சார்! இலக்கிய வாத்தின்னு ஆவணப் படம் எடுக்கலாம்னு முதலில் நினைச்சேன். அப்புறம் குறும் படம் எடுக்கலாம் அப்படீன்னு தோணிச்சு! இப்ப என்னாடான்னா அமரன் மாதிரி, சூரரைப் போற்று மாதிரி ஒரு பயோபிக் எடுக்கலாம்னு தோணுது. புரடியூஷர் கிடைச்சா அப்படியே செஞ்சுடலாம்.
என்னை வைச்சு செஞ்சுடலாம்னு கிளியரா இருக்கே!
ஐயோ! அப்படியில்லே சார்!
இங்க பாரு ரைட்டர் தம்பி ! நான் ஒரு இலக்கிய ரசிகன். அதனால் பல கூட்டங்களுக்கு போய்ட்டு வந்திருக்கேன். எல்லா இலக்கிய கர்த்தாக்களை சந்திச்சிருக்கேன். அவங்க கூட போட்டோ எடுத்திருக்கேன். அவங்களைப் பத்தி கிசு கிசு எல்லாம் கேட்டிருக்கேன். அதை ஆவணப் படுத்தனும்னு தான் இதுக்கு ஒத்துக்கிட்டேன்.
உங்களையும் உங்க கோபத்தையும் பாத்தா இது ஆவணப் படம் மாதிரி தோணலை ; ஆணவப் படம் மாதிரிதான் இருக்கும்! கோவிச்சுக்காதீங்க ! எனக்கு உங்க கிட்டே பிடிச்சதே உங்க கோபமும் ஆணவமும்தான்.
அதெல்லாம் சரி! கடைசில அந்த ஜிகிர்தண்டாவில பண்ணின மாதிரி காமெடி கீமடி பணணினியோ அப்படியே உன்னை வாத்தியார்னு பாக்காம ஸ்கூலிலேயே டிரில் வாங்கிடுவேன்.
சே சே அப்படியெல்லாம் பண்ண மாட்டேன். என்னை நம்புங்க சார்! உங்களுக்கு இலக்கிய வெறி மாதிரி எனக்குள் ஒரு கமலஹாசன் டான்ஸ் ஆடிக்கிட்டிருக்காரு!
அது சரி! இலக்கிய கதையில எதுக்கு சொந்தக் கதை சோகக் கதை ?
சார்! பயோபிக்கில எல்லாம் இருக்கணும் சார்! சும்மா இலக்கியவட்டம், வட்டத்தொட்டி ,ரசிகமணி,ஜெயகாந்தன் ,கி ரா , ஜெமோ ,எஸ்ரா ,கவிதை உறவு, வாசகசாலை, குவிகம்,விருட்சம் அப்படீன்னு அதை மட்டும் சொல்லிக்கிட்டு இருந்தா போதாது சார்! கொஞ்சம் சோகம்! கொஞ்சம் கிளுகிளுப்பு ..”
நில்லு நில்லு .. விட்டா குத்துப் பாட்டு கூட வைச்சிறுவே போல இருக்கு! குத்துப் பாட்டுன்னதும் ஞாபகம் வருது! போன மாசம் ஒரு தடிப்பய அதான் அந்த பத்தாம் கிளாஸ் படிக்கிற செல்லத்துரை ! கவுன்சிலர் பையன் ! தமிழ்ப்பரீட்சை ஆன்சர் பேப்பரில ஒரு குத்துப் பாட்டை எழுதி வைச்சிருந்தானாம். தமிழ் வாத்தியார் என்கிட்டே காமிச்சார்! நான் அவனைக் கூப்பிட்டு விசாரிச்சேன்! குத்துப் பாட்டுன்னு ஒரு சிற்றிதழுக்கு அனுப்பிச்சானாம். அது பிரசுரமாயிருக்கு , அப்படீங்கரான்! அந்த பாட்டைக் கேளேன்!
” இது ஒரு குத்துப் பாட்டு!
இதுக்கு மேட்சா கெத்தக் காட்டு!
அத்தனை பொண்ணுங்களும் அத்தை மக தாண்டா
வெத்தலை பாக்கு இருந்தா கண்ணாலம் தாண்டா
இது ஒரு ஐட்டம் சாங்கு
இதுக்கு மேட்சா துட்ட வாங்கு
அத்தனை பசங்களும் வெத்து வேட்டு தாண்டா
பித்தளை பாத்திரம் போல பல்லிளிக்கும் தாண்டா “
இந்தப் பாட்டை பாடிட்டு , இந்த வருஷன் ஸ்கூல் டேல இந்தப் பாட்டைப் போட ஹெட் மாஸ்டர் ஓகே சொல்லுவாரா ? அப்படீங்கறான் !
நீங்க சும்மாவா விட்டீங்க !
விடுவேனா ? குனியச் சொல்லி நாலு குத்து விட்டேன். குத்துப் பாட்டாவது ஒண்ணாவது!
அவன் நல்ல வெண்பா எல்லாம் எழுதிக்கிட்டிருந்தானே ! ஏன் இப்படி போயிட்டான்?
அவனை விடு! நாலு போடு போட்டா தன்னால திருந்திடுவான். ஆனா சில வாத்திகளே இதுக்கு தாளம் போடுதுக ! அதுங்களைத் தான் என்ன செய்யறதுன்னு புரியலை!
சார்! அத்த விடுங்க ! உங்க கதையில நல்லூர் பத்தி சொன்னோம். கொத்தவால் சாவடி பத்தி சொன்னோம். நீங்க மிலிடரியில சேந்தது, அதிலெர்ந்து டிஸ்சார்ஜ் ஆகி வாத்தியார் வேலைக்கு வந்தது, கல்யாணம் ,வைஜயந்தி .. அதெல்லாம் கொஞ்சம் சொல்லணும் சார்! அப்பதான் பயோபிக் பாக்கும் போது கெத்தா இருக்கும் ! சாரி ! குத்துப் பாட்டு எஃபக்ட் !
அதெல்லாம் சமயம் வரும்போது சொல்றேன் ! இப்ப உனக்கு ஏதாவது வேலை இருக்கா ? நான் இலக்கியக் கூட்டம் பத்தி சொல்லறேன்
இல்லைன்னு சொல்ல வாயெடுத்தேன். அப்போ காத்து வாக்கில வைஜயந்தியின் குரல் என் காதில் விழுந்தது. இன்பத் தேன் வந்து பாயுது காதினிலேன்னு பாரதியார் இதைத்தான் சொன்னாரா?
வாத்தி சார்! உங்க இலக்கியமெல்லாம் அப்பறம் கேட்கலாம். இப்போ என் செந்தமிழ் தேன் மொழியாளைக் கொஞ்சம் கொஞ்சிட்டு வரட்டுமா உங்கள் அனுமதியுடன் ! என்று மனதிற்குள் சத்தமாகப் பேசிவிட்டு ,
கொஞ்சம் வேலை இருக்கு சார் ! என்னோட டிகிரி தோஸ்த் -ஜிகிரி தோஸ்த் வரான்! நாம அடுத்த வாரம் தொடருவோமே என்று அன்று அவர் பதிலைக் கூடக் கேட்காமல் ஜூட் விட்டேன்.
ஆளே இல்லாத ஒரு காப்பிக் கடையில் நாங்க ரெண்டு பேரும் டீ குடித்துக் கொண்டிருந்தோம்.
” எப்படி நம்ம வாத்தியார் உனக்கு வைஜயந்தின்னு இவ்வளவு ஸ்டைலா பேரு வெச்சார் ? “
அவர் எங்க வைச்சார்! எங்க அம்மாதான் பேரு வெச்சாங்க ! உங்க இலக்கிய வாத்தி எங்க அம்மா கிட்டே பொறக்கப்போறது பொண்ணுன்னு தெரிஞ்சு பேரு வைக்க ஆறு சாய்ஸ் தர்றேன்னு பேரைச் சொன்னாராம். அதை கேட்டுட்டு எங்க அம்மா இந்த ஆறில ஒண்ணுதான் கட்டாயமா வெக்கணும்னா நான் இப்பவே அபார்ஷன் பணணிப்பேன்னு சொன்னாங்களாம்!
வாத்திக்கு ஏத்த ஜோடிதான் என்னோட மாமியார் ! நம்ம சார் என்ன பேரு சொன்னார் ?
நான் கஷ்டப்பட்டு அந்த லிஸ்ட்டை நெட்ரு பண்ணியிருக்கேன். ஆதிமந்தி, ஓரிற்பிச்சை, ஔவை, காக்கைப்பாடினி நச்செள்ளை, குமுழிஞாழலார் நப்பசலை, முடத்தாமக் கண்ணி
ஐயோ! எல்லாம் சூப்பர் பேரு ! சங்க காலத் தமிழ்ப் புலவர்கள். நம்ம கல்யாணத்து அப்புறம் உன்னை செல்லமா குமுழிஞாழலார் நப்பசலை அல்லது ஆதிமந்தின்னு கூப்பிட்டா கோவிச்சுப்பியோ?
உன் பெயரை வேணும்னா சொம்புலப் பெயர் நீரார் அல்லது பிசிறாந்தையார்ன்னு வைச்சுக்கோ ! என்னை விட்டிடு!
ஏய் லூசு! அது சொம்புலப் பெயர் நீரார் இல்லே – செம்புலப் பெயர் நீரார் ! எவ்வளவு சூப்பர் தெரியுமா? 2000 வருஷம் முன்னாடி எழுதின காதல் சாங் ! செம ஹிட்! .. ஞாயும் ஞாயும் யாராகியரோ?..
பேசாம நாம ரெண்டு பெரும் கீழடி போய் சங்க கால ஆராய்ச்சி பண்ணலாமா?
நீ கோவிச்சுக்க மாட்டீன்ன நான் ஒண்ணு சொல்றேன்! நான் அதுக்கு ஏற்கனவே அப்ளை பண்ணிட்டேன் !
அடப்பாவி! உன்னை நம்பி ஒரு பொண்ணு பெத்த அப்பன் பெல்ட்டால அடிச்சாலும் பரவாயில்லன்னு கட்டின சூடிதாரோட ஓடி வரலாம்னு நினைச்சா நீ இப்படி சொன்னா எப்படி? வேண்டாம்ப்பா இந்த மொகஞ்சசாதரோ ஹரப்பா கேசு!
எனக்கு ஒரு டவுட்! நம்மள மாதிரி லவ் பண்ணரவங்க எல்லாம் இப்படித்தான் பேசிப்பாங்களா? வை ஜே ?
இது என்ன வை ஜே ? பேரை ஏன் சுருக்கிறே?
எனக்கு உன்கிட்டே பிடிச்சதே! உன்னோட இந்த கவுண்டர்தான். எனக்கு ஒரு டவுட் வைஜயந்தி! காதலிக்கும்போது இப்படியெல்லாம் பேசினா நாம என்ஜாய் பண்ணறோம். கல்யாணத்துக்கு அப்புறம் இப்படிப்பேசினா நமக்கும் கோபம் வருமா?
வரும். வரத்தான் செய்யும். அதுதான் இயற்கை! இல்லியா? அலை பாயுதே பாக்கலே !
அதெல்லாம் கிடக்கட்டும் ! நாம இப்படியே ரகசியமா டீ குடிச்சுகிட்டு இருக்கவேண்டியதுதானா? அடுத்த ஸ்டெப்புக்கு எப்போ போலாம்?
சரி! நாளைக்கே வந்து உன் வாத்தியார் கிட்டே பொண்ணு கேளு!
ஏம்மா ! நான் நல்லா இருக்கறது உனக்குப் பிடிக்கலையா? நீ கொஞ்சம் கேட்டு ஓகே வாங்கிட்டேன்னா நான் தைரியமா பொண்ணு கேட்கரேன்.
எனக்குப் பத்திக்கிட்டு வருது..
நான் வேணுமுன்னா அணைக்கட்டுமா?
இந்த பன்னுக்கும் பஞ்ச்சுக்கும் கொரச்சல் இல்லே ! கவலைப்படாதே! வெயிட் பண்ணு! இன்னும் அஞ்சு மாசத்தில நமக்கு நல்ல காலம் பொறக்கும் !
அடி கள்ளி சொல்லவே இல்லையே!
சகிக்கலை உன் ஜோக் !
லுக் வைஜயந்தி! வர்ற வெள்ளிக் கிழமை சாயங்காலம் ஆறு மணிக்கு நீ என் வீட்டுக்கு வா எங்க அப்பா அம்மா வர்ராங்க ! நான் உன்னை அறிமுகப் படுத்தி ஓகே வாங்கிடறேன்.
உண்மையாவா?
அப்படியே அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். கண்கள் இலேசாகக் கலங்குவது போல இருந்தது.
அப்போது அவளுக்கு அவள் அப்பாவிடமிருந்து ஒரு வாட்ஸ் அப் மெஸ்சேஜ் வந்தது.
“வருகிற வெள்ளிக்கிழமை சாயங்காலம் அஞ்சு மணிக்கு அவளைப் பொண்ணு பார்க்க வருகிறார்கள். . உடனே வா ! விவரம் சொல்றேன் – அப்பா “
திக்கென்று இருந்தது இருவருக்கும்
