ஏதோ நிகழ்ச்சியில் என்னுடைய சகா ஒருவர் நிலாவை அறிமுகம் செய்தார். என்னை ஆலோசிக்கும்படி அவளுக்குப் பரிந்துரைத்தாகக் கூறினார். முப்பது வயதுடைய நிலா பகுதிநேர வேலை செய்பவர். அவளுடைய கணவர் சசி, வயது முப்பத்து மூன்று, நிறுவனத்தில் மூத்த நிர்வாகியாக இருந்தார். தாம் இருவரும் மாமனார் மாமியாருடன் இருப்பதாகத் தெரிவித்தாள். அவர்கள் இருவரும் பேராசிரியர்கள், ஓரளவிற்கு ஒத்துப்போவதால் கூட்டுக்குடும்பமாக இருக்கிறோம் என்றபடி தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.
ஒரு வாரத்திற்குப் பிறகு நிலா என்னை ஆலோசிக்க வந்தாள். திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. ஆரம்பத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தாமதிக்கக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. போகப்போக சசி தன்மேல் கவனம் தருவதில்லை என்ற கருத்து அதிகரிக்க, குழந்தை நினைப்புப் பின்தங்கிப் போனது.
அடுத்த சில செஷன்களுக்கு இதை மையமாக வைத்துப் பல விஷயங்களை விவரமாகக் கேட்டு அறிந்தேன். சந்தியாவைவிட சசி நான்கு அங்குலங்கள் குட்டை. தெரிந்துதான் மணந்தாள். மனதிற்குள் இதற்காகவே தன் மேல் காதல் மேலோங்கி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு. முதலில் அவ்வாறே இருந்ததாகவும், ஆனால் ஏழு மாதமாக மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் சொன்னாள். சசிக்குப் பலருடன் கலந்து பல மணிநேரம் கழிப்பது பிடிக்கும். இதைப் பார்த்து சந்தோஷப் பட்டாலும் மன ஓரத்தில் பெண்களுடன் பேசும்போது நகைப்பதும், குதுகலமும் அதிகம் தென்படுகிறதோ எனத் தோன்றியது.
தன்னிடம் பற்று குறைகிறதா? சந்தித்த பெண்களைப் புகழ்வது, பாராட்டுவதும் உண்டு. மாமனார் மாமியாரும் இதை வரவேற்றது நிலாவிற்கு வேதனையைத் தந்தது. அவர்களை உபசரிப்பதும், அதில் இவளையும் சேர்த்துக்கொள்ளும் போதும் குழப்பம் அடைந்ததாகக் கூறினாள். அவர்கள்போல்தான் தானுமா என்ற சிந்தனையும் தவிப்புத் தந்தது.
சசி தன்மேல் காதல் வைத்திருக்கிறாரா என்று கண்டுபிடிக்க ஆரம்பித்ததாகக் கூறினாள். இதற்குச் செய்ததைப் பற்றிக் கேட்டேன். தன்னுடைய அக்கறையைக் காட்ட, பலமுறை கைப்பேசியில் அழைத்து சசி என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பதைப் பற்றிக் கேட்பாளாம். அவருக்குப் பேச முடியாமல் இருக்கையில், குறுஞ்செய்தி எவ்வளவு சீக்கிரமாக வருகிறதோ, அதில் சசி அன்பைக் காட்டுகிறார் என எடுத்துக்கொண்டாள். தாமதித்த போதெல்லாம் திருப்தி அடையும் வரை மாற்றி மாற்றிக் கேட்பாளாம்.
சரியான பதில் கிடைக்காவிட்டால், சசி வீடு திரும்பியதும் முழு விவரம் கேட்பாள். ஒரே வாக்கியத்தில் பதில் அளித்தால், யாருடன் நேரம் அதிகம் சென்றது என்ற அடுத்த நிலைக்குச் செல்வாள். ஓரிரு முறை பதில்களில் ஏதோ குறைவு எனத் தோன்றியதும், சூடான தேநீரை தன்மேல் ஊற்றிக் கொண்டாளாம். மற்றொரு சமயம், சசி பதில் கூற பல மணிநேரம் ஆனதில் அவர் வாங்கிய புடவையைத் தாறுமாறாகக் கிழித்துவிட்டு,சாப்பிடாமல் இருந்தாள்.
இவற்றை செஷனில் எடுத்துக்கொண்டேன். இவை நேர்ந்த தருணங்களை விலாவாரியாக விவரிக்கச் சொன்னேன். பல செஷன்களுக்குப் பின்பே இப்படி நடந்து கொள்வது ஆக்கப்பூர்வமாக இல்லை என்றும், மாறாகத் தன் உறவின் பலவீனத்தைக் காட்டுகிறது என்பதைப் புரிந்து கொண்டாள்.
இப்படிப்பட்ட வழிமுறைகளை அவள் உபயோகிக்கிறாள் என்ற நிலைமையை மேற்கொண்டு பார்த்து வந்தோம். நிலா தன்னுடைய அணுகுமுறைகளை அடையாளம் கண்டுகொள்ள, தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று வியந்து போனாள்.
சிறுவயதிலிருந்தே இப்படி இருந்ததா என்று அறிய, அந்த பருவத்திலிருந்து தன்னைப் பற்றி தமக்குள் சுயச் சரித்திரம் எவ்வாறு எழுதிக்கொண்டாள் என்பதை நுணுக்கமாகப் பல செஷன்களுக்கு அவளுடன் ஆராய்ந்தேன். நிலாவின் பெற்றோரையும் செஷன்களுக்கு அழைக்க வேண்டி இருந்தது. பெற்றோர் அவளிடம் தன் அக்கா, அண்ணாவைப் போல் இருக்கவேண்டும் என்று அடிக்கடி பரிந்துரை செய்ததின் மூலகாரணத்தை அறிந்துகொள்ளவே.
நிலா மூன்றாவதாகப் பிறந்தவள், பெண்பிள்ளை. பெற்றோர் இருவருமே மற்றொரு ஆண்குழந்தை விரும்பி, ஏமாற்றம் கொண்டதால் நிலா மேல் பரிவு பாசம் வரவில்லை. அவளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அக்கா மற்றும் அண்ணனிடம் விட்டார்கள். அதனாலேயே நிலாவை அவர்களைப் போலவே இருக்கச் சொன்னார்கள். இந்த நிராகரிப்பை நிலா உணர்ந்தாள்.
அக்கறை சரிந்ததினால் தன்னுள் கோபம் குடியேறியதை அடையாளம் காண சில செஷன்கள் தேவைப்பட்டது. அப்போதுதான் நிலாவிற்குத் தான் கணவனைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு உறவைப் பாதிக்கக்கூடியது என்று புரிய ஆரம்பித்தது.
சசியும் தன் பங்கிற்கு, தமது உறவில் விரிசல் வந்துவிட்டதோ என்று நிலா அஞ்சுவதினால்தான் தன்னைத் தொடர்ந்து நோண்டித் தேடுகிறாள், கோபம் கொள்கிறாள் என்று புரிந்து கொண்டார். தான் அவமானப் பட்டதை வெளிப்படையாக எடுத்துச் சொன்னார்.
கணவன் மனைவியைச் சேர்ந்து பார்க்கத் தொடங்கினேன். செஷன்கள் போகப்போக தம் உறவில் நேர்ந்த நம்பிக்கை முறிவைப் பற்றி எடுத்துப் பேசினார்கள். நிலா தான் சந்தேகப்பட்டுப் பலமுறை கைப்பேசியில் அழைப்பது, விருந்தாளிகளுடன் ஒப்பிடுவது இப்படியெல்லாம் செய்ததற்குத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.
சசியும் தன் வேலை நன்றாகப் போய்க்கொண்டிருந்ததால் வீட்டில் என்ன நடக்கிறது, நிலாவுடன் பேசுவது இவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டதென்று உணர்ந்தார். நிலாவுக்குள் இத்தனை தவறான எண்ணங்கள் வளர்ந்ததில் தன் பங்கும் உண்டு என்று பல செஷன்களுக்குப் பின் உணர்ந்து ஏற்றுக்கொண்டார்.
சசியோடு தனிப்பட்ட செஷனில் நிலாவிற்குச் சிறுவயதில் ஏற்பட்ட நிராகரிப்பைப் பற்றி விளக்கினேன். சசியைத் திருமணம் புரிந்த நாளிலிருந்து இதுவரை அவர்களின் உறவைப் பரிசீலனை செய்தோம். விளக்கம் அளிக்க, தம்முடைய புரிதல், பங்கேற்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். சிறுவயதிலிருந்தே கவனம் காட்டாததின் பின்விளைவே அவளுடைய பாதுகாப்பின்மை.
தனக்கு நேர்ந்ததை நிலா புரிந்துகொள்ளவும் அந்த அனுபவங்களையே உபயோகித்தேன். பெற்றோர், கூடப் பிறந்தவர்கள், உறவுக்காரர்கள் எல்லோரும் அக்கா அண்ணனைப் புகழ்ந்து, தன்னை அவர்களின் நிழலில் வைத்ததனால்தான் இப்போது சசி மேல் சந்தேகங்கள் வந்தது என்று புரிய ஏறத்தாழ ஆறு மாதங்கள் ஆயின. தன்னைப் பற்றிய சுய அபிப்பிராயம் உயர்த்த நிலா தானாக முயற்சிகள் செய்வதென்று முடிவானது, வழிமுறைகளை விளக்கினேன்.
செஷன்களில் நிலா தன் உணர்வுகளை, நடத்தையைப் பரிசீலனை செய்யப் பயின்றாள். மாமியாருடன் வீட்டில் உறவாடும்போது இதைப் உபயோகித்துக் கண்டுகொள்வது தொடங்கியது. செஷன்கள் செல்ல, நிலாவிடம் மாற்றம் தென்பட்டது. அடுத்ததாக, இதுவரையில் நிலா செய்யாத சிலவற்றைத் தேர்ந்தெடுத்தேன், ஏனென்றால் நிலா இதுவரை தனக்குச் சவாலான எதையும் செய்வதில்லை, தோற்றுப் போய்விடுவோமோ என்று அஞ்சி. இயற்கை அறிந்து ரசிக்கும் குழுவுடன் சேர நிலாவிற்குப் பரிந்துரைத்தேன்.
குழுவினர் பெரும்பாலும் நடப்பார்கள் அல்ல மிதிவண்டி உபயோகிப்பார்கள். அவர்களுடன் பறவைகளைக் கண்டறிதல், மலைகள் ஏறுவது இவற்றுக்குச் சென்று வந்தாள். மூன்றாவது மாதம் அவர்கள் ஒரு காட்டுக்குச் சென்று இரு நாட்கள் தங்குவதாக இருந்தது. சசியும் கூடச் சென்றார். அங்குப் பல மணி நேரம் விலங்குகளை, பறவைகளைப் பார்வையிட்டார்கள். இயற்கைச் சூழலிலிருந்தது இருவரின் உறவைச் சீர்செய்ய உதவியது. திரும்பி வந்ததும், நேரம் அமைத்து டென்னிஸ், போன்ற விளையாட்டு இவர்களுடன் துவங்கி, மாமனார், மாமியாரையும் சேர்த்துக்கொள்ளச் செய்தேன். பாசம், அரவணைப்பு அதிகரிக்க, எங்கள் செஷன்கள் முடிவடைந்தது.
******************************************************************
