(ஓர அடியார் – ஒரு. வெண்பா)
45) ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
ஐயடிகள் காடவர் கோன், பல்லவ அரச மரபைச் சேர்ந்தவர்.
இவர் சைவ நெறியின்படி நல்லாட்சி செய்து வந்தார்.
பகைவர் நாடுகளை வென்றடக்கி அங்கெல்லாம் அறமும், சைவமும்,மறைநெறியும் விளங்கும்படிச் செய்தார்.
வடமொழியும்,தென்மொழியாம் தமிழ்மொழியும், கலைகளும் தழைக்கச் செய்தார்.
அரசாட்சி என்பது துன்பம் தருவதாகும் என்பதை உணர்ந்த ஐயடிகள் காடவர் கோன் அதனை வெறுத்துத் தம் மகனுக்கு முடிசூட்டி விட்டுச் சிவநெறியில் திருத்தொண்டு செய்து வந்தார்.
இவ்வுலகில் சிவபெருமான் எழுந்தருளிய ஆலயங்களுக்குச் சென்று பணி செய்து, ஒவ்வொரு திருத்தலத்திலும் ஓர் அழகிய வெண்பாவைப் பாடி வணங்குவார்.இவ்வாறு,பெரும்பற்றப் புலியூர் என்னும் தில்லை முதலான இருபத்து நான்கு பதிகளை வெண்பாவால் பாடிய செந்தமிழ் மலர் மாலையே “ க்ஷேத்திர வெண்பா”( திருக் கோயில் திருவெண்பா) என்னும் நூலாகும்.
ஐயடிகள் காடவர் கோன் சிவனடியார்கள் இன்பமுறும் வண்ணம் பல காலம் தொண்டு புரிந்து பின்னர்ச் சிவலோகத்தில் இறைவன் திருவடி நிழலில் நிலைபெற்ற அடியவர்களுடன் சேர்ந்திருக்கும் பேற்றினை அடைந்தார்.
“பையரவ மணியாரம் அணிந்தார்க்குப் பாவணிந்த
ஐயடிகள் காடவனார்”
என்று சேக்கிழார் இவரைக் குறிப்பிடுகிறார்.
ஐயடிகள் காடவர்கோன் வெண்பா
ஆலயம் கண்டிறைஞ்சி ஆங்கொரு வெண்பாவால்
சால வழுத்துமச் சால்பினார் – ஞாலத்தின்
ஆட்சிவிட்(டு) ஆற்றிய அப்பணியால் ஈசன்தாள்
மாட்சி அணைந்தார் மருங்கு
*****************************
46) கணம்புல்ல நாயனார்

செல்வச் சிறப்பையுடைய மாடங்களில் பெருங்குடியைச் சேர்ந்த மக்கள் நிறைந்து வாழ, வளம் பெருக்கும் வட வெள்ளாற்றின் தென்கரையில் உள்ளது ‘ இருக்கு வேளூர்’.
இவ்வூர்ச் சோலைகளில் பழுத்த பலாக் கனிகளில் வழியும் தேன் அருகில் இருக்கும் மடுவை நிறைத்து, வயல்களில் பயிர் விளைக்கும் .
இத்தகைய வளத்தையும் சிறப்பையும் உடைய இவ்வூரில் குடித் தலைவர்களுக்கெல்லாம் தலைவராய்த் தோன்றியவர் கணம்புல்லர்.
பெரும் செல்வரான கணம்புல்லர் ஒப்பற்ற பெருங்குணமும் , சிவபெருமானின் திருவடி மீது பேரன்பும் கொண்டவர்.
”பெருஞ்செல்வத்தின் பயன் இதுவே!” என்று, இடைவிடாமல் ஒளி தரும் விளக்குகளைச் சிவபெருமான் கோயிலுள் ஏற்றிப் பணிந்து வணங்குவார்.
காலப் போக்கில் அவரை வறுமை வந்து அடையவே, அவ்வூரை விட்டு நீங்கித் திருத்தில்லை போய்ச் சேர்ந்தார்.
தம் வீட்டில் இருந்த பொருள்களை விற்று முப்புரம் எரித்த வில்லை ஏந்திய இறைவனின் ‘திருப்புலீச்சுரம்’ என்னும் கோயிலில்
விளக்கேற்றும் பணியைச் செய்து வந்தார்.
அதுவும் தீர்ந்து போனது. மற்றவரிடம் பொருள் வேண்டி இரத்தலை விரும்பாமல், தம் உழைப்பால் புல்லரிந்து கொண்டு வந்து விற்று அப்பொருளுக்கு நெய் வாங்கி விளக்கேற்றும் திருப்பணியைத் தொடர்ந்தார்.
ஒருநாள், அவர் பாடுபட்டு அரிந்து கொண்டு வந்த புல் எங்கும் விலை போகவில்லை.ஆனாலும், தம் திருவிளக்குப் பணியை விடாமல் தொடர முனைந்த கணம்புல்ல நாயனார் அந்தப் புல்லையே கொளுத்தி அழகிய விளக்காக எரியச் செய்தார்.
முறைப்படி கால அளவு குறையாமல் விளக்கேற்ற அந்தப் புல்லும் போதாமையால் , உண்மையான அன்பு கொண்ட கணம்புல்லர் அடுத்த விளக்குக்காகத் தம் திருமுடியை எலும்பும் உருகத் தீயிட்டு எரித்தார்.
அதனால் இரு வினைகள் தொடர்வதை எரித்தவர் ஆனார்.
பொங்கும் அன்பால், தலைத் திருவிளக்கு எரித்த தொண்டரான கணம்புல்ல நாயனார் இறைவன் திருக்கருணையால் சிவலோகம் சேர்ந்து இனிது இறைஞ்சி வாழ்ந்திருந்தார்.
“மூரியார் கலியுலகின் முடியிட்ட திருவிளக்குப்
பேரியா றணிந்தாருக் கெரித்தார்,”
என்று சேக்கிழார் இவர் பெருமையைப் பாடுகின்றார்.
கணம்புல்லர் வெண்பா
இல்லப் பொருள்விற்(று) இனிய விளக்கெரித்தார்;
புல்லரிந்து விற்றெரித்தார்; புல்லெரித்தார்; – நல்லபுல்
போதாமை கண்ணுற்ற போது முடியெரித்தார்
மீதூர்ந்த அன்பு மிளிர்ந்து.
***************************
47) காரி நாயனார்
![]()
காரி நாயனார், மறையோதும் வேதியர்கள் மிகுதியாக வாழ்கின்ற திருக்கடவூரில் தோன்றியவர்.வண்டமிழ் மொழியின் துறைகளின் பயனை அறிந்து அதனை நன்கு விளக்கும் புலமையுடையவர்.
அவர் குறைவற்ற தமிழ்க் கோவையைத் தம் பெயரால் முறையாகத் தொகுத்து அமைத்தார்.
அதனை மூவேந்தரிடம் கொண்டு சென்று அவர்கள் மகிழும் வண்ணம் உரை நயத்தை விளக்கிச் சொல்வார். அவர்கள் தந்த செல்வக் குவியலைக் கொண்டு சிவபெருமான் இனிது உறையும் திருக்கோயில்கள் பலவற்றைக் கட்டினார்.. அனைவரின் மனமும் மகிழும்படி இனிய சொற்களைப் பயன் விளங்கும்படிப் பேசுவார்.
தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை அடியார்களுக்கு அளித்தார்.
எப்போதும், இறைவன் உறையும் சோலைகள் நிறைந்த கயிலாயத்தை
மறவாமல் மனத்தில் எண்ணியிருந்தார்.
கங்கையைச் சடையில் அணிந்த சிவபெருமான் திருவருளால் காரி நாயனார், மனத்தளவில் அடைந்திருந்த வடகயிலை மலையை உடலாலும் சென்றடையும் பெரும் பேறு பெற்றார்.
“ வேரியார் மலர்கொன்றை வேணியார் அடிபேணும்
காரியார் கழல்வணங்கி”
என்று சேக்கிழார் காரி நாயனார் வணங்கிப் பாடுகிறார்.
காரியார் வெண்பா
வண்டமிழ்க் கோவைநயம் மன்னர்க்குச் சொல்விளக்கிக்
கொண்டபொருள் கொண்டமைத்தார் கோயில்கள் – மண்டுநிதி
ஈந்தார் அடியவருக்(கு); ஏறூர்ந்தான் இன்னருளால்
சேர்ந்தார் கயிலை சிறந்து
( தொடரும்)
