புத்தகம் : வீட்டுக்கு வந்த வேடந்தாங்கல்

எழுதியவர்: அ.இராமலிங்கம் இ.ஆ.ப. (ப.நி)

Published by : Creative Workshop, Chennai

162 பக்கங்கள் விலை ரூ. 900

          

சமீபத்தில்  என்னுடைய கல்லூரி நண்பர் சேஷசாயி மகள் திருமணத்தில் மற்றொரு கல்லூரி நண்பரான இரா மோகன் அவர்களை வெகு நாள் கழித்து சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. விருந்து சாப்பிட்டு முடிக்கும் தருணத்தில் இரா மோகன் அவர்கள் தன்னுடைய நண்பர் இராமலிங்கம் அவர்களின் இந்த முதல் கவிதை நூலைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார். நூலின் பிரதி ஒன்றை அனுப்பி வைப்பதாகவும் அதைப் படித்து என்னுடைய “உண்மையான” கருத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

   அவர் குறிப்பிட்டது போலவே அடுத்த சில நாட்களுக்குள்ளேயே நூல் என் வீட்டு முகவரிக்கு வந்து சேர்ந்தது.

   உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், சமீப காலத்தில்  கவிதை என்றாலே எனக்கு பயமாக இருக்கிறது. மனம் போன போக்கிலும் கை போன போக்கிலும் எதையெதையோ எழுதி அதற்குக் “கவிதை” என்ற நாமகரணத்தை சூட்டி படிப்பவரைக் கலங்க வைக்கும் காலமல்லவா இது !

   அதனால்  தயக்கத்தோடுதான் நூலைப் படிக்கத் தொடங்கினேன்.

   ஆனால் அந்தத் தயக்கம் முற்றிலும் தேவையற்றது என்பதை பின் அட்டையில் பளிச்சிட்ட சிறு கவிதையே பறை சாற்றியது. அதனால் ஆர்வம் மேலிட, விறுவிறுவென்று கவிதைத் தொகுதியை ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.

   மொத்தம் 71 கவிதைகள். எனக்குப் புரியாத ஒரு சில கவிதைகளைத் தவிர, மற்றவையெல்லாம் முத்துக்கள். திரு.இராமலிங்கம் அவர்களின் கவிதைகள் எல்லாமே புதுக்கவிதை நடையிலேயே மிளிர்கின்றன. அனைத்திலும் நான் எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் கவித்துவம் மிகுந்திருக்கிறது.

   இவருடைய பாடுபொருளெல்லாம் இயற்கை, இயற்கையோடு இசைந்த வாழ்க்கை, அப்படி வாழும் மனிதர்கள், அவர்களின் உணர்வுகள், உறவுகள் – இப்படித்தான் இருக்கிறது இந்தக் கவிஞரது தேர்வு. இவை எல்லாமே நமக்குப் பிடித்த விஷயங்கள்தான்.

   இவருடைய நடை மிகவும் எளிமையானது. அதே நேரத்தில், தனித்துவமானது. “இராமலிங்கத்தின் கவிதை” என்று இனங்கண்டு கொள்ளக்கூடியது.

   இவர் தன் பெற்றோர்களைப் பற்றி முதலிரரண்டு கவிதைகளைப் புனைந்திருக்கிறார். இவை மனதைக் கொள்ளை கொள்பவை. கவிதைகளில் குழந்தைமை, மாதிரி காதல், நன்றியுணர்வு, மண்வாசனை – அனைத்தும் நிரம்பி வழிகிறது.

   என்னைக் கவர்ந்த சில வரிகள்…….

 

“இன்னிசைப் பொழிய

மாந்தோப்பில் மண்குவித்து

 மல்லாக்கப் படுத்தால்

 மாத்திரையில்லா

 நித்திரை தந்த ஊர் !”

( நம்ம ஊர் – சில நினைவுகள்) 

“கோலியாடி

கோலிகளை

விராட்கோலி போல்

விளையாடிய வயது.”

 ( இளமையில்…..) 

“உனைத் தொட்ட

வசந்த காற்று

எனைத் தொடாத

வாழ்க்கை வெறுமை,

இரைகாணா புலிபோல் உறும,

இதய பூகம்ப இடி

ரிக்டர் அளவு

எட்டைத் தாண்டியது”

( காதலி )

 

“இமை வளைவுகள் தருமோ

தாங்கொணா

பின் விளைவுகள் ?”

( யார் நீ )

“சுட்ட சுழியனை விட

இட்ட உன் சுழி

இனிக்கும்”

    ( பிள்ளையார் )

மருத்துவர் சுதா சேஷய்யனின் அணிந்துரையும் ஒவ்வொரு கவிதைக்கு துணை வரும் அழகிய ஓவியங்களும் “நம் கவிதை நூலும் இப்படி இருக்காதா ?” என்று ஒவ்வொரு கவிஞனையும் இயங்க வைக்கும்.

   வாய்ப்பிருந்தால் இந்நூலின் நேர்த்தியை அனுபவியுங்கள்.