட்டும் பார்க்காமல் சற்று விலகிப் படித்தால் அந்தக் காவியத்தின் பல்வேறு கோணங்கள் நமக்கு விளங்கும். ஆசியருக்கே உரித்தான இயல்பான நடை, நகைச்சுவை உணர்வு, அரசியல் நுட்பம், சாதுர்யம், தேச பக்தி, தெய்வ பக்தி ஆகியவற்றை நாம் ரசிக்க இயலும். காலத்தைக் கடந்து உயிரோடு இருக்கும் அவருடைய நாவல் ‘அலை ஓசை’ என்ற கூற்று அவர் அன்று எழுதியிருந்த பல்வேறு அரசியல் பிரச்சனைகள் இன்றளவிலும் , சுமார் நூறு ஆண்டுகள் கடந்தும் உயிரோடு இருக்கிறது என்ற கோணத்திலும் பலித்து விட்டது.
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பல்வேறு தமிழ் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட காரணத்தால் இணையத்தில் எளிதாகக் கிடைக்கின்றன, அதேபோல பல்வேறு பதிப்பாளர்கள் அந்த நூல்களைக் குறைந்த விலையில் பதிப்பித்துள்ளனர். நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் அலை ஓசை. ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும் போது நமது முதிர்சிக்கு ஏற்ப முற்றிலும் மாறுபட்ட உணர்வை இந்நூல் தரவல்லது.
