மாமியாரை அம்மா என அழைக்கலாமா?
சமீபத்தில் நான் ஒரு அதிசய செய்தியைப் படித்த பின் அதைப் பகிரா விட்டால் மண்டை வெடித்து விடும் போலிருந்தது.
அதற்கு முன்பு என் கவனத்தை இதுநாள் வரை ஈர்க்காத செய்தி ஒன்று ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத கடைசி ஞாயிறு மாமியார்கள் தினமாம். மாமியார் தினம் இந்த வருடம் போன வருடம் இல்லை, 1934ம் வருடம் முதல் கொண்டாட துவங்கினார் களாம். 1970 முதல்தான் அக்டோபர் கடைசி ஞாயிறு கொண்டாடத் துவங்கினார்களாம் கும்பிடப்பட வேண்டிய மருமகள்களும், மருமகன்களும்.
அதிசய செய்திக்கு வருவோம். கடந்த வாரம் ஒரு செய்தி இதழ் மணப் பருவத்தை நெருங்கிய மகளிரிடம் “ மாமியாரை அம்மா என அழைப்பீர்களா?” என கேள்வி ஒன்றை வைத்தது. இருபது பெண்களில் 19 பேர் அம்மா என அழைப்பதுதான் சரி என ஆணித்தரமாக கூறினார்கள்.
வருங் கால மாமியாரை மனதில் எண்ணிய பயம் கண்களில் தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் பிறந்த வீட்டை விட அதிக நாட்கள் வாழப் போவதும், அதிக பொறுப்புகள் எடுக்கப் போவதும் புகுந்த வீட்டில்தான், எனவே மாமியாரை அம்மாவாக அரவணைத்தால் வாழ்வில் வசந்தமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவது.
புத்திசாலி பெண்கள். பெண்களும் வேலைக்குச் செல்லும் இந்நாளில் வீட்டில் ஒரு பாட்டி கிடைக்கப் பெற்றால் அது கடவுள் தந்த வரம். மருமகள்கள் அனைவரும் இந்த முடிவெடுத்தால் டெலிவிஷனில் சீரியல் கதை எழுதுபவர்கள் வேலை இல்லாமல் போவார்களே!
சற்று யோசித்தால் இந்த மாமியார்- மருமகள் சண்டையை பெரிது படுத்தி சில சமயங்களில் கேவலப் படுத்தி உணர்வை நியாயப்படுத்தியவர்கள் 18ம் நூற்றாண்டுக்கு பின் முளைத்த நம் எழுத்தாளர்கள்தான். கதையாக இருக்கட்டும், நாடகம்-சினிமாவாக இருக்கட்டும் காமெடி காட்சிகளில் எங்கோ இலை மறைவு காய் மறைவாக நடக்கும் மாமியார்-மருமகள் சண்டையை பெரிது படுத்தி காட்டி கைதட்டல் வாங்கினார்கள்.
பின்னர் மருமகள் அனுதாபம் பெற மாமியாரை கொடுமைக்காரியாக்கி, அந்த காட்சியை சேர்ந்தே அமர்ந்து பார்க்கும் மாமியார் மருமகள் இருவர் கண்களில் நீரும், மனதில் வெறுப்பையும் வளர்த்தனர் நம் கதாசிரியர்கள்.
அது போகட்டும். எல்லா உறவுகளுக்கும் ஒரு வரலாறு இருக்குமே என வரலாற்றை திரும்பிப் பார்க்க மனம் எண்ணியது.
நமக்காக எழுத்தில் வடிக்கப்பட்ட முதல் ஆவணம் இதிகாசம். ஐந்தாவது வேதம் என கூறப்பட்ட மகா பாரதத்தில் இந்த யுத்தம் இல்லை. சமூக பொது நீதியாக விதுரன் கூறிய விதுர நீதியிலும் இல்லை. மாறாக சங்க இலக்கியத்தில் ஒரிரு இடங்களில் மாமியார் மருமகள் உறவை கவிதையாக்கி உள்ளார்கள்.
அக நானூரில் ஒரு காட்சி, தொலை தூரத்திலிருந்து ஒரு தாய் தன் மகன் குடும்பம் நடத்தும் அழகை காண வருகிறாள். இருள் சூழும் நேரம் வீட்டின் முன் புறம் உள்ள தோட்டத்தில் மருமகள் முல்லைப்பூவில் மாலை தொடுத்து பேரனுக்குச் சூடும் அழகை ரசிக்கும் மகனைப் பார்த்து தானும் மதி மயங்கி நிற்கிறாள். மருமகள் மகனை வளைத்து விட்டாள் என்ற ஒப்பாரி அங்கு இல்லை.
அடுத்த காட்சி புற நானூரில். கணவன் போரில் மாண்ட செய்தி கேட்டு மனைவி போர்களம் செல்கிறாள். கணவன் மார்பில் வேல் பாய்ந்து மாண்டு கிடக்கிறான். ஒரு கணம் உலகம் இயக்கத்தை நிறுத்துகிறது. அடுத்த கணம் தன் மாமியார் மகனின் இறப்பை எப்படி எடுத்துக் கொள்வாள் என்ற கவலை பாடலாய் வடிகிறது.
மாமியார்-மருமகள் உறவை நம் முன்னோர்கள் இப்படித்தான் பார்த்தார்கள். காட்சிகள் மாறியது பின்னர்தான்.
ஜூலை மாதம் 30 மாமனார்கள் தினமாம். வந்ததும் தெரியாது. போனதும் தெரியாது. பாவம் மாமனார்கள்.
