மார்கழி பிறந்தால் பஜனை வரும் பக்தி வரும் பனி வரும் பாடலும் வரும்
கண்ணன் மாதங்களில் மார்கழியாக இருக்கிறான்.
ஆண்டாள் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்கிறார்
கண்ணதாசன் மாதங்களில் அவள் மார்கழி என்றும் பனி இல்லாத மார்கழியா என்கிறார் !
மார்கழிப் பனியில் மயங்கிய நிலவில் என்று எஸ் பி பி காதலில் உருகுகிறார்
இசைப்புயல் ரஹ்மானோ மார்கழிப்பூவே என்றும் மார்கழித் திங்களல்லவா என்கிறார்
மார்கழி பூக்களே இளம் தென்றலே என்று வாணி ஜெயராம் கொஞ்சுகிறார்
மார்கழி மாசம் கொஞ்சம் குளிரெடுக்காதா என்று இளையராஜா குழைகிறார்
திருப்பாவை ஒரு தவம் என்ற வீடியோவைப் பாருங்கள். அப்படியே மயங்கி விடுவீர்கள்.
அந்த திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி என்ற மூன்றையும் எளிய வடிவில் செய்திருக்கிறேன்.
அதிலிருந்து ஒரு பாடல் இந்த மார்கழித் திங்களில் ..
ஆண்டாளின் அருள் வடிவம் :
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர் வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய்
அடியேனின் பொருள் வடிவம் :
மார்கழி மாதம் ஒளி நிறைந்த நல்லநாள்
நீராடப் போவோம் வாருங்கள் தோழிகளே !
சீரான ஆயர்பாடியின் செல்வச் சிறுமிகளே !
கூர்வேல் போன்றவன் நந்தகோபன் குமரன்
பார்வைக்கு இனியவன் யசோதாவின் இளஞ்சிங்கம்
கார்மேகக் கண்ணன் கதிர்போன்ற முகமுடையவன்
நாராயணன் அவனே நல்லருள் தந்திடுவான்
ஊரார் பாராட்ட வாருங்கள் பாவையரே !!

