தேன் எடுக்கும் முறை | How to take honey

சிறுவயதில், ஓர் அழகிய மலை கிராமத்தில் வசித்தோம்.

எங்களுக்கு Pet வளர்க்கணும்னு நிரம்ப ஆசை, ஆனால் பாருங்கள் எனக்கு நாய் என்றால் பேய்..யை விட(வும்) பயம்! அதனால் பூனை வளர்க்கலாம் எனத் தீர்மானமாயிற்று. வெள்ளையில் சற்று, கருப்புச் சாயத்தைத் தட்டி விட்டாற்போல் ஒரு கலர்.

ஆரம்பத்தில், ‘சீரியல் புதுமணப் பெண்’ போல அடக்க ஒடுக்கமாகத்தான் இருந்தது. நாளாக நாளாக சேட்டைத் திலகமாக மாறி விட்டது.
குறிப்பாக, எங்கள் பாட்டியின் கட்டில்தான் அதுக்கு Safe heaven. ஏகாதசி, அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் பாட்டியின் மடிப் புடவையின் மேல் படுத்துச் சுகமாய்த் தூங்கும். பாட்டி அலறுவதை, அலட்சியமாக இடது கையால் (காலால்?) ஒதுக்கும்.

குளிர்காலங்களில் அடுக்களையின் இரண்டாவது ஷெல்பில் ஏறி, அரிசி மாவு, மைதா மாவு டப்பாக்களின் இடைவெளியில் புகுந்து படுக்கும். தூக்க ஸ்வாரஸ்யத்தில் தகர டப்பாவை தட்டிவிட்டு, தரைக்கு வெள்ளையடிக்கும். இரவு நேரத்தில் பாலைக் குடித்து விட்டு, ‘முதல் பட’ டைரக்டர் போல யோசித்தபடி, நடந்து கொண்டிருக்கும்.

ஒரு இனிய மாலைப் பொழுதில், என் தங்கை தன் ரெகார்ட் நோட்டில், அவரைச் செடியின் பரிணாம வளர்ச்சியைப் படங்களாக வரைந்து, பாகங்களைக் குறித்துக் கொண்டிருந்தாள். அந்த சித்திரங்கள் பார்க்கச் சகிக்காமல் இருந்ததாலோ, என்னவோ, ‘இங்க்’ குப்பியை அதன் மீது கவிழ்த்து விட்டது. பெரிய ரகளையாய் மாறி, என் அப்பா அந்தப் பூனையை எங்கள் சொந்தக்காரர் ஒருவருக்கு கொடுக்கும்படி ஆகிவிட்டது.

இருப்பினும் எங்களின் ‘Pet’ ஆசை விட்ட பாடில்லை. எங்கள் வருத்தத்தைப் போக்க, ஒருநாள் அப்பா எங்கள் எல்லோரையும் அழைத்து,
“கண்ணுங்களா, ஒரு குட் நியூஸ் ! நாளைக்கு நம்ம வீட்டுக்கு புதுசா Pet வரப்போகிறது” என்றார் உற்சாகமாக.

அடுத்த நாள், ஆபீஸ் முடிந்து வருகையில், வெளிர் பச்சை நிறத்தில், சதுர வடிவில் பல மரச் சட்டங்களுடன், ஒரு ஸ்டான்ட் சகிதம் வந்தார்.

“நாம தேனீ வளர்க்கப் போறோம்!”

என் அம்மா, “என்னங்க, தேனீ..யெல்லாம் ‘Pet’..ல சேர்த்தியா..னு அப்பாவியாகக் கேட்க,

பாட்டி என்னிடம், “உங்கப்பனுக்கு ராஹு திசை ஆரம்பிக்கும் போதே நினச்சேன், இப்படி எதாவது ‘விபரீத’ சிந்தனை வரும்னு. குழந்தைகள் இருக்கிற வீட்டில இது என்ன அசுர விளையாட்டு?”

எங்கள் வீட்டு சிறிய தோட்டத்தில், மதிப்பு மிக்க ராணித் தேனீயை தேனி பெட்டிக்குள் புகுவித்ததும், தேனீக்கள் ஒவ்வொன்றாக வரத் துவங்கின. நாட்கள் நகர ‘Heathrow Airport’ கணக்காக, தேனீக்கள் லேண்ட் ஆவதும், டேக் ஆப் ஆவதுமாக இருந்தன. ஆரம்பத்தில், அருகில் போக இருந்த பயமானது, பின்னர் சுத்தமாகத் தெளிந்தது. சகஜமாகச் சுற்றி விளையாட ஆரம்பித்தோம்.

அவ்வப்போது என் அப்பா, மேல் மூடியைக் கவனமாகத் திறந்து, மெதுவாகச் சட்டத்தை எடுத்துக் காட்டுவார். ராணித் தேனீ சோம்பேறியாகக் கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கிடக்க, ஆண் தேனீக்கள் பணிவிடைக்காகக் காத்திருக்க, வேலைக்காரத் தேனீக்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அழகைக் காண்போம்.

நிழல் படர்ந்த, பூக்கள் நிறைந்த, காற்றோட்ட மிக்கச் சுற்றுப் பகுதியின் காரணமாக, தேன் அடைகளில் கொஞ்சம் கொஞ்சமாக நிற மாற்றம் ஏற்பட்டது. தேன் சேகரிப்பு நடந்தது. Be Busy as a Bee ! என்று எங்கப்பா லெக்சர் எல்லாம் கொடுத்தார்.

தேன் அடைகள் நிரம்பித் தயார் நிலையை அடைந்ததும், அப்பா அதற்குரிய ஆட்களைக் கூட்டி வந்தார். பக்கத்து வீடுகள் உட்படக் கதவு, ஜன்னல்..கள் சாத்தப்பட்டன. சுற்றி ஒரு புகை மண்டலத்தை உருவாக்கினார்கள். தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறின. சில மணிகள் கடந்த பின், ஐந்தாறு பாட்டில்களில் தேன் நிரப்பி வந்தார்கள்.

நாங்கள் அருகில் ஓடிப் போய்ப் பார்த்தபோது, பெட்டி அகற்றப்பட்டு, ஸ்டாண்ட் மட்டுமே வெறுமையாகக் காட்சியளித்தது. அந்த ரீங்கார ஓசையின்றி, தேனீக்களின் சுவடு இன்றி, ஒரே நிசப்தம்..

என் அம்மா, மூன்று கிண்ணங்களில் தேன் நிரப்பி எங்களுக்குத் தர, என் அக்கா குடிக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

“ஏங்…கா.., குடிக்க..ல..யா?”

“எனக்கு வேணாம். யாரோட உழைப்பையோ திருடற மாதிரி இருக்குடா..”

நாங்களும் அருந்தவில்லை. யாரும் உபயோகிக்கவில்லை. ஏனோ தோணவில்லை…?!

பூக்கள் மட்டும் காத்திருந்தன..