நடைபாதை: எழுதியவர்: இதயன் குப்புசாமி

                                                                  

           சில புத்தகங்களை அவற்றிலுள்ள ஏதோ ஒன்று நம்மைத் திரும்பத் திரும்பப் படிக்கும்படித் தூண்டுகிறது. இது அப்படிப்பட்ட புத்தகம். ஆனந்தவிகடனில் தொடராக வெளியானபோது படித்திருக்கிறேன். அந்தப் பதின் வயதில் பாதி சமாச்சாரங்கள் புரியாமல்தான் படித்திருக்கிறேன். பின்பு கல்லூரிப் பருவத்தில் ராணிமுத்தாக வெளிவந்தபோதும் வாங்கிப் படித்திருக்கிறேன். கதை சொல்லப்படும் போக்குக்காகவும், அதில் காணும் விறுவிறுப்பான சம்பவங்களுக்காகவும், ‘இப்படியெல்லாம் நடக்கக் கூடுமா/ நடக்கும்’ எனும் பிரமிப்பு மாறாத நிலைக்காகவுமே இதனைப் படிக்கப் பரிந்துரை செய்வேன். நம் குவிகம் குறும் புதின இதழுக்காகக் கூட யாராவது இதனைக் குறுநாவலாகச் சுருக்கலாம். சமீபத்தில் இது இணையத்தில் ‘கிண்டில்’ பதிப்பாகக் கிடைத்தது, எனது எண்ணங்களையும் கதையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

           பெற்றோரின் கண்டிப்பைப் புரிந்து கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடிப்போகும் ஒரு சிறுவனின் கதை. அவன் என்னவெல்லாம் அனுபவங்களை எதிர் கொள்கிறான், எப்படித் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான் என்பதை எல்லாம் விலாவாரியாக விளக்கும் ஆசிரியர் இதயன் குப்புசாமி. இவர் வேறு ஏதாவது சிறுகதை, நாவல் எழுதியுள்ளாரா எனத் தெரியவில்லை.

கதைக்குள் புகுமுன் திரு. ராஜாஜி அவர்கள் முன்னுரை எழுதியுள்ளதினை நாம் படித்தால்தான் இப்புத்தகத்தின் தாக்கம் நமக்குப் புரியும்.

           ராஜாஜி கூறுகிறார்:

           சென்னை நகரில் அதி புத்திசாலியான பையன்கள் யார்?

           இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதில் எனக்குத் தயக்கமே கிடையாது. சிறிதும் பயமின்றி, சிரித்த முகத்துடன், பெற்றோராலோ, பள்ளி ஆசிரியராலோ கவனிக்கப்படாமல், தன்னைத் தானே பேணிப் பாதுகாத்துக் கொண்டு, உதவி கேட்போருக்கு சிறிதளவு அன்பையே பிரதி உபகாரமாகப் பெற்று சின்னஞ் சிறு உதவி செய்கிறானே; போலீஸ்காரர், கடைக்காரர், வீதியில் போவோர் வருவோர் அனைவருக்கும் நண்பனாக இருந்து கொண்டு, மதிப்பிட முடியாத ஒழுக்கமுள்ள குட்டிக் கனவானாக (Tiny Young Gentleman) விளங்குகிறானே, அந்த அநாதைச் சிறுவன் தான் அவன்.

           ஆனால், அந்தோ! என்னையும் உங்களையும்விட அதி புத்திசாலியாக விளங்கும் அந்தச் சிறுவனைப் பற்றிச் சிறப்புற எழுத இந்தியாவில் ஒரு சார்லஸ் டிக்கன்ஸ் இல்லையே! நாம் உதவி தேடிச் செல்லும் பலரைவிட, ஒருக்கால் இந்தச் சிறுவன் உயர்ந்தவனாக இருக்கலாம். வாசகர்களே! இந்தச் சிறுவனை எங்கு சந்தித்தாலும் அவனிடம் தோழமை கொள்ளுங்கள்.

சி. ராஜகோபாலாச்சாரி

           (1952 ஒய்.எம்.சி.ஏ. 14வது வருடம் ‘கார்னிவ’லின்போது வெளியான மலரில் வெளியான கட்டுரை.)

           கதாநாயகன் ஜார்ஜ் எனும் ராஜாவிற்கு மிகவும் பொருத்தமான அறிமுகம். ராஜாஜி அவர்களின் குறையைத் தீர்த்து வைத்தவர் தமிழ்நாட்டின் டிக்கன்ஸான இதயன் அவர்கள்தான். இந்த முன்னுரையுடன் கதையைத் திரும்பப் படித்தபோது உள்ளம் உடனே ராஜாவிடம் சென்று ஒட்டிக் கொண்டு விட்டது.

           வீட்டில் தந்தை திட்டியதற்காக வீட்டைவிட்டு ஓடித் திருட்டு ரயிலேறி, அங்கு மார்க்கசகாயம் எனும் ஒரு நண்பனைச் சம்பாதித்துக்கொண்டு, பம்பாயைச் சென்றடைகிறான் ராஜா. ஷூ பாலிஷ் வேலையிலிருந்து பலப்பல வேலைகளில் ஈடுபட்டு எப்படியோ நண்பர்களையும் சில பெரியவர்களின் நம்பிக்கையையும் அன்பையும் சேர்த்துக் கொள்கிறான். இதனிடையே ராணி எனும் ஒரு சிறு பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் நல்ல தோழமை கொள்கின்றனர்.  ஒரு சலூன் கடைக்காரர் இருவரையும் நன்கு கவனித்துக்கொண்டு அன்பால் அரவணைக்கிறார். அவர் கண்முன்பே இருவரும் வளர்ந்து விடுகின்றனர். இருவருக்கும் திருமணம் செய்துவைக்க எண்ணம் கொள்கிறார்.

           இந்த இரு இளம் உள்ளங்களின் அன்பும் அவர்கள் ஒருவர்மீது ஒருவர் காட்டும் பரிவும் அக்கறையும், பல உயர்குடி மனிதர்களின் காதல்கதைகளைப் படித்த நமக்கு, அருமையான யதார்த்தமான உரையாடல்கள் மூலம் சொல்லப்படுகின்றன. உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.

           இடையில் சில சிக்கல்கள். கதை விறுவிறுப்பாகச் செல்ல வேண்டாமா? பின்பு பல சிக்கல்கள் விடுவிக்கப்பட்டு சுபமாகத் திருமணத்தில் முடிகிறது.

           வீட்டை விட்டோடிய ராஜாவின் தாய்தந்தையர் அவனைத் தேடாத இடமில்லை, பின் கடைசியில் ஒரு கட்டத்தில் அவனை ஒரு இந்திப் படத்தின் சண்டைக் காட்சியில் கண்டுவிட்டு அவன் சகோதரி மயக்கம்போட்டு விழ, அங்கிருந்து அக்குடும்பத்தினர் எப்படியோ அவனைக் கண்டுபிடித்துக் கொண்டு பம்பாய் வந்து சேர்கின்றனர். அனைவரும் திரும்பச் ச்ந்தித்து ஒன்றுகூடி மகிழ்கின்றனர்.

           கதையைப் படித்தால்தான் கதாசிரியரின் தனித்துவமான நடை நமக்குப் பிடிபடும். பிளாட்பாரத்தில் வாழ்பவர்களுக்கே உரித்தான மொழியைக் கதையின் போக்கிலேயே படிக்கிறோம். வித்தியாசமாகவே தெரியவில்லை. ஒருபுறம் இவர்களின் வாழ்க்கைமுறை அனுதாபத்தைத் தெரிவிக்குமெனினும், இதில் வீட்டைவிட்டு ஓடிப்போன ராஜா போன்ற சிறுவர்களும் இருக்கிறார்கள் எனும் காரணத்தாலேயே அவர்களை நாம் அதிகமாக நேசிக்கிறோம். பச்சாதாபப் படுகிறோம். இக்கதையில் காணும் பல மனிதர்களும் நம் மனதைப் பல விதத்தில் தொடுகிறார்கள்.

           பொதுநலவாதியான ஒருவர்தான் ஐயங்கார் மாமா. கைகாட்டி என ஆசிரியர் இவரைக் கூறுகிறார். பிளாட்பாரத்தில் சாமான்கள் – காய்கறி, இன்னபிற – வாங்க மாமியுடன் வருபவர் ஒவ்வொருவருடைய ‘ஜாதகத்’தையுமே கேட்டுக்கொண்டு சத்தம் போடாமல் அங்கோ இங்கோ ஏதாவது ஓரிடத்தில் பொருத்தமான வேலையை வாங்கிக் கொடுப்பார். அப்படிப்பட்ட பரோபகாரி. இப்படிப்பட்ட பலரை நாமும் சந்தித்திருப்போம். எனது மருத்துவ நண்பரொருவர், காய்கறிக்காரர்களுக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாகக் கொடுப்பார்!

           நொண்டி வஸ்தாது ஒருவன்தான் அநாதையாகப் போன (பெற்றோரை இழந்த அல்லது பிரிந்த) ராணியைக் கண்டெடுத்து வளர்த்தது. அவன் ஒரு கட்டத்தில் சலூன் கடை உரிமையாளர் கும்டேகரிடம் ராணியை விட்டுவிட்டு இறந்து விடுகிறான். திருமணமானதும் ராணியும் ராஜாவும் அவனுடைய இல்லாதவொரு சமாதியைத் தேடிச்சென்று பெரிய மலர்மாலை சாத்தி அஞ்சலி செய்கின்றனர். அவன் தன் உடலையே ஆஸ்பத்திரிக்கு விற்று அனைவருக்கும் பணம் கொடுத்தானாம். ராணி இதைக் கேட்டுக் கதறி அழுகிறாள்.

           இதற்குமுன்பு இடையில் ராணியின் தாய்மாமன் ரகுராஜ் அவளைக் கண்டுபிடித்து, சினிமா ஆசைகாட்டி, அவளை அழைத்துப் போய்விடுகிறான். ராஜா அவளைத் தேடி அலைந்து கண்டுபிடிக்கிறான். சினிமா ஷூட்டிங்கில் பெருத்த சண்டையே போடுகிறான். அதனையும் படமாக்கி விடுகிறார்கள்! அதைப் பார்த்துத்தான் அவன் சகோதரி மயங்கி விழுந்தாள்.

           பிள்ளையை இழந்துவிட்ட ராஜாவின் அப்பா துரைசாமி ஐஸக், அவன் மில்டன், கீட்ஸ் இவர்களுக்கு நிகரான கவிஞனாக வேண்டுமென விரும்பியவர் ஏக்கத்தில் தாமே பல கவிதைகளை இயற்றிக் கவிஞராகிறார். ‘சின்னப்பயல்- சிட்டுப்புறா’ எனும் அவருடைய கவிதை வெகு பிரபலமாகி புத்தகமாக பல இந்திய மொழிகளிலும் கவிதைகள் வெளியிடப்படுகின்றன.

           ராஜாவும் ராணியும் திருமணமாகி ஊர் – சென்னைதான் – செல்கிறார்கள்;  ராஜா பீடி புகைக்கிறான். ராணி அவனிடம், “இந்த பீடியை விடலியா? சிகரெட்டாவது புடிக்கக் கூடாது?” எனக் கேட்கிறாள். “யோகம் வந்ததுன்னா பழைய நெலமையை மறந்துட்டு அழிம்பாட்டம் ஆடச் சொல்லுதா?” என்கிறான்.

           ஓரிடத்தில் ராஜா ராணியிடம் சொல்லுவான்: ‘நான் ஊருக்குப் போனதும் ரயில்வே மந்திரிக்கு லெட்டர் எழுதி, முன்னே செய்த ஓசிப் பயணத்துக்கு அபராதம் செலுத்தப் போறேன்.’ உண்மையே பேச வேண்டும்; நேர்மையாக இருக்க வேண்டும் எனக் கூறிப் பெற்றோரால் வளர்க்கப்பட்ட பையன் அவன். அவை கடைசிவரை அவனை விட்டு நீங்குவதில்லை.

           அருமையான வார்த்தைப் பிரயோகங்கள், உண்மையாகவே பிரமிக்க வைக்கின்றன- தோழர் கும்டேகர் ஒரிடத்தில் சொல்வார்: “நாமெல்லாம் அலைகடலில் படகுவிட்டா, இந்தப் பொடிசுங்க சூறாவளிக் கடலிலே கட்டுமரம் விடுதுங்க,”என வியக்கிறார்.

           நடைபாதைவாசிகளின் வாழ்க்கை வியக்க வைக்கிறது. ராணி ஊதுவத்தி விற்பவள். ஒரு மதியம் திடீரெனக் கடையை வாரிச் சுருட்டிக்கொண்டு ஓடுகிறாள். நடைபாதைக் கடைகள் அனைத்துமே காலியாகின்றன. இது போலீஸின் கட்டுப்பாட்டிற்கு அவர்களின் எதிர்வினை. போலீஸின் தலை மறைந்ததும் அல்லது ஒரு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டரை அவர்கள் தங்கள் வழிக்குக் கொண்டுவந்ததும் வாழ்க்கை கொஞ்சம் சுலபமாகி விடும்.

           ஓரு வங்காளிப்பெண் வந்து மைசூர் மனமோகினி பத்தி இருக்கா என ராணியிடம் கேட்க, ‘இருக்கே’ எனக்கூறி சமயத்துக்கு ஏற்றாற்போல் பல ‘பிராண்டுகளாக’ உருவெடுக்கும் மகத்துவம் பொருந்திய தனது ஊதுவத்தியைக் கொடுத்தனுப்புகிறாள் அவள்!.

           ஏதோ வாய்ப்பேச்சில் தான் சினிமாவில் சேர்வதாக ராணி சொல்லிவிட, ஜார்ஜ் (ராஜா) கோபம் கொண்டு அவளை அடித்துவிடுகிறான். சக நடைபாதை வாசிகளின் குறுக்கீட்டினால் அவள் தப்புகிறாள். இவர்களின் இரவுநேர சல்லாபங்களையும் ஆயினும் முறைதவறாமல் நடந்துகொள்ளும் விதத்தையும் கட்டுப்பாட்டையும் அறிய வியப்பாகவே உள்ளது.

           ‘முறுமுறு’ எனும் பொரியை வாயிலிட்டு அரைத்துத் தள்ளியபடியே வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் ராணி! முதல்நாள் ஏதோ சண்டையில் அவளை ராஜா அடித்திருந்தான். அது அவர்களின் ‘கார்டியனான’ கும்டேகருக்குத் தெரிய வந்திருந்தது. மாலையில் கடையைப் பூட்டிவிட்டுப் போகும்போது ராஜாவிடம், “இனிமே பொட்டைப்பொண்ணைக் கைநீட்டி அடிச்சே, அவ்வளவுதான்,” என்றுவிட்டு நடந்தார். இருவரும் (ராணியும் ராஜாவும்) அவரையே பார்த்துக்கொண்டு நின்றனர்.

           இந்த மேற்காணும் வரிகள் இவர்கள் மூவருடைய அன்பு, பாசம் இவற்றின் ஆழத்தை நமக்குச் சொல்லாமல் சொல்கின்றன. இந்தக் கதையை ஏன் திரைப்படமாக்க ஒருவரும் முயலவில்லை எனும் கேள்வி எனக்குள் எழுகிறது.      

           அருமையான நாவல். நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நாமே படிப்பதில் உள்ள அனுபவம் கட்டாயம் கிடைக்காது. ஆகக்கூடி, படித்து, ரசித்து, சிந்திக்க ஒரு அருமையான புத்தகம் இது. நடைபாதை வாசிகளின் வாழ்க்கைமுறை, அவர்கள் தங்களுக்குள் தாமாகவே விதித்துக்கொண்ட கட்டுப்பாடு, ஆசாபாசங்கள், அன்பு, விசுவாசம் அனைத்தையும் ஆழ்ந்து அனுபவிக்க ஏற்ற அழகிய எழுத்தும் நடையும் கொண்டது.

           புத்தகக் கண்காட்சியில் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள் இந்தப் பொக்கிஷத்தை!