சைதை “மகாத்மா காந்தி நூல் நிலையம்” – புதுக் கட்டடமும் குவிகமும்! 

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் தெருவில் உள்ளடக்கமாக ஒரு நூல் நிலையம் – ஆறடி அகலம், நாற்பதடி நீளம் உள்ள ஒரு சிறிய இடத்திலிருந்து இயங்கி வருகிறது. நடத்தி வந்தவர் 92 வயதான திரு கு.மகாலிங்கம். காலில் செருப்பு அணியாத, கதராடைகளே உடுத்தும் காந்தீயவாதி. காந்தியடிகள், லால் பகதூர் சாஸ்திரி, வினோபா பாவே ஆகியோரைத் தரிசித்தவர். காமராஜர், கக்கன், ம.பொ.சி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மகாத்மா காந்தி நூல் நிலையம் 1952 ஆம் ஆண்டு, திரு கு.மாகாலிங்கம் மற்றும் அவரது நண்பர்கள் முயற்சியால், மகாகவி பாரதியாரின் சீடர் பரலி சு.நெல்லையப்பர் அவர்கள் தலைமை வகிக்க, அன்றைய சட்ட மன்ற உறுப்பினர் ராஜம் ராமசாமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழாவாக ஒவ்வொரு வருடமும் ஆண்டு விழா, பல முன்னணிப் பிரமுகர்கள் பங்கேற்க நடை பெறுகிறது.
1958 ஆம் ஆண்டு, முதலமைச்சராக இருந்த திரு காமராஜ் அவர்கள், நூல் நிலையத்தில் காந்தியடிகளின் உருவச் சிலையைத் திறந்து வைத்து, வாழ்த்தியிருக்கிறார்.
ஆண்டு தோறும் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த நூலகத்திற்கு, காமராஜ், ராஜாஜி, கக்கன், சி.சுப்ரமணியம், ம.பொ.சி. போன்ற பெருந்தலைவர்களும், வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன், அகிலன், அசோகமித்திரன், நா.பா., சாண்டில்யன், விக்ரமன், திருப்பூர் கிருஷ்ணன், தமிழ்வாணன் போன்ற மூத்த எழுத்தாளர்களும் வருகை தந்து சிறப்பித்திருக்கிறார்கள். எம்.கே.டி., சிவாஜி கணேசன், நாகேஷ், அசோகன், டைரக்டர் ஶ்ரீதர் போன்ற திரை உலகப் பிரபலங்களும் ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஏராளமான விருதுகளைப் பெற்ற பெருமை உடையது இந்நூலகம்.
சக்தி தி.கே.கிருஷ்ணசாமி அவர்கள் மறையும் வரை இந்நூலக வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தார். இப்போது சைதை துரைசாமி அவர்கள் அந்தப் பணியினைத் தொடர்ந்து செய்கின்றார்.
2019 லிருந்து மகாலிங்கம் அவர்களின் குமாரர் நித்தியானந்தம் அவர்கள், தந்தையின் அடியொற்றி இந்நூலகத்தைச் சிறப்பாக நடத்தி வருகிறார். சுற்றியுள்ள நல்ல மனம் படைத்த புரவலர்கள் பலரும் உதவி வருகிறார்கள். இப்போது இயங்கி வரும் இடத்தையும், மிகுந்த சிரமங்களிடையே வாங்கி, இங்கே ஒரு நிரந்தரமான நூலகத்தை, சிறப்பாக நிறுவுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் நித்தியானந்தம் அவர்கள்!
போன ஆண்டு விழாவில் வெளியிடப்பட்ட “நினைவுகள்” புத்தகம், இந்நூலக செயலாளர் ம. நித்யானந்தம், முகநூல், வாட்ஸ் ஆப் தளங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. “70 ஆண்டுகளில் நூலகத்தின் வளர்ச்சி” தலைப்பில் உள்ள கட்டுரை, இந்த நூலகத்தின் வளர்ச்சியில் பங்கு பெற்றவர்களைக் கொண்டாடுகிறது. வாசிக்கும்போதே வியப்பு மூச்சை முட்டுகிறது! வழங்கப்பட்ட விருதுகள், செய்திகளாக வெளியிட்ட ஊடகங்கள் என ஓர் ஆவணமாக உள்ளது இந்தக் கட்டுரை.
70 ஆண்டுகளாக இந்த நூலகத்தை போற்றிப் பாதுகாத்து நடத்திவரும் திரு மகாலிங்கம் அவர்களும், அவரது மகன் நித்யானந்தம் அவர்களும் போற்றுதலுக்குரியவர்கள். 25 புத்தகங்களுடன் தொடங்கப்பட்ட நூலகம், இன்று 25 ஆயிரம் நூல்களுடன் நிரம்பி வழிகிறது. நாவல்கள், சிறு கதைகள், சரித்திர நாவல்கள், கட்டுரைகள், தேச பக்தி, ஆன்மீகம், இலக்கியம் இப்படிப் பல்வேறு தலைப்புகளில் நூல்கள் வகைப்படுத்தப்பட்டு நேர்த்தியாக வாசகர்கள் எளிதில் எடுத்துப் படிக்க வசதியாக அடுக்கப்பட்டுள்ளன.
நூலகத்தில் நுழைந்தவுடன் ஏற்படும் அதிர்வலைகள் புத்தகங்களினாலா, மகாத்மாவின் சிரிக்கும் அழகினாலா, 65 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோயில் போல நடத்தி வரும் மகாலிங்கம் / நித்தியானந்தம் அவர்களின் ஆன்ம பலத்தினாலா என்பதை என்னால் சொல்லமுடியவில்லை. மனதில் ‘சட்’டென்று வந்து அமர்ந்து கொண்ட ஒரு பேரமைதி, தேச பக்தி விவரிக்க முடியாதது.
மகாத்மா காந்தி நூல் நிலையம் உள்ள இடத்தை வாங்குவதற்குப் பட்ட சிரமங்களையும், சமயத்தில் உதவிய நல்லுள்ளங்களையும் பற்றி அடிக்கடி நினைவு கூர்ந்து நெகிழ்வார் நித்தியானந்தம். மழைக் காலங்களில் கசியும் நீரிலிருந்தும், புத்தகங்களைத் தின்றுவிடும் கரையான்களிடமிருந்தும் புத்தகங்களைப் பாதுகாக்க நித்தியானந்தமும், அவர் குடும்பமும் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், எதிர்கொண்ட சவால் மிகுந்த கஷ்டங்களும் பிரமிக்க வைப்பவை. அவர்களுக்குப் புத்தகங்களின் மீதான காதல் சொல்லி மாளாது.
நூல்நிலையத்திற்குப் புதிய கட்டடம் கட்ட நித்தியானந்தம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. நண்பர்களும், நூல் நிலைய உறுப்பினர்களும், மற்றும் நூலக நலம் விரும்பிகளும் கொடுத்த நன்கொடை சுமார் எட்டு லட்சம் ரூபாய்கள்! குவிகம் குழுமத்தின் அனைத்து நண்பர்களும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய்கள் நன்கொடையளித்து உதவியது குறிப்பிடத்தக்கது. உரத்த சிந்தனை, விருட்சம் நண்பர்களும், ஏராளமான எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகைகளும் அள்ளிக் கொடுத்துள்ளனர்.
நூலகத்தின் புதிய கட்டடத் திறப்புவிழா 17.11.2024 அன்று காலை 9 மணிக்குச் சிறப்பாக நடந்தேறியது. திருமதி வள்ளி முத்தையா அவர்கள் தலைமையில், பத்மஶ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் நூலகத்தை திறந்து வைத்தார்கள்.
விழாவிற்கு ஏராளமான உறுப்பினர்களும், நண்பர்களும் வந்திருந்தனர். முன்னணி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என திரும்பிய இடமெல்லாம் பிரமுகர்கள்! இரண்டு தளங்களில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் – சில மிகவும் அரிதான, சிறந்த பழைய புத்தகங்கள் – கழுத்தில் மாலையுடன், புன்னகைக்கும் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலை என புதிய கட்டடத்தில் ‘மகாத்மா காந்தி நூல் நிலையம்’ கம்பீரமாக நிற்கின்றது!
“இந்த இடத்தில்தான் நூலகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது இறைவன் சித்தம். நாம் ‘கருவிகள்’. இறையனாரும், முருகவேளும், நண்பர்களும் எனக்குத் துணை செய்ததால், இந்தப் பணி தடையின்றி நிறைவேறியது” என்று கூறும் நித்தியானந்தம் அவர்களின் அடக்கமும், பண்பும் மெச்சத்தகுந்தவை.
வாசிப்பு அருகி வரும் இன்றைய காலகட்டத்தில், அருமையான புத்தகங்களைச் சேர்த்து வைத்து, வாசிப்பவர்களையும், புத்தக வாசிப்பையும் ஊக்குவிக்கும் ‘மகாத்மா காந்தி நூல் நிலையம்’ போற்றுதலுக்குரியது. இது போல இன்னும் பல நூல் நிலையங்கள் திறக்கப் பட வேண்டும் !
