இதுவும் 45 ஆண்டுகளுக்கு முன் பார்த்த மேடை நாடகம்.

கணவன் அல்லது மனைவி விருப்பம் இல்லாவிட்டாலும் சேர்ந்து வாழுமாறு நீதிமன்றம்  கட்டாயப்படுத்த முடியுமா? - BBC News தமிழ்

டெல்லி குமார் அவர்கள் குழுவின் நாடகம். இரண்டு நாடகங்கள் பார்த்தேன். “தராசு சிரிக்கிறது” – “தீர்ந்தது கணக்கு”

இரண்டுமே வக்கீல், வழக்கு பற்றியது.

அதில் ஒன்று 

ஒரு வக்கீலுடைய வீடு / அலுவலக அறை. ஏதோ பேசிக் கொள்கிறார்கள். அவரை பாராட்டுகிறார்கள். இவர் மிகப்பெரிய வக்கீல். எடுத்த கேசில் எல்லாம் வெற்றி பெற்றவர். நியாயமான கேசைத்தான் எடுப்பார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் குற்றவாளி என்று தெரிந்தால் வாதாட மாட்டார்.

ஒரு நடுத்தர வயது ஆள் பார்க்கவே பாவமாக இருப்பவன் உள்ளே வேகமாக வந்து “அய்யா , வக்கீல் சட்ட அய்யா என்னை காப்பாத்துங்க அய்யா ” என்று பதட்டத்துடன் காலைத் தொட வருகிறான்.

தடுத்து “என்ன இது… யார் நீ? என்ன விஷயம்? என்ன கேஸ்?. “

“அய்யா நீங்க தான் காப்பாத்தணும். நான் செய்யாத கொலையை என் பேர்ல சுமத்தப் பாக்கராங்க. அப்பாவியான என்னை காப்பாத உங்களை விட்டால் வேறு கதியில்லை” என்று முகம் மூடி அழுகிறான்.

அமைதிப் படுத்தி விபரம் கேட்கிறார். நீ சொல்வதை கேட்கும் போது நீ சொல்வது உண்மை போலத் தோன்றுகிறது. ஆனால் சாட்சி வேணும். நீ அந்த சமயம் வேற இடத்தில் இருந்ததா சாட்சி வேணும். யாராவது இருக்கீங்களா? “

“என் மனைவி சாட்சி சொல்றாள்”

“மனைவியா? அவ சாட்சி செல்லாது. வேறு யாராவது அல்லது வேறு ஏதாவது சாட்சி இருக்கா? இல்லாட்டி கேஸ் ஜெயிக்காது’

“மனைவி சாட்சி செல்லாதா? ரொம்ப சந்தோஷம் அய்யா”

” என்னைய்யா சொல்ற? “

“மனைவி எனக்கு எதிரா சாட்சி சொல்றா அய்யா. எனக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துட்டு அவ வேற யாரோடோ ஓடிப்போய் வாழ நினைக்கிறா அய்யா. “

என்னது மனைவி நீ கொலை செய்தேன்னு சாட்சி சொல்றாளா? உன்னைப் பாத்தா பாவம் இருக்கு. முழு விபரம் நிதானமா சொல்லு”.

விபரம் சொல்கிறான். “கேஸ் வித்தியாசமா இருக்கு. நான் எடுத்துக்கறேன் ஜெயிச்சுக் காட்றேன்.
 கோர்ட்டில் வித விதமாக மடக்கி மடக்கி மனைவியை கேள்வி கேட்பார். அசராமல் பதில் சொல்வாள்.

பின்னர் வேறு ஒரு கோணத்தில் கேள்வி கேட்கும் போது தடுமாறி தான் சொன்னது பொய் அவர் நிரபராதி என்று சொல்லி விட்டு அழுவாள்.

That is all என்று சொல்லி வக்கீல் வெற்றிப் புன்னகை செய்வார். போலீஸ் தரப்பில் ஷாக் ஆகி பின் வாங்கி விடுவார்கள். மிகப் பெரிய சாட்சி உடைந்ததால் தோல்வியை ஒப்புக் கொள்வார்கள்.

தீர்ப்பில் நீதிபதி குற்றம் நிரூபிக்கப் படவில்லை என்று விடுவித்து விடுவார். உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்கச் சொல்லி உத்திரவு இடுவார்.

கோர்ட்டுக்கு வெளியே அவன் வக்கீலுக்கு நன்றி சொல்லி விட்டு யாரோ ஒரு பெண்ணோடு சந்தோஷமாக பேசிக்கொண்டே அவளோடு நடக்க ஆரம்பிப்பான். மனைவி என்னங்க என்னங்க என்று பின்னாடியே வருவாள்.

“உனக்கு வேண்டிய பணம் உன் அக்கவுண்ட்ல போட்டிருக்கேன். நீ உன் வழியைப் பாத்துக்கோ நான் இவளோடு சிங்கப்பூரில் வாழப் போகிறேன். எல்லா ஏற்பாடும் செய்து விட்டேன்.
பை பை.. ” என்று சொல்லி விட்டு வேகமாகப் போய் விடுவான்.

“என்னங்க, என்னங்க” என்று கேட்டு கதறிக் கதறி அழுவாள்.

இதை பார்த்த வக்கீல் “என்னம்மா ஆச்சு” என்று கேட்பார்.

“இந்த ஆள் என்னை ஏமாற்றி விட்டு அந்தப் பெண்ணோடு போகிறார். இவளின் கணவரைத்தான் அவர் கொலை செய்தார். அதிலிருந்து தப்பிக்கத்தான் என்னை உபயோகித்தார்”

“என்னது இவன்தான் கொலை செய்தானா? உன்னை உபயோகித்கானா? என்ன சொல்ற ? ‘

ஆமாம், ஆமாம்.. இவர்தான் கொலை செய்தார். என்னை எப்படி எப்படி எல்லாம் கோர்ட்டில் சாட்சி சொல்லணும் அப்புறம் எப்படி கடைசியில வக்கீலின் சாமர்தியமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத மாதிரி கடைசியிலே எப்படி மாத்திச் சொல்லணும் அப்படீன்னு சொல்லிக் கொடுத்துத்தார்.

அந்த திட்ட துக்கு தகுந்த வக்கீல் நீங்கதான்னு, அதையும் இவர்தான் ப்ளான் பண்ணினார்”

“உன்னை மட்டும் இல்லை என்னையும் அந்த அயோக்கியன் ஏமாற்றி உபயோகப் படுத்தி இருக்கிறான். ப்ளடி பெலோ… ” என்று ஆத்திரமாக கையை தலையில் அடித்துக் கொள்வார்.

“அது சரி இந்த பெண்ணோடு ஓடப் போகிறவனுக்கு நீ ஏன் உதவி செஞ்ச”

“அது எனக்கே இப்பதான் தெரியும். ஏதோ ஒரு கொலையில் அபாண்டமா இவரை மாட்டி விட்டதாகவும் என்னால் தான் அவரை காப்பாத்த முடியும்னும் அழுதார். நான் நம்பிட்டேன். கொலையானவனுடைய மனைவியோடு ஓடப் போகிறார் என்று எனக்குத் தெரியாது” என்று விசும்பு வாள்.

“ஏம்மா ஒரு தடவை என்கிட்ட இவன்தான் கொலை செஞ்சா ன்னு உண்மையை சொல்லி இருக்கலாமே”

“ஒரு முறை என்ன பல முறை கோர்ட்ல சொன்னேனே. நீங்கதான் ஒத்துக்காம மடக்கி மடக்கி அவர் சொன்ன மாதிரியே கேட்டீங்க. சாதாரணமா கணவன் கொலை செய்யல்லேன்னு மனைவி சொன்னா கோர்ட் ஏத்துக்காது. முதல்ல கொலை அவர்தான் செஞ்சார்னு சொல்லிட்டு கடைசியில வக்கீல் சாமர்த்தியமா அதை வரவழிச்சார் என்கிற மாதிரி சொன்னா கோர்ட் ஏத்துக்கும்னு சொன்னார். நானும் சொன்னேன். இவர் என்னையும் ஏமாத்துவார்னு தெரியாது” என்று அழுதவாரே அங்க ஒரு இடத்திலே உட்காருவாள்..

வக்கீல் தலைகுனிந்து முகத்தை மூடிக் கொள்வார்.

திரை விழுந்தது.