மூன்றாம் ராஜேந்திரன் -சோழ அஸ்தமனம்
மூன்றாம் ராஜராஜ சோழன், தனது இயலாமையை நன்கு உணர்ந்திருந்தான். சோழநாட்டின் கெட்டநேரம், தன் வடிவில் வந்தது என்று நொந்துகொண்டான். வெற்றிமட்டுமே கண்ட தலைநகரை இழந்தான். பாண்டியனுக்குக் கப்பங்கட்டும் சிற்றரசனானான். தோற்றோடும்போது, சிற்றரசனால் சிறைப்பிடிக்கப்பட்டான். போசளரின் துணையால் சிறை மீட்கப்பட்டான். அவமானங்களைச் சுமந்தான்.
இத்துடன், சோழர்கள் சரித்திரத்திலிருந்து மறைந்து விடுவார்கள் என்பது போல் தோன்றியது. ஆனால், அணையும் விளக்கு, பிரகாசமாக எரியும் என்பதுபோல, அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் ராஜேந்திரன். ராஜேந்திரன், அறிவிலும், வீரத்திலும் சிறந்து விளங்கினான். சோழநாடு அடைந்த சிறுமைக்குப் பழிவாங்கி, மீண்டும் சோழநாட்டை பெரும் சாம்ராஜ்யமாக்க வேண்டும் என்று துடித்தான். மன்னன் ராஜராஜன், இந்த மகன் இளைஞன் ஆன உடனே, அவனைப் பட்டத்துக்கு உரியவனாக்கி, அவனை நாட்டை ஆள வைத்தான். பிறகு, ராஜராஜன், அப்பாடா என்று நிம்மதியாக வாழ்ந்தான் – அந்தப்புரத்தில்..
வருடம் 1246: மூன்றாம் ராஜேந்திர சோழன் பட்டத்து இளவரசனாக முடி சூட்டப்பட்டான். அதற்குப் பின் 14 ஆண்டுகளுக்கு – அவனது தந்தை மூன்றாம் ராஜராஜ சோழன் – பெயரளவில் மட்டுமே ஆண்டான். அதிகாரம் – திறமை மிக்க இளவரசன் ராஜேந்திரனிடம் இருந்தது. பழைய அதிகாரங்களையும், செல்வாக்கையும் ஒரு சிறிதளவாவது மீட்க மூன்றாம் ராஜேந்திரன் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டான்.
தனது தந்தையின் காலத்தில், சோழதேசம் இழந்த மானத்தை மீட்கும் பொருட்டுப் பெரும் படையைத் திரட்டத் தொடங்கினான். தனது பாட்டனின் செயற்குணங்கள் தன் மனத்தைக் கவர்ந்ததாலும், அவரைப் போல சோழதேசத்தை நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும், தனது பாட்டனின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டான் அந்த ‘குலோத்துங்கன் ராஜேந்திரன்’.
ஆயினும், ராஜேந்திரன், மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பலத்தை நன்கு அறிந்திருந்தான். வல்லமை படைத்த சுந்தரபாண்டியனுக்கு எதிராக மூன்றாம் ராஜேந்திரன், எதையும் செய்துவிட முடியவில்லை. ஆகவே நல்ல சமயத்துக்காகக் காத்திருந்தான். வருடங்கள் கடந்தன. காலம் கனிந்தது.
ஒருநாள்.. அது ராஜேந்திரனுக்கு நல்ல நாளாக அமைந்தது. காலங்கள் யாரையும் விட்டுவைப்பதில்லை. மதுரையிலிருந்து அந்தச் செய்தி விரைந்து வந்தது. சோழநாட்டைச் சிற்றரசாக்கிய மாறவர்மன் சுந்தரபாண்டியன் மரணமடைந்தான். அவனது மகன் இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன், உடனடியாக அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தான். குலசேகரனைப்பற்றி ராஜேந்திரன் நன்கு அறிந்திருந்தான். குலசேகரன், தன் தந்தை சுந்தரபாண்டியனைப்போல இல்லாமல், ஆற்றல் குறைந்தவனாக இருந்தான். இதுதான் சமயமென்று, ராஜேந்திரன், உடனடியாகப் பாண்டியநாட்டை நோக்கித் தன் படைகளை நகர்த்தினான். குலசேகரனும், பாண்டியப் பெரும்படையுடன் ராஜேந்திரனை எதிர்கொண்டான். ராஜேந்திரனின் வேட்கையும், அவனது ஆற்றலும், சோழதேசத்தை வெற்றிபெறச் செய்தது. இதனால் பாண்டியன் சோழனுக்குக் மீண்டும் கப்பம் கட்டும்படி ஆனது.
ராஜேந்திரசோழன், சோழதேசத்திற்கு நேர்ந்த துன்பங்களுக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் படை எடுத்து சென்றதால், அங்கே இருந்த பாண்டிய அரண்மனைகள், மாளிகைகள், பயிர், படை, செல்வம் என பாண்டியர்களின் வசம் இருந்தவைகள் நாசம் ஆயின.
ரிப்பீட்டு!! ஹிஸ்டரி ரிப்பீட்ஸ்!
இவ்வாறு, சோழ அரசுக்கு ஏற்பட்ட இழிவினை ராஜேந்திரன் நீக்கினான். தந்தை ராஜராஜன் இரண்டு முடிகளைச் சூட்டிக் கொள்ளும் அளவுக்கு தன்னுடைய ஆற்றலைக் காட்டினான் என்று அவனது மெய்க்கீர்த்தி சொல்கிறது. முடியோடு இருந்த பாண்டியனின் தலையை வெட்டுவதில் ராஜேந்திரன் வல்லவன் என்றும் அது குறிப்பிடுகிறது. அட, ‘முடியை வெட்டுவதில்’ என்றுத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். ‘முடி கொண்ட தலையை வெட்டுவதில்’ அவன் மன்னனாம்! திருப்புராந்தகம் கல்வெட்டு 15-ஆம் ஆண்டில் இதை இன்னும் நிதானமாகச் சொல்கிறது ‘இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளின’ என்பது வாசகம். சோழ மன்னனுக்கு (தந்தை ராஜராஜனுக்கு) அவன் அணிவித்த இரண்டாம் முடி பாண்டியனுடைய முடியே. அதாவது ‘மணிமுடி’!
மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திற்குப் பிறகு ராஜராஜ சோழனின் காலத்தில் பெரிதும் நலிவடைந்த சோழர்குலத்தின் பெருமையை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டு, வெற்றியும் கண்டான் மூன்றாம் ராஜேந்திர சோழன்.
கதையில் திருப்பம் வேண்டாமா?
மாறும் கூட்டணிகள். மாறாத அரசியல் லட்சியங்கள்!
போசள மன்னன் வீர நரசிம்மன், சோழர்களின் உற்ற துணைவனாக இருந்து உதவிவந்தான் என்பதைப் பார்த்தோம். அவனது மரணத்திற்குப் பிறகு, அவனது மகன் வீரசோமேஸ்வரன் அரசனானான். போசள தேசம், சோழர்களுடன் பெண் உறவு கொண்டிருந்தது போலவே பாண்டியர்களுடனும் பெண் உறவு கொண்டிருந்தது. குலசேகர பாண்டியனுடன் உறவு கொண்டிருந்ததால், போசளர்கள், பாண்டியர்களுக்கு உதவ வேண்டி இருந்தது.
உறவுகள் மீறப்பட்டன. காட்சிகள் மாறப்பட்டன.
குலசேகரபாண்டியன், சோழர்களிடம் தேசத்தை இழந்த பின்பு சோமேஸ்வரனிடம் சரண் அடைந்தான். இதன் காரணமாக, சோமேஸ்வரன் தனது போசளப் படையை, சோழதேசம் நோக்கி அனுப்பினான். பாண்டிய தேசத்தை அப்போதுதான் வென்றிருந்த சோழர்கள், தங்கள் தேசம் திரும்பிக்கொண்டிருக்கும்போதே, போசளர்கள் சோழர்களின் பின்னே வந்து பல இடங்களை கைப்பற்றிப் பாண்டியர்களுக்கு கொடுத்தனர். சோழர்கள் வசம் இருந்த புதுகை, மதுரை வரையிலான இடங்களை பாண்டியர்களுக்குக் கொடுத்தனர்.
மூன்றாம் ராஜராஜ சோழனின் காலத்திலேயே, சோழர்களுடன் நெருங்கிய உறவுக் கொண்டிருந்தனர் தெலுகு சோழர்கள். இவர்கள் இரண்டாம் ராஜாதி ராஜ சோழனின் பரம்பரையாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு; ஏனெனில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பிறகு, இரண்டாம் ராஜாதி ராஜன் தெலுங்கு தேசம் நகர்ந்தான் என்று சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன.
தெலுகுசோழ மன்னனாகிய கோபாலன், மூன்றாம் ராஜேந்திர சோழனிடம் நெருங்கிய அன்புகொண்டு, உற்ற தோழனாக இருந்து வந்தான். சோழனின் படை எடுப்புக்கு உதவிசெய்து, போரில் பங்கு கொண்டு பெரும்பணி செய்தான். இவ்வாறு தனக்கு உதவி செய்த நண்பனுக்குப் பெருமை செய்ய, காஞ்சி நகரை ஆளும் பணியை அவனிடம் ஒப்படைத்தான். தெலுங்கு சோழர்கள், வடக்கே நெல்லூர் முதற்கொண்டு தெற்கே இன்றைய செங்கற்பட்டு வரை ஆட்சி புரிந்தனர்.
குலசேகர பாண்டியன் நீண்ட நாட்கள் ஆளவில்லை. அவனுக்குப் பிறகு, அரசனனான் ‘இரண்டாம்’ மாறவர்மன் சுந்தரபாண்டியன்(பட்டம் 1238). இவனும் சோழர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசனாகவும் பின்பு போசளனின் உதவியால் சுதந்திர அரசனாகவும் இருந்தான்.
இப்படி, சோழநாடு மீண்டும் வலிமையுடன் தமிழகத்தை ஆளத்தொடங்கியது என்று நீங்கள் எண்ணினால் அதற்காக உங்களைக் குற்றம் சொல்ல முடியுமா? ஆனால், அந்த எண்ணம் தப்புக்கணக்காகப் போனது. மேலே படியுங்கள்:
ஒரு தத்துவம் சொல்வோம்.
‘ஒரு நாடு வெற்றிகரமாக இருக்கவேண்டுமென்றால் அதன் அரசன் பலமும், அறிவும் நிறைந்தும் இருக்கவேண்டும். அது மட்டும் போதாது. அத்துடன், எதிரிகளின் பலமும், அறிவும் சற்றுத் தாழ்ந்தே இருக்கவேண்டும். ஒரு வேளை, எதிரி தன்னைவிடப் பெரும் பலசாலியாகவும், அறிவாளியாகவும் இருந்தால் தோல்விதான். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு அதிருஷ்டம் இருக்க வேண்டும்”.
இப்படி, மாறிமாறி, சோழர்களும் பாண்டியர்களும் ஒருவருக்கொருவரை வென்று கொண்டிருக்கையில், பாண்டியநாட்டில் உதயசூரியன் போல ஒரு மன்னன் உதித்தான். அதில், சோழநாடு காலைப்பனி போல் மறைந்தது.
அவன் சடையவர்மன் (ஜடாவர்மன்) சுந்தரபாண்டியன்!
சாண்டில்யனின் ராஜமுத்திரையில் வரும் அதே மாமன்னன் தான். இவன் பாண்டிய மன்னர்கள் பரம்பரையில் மிகவும் வலிமை வாய்ந்தவனாகவும், பெரும் ஆற்றல் கொண்ட வீரனாகவும் இருந்தான். இவனது எண்ணங்களை அறிந்த போசளன் (அதற்குள் போசள-பாண்டிய உறவுமுறைக் கூட்டணி அறுந்துவிட்டது). ‘இப்பாண்டியனை வளர விட்டால் தனது ஆட்சிக்கு வீம்பு நேரிடும்’ என்று அறிந்து, ராஜேந்திர சோழன் பக்கம் நட்புக் கரம் நீட்டினான். அரசியலில் எல்லாம் சகஜமப்பா! போசளனின் நட்பினை ஏற்றுக்கொண்டான் சோழன். வீரநரசிம்மனின் மைந்தன் வீரராமநாதன் என்பவனைச் சோழதேசத்திலேயே இருந்து கண்ணனூர் என்ற இடத்தை ஆட்சி புரியும்படி அழைத்தான். இவ்வாறு சோழன் செய்ததன் காரணம், பாண்டியன் படை எடுக்க நேர்ந்தால் கண்ணனூர் கடந்தே சோழ தேசம் நுழைய வேண்டும், அவ்வாறு அவன் கண்ணனூர் நுழையும் நேரத்தில், அவனைத் தடுக்க போசளர்கள் சோழர்களுடன் இணைந்து பாண்டியனை எதிர்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான்.
பெரும் ஆற்றல், படையாளும் திறம், ராஜதந்திரம், வீரம், இவற்றைக் கொண்டிருந்தான் சடையவர்மன் சுந்தர பாண்டியன். ராஜேந்திர சோழனின் 37-ஆம் ஆட்சி ஆண்டில், சோழர்கள் மீது படை எடுத்து வந்தான் சுந்தரபாண்டியன். பாண்டியப்படைகள், ஊழிக்காற்றுபோல, பறந்துவந்தன. பாண்டியனது ஆற்றலுக்கும், வீரத்திற்கும் பணிந்தான் ராஜேந்திர சோழன்.
காட்சிகள் மீண்டும் மாறின.
கப்பங்களும் இடம் மாறின.
இப்படியாக, மூன்றாம் ராஜேந்திரசோழன் பாண்டியன் சுந்தரபாண்டியனுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசன் ஆனான். ராஜேந்திரனை மட்டும் அடக்கினால், போசளன் மீண்டும் தன்னுடன் போர்புரிய வருவான் என்பதை சுந்தரபாண்டியன் உணர்ந்தான். படைகள் பறந்தது. சுந்தரபாண்டியன் படைகள், சோழர்களுக்கு உதவும் போசளர்களையும், தெலுங்கு சோழர்களையும் வென்றது. வீரசோமேஸ்வரனைக் கொன்று, அவனுடைய புதல்வன் வீரராமநாதனை விரட்டினான், தெலுகு சோழமன்னன் கோபாலனைக் கொன்று, தென்னகத்தே தனது வெற்றிக் கொடியை நாட்டினான் சடையவர்மன் சுந்தரபாண்டியன். தம்பியுடையான் படைக்கு அஞ்சுவானா? அவனுடைய தம்பி வீரபாண்டியன் (சாண்டில்யனின் ராஜமுத்திரை நாயகன்) பெரிய வீரன். வீரபாண்டியன் சேரநாட்டு வீரரவியைப் போரில் ராஜமுத்திரை என்ற கோடாரியால் கொன்றது – சாண்டில்யனின் தங்கவரிகளில் நாம் படித்ததே!
மூன்றாம் ராஜேந்திரன் ஒடுங்கிப்போனான். பழையாறையில் மறைந்து வாழ்ந்து 1279 க்குப் பின் காணாமல் போனான்.
ஆதித்தசோழனின் வெற்றியால், முன்னூறு வருடமுன் பல்லவர்கள் முடிந்தனர்.
இன்று சுந்தரபாண்டியன் வெற்றியால் சோழர்கள் முடிந்தனர்.
சரித்திரத்திலிருந்து காணாமல் போயினர். சோழர்களின் பொற்காலம் முடிந்தது. ஆட்சிக்காலமும் முடிந்தது.
ஆயினும், அவர்கள் விட்டுச்சென்ற கோவில்களும், இலக்கிய, மற்றும் சமயப் பணிகளும், சரித்திரத்தில் ஒளிவீசுகின்றன.
நாமும், சோழர்களிடமிருந்து நன்றியுடனும், வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் விடைபெறுவோம்.
பாண்டியரின் பொற்காலம் ஒன்று தொடங்கிவிட்டது.
இனி அதைக்காண்போம்.
(சரித்திரம் பேசுகிறது தொடரின் நான்காம் பாகம் முற்றிற்று!
இனி வர இருப்பது ஐந்தாம் பாகம் )

