மீன் குஞ்சு விமலாவிற்கு 70 வயதில் வயதில் இந்த ஆசை வந்திருக்கக் கூடாது தான். என்ன ஆசை என்கிறீர்களா? வாருங்கள் விமலா வீட்டிற்குள் நுழைவோம்.

‘ஏம்மா இப்படி நீ அடம் பிடிக்கிற?’ இது பெண் சுனிதா

‘உன்னால் எல்லாம் முடியாது!’ என்று பிரவீன்

‘போகட்டும் திரும்பி வருவாளா என்று தெரியாது” என்று கோபத்துடன் கணவன் சங்கர்.

“இந்த சின்ன விஷயத்திற்கு ஏன் இவ்வளவு கோபம்! நான் என்ன தேர்தலிலா நிற்கப் போகிறேன்?’

‘என்னது! இது சின்ன விஷயமா?’

‘பிறவிப் பெருங்கடலில் நீந்திக் கொண்டிருக்கிறேன், இந்த சின்ன குளம் என்ன செய்துவிடும்?’

‘டிராயிங் கிளாஸ் போனாய், கிளிக்கும் மைனாவிற்கும் வித்தியாசம் தெரியவில்லை, பிறகு சைக்கிள் கற்றுக் கொள்ளச் சென்றாய், சக்கரம் தனி, பெல்ட் தனி, பெடல் தனி, சீட்டு தனி என்று வந்ததுதான் மிச்சம், அந்த சைக்கிளை பேரிச்சம்பழம் விற்பவன் கூட வாங்க மாட்டேன் என்று சிரித்து விட்டுப் போய்விட்டான், கார் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டாய், நமது காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஓர் 20 ஆயிரம் நஷ்டமாயிற்று, அதெல்லாம் பரவாயில்லை, ஆனால் இந்த விஷப்பரிட்சை வேண்டாம்’.
விஷயம் இதுதான் விமலா நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.
அவருடைய பெயரன் ஒரு நாள் ‘ஏன் பாட்டி, நீ ஸ்விம்மிங் பூல் கரையில் தான் உட்கார்ந்து இருப்பியா, இறங்க மாட்டியா?’ என்று கேட்டதன் விளைவு இந்த வேண்டாத ஆசை.

சரி இனி அம்மாவை எந்த குடத்திற்குள்ளோ, கமண்டலத்திற்குள்ளோ அடக்க முடியாது என்று புரிந்து விட்டது.

பயிற்சிக்குப் போவது என்று தீர்மானித்த உடன் முதலில் அதற்கேற்ற உடை வாங்க கடைக்குப் போனால் ‘அம்மாடியோ, இதையாப் போட்டுக்கணும்!, இது ரொம்ப சின்னதா இருக்கு, இது கழுத்து ரொம்ப ஆழமா இருக்கு’, இப்படி சொல்லி சொல்லி கடைசியில் ஒரு டீ சர்ட், ஒரு பாண்டும் வாங்கிக் கொண்டாள். பிறகு தலைக்கு குல்லாய், ஏதுவான கண்ணாடி, அதற்கு ஒரு பேக் எல்லாம் ஏறக்குறைய 5000 ரூபாய் ஆகிவிட்டது.
சங்கர் பக்கத்தில் இருக்கும் ஒய் எம் சி ஏ மைதானத்திற்கு விமலாவைக் கூட்டிக்கொண்டு போய் அங்கு பெயர் பதிவு பண்ணி 3000 ரூபாய் கட்டணமும் அழுது கொண்டே கட்டினான். பணம் இப்போதே தண்ணீரில் போவதைப் பார்த்தான். எட்டில் இருந்து 9 மணி வரை பெண்களுக்கு என்று தனி கோச்.

காலை ஐந்து மணிக்கு எழுந்து பரபரவென்று சமையல் முடித்துவிட்டு எல்லோருக்கும் டிபன் பாக்ஸ் கட்டி விட்டு, ‘சுனிதா தோசை மட்டும் வார்த்து எல்லாருக்கும் கொடுத்து விட்டு நீயும் சாப்பிட்டுப் போ’ என்றவுடன் ‘ஆரம்பிச்சாச்சு நீ கிளாஸ்க்கு போறதா இருந்தா, நான் பாக்கி வேலை செய்யணுமா?’

‘என்ன தோசை மட்டும் தானே வார்த்துக் கொள்ளச் சொன்னேன், சமையல் எல்லாம் பண்ணிவிட்டு பேக் பண்ணி விட்டேன்’ என்று இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டு விமலா பயிற்சிக்குக் கிளம்பினாள்.

பயிற்சிக் கூடத்தில் வாசலில் இருக்கும் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைத்து விட்டு மூன்று சுற்று சுற்றி விட்டு மனதில் இருக்கும் பயத்தை வெளியில் காட்டாமல் சென்றாள். பிறகு நீச்சல் உடை போட்டுக் கொண்டு அந்த அறையில் இருந்து வெளியே வரவே மிகவும் வெட்கப்பட்டாள். தலையை குல்லாவிற்குள் நுழைப்பதற்குள் பத்து நிமிடம் ஆகிவிட்டது. அந்த கண்ணாடியை போட்டுக்கொண்டு சுவற்றில் தடவி தடவி நடந்து வந்தால் மெதுவே தண்ணீரில் இறங்கச் சொன்னார் கோச். ஜில்லுன்னு தண்ணீர் இந்த வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.

முதலில் மூச்சுப் பயிற்சி. யோகா வகுப்பில் பிராணாயாமம் செய்த விமலாவிற்கு இந்த மூச்சு பயிற்சி எளிதாகத் தான் இருந்தது ஆனால் தண்ணீருக்கு மேலே வாய் வழியாக மூச்சை இழுத்து மூக்கு வழியாக மூச்சு விடுவது அவளுக்கு சில சமயம் மறந்து விடும். தண்ணீருக்குள்ளே போய் சில சமயம் தண்ணீர் குடிக்கும் வாய்ப்பு அதிகம். பிறகு பயிற்சியாளர் ஹிந்திக்காரர் வந்தார். அவர் ‘முஹ் சே காற்றே உள்ளெடுத்து நாக்கு சே வெளிவிடு’ என்றார். தமிழுக்கு அப்படியே தலைகீழ்,. இவளுக்கு ‘நாக் எது, முஹ் எது’ என்றே உணர முடியவில்லை.

அடுத்த நாள் ஃப்ளோட்டிங். காலை தரையில் ஊன்றி மேலே வந்து கையை நீட்டி வைத்துக் கொண்ட தண்ணீர் மேல் மிதக்க வேண்டும் என்றார். இவளுக்கு இரண்டு கால்களையும் தரையில் இருந்து எடுக்கவே பயமாக இருந்தது. அங்கிருந்து கம்பியைப் பிடித்துக் கொண்டே எங்கேயாவது மூழ்கி விடுவோமோ, இல்லையென்றால் கவிழ்ந்து விடுவோமோ என்று பயப்பட்டாள். ‘நான் இங்கே இருக்கும் போது என்ன பயம்’ என்று கோச் கேட்க ‘நீ இருப்பாய், நான் இருப்பேனா என்று தெரியவில்லை’ என்றாள். அங்கே சில பெண்கள் நன்றாக நீந்தி விட்டு பக்கத்தில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். விமலாவிற்கு அவர்களுடன் சேர்ந்து பேசத்தான் ஆசையா இருந்தது. அங்கே என்ன தண்ணீரில் வட்டமேசை மாநாடா நடக்கிறது!

நான்காம் நாள் காலை உதைத்தல் பயிற்சி. இரண்டு காலும் தண்ணீருக்கு மேலே வருவதற்கு மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

ஐந்தாவது நாள் கை பயிற்சி. ‘கல்லைக் கண்டால் நாயைக் காணும் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்’ என்கிற மாதிரி கையை அசைக்கும் பொழுது கால் மறந்து விடுகிறது, காலை உதைக்கும் போது கையால் தண்ணீர் பின்னால் இழுக்க மறந்து விடுகிறது, இது ரெண்டும் பண்ணினால் மூச்சு விடுவது (தண்ணீரில் மூச்சு விடும் முறை) மறந்து போய் விடுகிறது.

ஐந்து நாள் பயிற்சிக்குப் பிறகு ஆறாவது நாள் விமலா ‘எனக்கு ஜலதோஷமாக இருக்கிறது, நான் இன்று பயிற்சிக்குப் போகவில்லை’ என்று வீட்டில் இருந்து விட்டாள். இரண்டு மூன்று நாட்கள் ஆயிற்று.

கடைசியில் ‘தரை மேல் பிறக்க விட்டான், எங்களைத் தண்ணீரில் மிதக்க விட்டான்’ என்ற வார்த்தைகள் படகோட்டிக்கும் மீன் குஞ்சுக்கும் தான் பொருந்தும் நமக்கல்ல’ என்று கரையோரம் ஒதுங்கி விட்டாள் விமலா!