நினைவோ ஒரு பறவை – 09.11.24 அன்று நடைபெற்ற சியேட்டில் சிகரம் குழுவினரின் நாடகம்
குடும்பம் என்ற சங்கிலித் தொடரை விளக்கும் நாடகம்.
டம்மீஸ் நாடகக் குழுவில் ஸ்ரீவத்சன் இயக்கத்தில் வந்த ஷியாமளம் என்ற நாடகத்தின் சியேட்டில் வடிவம்தான் இந்த நினைவோ ஒரு பறவை .
1952 இல் வாழ்ந்த ஒரு ஆதரஸ்ச தம்பதியரின் அற்புதக் கனவு தமது சந்ததிகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் கட்டிய வீடு. அந்த வீட்டை எல்லோரும் சேர்ந்துதான் விற்க வேண்டும். அதுவும் ஏதாவது பெண்ணின் திருமணத்திற்காகவே என்று உயில் எழுதிய மூதாட்டி. அந்த வீட்டைக் காக்கும் பொறுப்பை அவர்கள் குல தெய்வம் கருப்பண்ணசாமியிடம் ஒப்படைக்கிறார்.
ஒவ்வொருவரும் வீட்டை விற்க முயலும்போது எப்படிக் குல தெய்வம் தடுக்கிறது என்பதை நகைச்சுவை , சென்ட்டிமென்ட், பாட்டு ,நடனம் அனைத்தையும் இணைத்துக் கொடுத்திருக்கின்றனர் சிகரம் குழுவினர்.
நடிப்பு, மேடை அமைப்பு , வசனம், ஒலி, ஒளி ,இசை, நடனம் அனைத்தும் முதல் தரம்
மூன்று மணி நேரம் சினிமாக்களே இல்லாத இந்தக் காலத்தில் 3 மணி நேர நாடகம் ஆச்சரியமூட்டுகிறது.
கதையின் மையம் – குடும்பம் என்ற இழையைச் சங்கிலித் தொடராக ஒவ்வொரு சந்ததியினரும் ஏற்றுக்கொண்டு அந்தப் பாரம்பரியத்தின் பெருமையை நினைவுகள் மூலம் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்பதே!
அதற்கு அந்த வீடு ஒரு குறியீடு !
200 க்கும் மேற்பட்டவர்களின் உழைப்பு நன்றாகத் தெரிகிறது.



