Beating Retreat Wagah India

இந்த வாரமும் பரோடா வங்கி – மண்டலங்களுக்கு இடையேயான நாடகப் போட்டியில் பார்த்த நாடகம்.

இதுவும் மிக மிக வித்தியாசமான ஒரு கதைக்களம். ரொம்ப வித்தியாசமான, அதற்க்குப்பின் இதுவரை பார்க்காதது.
பெயர் நினைவில் இல்லை, பூனே குழுவின் நாடகம்.

இந்தியா – பாக்கிஸ்தான் பார்டர் (எல்லை). இரண்டு பக்கமும் இரும்பு முள் வேலி. இடைவெளி 7 / 8 அடி இருக்கலாம். இரண்டு பக்கமும் அந்த அந்த நாட்டின் ராணுவ வீரர்கள். இந்த பக்கம் இந்திய வீரன். அந்த பக்கம் பாகிஸ்தான் வீரன். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் வெறுப்போடு பார்த்துக் கொண்டு நடை போடுகிறார்கள். மிரட்டுவது போல செய்கை செய்கிறார்கள். விளக்கு இணைந்து எரிகிறது வேறு இரண்டு பேர் அவர்களின் இடத்துக்கு வருகிறார்கள். அவர்கள் டியூட்டி நேரம் முடிந்து வேறு இரண்டு பேர்.

மறுநாள் மீண்டும் அவர்களின் பணி நேரத்தில் மீண்டும் சந்திக்கிறார்கள். நாட்கள் நகர்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு குறைகிறது.

ஒரு நாள் பாகிஸ்தான் பக்கம் வேறு ஒரு வீரன் வருகிறான். 4 நாள் கழித்து பழைய ஆள் வருகிறான். செய்கையில் என்ன ஆச்சு 4 நாள் காணவில்லை என்று கேட்கிறான். உடம்பு சரியில்லை என்று செய்கையில் விளக்குகிறான்.

“இப்போ தேவைலயா” என்று சத்தமாக அந்தப் பக்கம் கேட்கும்படி கேட்கிறான். இப்ப ok என்று சொல்கிறான்.

பின்னர் மெல்ல மெல்ல இவரின் குடும்பம் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்கிறார்கள்.

வெகு இயல்பாக மெல்ல மெல்ல அந்த நட்பு மலர் வதை இசை மற்றும் செய்கையால் நமக்குப் புரிய வைப்பார்கள். நம்மை அறியாமல் நம் மனதும் நெகிழ்ந்து விட்டது.

தன் மகன், மனைவி படங்களை ஒருவருக்கு ஒருவர் காட்டிக் கொள்வார்கள். காலை வணக்கம் பிரியும் போது பை பை என்று செய்கையால் சொல்லிக் கொள்வார்கள்.நாட்கள் செல்வதை மீண்டும் இசை, சைகை மூலம் புரிய வைப்பார்கள்.

சில நாட்கள் இந்திய வீரன் வர மாட்டான். தயங்கி த் தயங்கி புதிய வீரனிடம் விசாரிப்பான். அவ்வளவு பழக்கமில்லாத அந்த வீரன், வேறு ஒரு இடத்தில் காவலில் இருக்கும் போது துப்பாக்கி குண்டு பட்டு இறந்துவிட்டான் என்று சொல்லி விட்டு அவன் துப்பாக்கியை தூக்கியபடி வேலி ஓரம் நடக்கத் துவங்கு வான்.

பாகிஸ்தான் வீரன் எங்கோ வெறித்துப் பார்த்தபடி சிலை போல நிற்பான், கண்களில் இருந்து கண்ணீர் வழியும் – மெல்ல விளக்கு இணைவதற்கு முன் அவன் மேல் மட்டும் வெளிச்சம் படும், இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொள்வான் விளக்கு அணையும்.

கைதட்டல் வெகு நேரம் ஓயவில்லை.

சின்ன நாடகம், அதிக வசனங்கள் இல்லை, அதிக நடிகர்கள் இல்லை. மெல்ல மெல்ல மனதில் நுழைந்து யாரா இருந்தாலும் மனிதாபிமானம் என்பது ஒன்றுதான் என்று புரிய வைத்தது. ‎