அத்தியாயம் மூன்று 

Bhagavad Gita Lord Krishna Stock Illustrations – 197 Bhagavad Gita Lord  Krishna Stock Illustrations, Vectors & Clipart - Dreamstime

மனிதனாகப் பிறப்பது அரிது. அவ்வாறு பிறந்த பின், மனிதனுக்குரிய பண்புகளுடன் வாழாமல், சுயநல நோக்குடன் எவன் வாழ்கிறானோ, அவன் தனக்காக வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர் வாழ்க்கையில் துன்பத்தை ஏற்படுத்தவும் செய்கிறான். இதனாலேயே, இளமைக்காலத்திலிருந்தே ஒவ்வொரு மனிதனும் பண்புகளை வளர்த்துக்கொண்டால், சுயநல  எண்ணங்கள் மறையும்; பணிவும், மற்றவர்களுக்காக வாழும் மனமும் தானே வரும். இன்றைய காலத்தில், பண்புகளை வளர்க்க உதவுவது ஸ்ரீகிருஷ்ணரின் பகவத் கீதை.

நற்பண்புகள் ஞான தரிசனத்திற்கு வழிவகுக்கும். மனிதனாகப் பிறப்பதன் சாசுவதமான உண்மையைக் கண்டறிய வழிகாட்டும். நெருக்கடிகளிலிருந்தும் மனச்சோர்வுடன் சோகம், மோகம் முதலியவற்றிலிருந்தும் மனம் விடுபட்டு அமைதி பெற வேண்டுமானால், ஞானத்திற்கான தேடல் அவசியம்.  

ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முக்கியமான அறிவுரை வழங்குகிறார். பணம், பதவி மற்றும் போகத்திற்குப் பின்னால் போகும் மனிதன் மன அமைதி இழக்கிறான். பஞ்சபூதங்களினால் ஆன இந்த உடல், எவ்வாறு உருவாகியதோ, அவ்வாறே அழியவும் செய்யும்.

ஆன்மிகம் என்பது அழியக்கூடிய உடலிலிருந்து அழியாத ஆத்மா பக்கம் நம் கவனத்தைத் திருப்புவதே ஆகும். அதாவது, வெளியே தெரியும் ஸ்தூல உடலிலிருந்து உள்ளே உள்ள சச்சிதானந்த ஆத்மாவினுள் கவனத்தைச் செலுத்துவது. சரி. கவனத்தை மாற்ற வரும் முறைகள் என்னென்ன?

  • முதலாவது காணப்படும் உலகம், காண்பவன் இருவருக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டுபிடிப்பது.
  • இரண்டாவது நம்முள் இருக்கும் மூன்று உடல்களைப் பற்றி அறிந்து இவ்வுடல்களுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வது.
  • மூன்றாவது, ஒவ்வொரு மனிதனும் உணரும் விழிப்பு நிலை, உறக்க நிலை மற்றும் கனவு நிலை – இவை மூன்றும் ஆத்மாவிடமிருந்து எவ்வாறு வேறுபட்டு நிற்கின்றன என்பதை உணர்வது.
  • நான்காவதாக, நம்முடலுக்குள் இருக்கும் ஐந்து வகை கூடுகளைப் பற்றி அறிந்து கொண்டு ஆத்மா இவற்றுடன் எவ்வாறு வேறுபட்டு நிற்கிறது என்பதை உணர்வது. முதலாவது கூடு, உணவாலான அன்னமயம் என்பது கண்ணுக்குத் தெரிவது; அடுத்தது, பிராணமயம் என்ற உடலியல் பற்றியது; மூன்றாவது, மனம் பற்றிய மனோமயம் என்ற கூடு. நான்காவதாக விஞ்ஞானமயம் என்ற புத்தி சார்ந்த கூடு. ஐந்தாவதாக வருவது ஆனந்த மயம் என்ற கூடு. ஆனந்தம் என்பது ஆத்மாவிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. ஏனெனில், ஆனந்தம் என்பது ஒரு மனிதனுக்கு இயல்பாக வரும் ஒன்று. இந்த ஐந்து கூடுகளையும் கடந்து ஒவ்வொரு மனிதனும் தேட வேண்டியது ஆத்மாவோடு இணைந்த அந்த சச்சிதானந்த அனுபவம்.

213 Bhagavad Gita Stock Photos - Free & Royalty-Free Stock Photos from  Dreamstimeகீதையின் பதினாறாவது சுலோகம் இந்தத் தத்துவ தரிசனத்தை அழகாக விளக்குகிறது.

  • यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ |
    समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते
    15
  • யம் ஹிவ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷபஸமதுக்க ஸுகம்தீரம் ஸோம்ருதத்வாய கல்பதே 15
  • नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः |
    उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः
    16
  • நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத: |உபயோரபி த்ருஷ்டோந்த ஸ்த்வன்யோஸ்தத்வதர்ஷிபி:

ஒவ்வொரு பொருளும் அதன் சொந்த உள்ளார்ந்த தன்மையைப் பெற்றுள்ளது; இந்த உண்மையான இயல்பை, நாம் ஸ்வரூபம் என்று அழைக்கிறோம்.

இது அதன் உண்மையான இயல்பு, உள்ளார்ந்த இயல்பு. மேலும் ஒவ்வொரு பொருளும் வெளியில் இருந்து கடன் வாங்கிய சில இயல்புகளையும்  கொண்டிருக்கலாம். உள்ளார்ந்த இயல்பு என்றும் இருக்கும்; வேறிடத்திலிருந்து கடன் வாங்கிய இயல்பு இருக்காது. அது தாற்காலிகமானது. நெருப்பிற்கு இருக்கும் சூடு அதன் உள்ளார்ந்த இயல்பு; ஆனால் அடுப்பில் வைத்திருக்கும் பாத்திரத்தில் இருக்கும் சூடு கடன் வாங்கப்பட்டது; தாற்காலிகமானது. தாற்காலிகமான எதுவும் வந்து போகும் தன்மையது. உள்ளார்ந்த இயல்பு என்றும் இருப்பது. தாற்காலிகமான எந்தப்பொருளும் சில காலம் இருக்கும்; பிறகு மறைந்து விடும். ஸ்ரீகிருஷ்ணர் இங்கு நமக்குக் கூறுவது என்னவென்றால், நிலையாக இருப்பதுவே உண்மை இருப்பைக் கொண்டது; தற்காலிகமானது இல்லாததற்கு ஒப்பானது என்பதுவே.

இப்பூவுலகில் எது இருக்கிறதோ அது இல்லாமல் போவதில்லை; நிலையாக இல்லாமல் தாற்காலிகமாக இருக்கும் ஒன்று என்றும் இருப்பதில்லை. விவேகத்துடன் உண்மையை ஆராய்பவர்க்கே இந்த இரண்டின் இயல்பு புரியும்.

வாழ்க்கையில் நாம் அனைவரும் எதையாவது தேடிக்கொண்டே இருக்கிறோம். இந்தத் தேடல் உண்மையை உணரும் வரை தொடரும்.

தத்துவ தரிசனம் பெறும் ஒருவன், உடலையும், இந்திரிய சுகங்களையும் முக்கியமானதாகக் கருதுவதில்லை. இவையெல்லாம் இடையே வந்து இடையே போய் விடுவதால், இவை இல்லாததாகத் தான் கருதப்படும். இதனால் பெறும் பாடம்: தேகம் என்பது அசத்து; ஆத்மா ஒன்றே சத்தானது. இதனுடன் நாம் புரிந்து கொள்ள வேண்டியது சத்தானது  காலம், தேசம் மற்றும் மூன்று வித நிலைகளாலும் எந்த வித மாற்றமும் அடைவதில்லை. ஆகையினால் மாற்றம் என்பது ஆத்மாவிற்கு இல்லை; அது உடலுக்கே உரியது.

Bhagavad Gita Summary and Study Guide | SuperSummaryபதினேழாவது சுலோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இப்பிரபஞ்சம் முழுதும் வியாபித்திருக்கும் இந்த ஆத்ம தத்துவம் அழிவற்று எதனாலும் அழிக்க முடியாத ஒன்றாகவும் இருக்கிறது என்பதை விளக்குகிறார்.. எவ்வாறு ஆகாயத்தில் எத்தனை மேகங்கள் தோன்றினாலும், இந்த ஆகாயத்தில் எந்த மாற்றமும் உண்டாவதில்லை. தன்னுள் ஏற்படும் மாற்றங்களுக்கு வெறும் சாட்சியாக நின்று, ஆகாயம் நிரந்தரமாக இருக்கும். இதைப் போலவே  ஆத்ம தத்துவமும் அழியாத ஞான தரிசனமாக நின்று உலகின் எல்லா மாற்றங்களுக்கும் அடித்தளமாக இருக்கிறது.

பதினெட்டாவது சுலோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் போர்க்களத்தில் இருக்கும் அனைத்து உயிர்களும், அழியக்கூடிய உடல்களாக இருப்பதால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அர்ஜுனனைப் போர் புரியச் சொன்னார். பத்தொன்பதாவது சுலோகத்தில் ஒவ்வொரு உயிரினுள்ளும் இருக்கும் ஆத்மா கொல்வதுமில்லை; கொல்லப்படுவதுமில்லை என்கிறார் கிருஷ்ணர். இதைத் தொடர்ந்து இருபதாவது சுலோகம் ஆத்மா பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை என்று உரைக்கிறது.  இருபத்து ஒன்றாவது சுலோகமும் இந்த சச்சிதானந்த ஆத்மாவை அழிவற்றது, மாற்றம் ஏற்காதது, பிறவாதது மற்றும் குறையாதது என்றுரைக்கும். இதை  உணர்ந்தவன் எந்தச் செயலைச் செய்தாலும், அதனால் யாரும் கொல்லப்படுவதுமில்லை, கொல்வதுமில்லை.

இந்த உண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கு வரும் சுலோகம் இருபத்திரண்டாவது. நாம் தினம் தினம் உடுத்திய துணி அழுக்கானதும் அதைக் களைந்து வேறு துணி உடுக்கிறோமோ அதைப் போலவே, ஆத்மா பழைய உடல்களை விட்டு நீங்கி புது உடல்களைப் பெறுகிறது. இருபத்து மூன்று, இருபத்து நான்கு, இருபத்து ஐந்து சுலோகங்களும் கூறும் உண்மைகள் இதோ:

  • எந்த ஆயுதமும் ஆத்மாவை வெட்டாது; நெருப்பும் அதை எரிக்காது; நீரும் அதை நனைக்காது; காற்றும் அதை உலர்த்தாது.
  • ஆத்மா வெட்டப்படாது என்பதாலும், நீர், நெருப்பு முதலியவற்றாலும் எந்த மாற்றமும் அடையாமல் இருப்பதாலும், நித்திய வஸ்துவாய், எல்லா இடத்திலும் வியாபித்திருப்பதாய், நிலையானதாய், அசைவற்றதாய், என்றும் இருக்கும் தன்மையதாய் இருக்கிறது.

இந்த உண்மைகளை மனது ஏற்கும்போதுதான், அஞ்ஞானத்தால் வரும் துக்கத்தை நீக்க முடியும். ஞானம் மேன்மைக்கு வழிகாட்டும்; அஞ்ஞானம் துக்கத்திற்கும் கீழ்நிலைக்கும் வழிகாட்டும். ஆத்மாவின் தன்மை புரியும்போது பொறிகளுக்கு அப்பாற்பட்டு அது இருப்பதும், எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு எந்த மாற்றங்களுக்கும் அப்பால் இருப்பதும் புரியும்.

ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம் இந்தப் பூவுலகில் பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும், மறுக்க முடியாத உண்மை என்பதை உணர்ந்தால், போரில் எதிரியைக் கொல்லுவதில் ஏன் தயக்கம் காட்டவேண்டும் என்று வினவுகிறார்.  உயிர்கள் பிறப்பதற்கு முன்னால் அவை இல்லை; பிறந்தபின் சிறிது காலம் அவை தோன்றி வளர்ந்து மறைகின்றன; மறைந்தபின் மீண்டும் அவை இல்லை. இது கிருஷ்ணர் காட்டும் லௌகீகப் பார்வை.

மூன்று சுலோகங்களில் லோகாயுத தத்துவத்தைப் பற்றிப் பேசுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.  ஆத்ம தத்துவ விசாரப்படி இந்த விசாரம் வருவதே பெரிய ஆச்சரியப்படத்தக்க ஒன்றாயிருக்கிறது.  ஆத்ம விசாரத்திற்குத் தயாராகாத ஒருவருக்கு ஆத்மா, விளங்கியும் விளங்காமலும் உள்ள நிலையிலும் விழிப்பு அல்லது உறக்க நிலையிலும் எல்லா நிலையிலும் ஆச்சரியப்பட வைக்கக் கூடிய ஒன்றாய் இருக்கிறது. பரப்பிரும்ம ஸ்வரூபமான ஆத்மாவோ எவராலும் விவரிக்கப்படாததாய் எவராலும் உள்ளபடி அறியப்படாததாய் இருக்கிறது.

லௌகீக கோட்பாட்டின்படி  பிறந்தவன் இறப்பான்; மற்றும் இறந்தவன் பிறப்பான் என்ற கோட்பாட்டை முப்பதாவது சுலோகம் மறுக்கிறது. எல்லா உயிர்களிலும் இருக்கும் ஆத்மாவை எதுவும் வதைக்காது. இதனால் ஆத்ம ஞானம் ஒன்றே துக்கத்தை நீக்க ஒரே வழி என்பதையும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.  லோகாயத கோட்பாட்டின்படி அறப்போரில் ஸ்வதர்மப்படி நடக்க வேண்டியது ஒரு வீரனின் கடமையாகும். மகாபாரத யுத்தம் ஒரு அறப்போராக இருந்ததால் ஒரு அரசன் அறம் பேணுவதை உயிரினும் மேலானதாக நினைக்க வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். ஸ்வதர்மத்தை செய்யாமல் விட்டால் அது மறத்துக்கு வழிவகுக்கும். ஆன்மீக வாழ்க்கையில் ஷ்ரேயசை ஒருவனுக்குப் பெற்றுத்தருவது ஸ்வதர்மத்துடன் செயல்படுவதே.

இதனால் முப்பத்து இரண்டாம் சுலோகத்தில் அர்ஜுனன் பங்கு பெற வந்த அந்தப் போர் ஒரு க்ஷத்திரியனுக்கு சொர்க்க வாசல் திறந்து சொர்க்கத்திற்கு வழிகாட்டுவது போலாகும் என்றும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். இப்படிப்பட்ட வாய்ப்பு எளிதாக யாருக்கும் கிடைக்காது. விண்ணுலகிலும் மண்ணுலகிலும் புகழும் வெற்றியும்  பெரு முயற்சி செய்யாமலேயே  வலிய வந்து கிடைக்கும் நிலையில், அர்ஜுனன் மனக்கிலேசத்துடன் போர்க்களத்திலிருந்து போர் செய்யாமல் செல்வது அவனது புகழையும் வெற்றியையும் பாதிக்கும். அறப்படி ஸ்வதர்மத்தை ஆற்றாவிட்டால் அர்ஜுனன் புகழை இழந்து இகழப்படுவான்; போற்றப்படுவதற்குப் பதிலாக தூற்றப்படுவான். அர்ஜுனனை மகாவீரன் என்று போற்றிய இவ்வுலகம், பயம் மேலிட போரினின்று பின்வாங்கி விட்டான் என்று இப்போது தூற்றும். புகழோடு பெருமையுடன் நின்ற இந்த வீரன் தூற்றப்படும்போது சிறுமையுருவான். போரில் அவனை எதிர்த்து நின்ற பகைவர்களும் அவனைப் பழித்துப் பேசுவர்; இதுவும் அர்ஜுனனின் துன்பத்தை அதிகரிக்கும். இதனால் மேல்நிலைக்குப் போவதற்குப் பதிலாக அவன் கீழ் நிலைக்குச் செல்ல நேரிடும்.

ஒரு தீரனாகச் செயல்படவேண்டியவன் அர்ஜுனன். அதாவது எது தர்மம், எது ஸ்வதர்மம் எது அதர்மம் போன்ற கேள்விகளுக்கு ஆலோசித்து விவேகத்துடன் செயல்படுபவனே தீரன் என்று ஸ்ரீகிருஷ்ணர் கருதுகிறார். மாற்றங்களே சாசுவதமான இப்பிரபஞ்சத்தில், எப்படிப்பட்ட  நிகழ்வுகளையும்  ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப் பக்குவம் எவனுக்கு இருக்கிறதோ, அவன் தீரன். இப்படிப்பட்ட மனிதனின் உள்ளம் வாழ்க்கையின் அனைத்து  நிகழ்வுகளையும் எந்தவித முறையீடும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும். ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம் போரில் யுத்தம் செய்து மடிந்தால் வீரசுவர்க்கம் அடைவாய்; வெற்றி பெற்றாலோ மண்ணுலகை ஆளும் பேறு பெறுவாய். அதனால் உன் கடமையைச் செய் என்கிறார். இன்பதுன்பங்களுக்கு மனத்தில் இடம் தராமல், வெற்றி தோல்வியைப் பற்றியும் சிந்திக்காமல் உன் ஸ்வதர்மதைச் செய்வாயாக என்று ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவைக் கொடுத்தபின் சரியான அணுகுமுறையோடு வாழ்க்கையை வாழ உதவும் யோக நெறியைப் பற்றி முப்பத்து ஒன்பதாம் சுலோகத்திலிருந்து கர்ம யோகத்தைப் போதிக்கிறார்.

மலரும்