நவம்பர் மாதத்தில் வந்த கதைகளில் சிறந்த கதை : பால் மன கணக்கு, கதாசிரியர்: உஷா தீபன். தினமணி கதிர்
நவம்பர் மாதம் வெளிவந்த 68 கதைகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.
நான் தேர்ந்து எடுத்த முதல் 5 கதைகள் :
1.கதை பெயர்: பாலாம்பாள் – தின மலர் நவம்பர் 3
கதாசிரியர்: வி பத்மாவதி
முடிவை முதலில் சொல்லி ஆரம்பிக்கும் எல்லா கதையும் சுவாரசியத்தை தூண்டும். இந்த கதையும் அவ்வாறே எழுதப்பட்டுள்ளது.
டாக்டர் கௌரி தன்னுடைய மாமியார், பாலாம்பாள் கையால் “ஸ்ரீ பாலா மகப்பேறு புதிய பிரிவு கட்டடம்” என்ற இடத்தை திறக்க செய்கிறார். ஏன் தன்னுடைய மாமியாரின் கையால் கட்டிடத்தை டாக்டர் துவக்குகிறார் என்பதை விளக்குவதுதான் இந்தக் கதை.
பாலாம்பிகா என்கிற பாலா மாமி தன் பிள்ளை, தன்னையும், தன்னுடைய மருமகள் கௌரியையும் அவளுடைய கை குழந்தையையும் நிற்கதியாக்கிவிட்டு இறந்து விட, தன் துக்கத்தைவிட கௌரியின் நிலைமையை பார்த்து பெரிதும் கவலை கொண்டாள். சம்பிரதாயம் என்று சொல்லிக்கொண்டு கௌரியையும் தன்னைப்போல் மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்க முனைந்த சமூகத்திடமிருந்து கௌரியை காப்பாற்ற நினைத்தாள் . கௌரியை டாக்டர் ஆகவும் , கை குழந்தை பேரனை வக்கீலாக்குவேன் என்று சபதம் செய்து எல்லோருடைய எதிர்ப்பை மீறி, சென்னைக்கு குடிபெயர்கிறார்.
தன்னுடைய கடின உழைப்பால் தனி மரமாக நின்று அவள் போட்ட அந்த சபதத்தை சாதிக்கவும் செய்கிறாள். பாலாம்பாள் பட்ட கஷ்டங்களை படிக்கும் பொழுது வாசகர்களாகிய நம் நெஞ்சம் கனத்து போகிறது..
கதையின் சுவாரசியம் சிறிதும் குறையாமல் கடைசிவரை நேர்த்தியாக கதாசிரியர் கையாண்டிருக்கிறார்.
2 கதை பெயர்: ஈரம்
கதாசிரியர்: G R சுரேந்தர்நாத்
நடுத்தர வர்கத்தின் கஷ்ட நஷ்டங்களை கதாசிரியர் இந்த கதையில் அழகாக பிரதிபலித்துள்ளார்.
திடீர் திடீரென்று வரும் செலவீனங்கள் நடுத்தர வர்கத்தின் நிதி நிலைப்பாட்டை சீர் குலைக்கும் விதமாக இருப்பதை நேர்த்தியாக காண்பித்துள்ளார்.
அருண் தன் குழந்தைகளுக்குகாக ஸ்கூலுக்கு பணம் கட்ட வேண்டிய கட்டாயம் இருந்த பொழுதும் அவன் தன நண்பனின் கஷ்ட நிலைமையை யோசித்தது , கொடுத்திருத்த கடனை திருப்பி கேட்க மனமில்லாமல் இருப்பது, நட்பின் ஆழத்தை சிறப்பாக கதாசிரியர் சித்தரித்துள்ளார்.
ஸ்ருதி பண விஷயத்தில் அருணிடம் கறாராக பேசியிருந்தாலும் அவனுடைய நண்பனின் பண கஷ்ட நிலைமையை நேரில் பார்த்தவுடன் அவர்கள் கேட்காமலேயே, அருணிடமும் சொல்லாமல், தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து பணம் கொடுத்தது, அவளுடைய மென்மையான மனதை வெளிப்படுத்துகிறது.
ஒருவன் தன் நண்பன் படும் கஷ்டத்தை தன்னுடைய கஷ்டமாக நினைத்து உருகுவதை கதாசிரியர் நேர்த்தியாக சித்தரித்துள்ளார் .
கதையாசிரியரின் எழுத்து திறமைக்கு பாராட்டுக்கள்.
3 கதை பெயர்: அச்சு வெல்லம் நடுகல் நவம்பர் 1
கதாசிரியர்: ச ப்ரியா
கரும்பு பண்ணை வைத்திருந்த தர்மராஜுக்கு சர்க்கரை நோய் இருப்பது ஒரு ironyதான்.
கரும்பை வெட்டிக் கொண்டு வந்து மிஷினை வைத்து அரைத்து, பாகு காய்ச்சி அதிலிருந்து வெல்லம் எடுக்கும் வரை இருக்கும் செயல் முறைகளை கதாசிரியர் மிக நேர்த்தியாக விவரித்துள்ளார்.
அச்சு வெல்லம் செய்யும் விதத்தை இனிக்க இனிக்க படித்த வாசகர்களை, கதையின் முடிவு மிகவும் கண்கலங்க வைத்துள்ளது.
கதாசிரியரின் எழுத்து திறமைக்கு பாராட்டுக்கள்.
4 கதை பெயர்: ஆயக்கால் தினமணி 24/11/24
கதாசிரியர்:
தன் அண்ணன் குழந்தைகளுக்காக தன்னலமற்ற சேவை செய்த பாண்டுரங்கனின் கதை.
ஏணியாக நின்று அண்ணன் குழந்தைகளை வாழ்க்கையில் தூக்கி விட்ட பின், அவர்களால் தள்ளிவிடப்பட்டவர் தான் இந்த பாண்டுரங்கன்.
பாண்டுவின் அண்ணன் குழந்தைகளை தன் குழந்தைகளாக பார்துக்கொண்ட லக்ஷ்மியும் பாண்டுரங்கனும் முடிவில் இணையவதாக சித்தரித்து இருப்பது மிக நன்றாக இருந்தது.
பெருமாளின் வசந்த உத்சவம் பற்றின வர்ணனைகள், வாசகர்கள் நேரில் சென்று தரிசிப்பதுப்போல் கண்முன்னே கொண்டு நிறுத்தியுள்ளார் கதாசிரியர். அவரின் எழுத்து திறமைக்கு பாராட்டுக்கள்.
5 கதை பெயர்: பால் மன கணக்கு -தினமணி 10/11/24
கதாசிரியர்: உஷா தீபன்
“நிஜ உலகில் இதே மாதிரி பல வைதேகிகளை இருக்கத்தான் செய்கிறார்கள் ” என்று இந்த கதையை படிக்கும் அனைவரின் மனதிலும் தோன்றும்.
இந்த கதையில், 90 வயதை கடந்த ஒரு தாத்தா, தினமும் அதிகாலை 4.30 மணியிலிருந்து சைக்கிளை தள்ளிக்கொண்டு பால் விநியோகம் செய்கிறார். நமக்கு கதை சொல்பவர் (narrator)
தாத்தாவிடம் 100 ரூபா குடுத்து 3 பாக்கெட் பால் வாங்குகிறார். தாத்தா 4வது பாக்கெட்டை ரெண்டாவது ரவுண்டு வரும் பொழுது கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார். வீட்டில் வைதேகி, கதை சொல்பவர் (narrator) பால் பாக்கெட்டை அதிக விலை கொடுத்து வாங்கி விட்டார் என்றும், அந்த தாத்தா 4வது பாக்கெட் பால் கொண்டு வந்து தர போவதில்லை என்றும் கதை சொல்பவர் ஏமாந்து விட்டதாக கூறி துவைத்து எடுக்கிறாள். கதையின் முடிவில் அந்த தாத்தா சொன்ன சொல் தவறாமல் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்து ஒரு பால் பாக்கெட்டையும் மீதி சில்லறையும் கொடுக்கிறார்.
ஒரு பக்கம் வைதேகியின் சீற்றல், மறுபக்கம் அந்த தாத்தாவின் பெயரில் உள்ள தாட்சண்யம் / பச்சாதாபம் மற்றும் அவருடைய உழைப்பு, தன்னுடைய நிதி நிலைமை, இவை அனைத்தையும் சார்ந்த மன போராட்டங்களை, கதாசிரியர் அழகாக சித்தரித்துள்ளார். சாமானியர்கள் எல்லோரும் ஏமாற்றுபவர்கள் என்று நினைக்கும் வைதேகி மாதிரி மக்களும் இருக்கிறார்கள், அவர்கள் மத்தியில் நமக்கு கதை சொல்பவர் (narrator ) மாதிரி உள்ள மனிதர்களும் இருக்கிறார்கள். தாத்தா மாதிரியான unsung ஹீரோக்களும் நிறையவே இருக்கிறார்கள். இதே மாதிரியான நிகழ்வுகள் நிச்சயம் முக்கால்வாசி மத்திய வர்க்கத்தினர் வீட்டிலும் நடைபெறும்.
இதை கதை வடிவில் அழகாக கொடுத்துள்ளார்.
எனக்கு தேர்வுக்காக அனுப்பிருந்த 68 கதையும் அருமையாக இருந்தது. தேர்வு செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. எல்லா கதாசிரியர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.
மேலே பதிவு செய்த 5 கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை – Sl No 5 – பால் மன கணக்கு
கதாசிரியர்: உஷா தீபன். இந்த கதையை நவம்பர் மாதத்தில் பிரசுரித்த கதைகளில் சிறந்த கதையாக நான் தேர்ந்தெடுக்கிறேன். கதாசிரியர் உஷா தீபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சிறந்த கதையை தேர்ந்து எடுக்கும் வாய்ப்பை எனக்களித்த திரு கிருபானந்தன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

