
(ஒரு கொசுவின் புலம்பல்)
கொசுவாய் பிறப்பது தானென்பேன்அன்பு நெஞ்சம் கொண்ட மனிதரே,
என் கடிதத்தில் உங்களை அன்பு நெஞ்சம் கொண்டவர் என அழைத்ததில் நக்கலோ உள்குத்தோ இல்லை. ஆண்டு ஆண்டாக ‘அன்பே கடவுள்’ ‘அன்பே சிவம்’ என்று மற்றவர் கூறக் கேட்டும் மற்றவர்களுக்கு சொல்லியும் நீங்கள் வளர்ந்து வந்தீர்கள் என்பது எனக்கும் தெரியும்.
என்றாவது ஒரு நாள் மாறுதலுக்காக அறிஞர்களுடைய இரத்தத்தை உறிஞ்ச விரும்பினால் நான் இலக்கிய கூட்டங்களுக்குச் செல்வது வழக்கம். அங்கெலாம் உங்கள் திருவள்ளுவரும், திருமூலரும், வள்ளலாரும் அன்பின் வலிமை பற்றி கூறியதை என் காது குளிரக் கேட்டுள்ளேன்.
எனவே அன்பு செலுத்துவது குறித்து நான் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியது இல்லை.
என் கடிதத்தை என்றாவது ஒரு புலியோ, சிங்கமோ படிக்க நேர்ந்தால் அதற்கு ‘அன்பு’ என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாது அகராதியைத் தேடி ஓடும். உங்களை ஒரே அடியில் கொல்லும் சிங்கத்தையும் புலியையும் நீங்கள் தாங்குகிறீர்கள்.
எனது ஒன்று விட்ட பங்காளிகளான மூட்டைப் பூச்சிகளை பெரும் பாலும் அழித்தே விட்டீர்கள். அவைகள் என்ன பாவம் செய்ததன. கட்டிலிலும், சுவர் இடுக்குகளிலிலும் யாருக்கும் தொந்திரவு இல்லாமல் மறைந்து, பயந்து வாழ்ந்து வந்தன.
ஏழைகளின் உழைப்பையும், அடுத்தவர் சொத்தையும் உறிஞ்சி கொழுக்கும் மனிதர்களுக்கு இணையாக, உயிர் வாழ ஒரு துளி இரத்தம் உணவாக கொள்ளும் எங்களை இரத்த உறிஞ்சிகள் என அழைப்பதைக் கேவலமாக நினைக்கிறேன்.
எங்களை இனி மேலாவது இரத்த உண்ணிகள் என அழைக்கலாமே?
“கல்லினுள் சிறு தேரைக்கும் கருப்பையா டத்து உயிர்க்கும் புல்லுண வளித்துக் காக்கும் புனத்துழாய்க் கண்ணி யண்ணல்”- என உங்களில் ஒருவர் கூறியது போல கல்லினுள் உள்ள தேரைக்கும், கருப்பையில் இருக்கும் உயிர்க்கும் உணவளிக்கும் இறைவன்தான் என்னையும் படைத்து எனக்கு உணவாக உங்கள் இரத்தத்தையும் படைத்துள்ளான்.
இதில் நான் செய்த பாவம் என்ன?.
ஒரு தடவை மிகவும் பசியெடுத்து பசியாற அருகில் இருத்த கோவிலுக்குள் நுழைந்தேன். அங்கு ஒரு பெரியவர் “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்” என்று வருத்தமுடன் பேசினார். அவரைக் கடிக்க மனமில்லாமல் பசியுடன் திரும்பினேன்.
அவர் கூறிய பிறவிகளில் ஒன்று என்னைப் போன்ற கொசுவாகவும் இருக்கலாமே? நீங்கள் எடுத்த அல்லது எடுக்கப் போகும் பிறவியாகிய என் இனத்தையே அழிக்க நினைக்கும் கொடிய மனது உங்களுக்கு எங்கிருந்து வந்தது?
நான் பிறந்து வாழ்க்கையில் போரடிப் படும் துண்பங்களைச் சொன்னால் உங்களுக்கே என் மீது பரிதாபம் வரும். வாழ்க்கையில் ஒரு நாள், ஒரே ஒரு நாள்,கொசுவாய் வாழ்ந்து பாருங்கள் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்.
முன்பெலாம் தனித்தனி வீடுகளாக இருக்கும். கழிவு நீர் வீடுகளின் கொள்ளையில் சாக்கடையாய் வழிந்தோடும். நாங்கள் அங்கிருந்த சாக்கடையில் வசித்து அந்த வீட்டில் இருந்தவர்களின் இரத்தத்தை மட்டும் உண்டு நிம்மதியாக வாழ்ந்தோம்.
இன்றோ நகர மயமாக்கியதில் சாக்கடைகள் குறைந்து சரியான உறைவிடம் இல்லாமல் கஷ்டப் படுகிறோம். எங்களால் ஒரு உயரத்திற்கு மேல் பறக்க முடியாது எனத் தெரிந்தும் வீடுகள் அடுக்கு மாடிகளாகின. உயரே செல்வதற்கு யாரவது வந்து லிப்ட் கதவுகளை திறக்கும் வரை நாங்கள் காத்திருந்து லிப்டைப் பிடித்து மேல் மாடிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.
கொடுமையிலும் கொடுமை எங்களைக் கொல்ல எத்தனை விதமான கருவிகளை கண்டு பிடித்துள்ளீர்கள். எவ்வளவு கொடூரமாக எங்களை ஸ்பிரே கொண்டு அழித்தாலும் பேட் வைத்து அடித்தாலும், வத்திச்சுருள் வைத்து விரட்டினாலும் கேளா ஒலி வைத்து எங்களை அழித்தாலும் நாங்கள் உங்களுக்கு தீங்கு நினைப்பதில்லை.
தயவு செய்து சற்று யோசித்துப் பாருங்கள்.நோயைப் பரப்பும் ஈயைக் கதாநாயகனாக வைத்து சினிமா எடுத்த உங்களுக்கு என் போன்ற கொசுவை வைத்து படம் எடுக்க மனம் வந்ததா.
ஏன் எங்களையும் ஓர் உயிரினமாக மதித்து சட்டங்கள் இயற்ற நீங்கள் போராடக் கூடாது?
எனது ஒரே வேண்டுகோள், நீங்கள் நன்றாக வாழும் பொழுது எங்களையும் வாழ விடுங்கள்.
எங்களை கொன்ற பாவத்தை சுமந்து உங்களது அடுத்த பிறவி கொடுமையை அனுபவிக்கும் கொசுவாக இருக்க வேண்டாம் என நம் அனைவரையும் படைத்த இறைவனை வேண்டுகிறேன்.இப்படிக்கு உங்கள் மீது அன்பு கொண்ட
கொசு ( எங்களில் பெயர் வைத்து அழைக்கும் பழக்கம் இல்லை)
